Friday, March 1, 2013

மெக்சிகோ பயணம்-4 ‘அறை எண் 40-ல் பரதேசி ஆல்ஃபி’











பெட்ரோல் விலை இங்கே அதிகமா?’ என்று விசாரித்ததற்காக இப்படியா தலையில் அடித்துக்கொள்வார்கள் என்று ஒரு கணம் நான் திடுக்கிட்டுத்தான் போனேன். என்னடா இது மெக்சிகோ பயணத்தோட ஓப்பனிங்கே ஒர்ஸ்ட்டா இருக்கே? என்று கொஞ்சம் நெஞ்சம் கலங்கவும் செய்தேன்.
ஆனால் அந்த டென்சன் சில நொடிகள் கூட நீடிக்கவில்லை. டிரைவர் தன்முகத்தை முழுதுமாய் யு டர்ன்அடித்து என் பக்கம் திரும்பி, எதிரே இருந்த டிராஃபிக் ஜாமைக் காட்டினார். அவர் தலையிலடித்துக்கொண்டது அந்த டிராஃபிக் ஜாமுக்காகத்தான் என்று தெரிந்தவுடன், நான் சகஜமானேன். உண்மையிலேயே பம்பர் டு பம்பர்’  ஜாம்தான். எனக்கோ உடனே எச்சரிக்கை நம்பர்3’ [டிராஃபிக்கை எதிர்கொள்ள சற்றுமுன்னரே கிளம்பவேண்டும்] பல்பு எரிந்தது.

அரைமணி நேரத்துக்குள் சென்று சேர்ந்திருக்க வேண்டிய எனது ஹோட்டலை அடைய ஒரு மணி நேரத்திற்கும் மேலானது. சுமார் 9 மணி அளவில் எனது ஹோட்டலை அடைந்தேன். ஒரு டப்பா ஹோட்டலில் மாட்டிக்கொள்ளப்போகிறோமோ என்ற பயம் எனக்கு பயணம் முழுக்கவே இருந்தது. ஆனால், கொஞ்சம் லேட்டா வந்தாலும் ஹாட்டா வரும் கர்த்தர், மெக்சிகோவிலும் என்னைக் கைவிடவில்லை. ஹோட்டல் நான் எதிர்பார்த்ததையும் விட, விசாலமானதாக நல்ல அலங்காரத்துடனே இருந்தது.பெல்கேப்டன் உடனே ஓடிவந்து எனது லக்கேஜ்களை வாங்கிக்கொள்ள, ‘ஆர்னால்டு ஸ்வார்ச்னெகர்  போலிருந்த ஒரு திடகாத்திரமான மனிதர் என்னை வரவேற்றார்.
அவரது ஸ்மார்ட்டான ட்ரெஸ்ஸிங் மற்றும் தோற்றத்தைப் பார்த்து, அவருக்கு கண்டிப்பாக ஆங்கிலம் தெரியும் என்ற முடிவுடன், மனதில் அணைகட்டி வைத்திருந்த கேள்விகள் அத்தனையையும் அவரிடம் கொட்டினேன். அத்தனை கேள்விகளுக்கும் ஒரு சேர அவர் அளித்த பதில் நேஎன்ற பரிதாப முழிதான்.
இங்கிலீஷு கூட தெரியாம உனக்கு என்னத்துக்கப்பு இவ்வளவு பெரிய பில்டப்பு? என்று மைண்ட் வாய்ஸில் முனுமுனுத்தபடி, ஹோட்டலின் அறிவிப்புகள் சிலவற்றைப் படித்துக்கொண்டே வந்தபோது, அதிக இடங்களில் காணப்பட்ட ஒரு வாசகத்தைப் பார்த்து திடுக்குற்றேன்.
மதுரை பஸ் ஸ்டாண்டுகளில் நம்ம காண்ட்ராக்டர்கள் கார் டோக்கனுக்கு காசையும் வாங்கிக்கொண்டு ஈவு இரக்கமில்லாமல் எழுதிப்போட்டிருப்பார்களே அதேதான். உங்கள் உடமைகள் காணாமல் போனால் அதற்கு நிர்வாகம் பொறுப்பல்ல’.
நிர்வாகம் பொறுப்பில்லைன்னா அப்புறம் டோக்கன் போட்டு காசு வசூலிக்கிறது என்ன ,… த்துக்கு? என்று கல்லூரி காலங்களில் பல இடங்களில் கேள்விகேட்டு சண்டை போட்டது ஞாபகம் வந்தது.
சண்டைபோட்டேன் என்றவுடன் என்னை ஒரு அசகாயசூரன் என்று விபரீதமாக கற்பனை பண்ணவேண்டாம்.நான் சண்டை போடுவதென்பது பெரும்பாலும் மைண்ட் வாய்ஸில்தான். கோபம் கொஞ்சம் அதிகமாக இருந்தால், எதிரி காதுக்கு கேட்க சான்ஸே இல்லைஎன்று உத்தரவாதமாக தெரிந்த தூரத்தில் போய் தூற்றுவேன்.
நிர்வாகம் பொறுப்பல்லஎன்ற பொறுப்பற்ற வாசகங்களுக்குப் பக்கத்தில் சற்றே ஆறுதல் அளிக்கும் விதமாக சேஃப் லாக்கர்வசதி இருப்பதாக ஒரு அறிவிப்பும் இருந்தது கண்டு கொஞ்சம் ஆறுதல் அடைந்தேன்.
ரூம் ஏற்கனவே அட்வான்ஸ் புக்கிங்கில் இருந்ததால், ரிசப்ஷனில் பெரிய ஃபார்மாலிட்டிகள் எதுவும் தேவைப்படவில்லை. என் பெயரில் மூன்றாவது மாடியில் அறை எண் 40-ல் ஆல்ஃபிஎன்று புக் பண்ணியிருந்தார்கள்.
நம்ம ஊர்ப்பையன் மாதிரியே இருந்த, சீருடை அணிந்த இளைஞன் ஒருவன், என் லக்கேஜ்களை தூக்கிக்கொண்டு முன்னேசெல்ல, அறைக்குள் குடியேறினேன். இளைஞனுக்கு டிப்ஸாக இரண்டு டாலர்கள் கொடுத்தேன்.பதிலுக்கு அவனிடமிருந்த நான் எதிர்பார்த்த ஒரு நன்றிப்பார்வையை அவனிடம் கிஞ்சித்தும் காணோம். தமிழ்சினிமாவின் முக்கியமான காட்சிகளில் பல ஹீரோக்கள் செய்வதுபோல் எந்தவித எக்ஸ்பிரஷனையும் காட்டாமல் அவன் அறையை விட்டு வெளியேறினான்.
மெக்சிகோவில் ஆங்கிலம் தெரியாதவர்களிடம் சிக்கி சின்னாபின்னமாகப் போவதை நினைத்தபோது, சிவகாசி, சாட்சியாபுரம் செவிடர் பள்ளியில் கற்றுக்கொண்ட சைகைமொழிதான் கைகொடுக்கும்போல என்று தோண ஆரம்பித்தது.[ இந்தப்பதிவுக்கு வைகைக் காரனை காப்பாற்றிய சைகை மொழின்னு டைட்டில் வச்சிருக்கலாமோ?]
அறையின் வசதிகள் பற்றி குறைசொல்ல ஒன்றுமில்லை. ஒரு ராஜ சைஸ் படுக்கை, இரண்டு சைடு மேசைகள்,வார்டுரோப், டி.வி, சுத்தமான பாத்ரூம்,ஸ்டாண்டிங் ஷவர் என்று தனியொருவனுக்கு இனியது என்று சொல்லும் அறையாகவே இருந்தது.
உடனடியாக பாஸ்போர்ட், விசா கச்சாத்துக்கள், அவசரத்திற்கு என்று வைத்திருந்த 400 டாலர்கள் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு ரிசப்ஷன் விரைந்து சேஃப் லாக்கரில் வைத்தேன். அப்படியே வயிற்றின் சேஃப்டியையும் கருத்தில் கொண்டு, உள்ளேயே இருந்த  ரெஸ்டாரெண்டில் ஒரு சிக்கன் சாண்ட்விச்சை விழுங்கினேன். பரவாயில்லை ,நன்றாகவே இருந்தது
அறைக்குத்திரும்பியபோதுதான், அத்தனை ஜன்னல்களும் மூடியிருந்தபோதும் கடும் குளிர் நிலவியதை உணரமுடிந்தது. சிக்கனம் கருதி ஏ.சி. தேவையில்லை என்று முடிவெடுத்த புத்திசாலித்தனத்தை மெக்சிக்கொண்டிருந்தபோது, டெலிபோன் மணி ஒலித்தது. வேறு யார், எனது ரிமோட் கண்ட்ரோலை சதா கையில் வைத்திருக்கும் எனது முதல் மனைவி ரூத் எலிஸபெத்தாகத்தான் இருக்கக்கூடும் என்ற என் ஐயம் மற்றும் பயம் வீண் போகவில்லை. அவளிடம் சம்பிரதாய விசாரிப்புகள் முடித்து குட்நைட் சொல்லி விடைபெற்றேன்.[பொண்டாட்டிகள் கிட்ட எவ்வளவு நேரம்தாங்க பேசமுடியும்?]
 குளிரை மறந்து குளிக்க நினைத்து, சோம்பேறித்தனத்தால் அதை தவிர்த்து, வெறுமனே முகம் மட்டுமே கழுவி படுக்கையில் விழுந்தேன்.செல்போன் வேலை செய்யவில்லை.ரிசப்ஷனில் வேக்-அப் காலுக்கு சொல்லிவிட்டு, புரிந்திருக்கும் என்ற நம்பிக்கையில், ரா.கி.ரவின்  ‘நான் கிருஷ்ணதேவராயனை கையிலெடுத்தேன்.

கிருஷ்ணதேவராயர் உயர்குடியில் பிறந்த ஒரு மனைவியைப் பக்கத்தில் வைத்துக் கொண்டு, தேவதாசி ஒருத்தியின் காதலுக்காக உருகுதே மருகுதேபாடிக்கொண்டிருந்தார்.

யாருமற்ற தனிமை. சற்றும் பரிச்சயமற்ற ஒரு புதிய நிலப்பரப்பில், முதல் நாள் இரவு, இனம்புரியாத ஒரு வினோதமான அனுபவமாக இருந்தது.
குளிர் இன்னும் அதிகமாக, அடுத்த நாள் பார்க்கவேண்டிய இடங்களை மனதில் அசைபோட்டபடியே, போர்வையை இன்னும் இறுக்கமாக இழுத்துப்போர்த்திக்கொண்டு,… ,,,வ், ,.வ்,.. ஆவ்வ்.


No comments:

Post a Comment