Thursday, April 30, 2020

நியூயார்க்கில் வ(க)சந்தகாலம் :

நியூயார்க்கில் வ(க)சந்தகாலம் :


வீட்டுச்சிறையில்
வெகுகாலம் இருந்த நான் இன்று சற்றே
வெளியில் எட்டிப்பார்த்தேன்.

மண்ணில் புதைத்த கிழங்குகள்
மகிழ்ந்தே முகிழ்த்திருந்தன  !
அவற்றுக்குத்  தெரியும்
இது வசந்த காலம்  என்று

வீட்டின் முன்
காவல் தூண்கள் போல்
காத்து நின்ற என்னிரு அசோக மரங்கள்
கரும்பச்சையில் களிப்பாய்
காற்றில் அசைந்தன !
அவற்றுக்குத்  தெரியும்
இது வசந்த காலம்  என்று

இலை உதிர்த்து , சில கிளை உளுத்து
உச்சி வரை குச்சியாய் நின்றிருந்த
சாலை மரங்கள்
பச்சையை வெளித்தள்ளி
பரவசமாய்  இசைந்தன !

உருமாறி
பழுப்பேறிய  புற்கள்
 இளம்பச்சையில்
நிறம் மாறி
பச்சைப் போர்வையை
பதவிசாய்  விரித்திருந்தன !

புல்தரையில் மேல்
ஆங்காங்கே
நீல பாணட்டுகள்
ஒளிந்து பார்த்துக்கண்சிமிட்டி
ஒளிர்ந்தன

பட்டுப்போன
என் மனைவியின் ரோஜாச்செடிகள்
பட படவென உயிர்த்தெழுந்து
பசுமையாடை உடுத்தி
மொட்டுக்கள் வருவதற்கு
மெட்டுக்கள் பாடின !

மறந்துபோன ,
இசைபாடும்
இச்சைக்குருவிகள்
பறந்து வந்து மறுபடியும்'
படுக்கையறை ஜன்னலில்
பூமி எழுமுன்
பூபாளம் இசைத்தன!

இவற்றுக்கெல்லாம்  தெரியும்
இது வசந்த காலம்  என்று

ஆனால்
கொரானாவுக்கு தெரியவில்லையே .
இது  வசந்த காலம் என்று?

செய்தி வாசிப்பவள்
புன்னகை மாறாமல் சொன்னாள்
இன்றும் நியூயார்க்கில்
புது நோயாளிகள் நான்காயிரம்
புது இறப்புகள் நானூறு என்று !

இதற்கு  ஒரு
சாவு காலம் வந்தால் தான்
நமக்கு இனி எந்த காலமும்
இல்லையென்றால் இந்த
வசந்த காலமும் நமக்கு
கசந்த காலம்தான் !

வெளியே
வசந்த காலமென்றாலும் உள்ளுக்குள்
அசந்த காலமாய் நீளும் இந்நிலை
எப்போது மீளும்?

என்று தணியும் இந்த சுதந்திர தாகம்
என்று முடியும் எங்கள் அடிமையின் நேரம் !

பரதேசி ஆல்ஃபி
ஏப்ரல்  30,  2020

21 comments:

  1. தலைவரே நல்லா இருக்கீங்களா? ஒரு பதிவை கூட காணவில்லை என்று கவலைப்பட்டு கொண்டிருந்தேன்

    ReplyDelete
    Replies

    1. ஒரு நீண்ட தூக்கம் தூங்கி இப்போதுதான் எழுந்து வந்தேன் மதுரைத்தமிழா

      Delete
  2. ///இதற்கு ஒரு
    சாவு காலம் வந்தால் தான்
    நமக்கு இனி எந்த காலமும்
    இல்லையென்றால் இந்த
    வசந்த காலமும் நமக்கு
    கசந்த காலம்தான் !///

    மிக அருமையான வரிகள்

    ReplyDelete
  3. //கொரானாவுக்கு தெரியவில்லையே .
    இந்த வசந்த காலம் என்று?///


    இந்த காலம் கொரோனாவிற்கு வசந்த காலம்..... ஆனால் நமக்குதான் கஷ்ட காலம்

    ReplyDelete
  4. வந்துட்டேனு சொல்லு.. பரதேசி திரும்ப வந்துட்டேன்னு சொல்லு..

    நியூயார்க்கை விடுங்க.. உங்க எழுத்தினால் இனிமேல் எங்களுக்கு வசந்த காலம்..

    //மனைவியின் ரோசா செடி //

    எப்படி அண்ணே ... கவிதையிலும் ஒரு கொக்கி..?

    ReplyDelete
    Replies
    1. நன்றி தம்பி,அந்த கொக்கி இல்லாட்டி, மக்கிப்போயிருவேன் மக்கா

      Delete
  5. மதுரை தல சொன்னது போல பலமுறை நினைப்பதுண்டு...

    தொடர்ந்து இங்கே பயணிக்கவும்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி , முயற்சி செய்கிறேன் திண்டுக்கல் தனபாலன்.

      Delete
  6. வசந்த காலமும் இனி கனவில் தான் போல...!

    ReplyDelete
    Replies
    1. அடுத்த வசந்தம் வருவதற்குள் நிலைமை சரியாகும் என்று நினைப்போம் திண்டுக்கல்லார் .

      Delete
  7. வலியின் வரிகள்.👍👏

    ReplyDelete
    Replies
    1. இதுதான் முதல் முறை உலகம் முழுவதும் ஒரே வலியை உணர்ந்தது , நன்றி மல்லி.

      Delete
  8. நிலைமை சீக்கிரம் சரியாக வேண்டும் என்பதே பிரார்த்தனை.

    ReplyDelete
    Replies
    1. இடைவிடாத பிரார்த்தனைகள் தேவை ஸ்ரீராம், வருகைக்கு நன்றி.

      Delete
  9. சிறப்பு!!! கவிதை.. 👏👍
    பல அருமையான வர்ணனைகளுடன்!!!😀, சில வலிகளுடன்!!!😞

    ReplyDelete
    Replies
    1. உங்கள் உற்சாகமூட்டும் வரிகளுக்கு நன்றி நண்பா

      Delete
  10. தாத்தாவின் தமிழ் உங்களிடமும் கவி பாடுகிறது. எனக்கு மிகவும் பிடித்தது உங்களது முன்னோர்களின் பாடல் வரிகள், இசையும் தமிழும் இணைந்து செல்லும் அற்புத வரிகள் அவை .

    ReplyDelete