Thursday, September 12, 2019

மறந்து போன மகாராஜா !!!!!!



பார்த்ததில் பிடித்தது.
தி பிளாக் பிரின்ஸ்
Image result for the black prince movie


          2017-ல் வெளிவந்த இந்தப்படம் நெட்ஃபிலிக்சில் காணக் கிடைத்தது. இந்தியாவின் கோதுமைக் களஞ்சியமான, ஐந்து நதிகள் பாயும் பஞ்சாப் பகுதியின் வரலாறு, மிகவும் சிறப்பானதொன்று.
          பஞ்சாப் என்றதும் முதலில்  நினைவுக்கு வருவது அதன் வீர வரலாறு மற்றும் குரு நானக்சிங் தோற்றுவித்த சீக்கிய மதம். இந்து மற்றும் முஸ்லிம் மதங்களின் நன்மைகளை இணைத்து உருவாக்கப்பட்ட இந்த மதத்தைப் பின்பற்றும் சீக்கிய மக்கள் உலகமெங்கும் வாழ்கின்றனர். தலைநகர் அமிர்தசரசில் இருக்கும் தங்கக் கோவில், விடுதலைப்  போராட்டத்தில் கலந்து கொண்ட லாலா லஜபதி ராய், பகத் சிங் ஆகியோரை மறக்க முடியுமா?. ஜெனரல் டயாரல் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்ட நிகழ்வான ஜாலியன் வாலாபாக் படுகொலை, இந்திய வரலாற்றின் மாறாத வடுவாகும்  . பிரிவினையில் பாதி பாகிஸ்தானுக்குப் போன சோகம், உலகப்புகழ் பெற்ற எழுத்தாளர் குஸ்வந்த்சிங் அவர் எழுதிய டிரைன் டு பாகிஸ்தான். பஞ்சாபின் தலைவர்களான, ஜெயில் சிங், சுர்ஜித்சிங் பர்னாவா மற்றும் சிறந்த பொருளாதார நிபுணரான, இருமுறை பிரதமராக இருந்த மன்மோகன் சிங் ஆகியோர் வரலாற்றில் இடம் பிடித்தவர்கள்.  
Maharaja Ranjith Singh
          பஞ்சாப் வரலாற்றின் ஏட்டை  சற்றே பின்னால் புரட்டினால், பஞ்சாப்பை ஒருங்கிணைத்து ஆண்ட மகாராஜா ரஞ்சித்சிங் வருவார். அவருடைய பரந்து விரிந்த சாம்ராஜ்யம், பஞ்சாப் பகுதி மட்டுமல்லாமல் இன்றைய பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகியவற்றை உள்ளடக்கியது. அதோடு பிரிட்டிஷ்காரர்களால் அசைக்க முடியாத அளவுக்கு பலம் பொருந்தியவராய் இருந்தார். அவருடைய சாம்ராஜ்யம் அவரோடு ஆரம்பித்து அவரோடு முடிந்துபோனது. அவருக்குப்பின் நடந்த வாரிசுப்போட்டியில் பலபேர் அழிந்துபோக எஞ்சியிருந்த ஒரே மகனான மகாராஜா துலிப் சிங் அவருடைய அம்மாவான மகாராணி ஜின்டன் அவர்களின் பெரும் முயற்சியாலும் பிரிட்டிஷாரின் உதவியாலும் முடிசூட்டிக் கொண்டார். அப்போது அவர் ஐந்து வயதான சிறு குழந்தை. அந்த மகாராஜா துலிப்  சிங்கின் சோக வரலாறுதான் “தி பிளாக் பிரின்ஸ்” அவரைப்பற்றி வந்த புத்தகத்தின் விமர்சனத்தை அடியேன் முன்னொரு காலத்தில் பதிவிட்டிருக்கிறேன். 1849ல்  பிரிட்டிஷ் அரசு பஞ்சாபை தன்னுடைய பகுதியில் இணைத்துக்கொண்டு விவரம் தெரியாத  இளவரசனை பிரிட்டிஷ் மருத்துவரான Dr. ஜான் லாகின் என்பவரிடம் ஒப்படைத்தது.  அவருக்கு 15 வயதாகும் போது இங்கிலாந்துக்கு அனுப்பப்பட்ட போது அங்கு விக்டோரியா மகாராணியின் அறிமுகம் கிடைக்கிறது. அவரிடமிருந்து ஏராளமான பொக்கிஷங்கள் இங்கிலாந்துக்கு அனுப்பப்படுகின்றன. அதில் மிக உயர்ந்த ஒன்றுதான் கோஷினூர் வைரம்.( https://paradesiatnewyork.blogspot.com/2015/03/blog-post_5.html )
அதிலிருந்து மகாராணிக்கு அந்த இளம் டூலீப் சிங்கிடம் ஒரு கரிசனம் ஏற்பட்டு அன்புடன் நடத்துகிறார். கிழக்கிந்திய கம்பெனியும் அவருக்கு எல்லா வசதிகளையும் செய்து தருகிறது. ஆனால் அவருடைய அம்மா மகாராணி ஜின்டன் இந்தியாவிலேயே வீட்டுச்கிறையில் வைக்கப்படுகிறார் Dr.ஜான்லாகினும் அவருடைய மனைவியும் மகாராஜா டூலீப் சிங்கை தங்கள் மகனாகவே வளர்க்கிறார்கள். ஆனாலும் தன்னுடைய சொந்த நாட்டிற்குத் திரும்ப முயற்சிக்க, அனுமதி மறுக்கப்படுகிறது.
Related image
Maharaja Duleep Singh
          மீதிக்கதையை நீங்களே பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்.   
          சத்தின்தர் சர்டாஜ், டுலீப் சிங்காவும், அமண்டா ரூட் விக்டோரியா மகாராணியாகவும் ஷபானா ஆஸ்மி மகாராணி ஜின்டாவாகவும் நடித்திருக்கிறார்கள் சத்தின்தருக்கு இதுதான் முதல் படம்.
          லாஸ்  ஏஞ்செல்சில் உள்ள ஹாலிவுட்டில் இருக்கும் இந்திய இயக்குநர் கவிராஸ் என்பவர் இயக்கியிருக்கிறார்.
          இந்தியாவிலும் இங்கிலாந்திலும் எடுக்கப்பட்ட இந்தப்படத்தை தயாரித்தவர்கள் பிரில்ஸ்டெய்ன் என்டர்டைன் மென்ட் பார்ட்னர்ஸ். இது ஒரே சமயத்தில் ஆங்கிலத்திலும் இந்தியிலும் எடுக்கப்பட்ட இருமொழிப்படம். பின்னர் பஞ்சாப் மொழியிலும் டப்பிங் செய்யப்பட்டது. ஜார்ஜ் கல்விஸ் என்பவர் இசையமைத்திருக்கிறார்.
          உலகமெங்கிலும் வெளியிடப்பட்டு ஆறுலட்சத்து 33 ஆயிரம் டாலர்கள் வென்றெடுத்த இந்தப்படம், இங்கிலாந்து, இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவில் அதிகம் வரவேற்கப்பட்டது.
          பரபரப்பாக வரலாற்று நிகழ்வுகளைச் சொல்லும்போது மிகவும் மெதுவாகச் சொன்னது சிறிது சலிப்பூட்டியது. திரைக்கதையை இன்னும் கொஞ்சம் விறுவிறுப்பாய் அமைத்திருக்கலாம். என்பது என்னுடைய எண்ணம்.
          மற்றபடி இப்படி நம் நாட்டின் வரலாற்று நிகழ்வுகளையொட்டி எடுக்கப்படும் படங்களுக்கு நாம் ஆதரவு அளிப்பது முக்கியமென நினைக்கிறேன்.
          பஞ்சாப் குறிப்பாக மறந்துபோன மகாராஜா டூலிப் சிங்கைப்பற்றி மேலும் அறிய விரும்புபவர்கள் மற்றும் வரலாற்று ஆர்வலர்கள் இதனை கொஞ்சம் பொறுமையோடு கண்டு ரசிக்கலாம்.
- முற்றும்.    

முக்கிய அறிவிப்பு :

நண்பர்களே விடுமுறைப்பயணமாக வரும் செப்டம்பர் 15 முதல் 29 வரை பிரான்ஸ் , ரோம் , மற்றும் இத்தாலியில் உள்ள பாரிஸ், ரோம், வாடிகன், பிளாரென்ஸ் , பைசா , வெனிஸ் ஆகிய நகரங்களுக்கு செல்கிறேன்.அதனால்  பதிவுகள் இரண்டு  வாரங்களுக்கு  வராது .இந்த நகரங்களில்  வாழும் தமிழ் மக்கள் , நண்பர்கள் ஈமெயிலில்  தொடர்பு கொண்டால் சந்திக்கலாம் , நன்றி .
alfred_rajsek@yahoo.com 

5 comments:

  1. நெட்ப்ளிக்ஸ் எனக்கு வராது.  எனவே பார்க்க முடியாது!

    சுற்றுப்பயணம் இனிதாக அமைய வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ஸ்ரீராம்

      Delete
  2. விமர்சனம் நன்று...

    நம்ம ஊருக்கு எப்போது பயணம்...?

    ReplyDelete
    Replies
    1. அடுத்த வருடம் கண்டிப்பாக வருகிறேன் தனபாலன்.

      Delete
  3. உலகம் சுற்றும் வாலி(பன்)

    ReplyDelete