Monday, February 25, 2019


வன தெய்வங்கள் கூடும் கும்பக்கரை அருவி !!!!!!!!
வேர்களைத்தேடி பகுதி 35
இதற்கு முந்திய பகுதியைப்படிக்க  இங்கே சொடுக்கவும். 
http://paradesiatnewyork.blogspot.com/2019/01/blog-post_22.html
நன்றி தினகரன்

கும்பக்கரை அருவி என்பது ஒரு மறைந்திருக்கும் அதிசயம் (Hidden surprise) என்று சொல்லலாம். ஏனென்றால் நிறையப்பேருக்கு இப்படி ஒரு அருவி இருப்பது தெரியாது. உள்ளூர்க்காரர்களுக்கு மட்டும்தான் தெரியும். குறிப்பாக தேவதானப்பட்டி, அதனருகிலுள்ள சிற்றூர்கள் மற்றும் பெரியகுளம் ஆகிய இடங்களிலிருப்பவர்களுக்கு மட்டுமே இது தெரியும். மஞ்சளாறு அணையும் அப்படித்தான். வைகை அணை போல எல்லோருக்கும் தெரியாது. வைகை அணை எல்லாருக்கும் தெரிந்தது எப்படியென்றால் இங்கு மாட்டுக்காரவேலன் என்ற படத்திற்காக எம்ஜியார் அவர்களின் படப்பிடிப்பு நடந்ததற்குப்பிறகுதான். அதே போல கும்பக்கரை தங்கையா படம் வந்த பின் தான் இப்படி ஒரு இடம் இருப்பது பலருக்கு தெரிய வந்தது . கும்பக்கரை அருவி என்பது குற்றாலம், சுருளி போன்றவை போன்று பெரிய அருவியில்லை யென்றாலும், சின்னக் குற்றாலம் என்று அழைக்கப்படும் அளவுக்கு அழகான இயற்கைச் சூழலில் அமைந்த ஒன்று. ஒரு நாள் பிக்னிக்கிற்கு மிகவும் ஏற்ற இடம்.
நன்றி தினகரன்

தேவதானப்பட்டியிலிருந்து பெரியகுளம் போகும் வழியில் கூட்டுரோட்டில் இறங்கி சில கிலோமீட்டர்கள் நடந்தால் சற்றே  உயரமான மலையில் இந்த இரட்டை அருவிகள் இருக்கின்றன. பெரியகுளத்திலிருந்து குறிப்பிட்ட நேரங்களில் டவுன் பஸ்ஸும் இருக்கிறது. ஆனால் நிறைய இல்லை. ஒரு நாளில் இரண்டு மூன்று முறை மட்டும்தான் போகும். தேவதானப்பட்டியிலிருந்து ஓரிரு முறை மட்டும் மாட்டு வண்டியில் போயிருக்கிறேன். காரிலும் சில முறை போயிருக்கிறோம். ஆனால் நடந்து போனது மிகவும் சிறந்த அனுபவம். வனப்பகுதி நெருங்க நெருங்க வெயில் அடிக்காத வண்ணம் இருபுறங்களிலும் மரங்கள் கூரையமைத்திருக்க, ஒரு பெரிய குகைக்குள் செல்வது போலிருக்கும். அதோடு கோடைகாலத்தில் போகும் போது இருபுறமும் உள்ள மாமரங்களில் காயும் பழமுமாகத்  தொங்கும். பறித்தால் கேட்பதற்கு ஆளில்லை அங்கு. சில இடங்களில் தோப்புக்கு வெளியே விற்பார்கள். வாங்கி  உண்டு கொண்டே நடக்கலாம். இருபுறமும் தென்னந்தோப்புகளும் அதிகம். இங்கு கிடைக்கும் இளநீர்கள் மிகவும் சுவை வாய்ந்தவை.
நன்றி தினகரன்

இன்னும் காட்டுக்குள் நுழைந்து மேலேறிச் சென்றால் திடீரென்று ஒரு வெட்டவெளி வரும். பெரும் பாறைகளால் சூழப்பட்ட இடத்தில் சிலுசிலுவென்ற  தென்றல் வீச, சலசல வென்று கொட்டுகிறது கும்பக்கரை  அருவி. சுற்றிலும் பார்த்தால் மேற்குத் தொடர்ச்சி மலை சூழ்ந்து பச்சைப்பசேலென்று  நெஞ்சை நிமிர்த்தி நிற்கிறது. சலசலவென்று ஓடும் தண்ணீரில் ஒரு காலை வைத்தால் குளுகுளு வென்று குளிர்ச்சி உச்சந்தலை வரைக்கும் ஏறுகிறது. தெளிந்த நீரில் சிறுசிறு மீன்கள் தெரிய, காலில் மொய்த்து அவை கிச்சுக்கிச்சு மூட்டுகிறது.கும்பக்கரை பற்றிய மேலும் சில தகவல்களை இப்போது பார்க்கலாம்.( நன்றி தினகரன்)
 கொடைக்கானல் மலையில் இருந்து உருவாகும் நீரூற்று மலையடிவாரத்தை அடைகிறது. இப்பகுதியிலுள்ள மாட்சிநாயக்கன், வீரபுத்திரன், வைரவன், பூதநாட்சி, செழும்புநாட்சி, சோத்துமாயன், சின்ன அண்ணன், கருப்பணசாமி ஆகிய வன தெய்வங்கள் இங்குள்ள கரையில் கும்பலாகக் கூடுமாம். அதனால் இது கும்பல்கரை என்று முன்னர் அழைக்கப்பட்டதாம். இந்த கும்பல்கரையே இன்று கும்பக்கரை என்று மருவியதாக இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
 இயற்கையாகவே உருவாகியுள்ள இந்த நீர்வீழ்ச்சியைச் சுற்றிலும் எழும் பறவைகளின்  குரல்கள் சுற்றுலாப் பயணிகளை வரவேற்கும் விதமாக உள்ளது. இந்த கும்பக்கரை நீர்வீழ்ச்சி இரண்டு அடுக்குகளையுடையது. 400 மீ உயரத்திலிருந்து விழும் இந்த அருவியின் நீர், அதனைச் சுற்றியுள்ள பாறைகளில் விழுகிறது. இந்த நீர்வீழ்ச்சிக்கு அருகில் ஒரு முருகப் பெருமான் சிலையும் உள்ளது. 
நன்றி தினகரன்

இந்த நீர்வீழ்ச்சிக்கு செல்வதற்கு ஒரு உள்ளூர் வழிகாட்டியை அமர்த்திக் கொள்ளும் பட்சத்தில், பாறைகளில் வழுக்குதல் மற்றும் பிற ஆபத்துகளிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும். வருடத்தில் அனைத்து  நாட்களிலும் சென்று வர தகுந்த சுற்றுலாத் தலமான கும்பக்கரை நீர்வீழ்ச்சி உள்ளது. இங்கு கோடைகாலங்களில் நீர்வரத்து அதிகமாக இருக்கும். கொடைக்கானல் பகுதியில் தோன்றி பல இடங்களைக் கடந்து கும்பக்கரை அருவியாக வருகிறது. இந்த அருவியில் பாண்டிய மன்னர்களின் தலவிருட்சமான மருதமரங்கள் அதிகமாக உள்ளது என கூறப்படுகிறது.  மருதமரங்களின் வேர்களை தாண்டி  இந்த அருவி வருவதால் மூலிகை குணமுடையது. இதனால்அருவியில் குளித்தால் வாதநோய் உண்டாகாது என்பது மக்களின் நம்பிக்கையாக உள்ளது. 
இந்த அருவியின் அருகே வனதெய்வக் கோயில்கள் உள்ளன. பூம்பறையாண்டி வைரன், கிண்டன், கிடாயன் உள்ளிட்ட வனதெய்வங்கள் இந்த கும்பகரை அருவியில் இருப்பதாக மக்களால் நம்பப்படுகிறது. இந்த அருவியில் வேறு எங்கும் இல்லாத அளவிற்கு கஜம் என அழைக்கப்படும் இடங்கள் அதிக உள்ளன. அந்த கஜங்கள் அதனுடைய வடிவமைப்பிற்கு ஏற்றவாறு உள்ளது. அண்டா கஜம், யானை கஜம், குதிரை கஜம் என பல கஜங்கள் உள்ளன. இதில் யானை கஜம் பகுதி மிகவும் ஆபத்தான பகுதி என வனத்துறையினர் தெரிவிக்கின்றனர். 
நன்றி தினகரன்

ஆண்டுதோறும் நீர் வற்றாமல் இந்த அருவியில் தண்ணீர் வருவது சிறப்பான ஒன்றாகும். இந்த அருவி வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு உள்ள நீர்வீழ்ச்சிகளுக்கு பல கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த கும்பக்கரை அருவியில் தங்கும் விடுதிகளோ, உணவகங்களோ இல்லை.
வனப்பகுதிக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் பாலிதீன் பயன்படுத்தக் கூடாது. சோப்பு, ஷாம்பு, எண்ணெய் வகைகளை உபயோகப்படுத்தக் கூடாது. மது பானங்களை கொண்டு செல்லக்கூடாது என்பது உள்ளிட்ட பல கட்டுப்பாடுகளை வனத்துறையினர் விதித்துள்ளனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு போதிய அடிப்படை வசதிகள் மற்றும் போதிய பாதுகாப்பு வழங்கினால் சுற்றுலா வரும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. 

மேற்புறத்தில் ஒரு சிறிய அருவி இருக்கிறது. பாறையில் வழுக்காமல் கீழிறங்கினால் மேலிருக்கும் நீர் மேலும் வேகமெடுத்து கொட்டத்துவங்குகிறது. அங்கே குளித்து எழுந்தால் தலைமுடி பஞ்சு ஆகி உடலின் நஞ்சு அனைத்தும் நீங்கி கபகபவென்று பசிக்கும். கட்டுச் சோறு இல்லையென்றால் நீங்கள் காலி. என் வீட்டுக்கு நண்பர்களோ உறவினர்களோ வந்தால் முதலில் வைகை அணை, அப்புறம் மஞ்சளாறு, பின்னர் கும்பக்கரை மற்றும்  காமாட்சியம்மன் கோவில் நிச்சயம் பார்க்க வேண்டிய லிஸ்ட்டில் இடம்பெறுபவை.
தொடரும்
7 comments:

 1. Replies
  1. கண்டிப்பாக போய் வாருங்கள் ஸ்ரீராம்.

   Delete
 2. Replies
  1. .திண்டுக்கல்லில் இருந்து கொண்டு கும்பக்கரை போகாமல் இருக்கமுடியுமா ?

   Delete
 3. கும்பக்கரை நீர்வீழ்ச்சி பற்றிய விரிவான அறிமுகத்துக்கு நன்றி, லிஸ்டில் சேர்த்துக்கொள்கிறேன் சார்.

  ReplyDelete
  Replies
  1. உங்களைப்போன்ற எழுத்தாளர்கள் இங்கு போனால் , உங்களுக்கு புதுப்புது புதினங்கள் தோன்றும் பாஸ்கர்.

   Delete
 4. கும்பக்கரை பற்றிய பயனுள்ள தகவல்கள். நன்றி

  ReplyDelete