Thursday, December 6, 2018

இளமையெனும் பூங்காற்று !!!



எழுபதுகளில்  இளையராஜா பாடல் எண்: 41
இதற்கு முந்திய பகுதியைப்படிக்க  இங்கே சொடுக்கவும்
http://paradesiatnewyork.blogspot.com/2018/10/blog-post_4.html

Image result for பகலில் ஒரு இரவு

1979-ல் வெளிவந்த 'பகலில் ஒரு இரவு' என்ற படத்திற்காக இளையராஜா இசையமைத்து புகழ்பெற்ற பாடல் இது.
பாடலைக் கேட்டுவிடுவோம் முதலில்.


பாடலின் பின்னணி:
மேற்கத்திய இசையின் பாணியில், இளமைத்துடிப்புடன் தான் கொண்ட மோகத்தை வெளிப்படுத்தும் ஒரு ஆணின் பாடல் இது.
இசையமைப்பு:
இந்தப்பாடலை ஒரு கோரஸ் பாட்டு என்று சொல்லலாம். ஏனென்றால் பாடல் முழுதும் கோரஸ் குரல்கள் ஏதோ காதல் தேவதைகள் கானம் பாடுவது போல் வந்து பாடலுக்கு மெருகூட்டுகின்றன. இதனை ஒரு கிட்டார் பாடல் என்றும் சொல்லலாம். கிடார் இசை  பாடல் முழுவதும் விரவி இதயத்தின் ஏதோ ஒரு சொல்லக்கூடாத அல்லது சொல்லத் தெரியாத ஒரு பகுதியைச் சுண்டிவிடுகிறது. இவை தவிர கீபோர்டு, வயலின்கள், புல்லாங்குழல், பெல்ஸ், டிரம்ஸ் போன்றவை பயன்படுத்தப் பட்டிருக்கின்றன. இளையராஜாவின் முக்கிய கருவியான தபேலா இந்தப் பாடலில் எங்கும் வரவில்லை. எங்கும் பயன்படுத்த வாய்ப்பும் இல்லை. அதற்குப் பதிலாக பேங்கோஸ் பாடல் முழுதும் வருகிறது. இளையராஜாவின் பாடல்களில் அதிகமாக பேங்கோஸ் பயன்படுத்தப்பட்ட கடைசிப்பாடல் இதுவென சொல்லலாம். அதன்பின்  டிரிப்பிள் காங்கோஸ் ஐத்தான் அவர் அதிகமாகப் பயன்படுத்தினார். அதே மாதிரி இந்தப்பாடலின் இன்னொரு புதுமை என்னவென்றால் இந்த மாதிரிச் சூழலுக்கு இன்னும் மெதுவான மெட்டுதான் பெரும்பாலும் பொருந்தும். உதாரணம் "நிலாக்காயுது நேரம் நல்ல நேரம்" போன்ற இளையராஜாவின் பாடல்கள்.  அதற்கு மாறாக இந்தப்பாடல் துள்ளல் இசையுடன் அமைந்த ஒரு வேகப்பாடல். அதோடு இந்தச் சமயத்தில் அதிகமாக பாடப்பட வேண்டிய டூயட் பாடல் இல்லாமல் இது சோலோவாக ஒலிக்கிறது.

பாடல் வரிகள்:
இளமை எனும் பூங்காற்று, பாடியது ஓர் பாட்டு
ஒரு பொழுது ஓர் ஆசை, சுகம் சுகம் அதிலே ஒரே சுகம் (2)
ஒரே வீணை ஒரே ராகம்…

1. தன்னை மறந்து மண்ணில் விழுந்து,
இளமை மலரின் மீது,
கண்ணை இழந்த வண்டு,
தேக சுகத்தில் கவனம்,
காட்டு வழியில் பயணம்,
கங்கை நதிக்கு மண்ணில் அணையா? – இளமை

2. அங்கம் முழுதும் பொங்கும் இளமை,
இதம் பதமாய் தோன்ற,
அள்ளி அணைத்த கைகள்,
கேட்க நினைத்தாள் மறந்தாள்,
கேள்வி எழும் முன் விழுந்தாள்,
எந்த உடலோ எந்த உறவோ? - இளமை

3. மங்கை இனமும் மன்னன் இனமும்,
குலம் குணமும் என்ன?
தேகம் துடித்தால் கண்ணேது?
கூந்தல் கலைந்த கனியே,
கொஞ்சி சுவைத்த கிளியே,
இந்த நிலைதான் என்ன விதியோ? - இளமை
Image result for Ilayaraja with kannathasan young


          பாடலை எழுதியவர் கவிஞர் கண்ணதாசன் அவர்கள். முதலிரண்டு வரிகளிலேயே கவித்துவம் பொங்கி வந்துள்ளது. பூங்காற்றைப் போல வரும் புத்திளமை, புதுப்பாட்டு ஒன்றைப்பாடினால் எப்படி இருக்குமோ அதனைத்தான் இந்த வரிகளில் வெளிப்படுத்தியிருக்கிறார். இசையின் இளமைக்கு மேலும் இளமை சேர்க்கிறது கண்ணதாசனின் வரிகள். முதல் சரணத்தில் "தன்னை மறந்து மண்ணில் விழுந்து இளமையெனும் மலர் மீது விழுந்த வண்டு,  தன் கண்ணை இந்துபோனது" என்ற அழகான உருவகம் கவிஞரின் அழகியல் கற்பனையை வெளிக்காட்டி விளக்க வைக்கிறது. அதேபோல் இரண்டாவது சரணத்தில், "கேட்க நினைத்தாள் மறந்தாள், கேள்வி எழுமுன் விழுந்தாள்" என்று தலைவியின் நிலையையும் தலைவன் மூலமே வெளிப்படுத்துகிறார்.
கடைசி சரணத்தில், “மங்கை இனம் மன்னன் இனம் தவிர வேறு என்ன குலம் குணம் தேவைப்படுகிறது. தேகம் துடித்துவிட்டால் கண்கள் குருடாகிவிடும் எனச் சொல்லும்போது "Love is blind" என்பதைத்தான் தன் சொந்த வரிகள் மூலம் சொல்லுகிறார் கண்ணதாசன். கண்ணதாசன் ஆங்காங்கே தன முத்திரை வரிகளைப்பதித்துள்ள மற்றொரு சிறந்த பாடல் இது.

பாடலின் குரல்:
Image result for SPB with Ilayaraja young

இளமைப்பாட்டை இளமைக்குரலில் பாடியுள்ளது. S.P. பாலசுப்பிரமணியம் அருமையாக மட்டுமல்ல அசால்ட்டாக என்று சொல்வோமே அப்படி அநாயசமாக பாடியிருக்கிறார். இளையராஜா, கண்ணதாசன் SPB  இவர்களின் கூட்டு முயற்சியில் வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட்டான  இந்தப்பாடலுக்கு திரையில் வெளிவந்த காட்சிப்படுத்துதல் மிகுந்த ஏமாற்றமளிக்கிறது. ஆனால் அதையெல்லாம் மீறி ஹிட்டான இளையராஜாவின் பாடல்களில் இது சிறந்த இடத்தைப் பிடித்த பாடல்.
எழுபதுகளில் வெளிவந்த இளையராஜாவின் பாடல்களில் சிறந்த பத்துப் பாடல்களைத் தேர்ந்தெடுத்தால் அவற்றில் இது முன் வரிசையில் இடம் பிடிக்கும் என்பதில் ஐயமில்லை.
- தொடரும். 

7 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. இந்தப் படத்தின் "பொன்னாரம் பூவாரம்" பாடலும் அருமையாக இருக்கும். மிகவும் ரசிக்கும் பாடல்களில் ஒன்று.

    இதேபோல எங்கள் தளத்தில் வெள்ளிக்கிழமைகளில் பிடித்த, ரசித்த பாடல்களை பதிவிடுகிறேன்.

    ReplyDelete
  3. மிக மிக ரசனையான பாடல்...

    என்றும் எப்போதும்... (!)

    ReplyDelete
    Replies
    1. நன்றி திண்டுக்கல் தனபாலன்.

      Delete
  4. //இதயத்தின் ஏதோ ஒரு சொல்லக்கூடாத அல்லது சொல்லத் தெரியாத ஒரு பகுதியைச் சுண்டிவிடுகிறது// மிக உண்மை சார். ஏதோ வேண்டாத சுரத்தை மீட்டிவிட்டது போல் ஒரு எண்ணம் வருவதை உணர்ந்திருக்கிறேன்.

    ReplyDelete