Monday, October 1, 2018

சடுகுடு விளையாட்டில் சாதித்த(?) பரதேசி !!!!!


Image result for kabaddi in village
வேர்களைத்தேடி பகுதி 27

இதற்கு முந்திய பகுதியைப்படிக்க  இங்கே சொடுக்கவும்.
https://paradesiatnewyork.blogspot.com/2018/09/blog-post_24.html

இந்து நடுநிலைப்பள்ளியில் நான் படிக்கும்போது அதற்கென்று ஒரு விளையாட்டு மைதானம் இருந்ததில்லை. பள்ளியின் தகவல் பலகையில் விளையாடுமிடம் சந்தைப் பேட்டை என்று போட்டிருக்கும். அது பள்ளியை விட்டு கொஞ்சம் தூரத்தில் இருந்ததால் அங்கு எங்களை யாரும் கூப்பிட்டுப்போன ஞாபகம் இல்லை. எனவே நான் அதிகபட்சம் அங்கு விளையாடியது, கோலிக்குண்டு, குலை குலையா முந்திரிக்காய். கிட்டிப்புள், பம்பரம், நொண்டி, கிளித்தட்டு போன்ற அவுட்டோர் விளையாட்டுகளும், பல்லாங்குழி, பரமபதம், சொட்டாங்கல் கூட்டாஞ்சோறு போன்ற இண்டோர் விளையாட்டுக்கள் மட்டும்தான். இதைத்தவிர பொன் வண்டு  வளர்ப்பது, வண்ணத்துப்பூச்சி பிடித்து நூல் கட்டி வைத்துக் கொள்வது, புளிய விதையில் ஒற்றையா ரெட்டையா, தீப்பெட்டிப்படம் மற்றும் சிகரெட் அட்டைகள் வைத்து விளையாடும் மங்காத்தா ஆகியவையும் உண்டு.

தேவதானப்பட்டி உயர் நிலைப்பள்ளி

ஆனால் உயர் நிலைப்பள்ளியில் விளையாடுமிடமும் ஆடுகளங்களும் தனித்தனியாக அமைக்கப்பட்டு அதற்கு உடற்பயிற்சி ஆசிரியரும் இருந்தார். டென்னிக்காய்ட், பேட்மிண்ட்டன், சாஃப்ட் பால், வாலிபால், கபடி, கால்பந்து ஆகியவற்றுக்கு தனித்தனி களங்கள் இருந்தன. என்னுடைய அப்பா ஒரு சிறந்த  வாலிபால் பிளேயர், மதுரை பசுமலையில் விடுதியில் தங்கிப்படிக்கும் போது வாலிபால் மற்றும் கால்பந்து விளையாடுவதில் சிறந்து இருந்திருக்கிறார். தேவதானப்பட்டியிலும், சந்தைப் பேட்டையில் இயங்கிய கைப்பந்துக் கழகத்தில் உறுப்பினராக பலவிதமான மேட்ச்களில் பங்கு கொண்டிருக்கிறார். அப்பா அவர்கள் விளையாடுவதை நான் பார்த்திருக்கிறேன். களத்தில் ஷாட் அடிப்பவர்களுக்கு பந்தை லிஃப்ட் செய்து கொடுப்பது அவர் பணி, அவ்வளவு உயரம் இல்லையென்பதால் ஷாட் அடிப்பதில் ஈடுபடவில்லை என்று நினைக்கிறேன்.
அம்மாவும் திண்டுக்கல் புனித ஜோசப் கான்வென்ட்டில் படித்தபோதும் சரி மதுரை கேப்ரன் ஹாலில் படிக்கும்போதும் சரி ட்ராக் விளையாட்டுகளில் ஈடுபட்டு பலபரிசுகளை வாங்கியிருக்கிறார்களாம்.
என் வீட்டில் நான் மட்டும்தான்  விளையாட்டில் ஆர்வமாக இருந்தேன். ஆனால் மிகவும் ஒல்லியாக இருந்தால் அந்த அளவுக்கு பெரியதாக விளையாடமுடியாமல் போனது.
டென்னிக்காய்ட்டில் அதிகமாக விளையாடி பல பரிசுகள் பெற்றதை ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். ஏதோ ஏழைக்குத் தகுந்த எள்ளுருண்டை.
அதே போல கபடியிலும் நன்றாக விளையாடுவேன் என்பதை இப்போது சொன்னால் என் மனைவி உட்பட யாரும் நம்பமாட்டேன் என்று சொல்லுகிறார்கள்.
தேவதானப்பட்டி உயர்நிலைப்பள்ளியில் பின்புறமுள்ள பல களங்களில் கபடி மைதானம் தான் கடைசி. அப்போது பக்கத்தில் ஒரு மரம்  கூட இருக்காது. கொஞ்ச தூரத்தில் இருந்த சரளைக்  கரடில்  கூட கொஞ்சம் புதர்கள்தான் இருக்கும். நிழல் என்பது கிஞ்சித்தும் இல்லாத வெட்டவெளியில் சுட்டெரிக்கும் வெயிலில் எங்களுக்கு விளையாட்டு பீரியட்டில் மட்டுமல்லாது பல சமயங்களில் பள்ளி முடிந்தவுடன் கூட விளையாடுவோம். வகுப்புகள் நான்கு  மணிக்கு முடிந்துவிடுமென்பதால் 4 மணியிலிருந்து 5 - 5.30 வரை விளையாடுவோம். ஆறு மணிக்கெல்லாம் இருட்டத் துவங்கி விடுமென்பதால் கொஞ்ச நேரத்திற்கு முன்னாலேயே ரக்கட்டி விடுவோம்.
அந்தக் கபடி மைதானம் நல்ல செம்மண் சரளைக் காட்டில் ஒரு குழி போல் வெட்டி மணல் போட்டிருப்பார்கள் பல நேரங்களில் விளையாட்டு வகுப்பில் நாங்கள் செல்வது அங்குள்ள மைதானங்களில் கல் பொறுக்குவதற்குத்தான். குறிப்பாக மழை பெய்து முடிந்தவுடன், உயரத்திலிருந்து ஓடிவரும் நீர்  மைதானங்களை சரளைக் கற்களால் நிரப்பிவிடும். ஒன்றுக்கும் உதவாத கரடென்பதால்தான் தேவதானப்பட்டி ஜமீன்தார் தாராளமாகக் கொடுத்துவிட்டார் போலத் தெரிகிறது.
கண்ணன், வெங்கடேசன், மாரியப்பிள்ளை மகேந்திரன் இன்னும் பலர் விளையாடுவோம். பத்தாவது வரை அரைக்கால் டிரவசுர் தான் போடுவோம். இப்போதும் என் இரு முழங்கால்களிலும் பல  விழுப்புண்களைப் பார்க்கலாம். இதில் வெங்கடேசன் ஒரு புறமும் மாரியப்பன் மறுபுறமுமாக அணித்தலைவர்களாக இருப்பார்கள். கண்ணனும் நன்றாக விளையாடுவான். மாரியப்பிள்ளை பாடிச் செல்லும்போது மிகவும் ஆக்ரோசமாகச் செல்வான். எதிரில் உள்ளவர்கள் அவனை நெருங்க முடியாது. கோடு ஏறியவுடன் அவர்களை எல்லைக்கோடு வரை நெருக்கிச் சென்றுவிடுவான். அதன்புறம் திரும்பும்போது போக்குக்காட்டி மறுபடியும் பின் சென்று அந்தரத்தில் எகிறி பின்புறமாக ஒரு உதை விடுவான். அதில் பலருக்கு காயம் பட்டிருக்கிறது. பிடித்தாலும் விலாங்கு மீன் போல் துள்ளிவந்து விடுவான். அதனால் நான் எப்போதும் மாரியப்பன் அணியில் இருப்பேன் .அவன் வராவிட்டால் வெங்கடேசன் அணிக்குப்போய்விடுவேன் . ஜெயிக்கற அணியில் இருப்பதுதானே வீரம் .
பாடுவதை விட பிடிப்பது எனக்கு எளிது. கோட்டின் அருகே நின்றுகொண்டு பாடிவருபவர்கள் காலை, கோட்டின் மேல் வைக்கவிட்டு குனிந்து அப்படியே கெண்டைக் காலைப் பிடித்துவிடுவேன். அவன் காலை உதறுவதற்குள் மற்ற குழுவினர் அப்படியே ஓடிவந்து ஒரே அமுக்காக அமுக்கி விடுவார்கள். இந்த என் டெக்னிக் அணியில் அதிகம் பேர் இருக்கும்போது தான் எடுபடும். சில சமயங்களில் நான் தனியாக இருக்கும்போது  யாராவது பாடி வந்தால் நேரத்தை வீணடிக்காமல் ,எந்த சாகசத்திலும் ஈடுபடாமல் கையைத் தொட்டு அவுட்டாகி விடுவேன். எனக்கு எது எவ்வளவு முடியும் என்பதில் எனக்கு எப்போதுமே சந்தேகம் வந்ததில்லை. பெரிய ரிஸ்க்குகளை எடுத்ததுமில்லை. கபடியில் மட்டுமல்ல வாழ்க்கையிலும் அப்படித்தான்.
கபடி தவிர டென்னிக்காய்ட் பற்றி ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். இதுதவிர எப்போதாவது ஷாட்பால்  விளையாடியிருக்கிறேன். அமெரிக்கா வந்தபோது இங்கு ஆடும் பேஸ் பால் கிட்டத்தட்ட அதே போல் இருப்பதை அறிந்து ஆச்சரியப்பட்டேன்.
கேரம், செஸ் போன்றவை பின்னர் கற்றுக் கொண்டேன். இப்போதும் என் வீட்டில் கேரம் போர்டு இருக்கிறது, எப்போதாவது விளையாடுவது உண்டு. ஆலயக்கேம்ப்புகள் வரும்போது அதனை எடுத்துச் சென்று  டோர்னமென்ட் போல விளையாடுவது உண்டு.
தேவதானப்பட்டியில் வடக்குத் தெருவில் தேவர் இளைஞர் அமைப்பு சார்பாக மாநில அளவில் கபடிப் போட்டி நடக்கும். அதற்கு பல ஊர்களிலிருந்து டீம்கள் வந்து இறங்கும். மதுரை காவல்துறை அணி சிறப்பாக விளையாடி கப்பை பலமுறை பெற்றுள்ளது. இந்த மாதிரி பெரிய போட்டிகளில் நான் பார்வையாளனாக கலந்து கொள்வதோடு நிறுத்திக்கொள்வேன் என்பதால்தான் இன்னும் முழுசாய் இருக்கிறேன் என்று நினைக்கிறேன்.
ஆனால் இவ்வாறு விளையாட்டுகளில் ஆர்வம் காட்டியது என் வீட்டில் எங்கம்மா அப்பாவுக்குப் பின் நான் ஒருவன் மட்டும்தான். அடுத்த வாரம் திகில் கதையான தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சியம்மன் கோவில் பற்றிச் சொல்கிறேன்.
-தொடரும்.



10 comments:

  1. என் உடல் வலுவுக்கு சம்பந்தமே இல்லாத கபடி ஆட்டத்தில் தஞ்சையில் நானும் ஒரு எவர்சில்வர் டம்ளர் பரிசாக வாங்கியிருக்கிறேன்!

    ReplyDelete
    Replies
    1. சூப்பர் ஸ்ரீராம் , என்னை விட நீர் கபடியில் பெரிய ஆள்தான்.

      Delete
  2. தன் பலவீனத்தை அறிந்தவர்கள் தான் உண்மையான பலசாலி...

    ReplyDelete
    Replies
    1. இப்படி எதையாவது சொல்லி தேத்திக்கவேண்டியதுதான் தனபாலன்

      Delete
  3. //தீப்பெட்டிப்படம் மற்றும் சிகரெட் அட்டைகள் வைத்து விளையாடும் மங்காத்தா//
    ஹிஹி நானும்.
    அந்த தீப்பெட்டி படஙகளை இன்னும் வைத்திருக்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. இன்னும் வைத்திருக்கிறீர்களா அன்பு ஆச்சரியம்தான் .

      Delete
  4. மிஸ்ட் உங்க போஸ்ட்ஸ் படிக்கத் தொடங்கிடனும்....

    மீண்டும் வலை வந்தாச்சு

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வருக உங்கள் மேலான கருத்துக்களை தருக கீதா நன்றி

      Delete
  5. அப்ப கபடில பெரிய ஆளா சகோ நீங்க!!

    கீதா

    ReplyDelete
    Replies
    1. அப்படிலாம் கேக்காதீங்க , கூச்சமா இருக்கு .

      Delete