Thursday, August 2, 2018

தமிழில் இத்தனை தொழில் முனைவர்களா?Fetna – 2018 பகுதி 3
இதற்கு முந்திய பகுதியைப்படிக்க  இங்கே சொடுக்கவும்.
http://paradesiatnewyork.blogspot.com/2018/07/blog-post_26.html

2017 ஆகஸ்ட் மாதமே, 2018-ன் Fetna திருவிழா, டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள டல்லஸ் பெருநகரில் நடைபெறுகிறது என்று கேள்விப்பட்டேன். அதனைக்குறித்து தமிழ்ச்சங்க விழாக்களில் தொடர்ந்து அறிவித்துக் கொண்டு இருந்தனர்.  நியூயார்க் தமிழ்ச்சங்கத்தில் பொறுப்புக்கு வந்தபின் வரும் முதல் Fetna  என்பதால் குடும்பத்தினருடன் ஆலோசனை செய்து 2017 செப்டம்பர் மாதமே நான்கு விமானப்பயணச் சீட்டுகளையும் தங்குவதற்கு விடுதிகளையும் புக் செய்தேன். Fetna எப்போதுமே ஜூலை மாதம் 4ஆம் தேதி  வரும் அமெரிக்க சுதந்திர நாளை ஒட்டி வரும் விடுமுறை வார இறுதியில் குறைந்த பட்சம் 3-அல்லது நான்கு நாட்கள் நடக்கும் என்பது உங்களில் பலபேருக்குத் தெரிந்திருக்கும்.
டல்லஸ் நகருக்கு இதுவரை நான் சென்றதில்லை என்பதால் இதனை 2018-ன் குடும்ப சுற்றுலாவாகவும் ஆக்க முடிவு செய்து ஃபெட்னா   மூன்று நாள் தவிர இன்னுமொரு மூன்று நாட்கள் அங்கு தங்கி டல்லஸ் நகரைச் சுற்றிப்பார்த்து விட்டு வருவதாக திட்டமிட்டிருந்தோம். ஆனால் இறுதியில் என் மனைவி வரமுடியாத சூழ்நிலையில் நானும் என் இரு மகள்களும் மட்டும் கிளம்பினோம்.
டல்லஸில் இருக்கும் ஃபிரிஸ்கோ என்ற (Frisco) பகுதியில் இருக்கும் டாக்டர் பேப்பர் ஏரினா (Dr.Pepper Arena) என்ற அரங்கத்தில் முக்கிய நிகழ்வுகளும் அதன் பக்கத்தில் இருக்கும் எம்பஸி சூட்டில் (Embassy Suite)  மற்ற இணை நிகழ்வுகளும் நடைபெறும் வண்ணம் திட்டமிட்டிருந்தனர். நாங்கள் தங்கியது அரங்கின் நேர் எதிரேயுள்ள “ஹில்டன் கார்டன்” என்ற ஹோட்டலில், ஜூன் 28 2018 அன்று இரவே சென்று சேர்ந்தோம். 
ஜூன் 29 வெள்ளிக்கிழமை காலை தமிழ் தொழில் முனைவோர் கூட்டம் காலை முதல் மாலை வரை நடந்தது.

அரங்கின் முன்னே மெட்ரோ பிளக்ஸ் தமிழ்ச்சங்க அமைப்பினர் சிறந்த ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். சந்தனம் கற்கண்டோடு பன்னீர்  தெளித்து வரவேற்றனர். ஃபெட்னா விழாவிற்கு வந்திருந்த நன்கொடையாளர்களை, மாபெருங் கொடை வள்ளல், பெருங்கொடை வள்ளல், கொடை வள்ளல் மற்றும் வள்ளல் என்று அவரவர் நன்கொடையின் அளவைக் குறித்து பிரிக்கப்பட்டு பேட்ஜ்களை கொடுத்திருந்தனர்.நான் கொடை வள்ளல் இல்லையென்றாலும் கடை வள்ளல் என்று மகிழ்ந்திருந்தேன்.  ஆகா பேகன்,பாரி ஓரி, நள்ளி ஆகிய வள்ளல்களை அடுத்து இந்த ஒல்லிதான்  அடுத்த வள்ளல் என்று பெருமையோடு அணிந்து ராஜநடை நடந்து கம்பீரத்துடன்  (?) நடந்து சென்றால் அதுதான் கடைசி கேட்டகிரி போல. கடைசி வள்ளல் கேட்டகிரியில் ரிஜிஸ்டர் செய்திருந்தேன் என்று பின்னர்தான் தெரிந்தது.
டாக்டர் பெப்பர் ஏரினா மிகப்பெரிய அரங்கம். அருமையான மேடை அற்புதமான ஒலி / ஒளி அமைப்பு. மேடையின் இருபுறமும் இருபெரிய டிவிக்கள் அதன் மேலேயும் 4 டிவிக்கள், பின்புறம் பிரமாண்டமான எல்சிடி திரையென்று ஆற்றா டிஜிட்டலாக இருந்தன. அதனை ஆப்பரேட் செய்வதற்கு குறைந்தபட்சம் 5 பேர் தங்கள் லேப்டாப் சகிதமாக ஹெட்போனுடன் அமர்ந்திருந்தனர்.
நுழைந்தவுடன் சுடச்சுட இட்லி, வடை, பொங்கல் என்று காலை உணவு தயாராக இருந்தது. தினமும் ஓட்மீலைத்தின்று அல்லது விழுங்கி ஓடாய்த்  தேய்ந்து போயிருந்த இந்த காய்ஞ்ச மாடு ஒரே பாய்ச்சல் பாய்ந்தது. சுகரையும் ஃபிகரையும் மறந்து ஒரு வெளு வெளுத்தேன்.
இலேசான மயக்கத்தில் உட்கார்ந்திருந்த நான் சுற்றிப் பார்த்தபோது தான்  முன்னால் இருந்த நியூயார்க் தமிழ்ச்சங்கத்தின்  முன்னாள் இந்நாள் தலைவர்கள் பலபேரைப் பார்த்தேன். அப்புறம் சேர்ந்து உட்கார்ந்து கொண்டோம். வழக்கம்போல் தமிழ்த்தாய் வாழ்த்தும், அமெரிக்க தேசிய கீதமும் பாடி முடித்தவுடனே  தூத்துக்குடியில் உயிர்நீத்த நம் தமிழ் உறவுகளுக்கு மெளன அஞ்சலி செலுத்தி முடித்து நிகழ்ச்சிகள் ஆரம்பமாயின.

Fetna வின் இந்த நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் கால்டுவெல் வேள் நம்பி வரவேற்புரை ஆற்றினார். 
பல பேர் தொடர்ந்து உரையாற்றினார்கள். பதின்ம வயதுப் பிள்ளைகள் வந்து அவர்களை அறிமுகப்படுத்திச்சென்றனர். பேசியவர்களில் என்னை மிகவும் கவர்ந்தவர்களை கீழே தருகிறேன்.
அருள் முருகன் - CEO  11-11 ventures
காஞ்சனா ராமன் - CEO  Avion Networks  
ராம் நாகப்பன் –  CIO BNY Mellom
முரு. முருகப்பன் -CIO BNSF
அருள்பாண்டியன் - Founder :Signal  Corps Recordings
இதில் அருள் பாண்டியன் தன்னுடைய இசைக்காக கிராமி விருது  வாங்கிய இளைஞர் மிகவும் பெருமையாக இருந்தது.
பெரும்பாலும் கூலிக்கு மாரடிக்கும் தமிழர்களில் இத்தனை தொழில் முனைவர்கள் அதுவும் அமெரிக்காவில் இருந்தது பெரும் மகிழ்ச்சியைத்தந்தது.
          அதிமுக அமைச்சர் மாஃபாய் பாண்டியராஜன் வரவில்லை. அவருக்குப் பதிலாக அவரின் மனைவி ஹேமலதா பாண்டியன் வந்து உரையாற்றினார். பாண்டியராஜனும், மு.க. ஸ்டாலினும்  நல்லவேளை வரவில்லை. வந்தால் அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்க வெளியே சிலர் காத்திருந்தனர்.
இந்தச் சிறப்பு நிகழ்வில் பிரபுதேவா "உங்கள் வாய்ப்புகளை நீங்களே உருவாக்குங்கள்" என்ற தலைப்பில் பேசுவதாக இருந்தது. அவரும் வரவில்லை. ன் வரவில்லை என்ற அறிவிப்பும் இல்லை.

நடிகர் கார்த்தி வந்து அகரம் அமைப்பினைப் பற்றி ஒரு நெகிழ்வான உரையாற்றினார். அவர் காட்டிய வீடியோவும் அகரம் செய்யும் உதவிகளைக் கோடிட்டுக் காட்டியது. அதுதவிர சிக்காகோ காங்கிரஸ்மேன்  ராஜா கிருஷ்ணமூர்த்தி அவர்களின் உரை மிகச்சிறப்பாக இருந்தது.
அன்று மாலை '' என்ற சிறப்புப் பாடலுக்கு டல்லஸ் தமிழ்ச்சங்கத்தைச் சேர்ந்த குழுவினர் அழகிய நடனம் ஆடினர். மேலும் தமிழ்ப் பாடல்களுக்கு  அமெரிக்கப் பெண்கள் ஆடிய நடனமும் நன்றாகவே இருந்தது.

அதன்பின் ஹிப் ஹாப் தமிழா வந்து ஒரு பொறுப்பான உரையாற்றி ஆச்சரியப்படுத்தினர்.
இப்படியாக TEF Talk  என்னும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்று முடிந்தது. மிகச்சிறப்பாக செய்யப்பட்டிருந்த  உணவு ஏற்பாடுகள் பற்றி தனியாகச் சொல்கிறேன்.
-தொடரும். 
Photo Courtesy : Fetna 2018 

6 comments:

 1. படித்தேன் நண்பரே...இதன் முந்தைய பதிவுகளையும் படிக்கிறேன்...

  ReplyDelete
  Replies
  1. நன்றி அஜய் , நீங்கள் தமிழர் என்பது ஆச்சரியம் அளிக்கிறது

   Delete
 2. // சுகரையும் ஃபிகரையும் மறந்து // ஹா... ஹா... ஹா... ஹா...

  ReplyDelete
  Replies
  1. உங்களுக்கு சிரிப்பாக இருக்கிறது , என்ன செய்வது ?

   Delete
 3. Fetna – 2018 வின் டல்லாஸ் நகர் டாக்டர் பேப்பர் ஏரினா அரங்கில் நிகழ்வுகளை நேரில் பார்த்ததுபோல உணர்ந்தேன்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி முத்துச்சாமி.

   Delete