Thursday, September 1, 2016

முள்ளிவாய்க்கால் ,சசிகலா நடராஜன் , கனிமொழியின் கவிதைமொழி !!!!!!!!!

FETNA  தமிழர் திருவிழா பகுதி -7
Image result for mullivaikkal muttram thanjavur
Mullivaaikaal Mutram, Thanjavur
ப.நெடுமாறன் அவர்களின் பெரிய முயற்சியில் , தஞ்சாவூரில் முள்ளிவாய்க்கால் என்ற பகுதியில், ஈழத்தில் நடந்த இன அழிப்புப்போரில் வீரமரணம் அடைந்த தமிழ் வீரர்களுக்கு நினைவுச் சின்னம் ஒன்று எழுப்பப்பட்டது உங்களுக்குத் தெரிந்திருக்கும். தொட்டிலையும் ஆட்டிக் கொண்டு பிள்ளையையும் கிள்ளிவிடும் நம் புரட்சித்தலைவி (?) அதற்கு என்னவெல்லாம் இடையூறு செய்தார்கள் என்றும் நமக்குத் தெரியும். அந்த முள்ளிவாய்க்கால் அமைவதற்கு பெருமளவு ஈடுபட்ட தஞ்சாவூர் தமிழ்மண் பதிப்பகத்தின் நிறுவனர் இளவழகன் தமிழர்விழாவில் பெருமைப் படுத்தப்பட்டார். அப்போதுதான் தெரிந்தது, நம் ஃபெட்னா  அமைப்பின் தலைவர், நாஞ்சில் பீட்டர் அதற்கு எப்படியெல்லாம் உதவினார் என்பது.
Image result for mullivaikkal muttram thanjavur
Mullivaaikaal Mutram

அதோடு, நெருக்கமாக நடந்து கொண்டிருந்த நிகழ்ச்சிகளின் நடுவில் நடராஜன் அவர்களும் மேடைக்கழைக்கப்பட்டு மரியாதை செய்யப்பட்டார். முள்ளிவாய்க்கால் அமைவதற்கு உதவி செய்தவர்களில் அவரும் ஒருவர். அவர் மேடையில் பேசவில்லை. மேலே ஏறி பொன்னாடை பெற்றுக் கொண்டு உடனே இறங்கிவிட்ட அவரை யாரும் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை. அவர் யார் என்று பெரும்பாலானோர்க்குத் தெரியவில்லை. ஒருவேளை 'சசிகலாவின் கணவர்' என்று அறிமுகப் படுத்தியிருந்தால் எல்லோருக்கும் தெரிந்திருக்கும். யார் கண்டது ஜெயலலிதாவுக்குப் பின் முதலமைச்சர் அரியணையில் நடராஜன் அமர்ந்தாலும் அமரலாம். அப்படி ஒருவேளை நடந்துவிட்டால் நாஞ்சில் பீட்டர் போன்ற உண்மையான, நேர்மையான, கூர்மையான தமிழ்ப் புரவலர் அமைச்சரவையில் இடம் பெற்றால்  நன்றாக இருக்கும்.
Image result for sasikala natarajan
Sasikala Natarajan

அடுத்து என்னைக் கவர்ந்த நிகழ்ச்சி கவியரங்கம். அரங்கு நிறையவில்லை என்றாலும் கவிதையில் நாட்டமுள்ளவர்கள் பலர் கூடியிருந்தனர். கவிஞர்  இலந்தை ராமசாமி தலைமையில் பாரதிதாசனின் வரிகளான " கெடல் எங்கே  தமிழின்  நலன்" என்ற தலைப்பில் கவிதை வாசித்தவர்கள் ராஜ்யஸ்ரீ, வாஞ்சிநாதன், கனிமொழி, மகேந்திரன் பெரியசாமி மற்றும் சிவபாலன் ஆகியோர். இவர்களில் கவிஞர் சிவபாலன் என் பிளாக்கில் அடிக்கடி இடம்பெற்ற ஒருவர். யாழ்ப்பாணத்தமிழர், தமிழகத்தின் மருமகன், நியூயார்க் தமிழ்ச் சங்கத்தின் இலக்கிய அணித்தலைவர். கவிஞர் சிவபாலன் வரும்போது கைதட்டல் பலமாக ஒலித்தது. அந்தத் தட்டலில் என்னுடைய கைதட்டலும் ஆரவாரமும் கலந்து இணைந்து அமிழ்ந்தது. எப்போதும் போல் தனக்கே உரிய பாணியில் நகைச்சுவையை இணைத்தாலும் தலைப்பின் உக்கிரம் நினைத்து அதற்கேற்றாப்போல் வரிகளை அமைத்திருந்தார்.  நண்பர் என்பதற்காகச் சொல்லவில்லை. அன்று வாசித்த  எனக்கும் பிடித்தகவிதைகளில் இது தலையாயது. அடுத்து  எனக்கு மிகவும் பிடித்தது, மகேந்திரன் பெரியசாமியுடையது. இவர் வாஷிங்டன் தமிழ்ச்சங்கத்தைச் சேர்ந்தவர். வளர்ந்து வரும் கவிஞர். போன வருடம் மேரிலாண்டில் நடந்த உலகத்தமிழர் அமர்வில் நாங்கள் இருவரும் கவியரங்கம் மற்றும் பட்டிமன்றத்தில் ஒரே மேடையைப் பகிர்ந்திருக்கிறோம். அன்று அவர் பாடிய கவிதை இன்று நினைத்தாலும் கண்ணீரை வரவழைக்கும். முள்ளிவாய்க்கால் கடைசி யுத்தத்தத்தைப் பற்றிய அந்தக் கவிதையில் தன் இதயத்தை உருக்கி ஊற்றியிருந்தார். அவருடைய கவிதையும் எனக்குப் பிடித்தது. நடுநடுவில் சிலர் வந்து கட்டுரைகளை மிகவும் சிரத்தையுடன் வாசித்துவிட்டுச் சென்றனர்.
Image result for ilanthai ramasami
Kavignar Ilanthai Ramasamy

கவியரங்கத்தின்  அமைப்பாளர்கள் இவற்றை ஏற்கனவே பார்த்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். அல்லது தலைப்பை முன்னரே கொடுத்து, கவியரங்கில் பங்கு கொள்ளாத  தமிழ்ச் சங்கங்களிருந்தும் கவிதைகளை வாங்கி,அதில் சிறந்த பத்துக் கவிதைகளை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு மட்டும் வாய்ப்பை வழங்கியிருக்கலாம். அது எவ்வளவு தூரம் சாத்தியம் என்று தெரியவில்லை.
Mahendran Periyasamy
கவிஞர்களின் மத்தியில் ஒரு சிறு பெண் ஜீன்சும் சட்டையும் அணிந்து உட்கார்ந்திருந்தாள். நடுவில் வந்த கட்டுரைகள் போதாதென்று ஆங்கிலத்திலும் கவிதை பாட அனுமதித்துவிட்டனரோ என்று எண்ணிய போது  எழுந்து வந்த பெண்ணின் பெயர் கனிமொழி. மேடைக்கு வந்தபின்தான் தெரிந்தது கனிமொழியின் கவிதைமொழி தனிமொழி என்று . எதிர்பாராத விதத்தில் பொறிந்து தள்ளி விட்டார். மொழி, உச்சரிப்பு, நடை என்று மற்ற எல்லாரையும் மிஞ்சிவிட்ட கனிமொழி, இலங்கை கண்டெடுத்த புதுமைப் பெண்தான். அவர் வாசித்த கவிதை "அக்கினிக்குஞ்சொன்று கண்டேன் அதை  அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன், வெந்துதணிந்தது காடு தழல்வீரத்திற் குஞ்சென்றும் மூப்பென்றுமுண்டோ "என்ற பாரதியின் வரிகளை நினைவுபடுத்தியது.  
கனிமொழி
தலைமையேற்ற கவிஞர் இலந்தை ராமசாமி ஆயிரம் களம் கண்டவர். அவர் முன் கவிதை, இடைக்கவிதைகள் மற்றும் முடிவுக்கவிதை அனைத்திலும் மரபும், புதிசும் பிண்ணிப் பிணைந்து வந்தன. அவர் நீண்ட ஆயுளைப் பெற்று தொடர்ந்து தமிழ்ப்பணியாற்றிட இறைவனை வேண்டுகிறேன்.
பலபேர் அரங்கிலில்லாத சமயம் Dr.சுபாஷினி  என்பவர் உரையாற்றினார். ஜெர்மனியில் வசிக்கும் இவர் தன் வாழ்நாளில் தன்னுடைய நேரத்தையும், செல்வத்தையும் செலவளித்து, வரலாற்று ஆவணங்கள், ஓலைச்சுவடிகள் மற்றும் கல்வெட்டுகள் ஆகியவற்றைக் கண்டுபிடித்து ஆவணப்படுத்தி வருகிறார். அவர் காண்பித்த ஒரு வீடியோக்காட்சி என்னை பிரமிப்பில் ஆழ்த்தியது. காடுமலை கடந்து தே தேடியலைந்து அவர் தமிழுக்குச் செய்யும் சேவை பாராட்டுக்குரியது. அதுவும் ஜெர்மனியிலிருந்துகொண்டு தன்னுடைய விடுமுறைக் காலங்கள் எல்லாவற்றையும் தன் சொந்தச் செலவில் தமிழுக்கு அர்ப்பணிப்பது என்பதையும் பார்க்கும் போது புலம் பெயர்ந்து வாழ்ந்தாலும் தன் நாட்டின் மேலும் மொழியின் மேலும் அவர் வைத்திருக்கும் பற்று ஆச்சரியப்படுத்தியது.

Image result for Dr.Subhashini,Germany
Dr. K Subashini 
இப்படி சத்தமில்லாமல் பல தன்னார்வலர்கள் தமிழைத் தாங்கிப் பிடிப்பதால் தான் தமிழ் வளர்கிறதே  தவிர நம்முடைய அரசு அதற்காக எதுவும் செய்வதில்லை. நமது அரசியல் வியாதிகள் சும்மா இருந்தாலே போதும். பிறரின் முயற்சிகளுக்கு உதவி செய்யாவிட்டாலும் உபத்ரவம் செய்யாமல் இருப்பது நலம்.

Dr. சுபாஷினி அவர்கள் 17 ஆண்டுகளாக இதில் ஈடுபட்டு பல நூறு கல்வெட்டுகளைக் கண்டுபிடித்திருக்கிறார். அவருடைய வெப்சைட்டை (http://www.tamilheritage.org)  ஒருமுறை பார்த்தால் உங்களுக்கு அவருடைய உழைப்பை புரிந்து கொள்ள முடியும். நாமும் முடிந்தால் அவருக்கு உதவலாமே.


தமிழர் திருவிழா பதிவுகள் தொடரும்.

14 comments:

  1. கவியரங்கத்தை நல்லதொரு கருத்தாய்வு செயதுள்ளீர் ஆல்ஃபி! ரசித்தோம்!!!

    ReplyDelete
    Replies
    1. நன்றி ரங்கா , உங்கள் தாய்நாட்டுப்பயணம் நல்லபடியாக அமைந்தது என்று நம்புகிறேன்.

      Delete
  2. விழா பற்றிய செய்திகள் தொடரட்டும்... தொடர்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வெங்கட் தங்களின் தொடரும் அன்புக்கு நன்றிகள் பல .

      Delete
  3. Fetna நிகழ்வுகள் பற்றிய அருமையான தொகுப்பு ...தங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி அய்யா :)

    ReplyDelete
    Replies
    1. கனிமொழி உங்கள் வருகைக்கு நன்றி, உங்கள் கவிதை மொழி தொடரட்டும்.

      Delete
  4. நல்ல தொகுப்பு ..
    "அந்தத் தட்டலில் என்னுடைய கைதட்டலும் ஆரவாரமும் கலந்து இணைந்து அமிழ்ந்தது"
    நல்ல வரிகள்..
    வாழ்க வளமுடன்.

    ReplyDelete
    Replies
    1. நண்பனுக்கு நன்றி , அவ்வப்போது வந்து செல்லுங்கள் .

      Delete
  5. அருமையான தொகுப்பு!

    ReplyDelete
    Replies

    1. தனிமரம் நீங்கள் தனியல்ல , இந்தப் பரதேசியும் உடன் இருக்கிறான்.

      Delete
  6. நல்ல தொகுப்பு.. தொடர்க!!!

    ReplyDelete
  7. //, நெருக்கமாக நடந்து கொண்டிருந்த நிகழ்ச்சிகளின் நடுவில் நடராஜன் அவர்களும் மேடைக்கழைக்கப்பட்டு மரியாதை செய்யப்பட்டார்// நானும் கவனிக்கவில்லை

    ReplyDelete
    Replies
    1. என் பக்கத்தில் உட்கார்ந்திருந்ததும் கவனிக்கவில்லையா?
      இப்படி யாருமே கவனிக்காவிட்டால் அவர் எப்படி முதல்வர் ஆவது ?
      நாஞ்சில் பீட்டர் எப்படி அமைச்சர் ஆவது ?, நான் எப்படி கொள்கை பரப்புச் செயலாளர் ஆவது ?

      Delete
  8. இப்படி சத்தமில்லாமல் பல தன்னார்வலர்கள் தமிழைத் தாங்கிப் பிடிப்பதால் தான் தமிழ் வளர்கிறதே தவிர நம்முடைய அரசு அதற்காக எதுவும் செய்வதில்லை. நமது அரசியல் வியாதிகள் சும்மா இருந்தாலே போதும். பிறரின் முயற்சிகளுக்கு உதவி செய்யாவிட்டாலும் உபத்ரவம் செய்யாமல் இருப்பது நலம்.//

    சில வரிகள்தான் ஆயினும்
    திரு வரிகள்
    வாழ்த்துக்களுடன்...

    ReplyDelete