Monday, August 15, 2016

நியூயார்க்கில் உதயமாகும் ஒரு நடனத்தாரகை !!!!!!!!

Daphne Loyd

நியூயார்க்கில் வாழும் தமிழர்களுக்கு நன்கு அறிமுகமானவர் திரு.பிரேம் லாயிட். நியூயார்க்கில் ஃபிளஷிங் பகுதியில் உள்ள கணபதி ஆலயத்துக்கு வரும் அனைத்து மக்களும் சுவாமி தரிசனம் முடித்து, ‘கனக தரிசனம்’ செய்யப்போகுமிடம் பிரின்ஸ் நகைமாளிகை. இதன் உரிமையாளர்தான் பிரேம் லாயிட்.

இலங்கை நாட்டிலிருந்து புலம்பெயர்ந்து, முதலில் தனிப்பட்ட முறைகளில் விடுகளுக்குச் சென்று நகை வியாபாரம் ஆரம்பித்து, அதன்பின் ஹில்சைட்  அவென்யூவில் இருந்த,  ஹெல்தி லைஃப் என்ற இலங்கைக் கடையின் பேஸ்மென்ட்டில் சிறியதாக ஆரம்பித்து, பின்னர் இப்போது  கணபதி கோயிலுக்கு அருகில் நிரந்தரமாகக்  கடை வைத்து வியாபாரம் செய்கிறார். இதுதவிர வேறுபல கடைகளையும் வைத்திருக்கிறார்.

இவர் ஒரு தமிழர் என்பதால் எல்லாத் தமிழ் நிகழ்வுகளுக்கும் தாராளமாக நன்கொடை கொடுத்து ஸ்பான்சர் செய்வார். இவருடைய தங்கக்கடைக்கு என் மனைவி நிரந்தர வாடிக்கையாளர்.

        பிரேமுக்கு 2 மகள்கள். 2 மகள்கள் வைத்திருக்கும் ஒபாமா, ரஜினிகாந்த், கமல் போன்ற பிரபலங்கள் வரிசையில் பிரேமையம் சேர்க்கலாம். 2 மகள்கள் வைத்திருந்தும், பிரபலமோ இல்லை கரபலமோ இல்லாத ஒருவன் நான் மட்டும்தான் என நினைக்கிறேன்.

Prem''s wife, Daphne, Alishya, Prem Loyd

பிரேமின் இரண்டு மகள்களும் மிகவும் திறமை வாய்ந்தவர்கள், படிப்பில் மட்டுமல்ல, நடனம். இசையென்று மிகுந்த திறமைபெற்றவர்.அதில் மூத்த புதல்வியான ‘டாஃப்னி லாயிட்’ ன் பரதநாட்டிய அரங்கேற்றம் கடந்த சனிக்கிழமை ஆகஸ்ட் மாதம் 7 ஆம் தேதி இனிதே நடந்தேறியது.

சிறப்பு அழைப்பாளராகத் தெரிவு செய்யப் படாவிட்டாலும் என் மனைவியின் புண்ணியத்தில் பொது அழைப்பாளராகக் கலந்து கொண்டேன். கணபதி கோயிலின் அழகான கலையரங்கத்தில் இந்த நாட்டிய அரங்கேற்றம் நடந்தேறியது. நாங்கள் செல்லும்போதே அரங்கம் நிரம்பி வழிந்தது. பிரேமும் அவர் மனைவியும் எங்களை வரவேற்று இன்னொருவரிடம் ஒப்படைக்க, அவர் எங்களை அழைத்துச் சென்று முன்வரிசையில் அமர வைத்தார். நானும் பெருமிதத்துடன் திரும்பிப் பார்த்து “நானும் விஐபி தான் நானும் விஐபி” தான் என்று சொல்லிக் கொண்டேன். இருந்தாலும் வேறு விஐபி வந்தால் என்னை எழுப்பி விட்டுவிடுவார்களோ என்ற பயம் ஒரு ஓரத்தில் இருந்தது.

ஒரு கத்துக்குட்டி மாணவி என்ன பெரிதாக ஆடிவிடப்போகிறாள்? என்று நினைத்துப்போன எனக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. அற்புதமான நடனத்தை வெளிப்படுத்தினாள் டாஃப்னி.
Alishya

பிரேம் தம்பதிகளின் வரவேற்பு முடிந்தவுடன் புஷ்பாஞ்சலியுடன்  நடனம் ஆரம்பித்தது. நடன அரங்கேற்றத்தின் முதல் ஆட்டமான இதில், ஆடுபவர், கடவுளுக்கும் குருவுக்கும், இசைக்குழுவுக்கும் மற்றும் வந்திருக்கும் விருந்தினருக்கும், பூக்கள் தூவி  மரியாதை செய்வார். நாட்டை ராகத்தில் ஆதிதாளத்தில் அமைந்த இந்த இசையில் எழுந்த டாஃப்னியின்  நடனத்திலேயே தெரிந்துவிட்டது, இது வெறும் அரங்கேற்றமல்ல இது அருமையான ஒரு நடன நிகழ்ச்சியின் ஆரம்பம் என்று.

அதற்குப்பின்பதாக  வந்த ரூபக தாள ‘அலரிப்பி’ல் ஒரு தேர்ந்த நடன மங்கையைக் காணமுடிந்தது. அதன்பின் வந்தது  கல்யாணி ராகத்தில் 'ஜதிஸ்வரம்'.  இந்த நடனத்தில் தாளத்துடனும்  ஜதியுடனும்  இணைந்த கால்கள் ஒரு சேர ஒலித்தது அற்புதமாக இருந்தது. குறிப்பாக இதில் வந்த ஒவ்வொரு நடன நிலைகளும் கோயில் சிலைகளை ஞாபகப்படுத்தின.

அடுத்து வந்த 'ப்தம்' பகுதியில், பல அபிநயங்களுடன் ,  கண்ணனின் பல்வேறு லீலைகளை எடுத்துக் காட்டின ராக மாலிகையில் அமைந்த இந்த நடனம், ஒரு மோனோ ஆக்ட் என்று சொல்லலாம்.

அதன் பின் வந்த ‘வர்ணம்’ இந்த நிகழ்வின் உச்சக்கட்டம் ஆகும். பலவித பாவங்களை வெளிப்படுத்தின இந்த நடனம் தியாகராஜர் இயற்றிய பஞ்சரத்ன கீர்த்தனை ஒன்றின் வழியாக வந்தது. ஆரபி ராகத்தில் ஆதிதாளத்தில் வந்த இந்த நடனம் பாகவதத்தின் ஒரு பகுதியின் நாடகத்தைக் கண்முன் நிகழ்த்தியது. கிருஷ்ணன், குருஷேத்ர யுத்தம் நடந்த சமயத்தில்  சண்டையிடத்தயங்கிய அர்ச்சுனனுக்கு, தன் விஸ்வரூபத்தை வெளிப்படுத்தி சண்டையிடத் தூண்டிய சம்பவம் வெகு தத்ரூபமாக நடன நிகழ்வாக வெளிப்பட்டது.  

இடைவேளைக்குப்பின் வந்த ‘சிவஸ்துதி’ தில்லை அம்பலத்தை நேரில் கொண்டு வந்தது. அதன்பின் எதிர்பார்க்காத விதத்தில் ஜீன்ஸ் திரைப்படத்தின் நித்திய ஸ்ரீ பாடிய "கண்ணோடு காண்பதெல்லாம்" பாட்டுக்கு டாஃப்னியுடன் இணைந்து அவள் தங்கை அலிஷ்யா வந்து நடனமாடினாள். அக்காவுடன் இணைந்து அழகாக ஆடிய அலிஷ்யா  நானும் அரங்கேற்றத்துக்கு தயார் என சொல்வது போல் இருந்தது.

சலங்கை ஒலி படத்தில் SP. ஷைலஜா ஆடிய ‘ஓம் நமசிவயா’  என்ற பாடலுக்கு டாஃப்னி ஆடி அசத்தியது அதன்பின் வந்தது. மகிஷாசுரமர்த்தினியை சித்தரித்த ‘தில்லானா’வில் புகைப்பட போஸ்கள் பல வந்தன. பின்னர் மங்களம் பாடி  முடிக்க அரங்கேற்றம் இனிதே முடிந்தது.  
Sadhana Paranchi
         தாளம், ஜதி, இசை, பாவம், அபிநயங்கள் நிருத்தம், நிருத்தியம், முக உணர்ச்சிகள் என்று நவரசங்களையும் தன் நடனத்தில் வெளிப்படுத்திய டாப்ஃனி  தன் சிறந்த திறமையை அநாயசமாக எந்த டென்சனும் இல்லாது வெளிப்படுத்தியது  ஆச்சரியமூட்டியது. அதிலும் அவளின் குரு  சாதனா பரஞ்சி அவர்கள் கடைசி சமயத்தில் இந்தியாவில் இறந்து போன தன் தாயின் ஈமச்சடங்கிற்காக சென்றுவிட, குரு இல்லாமலேயே எந்தவித பிரச்சனையும் இல்லாமல் அரங்கேற்றம் அமைந்தது இன்னொரு ஆச்சரியம்.குரு இல்லாத குறையை "சாதனாலயா நடனப்பள்ளியின் துணை ஆசிரியர் பிரியா மாதவன் நீக்கி வைத்து நட்டு வாங்கமும்  செய்தார்.

Orchestra


நடனத்திலும் இசையிலும் மிகவும் அனுபவம் வாய்ந்த ‘சாவித்ரி ராமானந்த் ’ பாடல்களைப் பாட, சந்தியா ஆனந்த் வயலினையும், முரளி பாலச்சந்தர் மிருதங்கமும்  மிச் கீரின்பெர்க் புல்லாங்குழலும் இசைத்தனர். பக்க வாத்தியக் காரர்கள் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் அல்லர். குறிப்பாக வெள்ளைக்கார, மிச் கீரின்பெர்க் கர்நாடக ராகங்களை புல்லாங்குழலில் வாசித்தது ஒரு அதிசயக் காட்சிதான்.
Ahmed Sabarullakhan 

          சிறப்பு விருந்தினர்களாக Dr.M.N. கிருஷ்ணன், கனடாவின் நடன ஆசிரியர், ஜனனி குமார், ஐக்கிய நாடுகளின் இலங்கைத் தூதுவர் அகமது சபருல்லாகான் ஆகியோர் சிறப்பிக்க, இலங்கை ஒலிபரப்பு கூட்டு ஸ்தாபனத்தின் முன்னாள் அறிவிப்பாளர் V.N.மதியழகன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். தாமிரா குமார் அதனையே ஆங்கிலத்தில் சொன்னார்.


        நிகழ்ச்சி நிரல், வரவேற்பரை அமைப்பு, விருந்தினர் கையெழுத்திடும் புத்தகம், மேடை அலங்காரம், உணவு உபசரிப்பு, சாப்பாடு மேஜை அலங்கரிப்பு என்று ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து செய்திருந்தார்கள். டாலர்கள் தண்ணீராய் செலவழிந்திருக்கும்.

அனைவருக்கும் மிகச்சிறந்த அறுசுவை உணவு வழங்கப்பட்டது. கண்ணுக்கு விருந்து முடிந்து, வயிற்றுக்கும் விருந்து முடித்து வெளியே வந்தால் வந்த பெண்களுக்கு வெள்ளிக்காசு நினைவுப் பரிசாக வழங்கப்பட்டது.

ஒரு திருமணத்தை விட அதி சிறப்பாக அரங்கேற்றம் நடைபெற்று முடிந்தது. டாப்ஃனி மேலும் வளர உயர வாழ்த்துக்கள்.

முற்றும்

Add caption

22 comments:

  1. நல்ல தொகுப்பு. நானும் இந்த வருடம் இதுபோன்றதோரு நிகழ்வுக்கு சென்றிருந்தேன். அப்புறம், இந்த லிஸ்டில் அடியேனும் ஓருவன். :)
    //
    2 மகள்கள் வைத்திருந்தும், பிரபலமோ இல்லை கரபலமோ இல்லாத ஒருவன் நான் மட்டும்தான் என நினைக்கிறேன்.//

    ReplyDelete
  2. // இந்த லிஸ்டில் அடியேனும் ஓருவன். :)

    2 மகள்கள் வைத்திருந்தும், பிரபலமோ இல்லை கரபலமோ இல்லாத ஒருவன் நான் மட்டும்தான் என நினைக்கிறேன்.//

    ReplyDelete
    Replies
    1. தஞ்சாவூர் பண்ணையும், எழுத்தாளரும் கவிஞரும் ஆன திருமிகு ஆரூர் பாஸ்கர் அவர்களையும் , பிரபல பட்டிமன்ற பேச்சாளரும்,வானொலி RJயும் , பதிவுலக ஜாம்பவானும், எழுத்தாளரும், கலிஃபோர்னியாவின் தமிழ் புரவலரும்,பெரும் பணக்காரரான திருமிகு விசு அவர்களையும் பிரபலங்களின் லிஸ்டில் சேர்க்காமல் போனதற்கு உள்ளபடியே மனம் வருந்தி என்னுடைய மன்னிப்பை வேண்டுகிறேன்.இது போல் இனிமேல் தவறுகள் நேரிடாத வண்ணம் கவனமாக இருப்பேன் என்றும் உறுதி கூறுகிறேன்

      Delete
    2. அண்ணேஎங்க ஊரில் இம்புட்டு பெரிய ஆளு அதுவம் என் பேரை வைச்சிக்குனு கீறாரா? யாருமே அவரு?

      Delete
    3. அட நீதானே அந்தக்குயில் , மன்னிக்க , அந்தப்புயல்.

      Delete
  3. //இவருடைய தங்கக்கடைக்கு என் மனைவி நிரந்தர வாடிக்கையாளர்//

    அண்ணே இந்த விஷயத்தை சொல்லவே இல்லையே...?

    மதுரை தமிழா... இம்புட்டு நாளா நீங்க அண்ணனை பத்தி பேசும் போது சும்மா தமாஷ் பண்ணுறிங்கனுன்னு நினைச்சேன். இப்ப தான் உண்மை தெரியுது.

    ReplyDelete
    Replies
    1. என் மனைவி அங்கே அடிக்கடி சென்று தன்பழைய நகைகளுக்கு பாலிஷ் போட்டுவிட்டு வருவாள் என்பதை நாசூக்காக சொல்லாமல் விட்டது தப்பான எண்ணத்தை விளைவித்துவிட்டது நண்பர்களே .

      Delete

    2. //பழைய நகை..//

      ஏன் அண்ணே... உங்களிடம் நீங்க புதுசா சம்பாதித்தது மட்டும் இல்லாமல்.. பரம்பரை சொத்தும் இருக்குதுன்னு எவ்வளவு நாசூக்கா சொல்றிங்க.

      உங்க வழி தனி வழி அண்ணே .

      Delete
    3. நானும் அப்படித்தான் நினைச்சு அவ்வளவு பழைய நகைகளையும் ரொம்ப பாதுகாப்பா வைச்சுருந்தேன்.அப்புறம் நம்ம பிரேம்தான் கண்டுபிடிச்சார் அத்தனையும் பித்தளைன்னு.ஒரு வேளை அந்தக்காலத்தில தங்கத்தை விட பித்தளை, விலை அதிகமோ ? நெஞ்சு பொறுக்குதில்லையே ..

      Delete
    4. அப்புறம் ரொம்ப முக்கியமான விஷயம், இத ஏன் மனைவிகிட்ட சொல்லிராதப்போய்

      Delete
    5. இந்த பதிவை படித்ததும் நான் கேட்க வேண்டிய கேள்வியை விசு அவர்களே கேட்டு விட்டார் எனக்கு வேலை இல்லாமல் போச்சு ஹும்ம்

      Delete
  4. நல்லதொரு நிகழ்ச்சிக்குச் சென்று வந்த நிறைவு... எங்களிடமும்.

    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. நன்றி வெங்கட் நாகராஜ்.

      Delete
  5. ஆல்பிரட் அவர்களின் நெஞ்சுறுதியை கண்டு மிகவும் வியக்கிறேன். அரேங்கேற்றத்தை பார்த்ததும் அல்லாமல் அதை பற்றி விரிவான பதிவையும் இட்டு இருக்கிறார் என்பதை கண்டு ஆச்சிரியத்திற்கு மேல் ஆச்சிரியம் நான் இரண்டு அரங்கேற்றம் பார்த்துவிட்டேன் இனிமேல் எவனவாது அரங்கேற்றம் என்று கூப்பிட்டால் நான் கொலைகாரனாக மாறவும் தயங்க மாட்டேன்

    ReplyDelete
    Replies
    1. மதுரைத்தமிழன் , நீங்கள் சொல்வது நன்றாகவே புரிகிறது .நானும் பல அரங்கேற்றத்திற்கு போயிருக்கிறேன் . ஆனால் இது அரங்கேற்றம் போலவே தெரியவில்லை , ஏதோ ஒரு தேர்ந்த நாட்டிய நிகழ்ச்சிக்கு போனது போல் தெரிந்ததால்தான் பதிவிட்டேன். அதோடு பிரேமிடம் ஏதேனும் டிஸ்கவுன்ட்டும் கிடைக்கலாம் அல்லவா .

      Delete
    2. அதுவும் சரி பிரேமிடம் டிஸ்கவுண்ட் வாங்கிவிட்டு அப்படி டிஸ்கவுண்டில் வாங்கிய பொருளை மட்டும் என்னிடம் அனுப்பி வையுங்க....தங்க நகைகள் எப்படி இருக்கும் என்று நான் பார்த்தது கூட கிடையாது

      Delete
    3. என்னாது தங்க நகைகளா , அத 90 % டிஸ்கவுண்ட் கொடுத்தாலும் என்னால வாங்க முடியாது .நான் சொன்னது அவர் வைத்திருக்கும் 99 சென்ட்ஸ் கடைகளில் டிஸ்கவுண்ட் கிடைக்கும் என்று .

      Delete
  6. நானும் அந்த பிரபலமோ பிறபலமோ
    இல்லாத லிஸ்ட்தான்
    கூடுதலாக இசை ஞானமும் அவ்வளவாக இல்லாத
    என்பதையும் சேர்த்துக் கொள்ளலாம்
    நிகழ்வை இரசித்து இரசிக்கும்படியாய்
    படங்களுடன் பதிவிட்டிருந்தது
    மனம் கவர்ந்தது
    வாழ்த்துக்களுடன்...

    ReplyDelete
    Replies
    1. பிரபலம் இல்லாவிட்டாலும் கரபலம் அதான் எழுத்து பலம் நன்றாகவே
      இருக்கிறது ரமணி , வருகைக்கு நன்றி

      Delete
  7. Alfi how do u know about dance ,Thalambur all-around.great.But u should have patience to watch classical dance in the first row.comments and replies r so alive

    ReplyDelete
  8. Nice threats & violence, Prem!

    ReplyDelete