Tuesday, July 5, 2016

சொர்க்கத்தின் வாரிசு !!!!!!!!!!!!!

 சீனாவில் பரதேசி:14
Paradesi at Temple of Heaven

மாடர்ன் உடை தரித்த ஆண்மகன், தரையில் புரளும் நீள உடையணிந்த பெண். அவளின் பின்புறத்தில் ஒரு மிகவும் நீளமான சிவப்பு நிற துணி. இவர்கள் இருவரும் காதலர்கள் போல முத்தமிட்டுக் கொண்டிருந்தனர். கிட்டப்போய் பார்த்தவுடன் தான் தெரிந்தது ஏதோ விளம்பரப்படம் பிடித்துக் கொண்டிருந்தார்கள்.

சரி நாம் இப்போது சொர்க்கத்தின் கோவிலைப்பற்றிய விவரங்களைத் தொடர்வோம். மிங் மற்றும் ஸிங்  பரம்பரையைச் சேர்ந்த பல பேரரசர்கள் இங்கு வந்து தம் தொழுகைகளை ஏறெடுப்பார்களாம். குறிப்பாக சொர்க்கத்தை நோக்கி ஏறெடுக்கப்படும் ஜெபம் நல்ல அறுவடையை வேண்டி ஏறெடுக்கப்படுமாம். “வரப்புயர நீர் உயரும், நீர் உயர நெல்உயரும், நெல் உயர  குடி உயரும், குடி உயர கோன் உயர்வான்” என்று தமிழில் அந்தக் காலத்தில் படித்தது ஞாபகம் வந்தது.


ஏனென்றால் நான் ஏற்கனவே தெரிவித்தபடி, சீனப்பேரரசர் சொர்க்கத்தின் பிரதி நிதியாக கருதப்பட்டார். அதனால் அவர் நேரடியாக சொர்க்கத்துடன் தொடர்பு கொள்ள முடியும், அவரின் வேண்டுதல் சொர்க்கத்தில் உடனடியாக ஏற்கப்படும் என்ற மூட நம்பிக்கை மக்களிடம் இருந்தது.

வருடத்திற்கு இருமுறை பேரரசர் தன் பரிவாரங்களோடு அரண்மனை விட்டு இங்கு தங்குவாராம். இங்கே அதற்கேற்ற உடைகளை அணிந்து, மாமிசம் தவிர்த்து விரதமிருந்து தன் பிரார்த்தனைகளை ஏறெடுப்பாராம். சாதாரண பொதுமக்கள் உள்ளே வருவதற்கோ இந்த பிரார்த்தனைகளைப் பார்ப்பதற்கோ அனுமதியில்லை. இந்த சம்பிரதாயங்கள் எள்ளளவும் குறையாத வண்ணம் நடத்தப்படுமாம். ஏனென்றால் ஒரு சிறு தவறு நடந்தால் கூட அது அபசகுணமாக கருதப்படுமாம்.

இங்குள்ள சதுரவடிவ கட்டிடங்கள் பூமியையும், வட்ட வடிவ கட்டிடங்கள் சொர்க்கத்தையும் குறிக்கின்றன. இந்த முழு வளாகமும் இவ்வாறு பூலோகத்தையும் மேலோகத்தையும் குறிக்கும் வண்ணமும், பிரித்துக் காட்டும் வண்ணமும் வடிவமைக்கப்பட்டிருந்தன.

நடுவில் இருந்த வட்டவடிவமான “ஹால் ஆஃப் பிரேயர்” உட்புறத்தில் நான்கு தூண்களையும், நடுப்புறத்தில் 12 தூண்களையும், வெளிப்புறத்தில் 12 தூண்களையும் கொண்டதாக இருந்தது. இது முறையே நான்கு காலநிலையும் (கோடை, வசந்தம், இலையுதிர் மற்றும் குளிர் காலங்கள்) 12மாதங்களையும், 12 மணி நேரத்தையும் குறிக்கிறது. குறிப்பாக இதன் அமைப்பு சூரியக் கோளை குறிக்கிறதாம். வெளிப்புற 12 தூண்கள் சந்திர (லூனார்) மாதங்களைக்குறிக்கின்றன.

இங்கிருந்த எல்லாக் கட்டிடங்களிலும் விதானத்தில் சொர்க்கத்தை குறிக்கும் வகையில் ஒருவித நீல நிற டைல்கள் பயன்படுத்தப் பட்டிருக்கின்றன.

அதோடு கிழக்குப் பகுதியில் உள்ள கல்லில் உருவாக்கப்பட்ட ஏழு நட்சத்திரங்கள், புராதன சீனாவின்  ஏழு மலைகளைக்குறிக்கின்றன. டிராகன் வடிவில் உள்ள நான்கு தூண்களும் நான்கு காலங்கள் மற்றும் புராதன சீன அரண்மனையின் வடிவமைப்பை ஒட்டி அமைக்கப்பட்டன. ஒரு வழியாக சொர்க்கக்கோயிலை பார்த்து முடித்து வெளியே வர நடந்தேன்.

Tribal dance 

கோயிலைச் சுற்றியுள்ள அந்த உயரமான மரங்கள் அமைந்த பூங்கா மிகப்பெரியது. ஏறத்தாழ 660 ஏக்கர் பரப்பளவு உடையது. நான்கு புறங்களும் வழியுள்ள இந்த பூங்காவின் வழியாக வெளியே வரும் பாதையில் நடந்து வரும் போது வழியெங்கிலும் பலவித விளையாட்டு மைதானங்கள் இருந்தன. ஏராளமான பேர் விளையாடிக் கொண்டிருந்தனர். உடற்பயிற்சிகள் செய்பவர்களையும் காண முடிந்தது. அங்கே ஒரு இடத்தில், ஒரு சிறிய இசைக்குழு ஒரு வித இசையை இசைத்துக் கொண்டிருக்க நிறைய ஜோடிகள் நடனமாடிக் கொண்டிருந்தனர். அதில் பெரும்பாலும் நடுவயதுக்காரர்கள் இருந்தார்கள். ஒவ்வொருவரும் விதவிதமான ஆடைகளை உடுத்தி தலைபாகைகளையும் அணிந்திருந்தனர். அன்றைய நாள் சூரியன் வெளியே வந்திருந்தான், குளிர் அவ்வளவாய் இல்லை.  

கேட்டதில் அவர்கள் எல்லாம் விதவிதமான இன (tribes) மக்கள் என்றும், அவர்களுடைய கலாச்சாரத்தை நினைவு படுத்தும் வண்ணமும், பறைசாற்றும் வண்ணமும் இப்படி பொது இடத்தில் கூடி ஆடி மகிழ்வார்களாம்.

அதற்குள் எதிரே நான் ஏற்கனவே பார்த்த விளம்பரப் படப்பிடிப்பு குழு அங்கேயும் வந்து சில படங்களை எடுத்துக் கொண்டிருந்தது.



நான் வெளியே வந்தேன். "ஹலோ ஃபிரண்ட்" என்று குரல் கேட்டது. யாராது பீஜிங்க்கில் நம்மை ஃபிரண்ட் என்று கூப்பிடுகிறது என்று நினைத்துக் கொண்டே திரும்பினேன். அங்கே நடுத்தர வயது நபர் ஒருவர் நின்று கொண்டு என்னைப் பார்த்துப் புன்னகைத்தார்.

“யு மஸ்ட் பி ஃபிரம் இண்டியா?”

“எஸ், ஐ ஆம்”

“ஐ கேவ் பீன் டு பாம்பே, நைஸ் பிளேஸ்”

“இஸ் இட் ?”

“இண்டியா இஸ் எ பியூட்டி ஃபுல் கன்ட்ரி”

“எஸ் இண்டீட்” 

“மை நேம் இஸ் லீ அண்ட் யு ஆர்?

“ஐ ஆம் ஆல்ஃபி”

“நைஸ் டு மீட்யு”

“சேம் ஹியர் அஸ் வெல்”

இருவரும் கைகுலுக்கிக் கொண்டோம். ஆங்கிலத்தில் உரையாடுவது அத்தனை மகிழ்ச்சியை எப்போதும் அளித்ததில்லை. இனி நடந்த உரையாடலை தமிழிலேயே கொடுக்கிறேன்.

“எவ்வளவு நாள் சைனாவில்?”

“ஒரு வாரம்”.

“என்னெல்லாம் பார்த்தாகிவிட்டது?”

“சீனப் பெருஞ்சுவர், விலக்கப்பட்ட நகரம் பார்த்துவிட்டேன். இன்று மூன்றாம் நாள் இதோ டெம்ப்பிள் ஆஃப் ஹெவனைப் பார்த்தாகிவிட்டது”.

“ஓ இன்னும் பார்க்க நிறைய இடம் இருக்கிறது. ஆமாம் உங்களுக்கு கைட் வேண்டுமா? நேரம் இருக்கிறது சம்மர் பேலஸை நீங்கள் இன்றே பார்த்துவிடலாம்”.

“எவ்வளவு செலவாகும்னு தெரியலயே”.

“அதிகம் இல்லை ஒரு நாளைக்கு 210 - யுவான் அதுதவிர மெட்ரோ ரயில் செலவு”.

“ஆஹா பரவாயில்லையே உங்களுக்கு யாராவது தெரியுமா?”

"நான் தான் அந்த கைட்", என்றான் லீ.


-தொடரும்.

6 comments:

  1. நைஸ் வியாபாரம்!

    ReplyDelete
    Replies
    1. சீனர்களிடம் நாம் கற்றுக்கொள்வது ஏராளமாக இருக்கிறது ஸ்ரீராம்.

      Delete
  2. அட.... எப்படியெல்லாம் பேசி கவுக்கறாங்க பாருங்க!

    ReplyDelete
    Replies
    1. இன்னும் பாருங்க அடுத்த வாரம் என்னெல்லாம் நடக்குதுன்னு

      Delete
  3. அழகிய புகைப்படங்கள், தெளிவான விளக்கங்களுடன் தொடர்கிறேன் நண்பரே
    பயபுள்ள லீ கவுத்திட்டானே..... உஷார் நண்பரே
    த.ம. 2

    ReplyDelete
    Replies
    1. நீண்ட இடைவெளிக்குப்பின் வருகை தரும் பதிவுத்திலகம் கில்லர்ஜீ அவர்களை அன்புடன் வரவேற்கிறேன் .

      Delete