Tuesday, February 19, 2013

ஏங்க இதையெல்லாம் முதல்லயே சொல்லமாட்டீங்களா? (Super Bowl -Feb 3 ,2013) அன்று ஞாயிற்றுக்கிழமை. நண்பர் பிரபாகர் தன் கவிதை ஒன்றில் சொன்னபடி, மாதம்முழுதும் செய்கிற  பாவங்களுக்கு வாரவட்டி கட்டும் நாள். ஆனால் சர்ச்சில் பொங்கி வழிய வேண்டிய கூட்டத்தைக்காணோம். வந்திருந்த ஒரு சிலரும் அவசர அவசரமாக வீடு திரும்பிக்கொண்டிருந்தனர். கேட்டால் சூப்பர் போல்என்றார்கள். மாலை நடக்கவிருக்கும் சூப்பர் போலுக்கு இப்பவே என்ன பரபரப்பு, படபடப்பு என்று கேட்டால், ‘ஸ்நாக்ஸ் வித் ஸ்நேகிதர்ஸ்க்கு இப்பவே ரெடியானால் தானே ஆச்சுஎன்று றெக்கை கட்டிக்கொண்டிருந்தார்கள்.
எங்கும் பரபரப்பு. மதியத்திலேயே தெருக்கள் வெறிச்சோட ஆரம்பிக்க, நான் விசிட் அடிக்கும் ,ரிச்மண்ட் ஹில் Flea மார்க்கெட் ஏரியாவும் கடைகளில் வாங்க ஆட்கள் இன்றி காற்றுவாங்கிக் கொண்டிருந்தது. இருந்த ஒன்றிரண்டு வியாபாரிகளும் தங்கள் கடையை ஏறக்கட்டிக்கொண்டிருந்தனர்.
சூப்பர் போல் என்பது அமெரிக்காவின் மிகப்பெரிய ஃபுட்பால் திருவிழா. அந்த மேட்ச்களை தொடர்ந்து பார்க்காதவர்களும் கூட ஃபைனல்ஸை கண்டிப்பாக பார்த்துவிடுவர். சிக்ஸ்பேக்கும், இன்னும் செவரல் பேக்கும் கொண்டவர்களும் விளையாடக்கூடிய விளையாட்டின்மேல் உனக்கு என்ன அவ்வளவு அக்கறை? என்ற கேள்வி  உங்களுக்கு வரலாம். வரணும். வந்தால்தானே நான் அதைப்பற்றி  எழுத முடியும்.
 அன்று பால்டிமோர் அணியும் சான்ஃபிரான்சிஸ்கோ 49-ம் மோதினார்கள். அந்த மேட்சை நாங்க டி.வியில பார்த்த கதைக்கு முன்னாடி, இந்த ஃபுட்பால் வளர்ந்த கதையைக்கொஞ்சம் கதைப்போம்.
பழைய ரக்பி விளையாட்டோட மறுபிறவிதான் இந்த அமெரிக்கன் ஃபுட்பால்.  அரதப்பழைய ஜோக்கான ஒரு பாலுக்கு ஏம்பா இத்தனை பேர் அடிச்சிக்கிறீங்க? என்பதை காதிலேயே வாங்கிக்காம, 1869- லிருந்தே பல முக்கிய வேலைவெட்டிகளை விட்டுட்டு, இந்த வெட்டிவேலையை செய்துட்டு வர்றாங்க. டீமுக்கு பதினோரு பேரு.

ஒட்டகம் போட்ட முட்டை மாதிரி ஓவல் ஷேப்புல இருக்குற பந்தை, எதிரி டீம்  கிங்கரனுகளை  மீறி , பத்துப்பத்து யார்டுகளாத்தாண்டி கடத்தி டச் டவுன்ல கொண்டுவந்து சேர்க்கனும். அப்பிடி வந்து சேஃபா சேர்ந்தா, ஆறு பாயிண்டும் ஒரு ஃப்ரீ கிக்கும் கிடைக்கும்.
ஆரம்பத்துல மாநிலங்கள் ரீதியா சின்னச்சின்ன டீம்கள், இரு பிரிவுகளாய் முட்டிமோதி முடிக்ககடைசியாய் ஜெயிச்ச ரெண்டு டீம்கள் சாம்பியனுக்கு போட்டி போடுவாங்க. அப்பிடி ஃபைனலுக்கு வந்த டீம்களோட மோதலைப்பாக்கத்தான், அன்னைக்கு நடந்த அத்தனை பில்ட்-அப்களும். இந்த வருஷம் இறுதிப்போட்டி நடந்த நகரம் நியூ ஆர்லியன்ஸ்.
 என்னைச்சுத்தி வறுத்த வேர்க்கடலை, உப்புக்கடலை,முறுக்கு மாதிரியான நொறுக்கு அயிட்டம்ஸ் அல்ரெடி ஆஜர். மேற்படி சைடிஷ்களைப் பார்த்துட்டு, ஏதோ ஒரு சபை நாகரீகம் கருதி மெயின் டிஷைப் பத்தி நான் எதுவும் சொல்லாம விட்டுட்டேன்னு நெனச்சிக்காதீங்க. வெளிய சொல்ல கொஞ்சம் வெக்கமாத்தான் இருக்கு. ஆளு வளந்த அளவுக்கு நல்ல பழக்கவழக்கம் வளரலையேன்னு நீங்க குறைபட்டுக்கவும் செய்வீங்க. ஆனா வாட் டு டூ. கடைசிவரைக்கும் அந்த குடிப் பழக்கத்தை நான் நெருங்கவே முடியலை.
சரி மேட்சுக்கு வர்றேன்,..
தனியா உட்கார்ந்து பாத்தா போரடிக்குமேன்னு என் பொண்ணுங்களை கூப்பிட்டா,.’ அதை நாங்க ஃபாலோ பண்றதே இல்லைன்னு ரிஜக்ட் பண்ணிட்டாங்க. அடுத்து என்னோட இல்லத்தரசியை கூப்பிட்டப்ப, ‘பாத்திரம் கழுவுறது, சமைக்கிறதுல்லாம் யாருங்க செய்யிறதுன்னு ரொம்ப பணிவா [அட  சத்தியமா பணிவாத்தாங்க] சொன்னாங்க. வேறவழி. தனியாவர்த்தனம் தான்.
கண்ணைப்பறிக்கும் ஒளிவெள்ளத்துல, ஜனவெள்ளம் ஆடிட்டோரியத்தில் நிரம்பி வழிய, ஏலியன்கள் போல் வந்திறங்கினார்கள் வீரர்கள். ஒவ்வொருத்தனையும் பார்த்தால் டேய் அது ஒடம்பா, அல்லது உடும்பா? என்று கேட்கத்தோன்றும் அளவுக்கு அவர்கள் திடகாத்திரம். அவற்றோடு நம் உடம்பை ஒப்பிட்டுப்பார்ப்பது தேவையில்லாத ஆத்திரம்.
வீரர்கள் அறிமுகம் முடிந்ததும்கனெக்டிக்கட்டில் உள்ள சாண்டிஹூக்    (சமீபத்தில் ஒரு பைத்தியக்காரன் சில குழந்தைகளை சுட்டுக்கொன்றானே)பள்ளியைச்சேர்ந்த குழந்தைகள் பாடகர் குழுஒரு அருமையான பாடலைப்பாடினர். அதனைத்தொடர்ந்து ஜெனிஃபர் ஹட்சன் பாடினார்.(America the Beautiful)
அதனையடுத்து ராணுவக்கொடியசைப்பு, 14 முறை கிராம்மி விருது வாங்கிய அலிசியா  கி அமெரிக்க தேசிய கீதத்தை பியானோவில் இசைக்க என்று மேட்சுக்கு பிட்ச் ஏற்றிக்கொண்ட போக ஒரு வழியா விளையாட்டு ஆரம்பம்.
ரெண்டு அணிகளும் மோத தயாராகுறப்ப ஏறத்தாழ அங்க போர் நடக்கப்போற மாதிரிதான் இருந்துச்சி. ஒரு வழியா முதல் குவார்ட்டர் முடிவுல பால்டிமோர் ஏழு புள்ளிகளும், சான்ஃபிரான்சிஸ்கோ மூனு புள்ளிகளும் எடுத்திருந்தாங்க. நேரம் ஆக ஆக சவுண்டு ஜாஸ்தியானதை முன்னிட்டு, கிச்சன் வேலைகளை கொஞ்சம் மிச்சன் வச்சிட்டு, என்னோட திருமதி எண்ட்ரிய குடுத்தாங்க. மேட்ச் பாக்குறதுன்னு ஆரம்பிச்சுட்டா யாரையாவது சப்போர்ட் பண்ணியாகனுமே, அடிக்கடி போன ஊர், மற்றும் மனைவிக்கு பிடிச்ச ஊர்ங்கிறதுனால பால்டிமோரை சப்போர்ட் பண்றதுன்னு முடிவு பண்ணிட்டோம்.
அடுத்த குவார்ட்டர் முடிந்தபோது, பால்டிமோர் 21 புள்ளிகள் எடுத்து முன்னேற சான்ஃபிரான்சிஸ்கோ 49’ வெறும் 6 புள்ளிகள் மட்டுமே எடுத்து பின்  தங்கியிருந்துச்சி.
இதுக்கு நடுவுல ஹால்ப் டைம்வரவே, எல்லாரும் ஆவலா எதிர்பாத்த பியான்சே வோட இசை விருந்து. பெப்சி வழங்குன இந்த நிகழ்ச்சிக்கு இணையான இன்னொரு நிகழ்ச்சியைப் பாக்க சான்சே இல்லை. அப்படி ஒரு மிரட்டல்.
ஒபாமாவின் இரண்டாவது பதவியேற்பு விழாவில் வெறுமனே வாயை மட்டும் அசைத்து வம்பில் மாட்டிக்கொண்டவருக்கு, இதில் தன்னை நிரூபித்தாகவேண்டிய கட்டாயம்.
ஏராளமான நடனப்பெண்களுடன், அதிவேகமாக கோரியோகிராபி செய்யப்பட்ட பாடல்களை அனாயசமாக அவர் பாடி ஆடி அசத்தியபோது, சமீபத்தில் குழந்தைபெற்ற பெண்ணா இவர்? என்ற கேள்விக்குறிகளுடன் பார்க்கிறவர்களை பரவசப்படுத்தி குழந்தைகளாக்கிவிட்டார். அந்த சமயம் யார் கண்பட்டதோ, 75 ஆயிரம் பேர் திரண்டிருந்த அந்த ஸ்டேடியத்தில் திடீர் பவர் கட். [ஒருவேளை அம்மா அமெரிக்காவை நெனச்சிருப்பாங்களோ?] விளக்குகளின் ஓவர் வர்ணஜாலம் தான் இந்த திடீர் பவர்கட்டுக்கு காரணமாக இருக்கலாம் என்று எங்க வீட்டு அம்மாகாரணம் கண்டுபிடித்தாள். நானும் தலையாட்டிவைத்தேன்.
ஒரு வழியாக மூனாவது குவார்ட்டர் ஆரம்பித்த சமயம், என் மூத்த பெண் அனிஷா வந்து சான்ஃபிரான்சிஸ்கோவுக்கு சப்போர்ட் பண்ண, மம்மி அவளை வார்த்தைகளால் கும்மி விரட்டி அடித்தாள். அனிஷா புகுந்த நேரமோ என்னமோ அதுவரை டஃப் காட்டாத SFO திடீரென வீறுகொண்டு எழுந்து விளையாட ஆரம்பித்து, நெக் டு நெக் மேட்சாக மாறி எங்களை நகம் கடிக்கவைத்துவிட்டது.

இதற்கிடையில் ,கேமின்  நடுவில் வரும் விளம்பரங்களை பத்தி சொல்லியே ஆகவேண்டும் .ஒவ்வொரு கம்பெனியும் தங்கள் புதிய விளம்பரங்களை ஒளிபரப்பி, அதுவும் ஒரு போட்டி போல் நடக்கும் .விளம்பரத்தின் 30 வினாடிகளுக்கு இந்த வருட கட்டணம் நாற்பது மில்லியன் டாலர்கள் .நம் மதிப்பில் 220 கோடி .(அம்மோடியோவ் ).
பயந்தது போல் அங்கிருந்து வெளியேறிய அனிஷா, சில நிமிடங்களிலேயே யு டர்ன்அடித்து என் அருகில் அமர்ந்தாள். எஸ்.எஃப்.ஓவை சப்போர்ட் பண்றவ இங்க இருக்கக்கூடாது என்று பழையபடி விரட்ட,’மம்மி வெயிட் வெயிட், நான் பால்டிமோரைத்தான் சப்போர்ட் பண்றேன். இதோ பாரு பெட் கூட கட்டியிருக்கேன்என்றபடி தனது ஐ போன் 5’ யோடு  வந்தாள். நான்காவது குவார்ட்டர்  சூடு பிடிக்க எங்கள் அனைவரின் அட்ரினலும் எகிறியது .அவள் பெட் கட்டின நேரமோ என்னவோ, பால்டிமோர் 3 புள்ளிகள் மட்டுமே அதிகம் பெற்று த்ரில்லிங்காய் வென்றது.

மேட்ச் ஒரு பக்கம் த்ரில்லிங்காய் நடக்க, கோச்கள் வெறிகொண்ட வேங்கைகளாய் நடந்துகொண்டது பார்க்க பயங்கரமாய் இருந்தது. இதில் பெரிய காமெடியே, இரு அணி கோச்களாகிய, ஜான் ஹார்பக்கும், ஜிம் ஹார்பக்கும் அண்ணன் தம்பிகள்.மேட்ச் முடிவில் இவர்கள் இருவரும் கைகொடுத்து ஹக் பண்ணி மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டது பார்க்க நெகிழ்ச்சியாக இருந்தது. உண்மையில் அது அற்புதமான நாள்தான்.
அந்த விளையாட்டைப் பற்றி அரைகுறையாகத்தெரிந்த எங்களயும் சேர்த்து அன்று அந்த விளையாட்டைப்பார்த்தவர்களின் எண்ணிக்கை 113 மில்லியன் அமெரிக்கர்களாம். இது மொத்த அமெரிக்கவாழ் மக்கள் தொகையில் 46.3 சதவிகிதம். தட்டு உடைந்தது. அதாங்க ரெகார்ட் பிரேக்கு.
ஒரு ஃபன் குறிப்பு: சரி அரைகுறையா தெரிஞ்சி பாக்க ஆரம்பிச்சாச்சி. இனிமேலாவது இந்த கேம் சம்பந்தமா நம்ம அறிவை கொஞ்சம் கொஞ்சமா வளத்துக்குவமேங்கிற எண்ணத்துல, ஒரு நண்பருக்கு போன் போட்டு ஃபுட்பால்ன்னு சொல்லிட்டு, மொத்த கேமும் கையாலயே வெளயாடுறாய்ங்களேன்னு கேட்டேன். அதுக்கு அவர் ஃபுட்டுன்னா நீ நினைக்கிறது போல்  இல்ல. இந்த புட்டுக்கு அடின்னு அர்த்தம். அதாவது அந்தப்பந்து ஒரு அடி நீளம் கொண்டதுங்குற அர்த்ததுத்ல புட்பால்ன்னு சொல்றாங்கன்னார்.
https://mail.google.com/mail/u/0/images/cleardot.gif
ஏண்ணே இதையெல்லாம் முதல்லயே சொல்றதுக்கென்ன?

2 comments:

  1. வியாதி புடிச்சிருச்சா? அதாவது, இந்த விளையாட்டைத் தொடர்ந்து பார்க்கிற வியாதி புடிச்சிருச்சா?

    ReplyDelete
  2. இன்னும் இல்லை

    ReplyDelete