![]() |
தி லெஜன்ட் ஆஃப்
பகத்சிங்
பார்த்ததில் பிடித்தது
பார்த்ததில் பிடித்தது
இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் பகத்
சிங் ஒரு முக்கிய இடத்தைப்பிடித்தவர். அவருடைய புரட்சி வரலாறு ரத்தத்தில் சூடேற்றி
தேசிய உணர்வூட்டும் ஒன்று. அவரின் வரலாற்றைப் படித்திருந்தாலும் தி.லெஜன்ட் ஆஃப்
பகத்சிங் என்ற இந்தத்
திரைப்படம் அதனை அப்படியே நேரில் பார்ப்பது போல கண்முன் கொண்டுவந்தது. நெட்ஃபிலிக்சில்
காணக்கிடைக்கிறது. நல்ல வசதியான விவசாயக்குடும்பத்தில் பிறந்தவர் பகத்திங். அவர்
தந்தையின் கூட்டுக் குடும்பத்தில் ஒரு பெரிய பால் பண்ணையும் இருந்தது.
சின்னவயதில் அவர் கண்முன்னே வெள்ளைக்
காரர்களால் நடத்தப்பட்ட அக்கிரமங்கள் அவர் மனதை மிகவும் பாதித்தது. அதன்பின்
ஜெனரல் ரெஜினால்ட் டையர் என்பவரால் ஜாலியன் வாலாபாக்கில் நடத்தப்பட்ட படுகொலை அவர்
மனதில் கொந்தளிப்பை ஏற்படுத்தி புரட்சி விதையை விதைத்தது.
சிறு வயதிலிருந்தே மகாத்மா காந்தியால்
கவரப்பட்டிருந்த பகத்சிங் அவர் அறிவித்த
"ஒத்துழையாமை இயக்கத்தில்"
பெரிதும் ஈர்க்கப்பட்டு தீவிரமாக பங்கு கொண்டார். மக்கள் மத்தியில் பெரிய தாக்கத்தை
ஏற்படுத்தி வந்த அந்தப்புரட்சி மகாத்மா காந்தியால் பாதியில் கைவிடப்பட்டதால் பகத்சிங் மிகவும் நொந்துபோனதோடு அதுவே அவர் காந்தியை
விட்டு விலகிச் செல்வதற்கும் வழிவகுத்தது.
மனதில் எழுந்த புரட்சித்தீயால்
"ஹிந்துஸ்தான் குடியரசு இயக்க”த்தில் உறுப்பினராகச் சேர்ந்து தீவிரமாக செயல்
பட ஆரம்பித்தார்.
அந்த சமயத்தில் பஞ்சாபின் சிங்கம் “லாலா லஜபதிராவ்”
பிரிட்டிஷ் போலீசாரால் அடித்தே கொல்லப்பட்ட சம்பவம் பகத்சிங்கை கோபத்தின்
உச்சிக்கே கொண்டு சென்றது. எனவே பகத்சிங் தன் நண்பர்களான சிவராம், ராஜகுரு,
சுக்தேவ் மற்றும் சந்திர சேகர் ஆசாத் ஆகியோருடன் ஒன்று சேர்ந்து
சான்டர்ஸ் என்ற போலீஸ் அதிகாரியை சுட்டுக் கொன்று விடுகிறார்கள்.
பின்னர் போலீசாரிடம் பிடிபட்டு லாகூர் சிறையில்
அடைக்கப்பட்டனர். ஆனால் அங்கிருந்தபடியே புரட்சியை வளர்த்தார்.
ஆங்கிலேயர்
இந்தியருக்கு எதிரான ஒரு சட்டத்தை பார்லிமென்ட் பில்டிங்கில்
நிறைவேற்ற முயன்ற போது இந்தியரின் எதிர்ப்பைக் காட்ட, தன் நண்பன் பட்டுகேஸ்வர் தத்
என்பவரின் மூலம் குண்டுகளை வீசினார். ஆனால்
மக்களுக்கும் கூடியிருந்த அதிகாரிகளுக்கும் எந்தச் சேதமும் இல்லாமல் காலியாக
இருந்த பெஞ்சுகளை நோக்கியே குண்டுகள் எறியப்பட்டது. அவரும்
கைதுசெய்யப்பட்டார். இந்த நிகழ்வு
பகத்சிங்கை இந்தியா முழுவதும் பிரபலமாக்கியது. குறிப்பாக இளைஞர்கள் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் பகத்சிங்கை
மிகவும் கொண்டாடினார்கள். ஒரு கட்டத்தில் காந்தியின் புகழுக்கு இணையாகப்
பேசுமளவுக்கு பகத்சிங்கின் பிரபலம் உயர்ந்தது.
லாகூர் ஜெயிலில் இருந்தபோதும் சுதந்திர போராட்ட
வீரர்களை ஜெயிலில் ஒழுங்காக நடத்த வேண்டும் என்று அவர் தன் நண்பர்களோடு 63 நாட்கள் உண்ணாவிரம் இருந்தார். சாண்டர்ஸ் கேசில் பகத், சிவராம் & சுக்தேவ் ஆகியோருக்கு தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டது.
இர்வின் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு
முன்னால் காந்தி நினைத்திருந்தால் இவர்களின் விடுதலையை நிபந்தனையாக வைத்து விடுதலை
செய்திருக்கலாம். முழு இந்தியாவும் இதனை எதிர்பார்த்தது. ஆனால் வன்முறையில்
ஈடுபட்டவர் தவிர மற்றவர்களை விடுதலை செய்யக்கோரினார் காந்தி. இதற்கு இந்தியா
முழுவதும் எதிர் ப்பு கிளம்பியது. பொதுமக்கள் சிறையை உடைத்து உள்ளே
புகுந்துவிடுவார்கள் என்ற நிலைமை ஏற்பட்டதால் விதித்த நாளுக்கு முன்னதாகவே மார்ச் 23
1931ல் அதிகாலை நேரத்தில் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது.
![]() |
நாடே சோகத்தில் மூழ்கியது. “தண்ணீர் விட்டோ
வளர்த்தோம் சர்வேசா இப்பயிரை கண்ணீரால்
காத்தோம் கருகத் திருவுளமோ?” என்று பாடிய பாரதியின் பாடல் எவ்வளவு பொருத்தம் பாருங்கள்.
2002ல் வெளிவந்த இந்தப்படம் சிறந்த திரைப்படம்,
சிறந்த நடிகர், சிறந்த இசை.
என்று தேசிய
திரைப்பட விருது, பிலிம் ஃபேர் விருது, ஜீ சினி விருது போன்ற பல விருதுகளை வென்றது. பகத்சிங்காக இளவயது அஜய்
தேவ்கன் சிறந்த நடிப்பைக் கொடுத்திருக்கிறார்.
இதற்கு அருமையாக
இசையமைத்தவர் நம் இசைப்புயல் A.R.ரகுமான்
அவர்கள். பின்னணி இசையில் பின்னி எடுத்திருக்கிறார். அதோடு இதற்கு ஒளிப்பதிவு
செய்தவர் தமிழரான K.V.ஆனந்த் அவர்கள். இப்போது பிரபல
இயக்குனராகவும் மிளிர்கிறார்.
இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றை ஆழமாக
அறிந்து கொள்ள நினைப்பவர்கள் அவசியம் பார்க்க வேண்டிய திரைப்படம் இது.
முற்றும்
முக்கிய அறிவிப்பு :
நண்பர்களே டல்லாஸ் , டெக்சாஸ் மாநகரத்தில் நடக்கும் பெட்னா நிகழ்வில் ஐயா சுபவீரபாண்டியன் அவர்கள் தலைமையில் நடக்கும் கருத்துக்களத்தில்
பங்கு கொள்கிறேன் .ஜூன் 28 முதல் ஜூலை 4 வரை அங்குதான் இருப்பேன்.அதனால் அடுத்த வாரம் பதிவுகள் எதுவும் வராது மின்னஞ்சல் ( alfred_rajsek@yahoo.com) மற்றும் அலைபேசியில் (212-363-0524)தொடர்பு கொள்ளுங்கள் சந்திக்கலாம் .
நண்பர்களே டல்லாஸ் , டெக்சாஸ் மாநகரத்தில் நடக்கும் பெட்னா நிகழ்வில் ஐயா சுபவீரபாண்டியன் அவர்கள் தலைமையில் நடக்கும் கருத்துக்களத்தில்
பங்கு கொள்கிறேன் .ஜூன் 28 முதல் ஜூலை 4 வரை அங்குதான் இருப்பேன்.அதனால் அடுத்த வாரம் பதிவுகள் எதுவும் வராது மின்னஞ்சல் ( alfred_rajsek@yahoo.com) மற்றும் அலைபேசியில் (212-363-0524)தொடர்பு கொள்ளுங்கள் சந்திக்கலாம் .
![]() |
Add caption |