ஃபெட்னா
தமிழர் திருவிழா பகுதி -11
Advika with her Mom |
இதற்கு
முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும்
http://paradesiatnewyork.blogspot.com/2016/09/blog-post_22.html
இலக்கிய வினாடிவினாவுக்கு அடுத்து என்னை மிகவும் கவர்ந்த
ஒரு நிகழ்ச்சி எதுவென்று கேட்டால் "குறள் தேனீ" என்பேன். அது என்ன 'குறள் தேனீ" என்றால், இரு குழுக்களாகப் பிரிந்த இளைய தமிழர்கள் திருக்குறள்
சம்பந்தமான கேள்விகளுக்கு விடையளித்தனர். பிள்ளைகளின் முயற்சி மற்றும்
பெற்றோர்களின் உழைப்பு இந்தப் போட்டியில் வெளிப்பட்டது. கேள்விகள் பல வடிவங்களில்
வந்தாலும் பிள்ளைகள் திறமையாக திருக்குறள்களை கண்டுபிடித்தனர். ஒரு சிலரின் ஆங்கில உச்சரிப்பில்
திருக்குறளைக் கேட்டது கொஞ்சம்
வித்தியாசமாக இருந்தாலும் இந்தளவுக்கு அவர்கள் திருக்குறளை படித்திருப்பது
மிகவும் பாராட்டப்பட வேண்டிய முயற்சி.
நான் சென்னையில் இருக்கும்போது, என் பிள்ளைகள்
ஆங்கிலவழிக்கல்வி கற்றாலும் தமிழ்மொழியைக் கற்றே ஆக வேண்டும் என்று சொல்லி பள்ளியில் தமிழ்ப்
பாடம் எடுத்திருந்தேன். என் பெரிய மகள் அனிஷா அதுபோல தமிழ் கற்றுக் கொண்டாள்.
என்னுடைய அப்பாவும் வீட்டில் அவளுக்கு தமிழ் சொல்லித்தந்தார். தவிர வீட்டில் தமிழ்
பேசும் பழக்கத்தை ஏற்படுத்தியிருந்தேன். எனவே அவளுக்கு நன்றாக தமிழில் எழுதவும்
பேசவும் தெரியும்.
நாங்கள் நியூயார்க் வரும்போது பெரியவளுக்கு ஏழு வயது,
சின்னவளுக்கு ஐந்து வயது. வீட்டில் தமிழில் பேசுவது இங்கு
வந்ததும் தொடர்ந்தது. சிறிது காலம் சென்று, வெளியில் ஆங்கிலம் மட்டுமே பேசிய
மகள்கள் வீட்டிலே நாங்கள் தமிழில் பேசினாலும் ஆங்கிலத்தில் பதில் சொல்ல
ஆரம்பித்தார்கள். “இல்லை நீங்கள் வீட்டிலே தமிழில் மட்டும் தான் பேச வேண்டும்”,
என்று சொல்லி, பிள்ளையார் கோவிலில் நடக்கும் தமிழ் வகுப்பில் சேர்த்துவிட்டேன்.
பலமாதங்கள், ஒவ்வொரு சனிக்கிழமையும் காலையில் மிகவும்
முயன்று அவர்களை எழுப்பி அங்கே தமிழ்ப் பள்ளியில்விட்டு காத்திருந்து கூப்பிட்டுக்
கொண்டு வரும்போது மதியம் ஆகிவிடும்.பிள்ளைகள் இருவரும் நன்கு எழுதப்படிக்க கற்றுக் கொண்டனர்.
இப்பொழுது அவர்கள் வயது 22 மற்றும் 20. தமிழ் பேசுவார்கள். பெரியவள் ஓரளவுக்குப் படிப்பாள்,
சின்னவள் எழுத்துக் கூட்டி மட்டுமே படிப்பாள். கொஞ்சம் கொஞ்சமாக மறக்கிறார்கள்.
எனவே அமெரிக்காவில் வளரும் பிள்ளைகளுக்கு தமிழ் கற்றுக் கொடுப்பதோ,
தமிழ்மொழியில் ஆர்வம் ஏற்படுத்துவதோ மிகவும் கடினமான காரியம்.
அது நன்கு தெரிந்திருந்ததால் குறள் தேனீயில் கலந்து கொண்ட பிள்ளைகளின் உழைப்பை
என்னால் உணர முடிந்தது.
குறிப்பாக அதில் ஒரு சிறிய பெண், எப்படி மடக்கி மடக்கி
கேட்டாலும் அதற்கான திருக்குறளை கொஞ்சமும் யோசிக்காமல் சொன்னாள். அதற்கப்புறம்
நாஞ்சில் பீட்டர் அவர்கள் அந்தப் பெண்ணை மேடையில் அழைத்து பாராட்டுப் பத்திரம்
கொடுத்தார். அவள் பெயர் அத்விகா.
தனது ஏழு வயதில் 1330 குறளையும் பொருளுடன் ஒப்பித்துப் புகழ் பெற்றிருக்கிறாள். அதிலும் ஒரு
வார்த்தையைச் சொல்வதோடு அதன் அதிகாரம் மற்றும் அதன் வரிசை எண்ணையும் யோசிக்காமல்
சொல்லும் அவள் ஒரு அதிசயப்பிறவிதான்.
Advika Reciting Thirukkural |
இந்தப் பதிவை எழுதும்
போது நாஞ்சில் பீட்டர் அவர்களிடம் விவரம்
கேட்டு அந்தக் குடும்பத்தை தொடர்பு கொண்டு மேலும் சில தகவல்களைக் கேட்டுப்
பெற்றேன்.
அவளின்
அம்மாவான திருமதி பிரசன்னா அனைத்து குறள்களையும்
பொருளையும் இடைவெளி இன்றி 3 மணி 52 நிமிடங்களில் சொல்லியிருக்கிறார்.
அவளின் தந்தை சச்சிதானந்தன் சொல்கிறார், “அத்விகாவிற்கு
ஒவ்வொரு நிலையிலும் தமிழ் ஆர்வத்தை ஊட்டி வளர்த்து வருகிறோம். இங்கேயே பிறந்து
வளரும் பிள்ளைகளுக்கு ஆங்கில மொழியோடு உள்ள தொடர்பு அலாதியானது. இதனூடே தாய்மொழியுடனான
உறவை உயிர்ப்புடன் வைப்பது பெரும் சவாலான கடமை எனலாம். அனைவரும் வீட்டுக்குள்ளே
நுழையும்போது காலணியை கழட்டி விடுவது போல் ஆங்கிலத்தையும் உதறிவிட்டு உள்ளே வரவேண்டும்
என்பது எங்கள் வீட்டிலே அனைவரும் எழுதப்படாத சட்டமாக கடைப்பிடிக்கிறோம் “, என்று
.
Advika' with father, Mother and sister |
மினசோட்டா தமிழ்ச் சங்கம் நிகழ்த்தும் ஒவ்வொரு
போட்டியிலும் தனது மூன்று வயது முதல் பங்குபெற்று வருகிறாள் அத்விகா. அவ்வையார்
மற்றும் பாரதியாரின் ஆத்திசூடிகளை நான்கு வயதில் ஒப்புவித்தாள். ஐந்து வயது தொடங்கி
ஏழு வயது வரை மூன்று பகுதிகளாக அறம், பொருள், இன்பம் எனும் முப்பாலையும் பொருளுடன்
சொல்லி முடித்தாள். மினசோட்டா தமிழ்ச் சங்கத்தின் "செந்தமிழ்ச் செல்வி", "குறள் மொழியாள்", விரிகுடாக்
கலைக்கூடத்தின் " குறள் அரசி " , 2016 பேரவை தமிழ் விழாவில்
"குறள் தேனீ" என பல பட்டங்கள் பெற்றாள்.
நிலா, புறநானூறும் பெண் வீரமும், நேர்மை, ஏன் தமிழ் எனும் தலைப்புகளில் இவர் தந்த மழலை
பேச்சுகள் பலரின் கவனத்தையும் கவர்ந்தது. ஹார்வார்ட் பல்கலைகழகத்தில் அமையவிருக்கும்
தமிழிருக்கைக்கு நிதி திரட்டுவதில் தனது சேமிப்பிலிருந்து சிறுதொகை அளித்ததுடன், பேரவை
விழாவில் கிடைத்த பரிசு பணம் ஐநூறு டாலரையும் தமிழ் இருக்கைக்கு அளித்தது குறிப்பிடத்
தக்கது. இது மட்டும் இன்றி தான் செல்லும் இடங்களில் எல்லாம் தமிழிருக்கை பற்றி எடுத்து
சொல்லி இந்த நிதி திரட்டலுக்கு உதவி வருகிறாள்.
சச்சிதானந்தன்
மேலும் சொல்கிறார், “திருக்குறள் உட்பட தமிழ் இலக்கியங்களை சின்னசின்ன கதைகள் மூலம் அத்விகாவிடம்
கொண்டு செல்லும் பெருமை முழுதும் எனது மனைவி பிரசன்னா அவர்களையே சாரும். குழந்தைக்கு
சொல்லிக் கொடுக்க படித்ததால் தானும் திருக்குறள் முழுவதையும் தொடர் பொழிவாய் சொல்ல
முடிந்தது என்பார் அவர்”. இந்தப்பெருமைமிகு குடும்பம் மினசோட்டா மாநிலத்தில் வசித்து வருகிறார்கள் .
முதல் தலைமுறையில் புலம் பெயர்ந்தவர்கள் தமிழைத் தாங்கிப்
பிடிப்பது பெரிய காரியமல்ல. ஏனென்றால் பெரும் பாலானவர்களுக்கு நம் மொழியின் அருமை
வெளிநாடு வந்தபின்தான் தெரிய வருகிறது. இதில் இரண்டாவது தலைமுறைக்கு தமிழைக் கொண்டு போவதுதான் மிகமிகமிக சிரமமான காரியம்.
அதனைச் செய்யும் தமிழ் உள்ளங்களுக்கு என் வாழ்த்துதல்களும் பாராட்டுகளும். இதில்
பலபேர் வெளியிலும் சரி வீட்டிலும் சரி ஆங்கிலம் பேசிக் கொண்டு, தமிழை மறந்து தாய் நாட்டையும் மறந்து முற்றிலுமாக
மாறிவிடுகின்றனர். இவர்களுக்கு நம் நாட்டு
நடப்பு கூட சுத்தமாக தெரியாது. "என்ன சிவாஜி
செத்துட்டாரா " கதைதான்.
நம்நிலை இப்படியிருக்க இலங்கைத் தமிழர்களை பாராட்டியே ஆக
வேண்டும்.இன உணர்வும் மொழி உணர்வும் மிகுதியாக உள்ளவர்கள் இவர்கள்.
இவர்களுள் பெரும்பாலானவர்கள் முதல் தலைமுறை இரண்டாம்
தலைமுறை என்று வித்தியாசம் இல்லாமல், எல்லோரும் தமிழ் பேசவும் தமிழ் படிக்கவும்
கற்றுக் கொண்டு சரளமாக தமிழ் பேசுகிறார்கள். இவர்களின் விழாக்களில் நம் விழாக்கள்
போலன்றி இளைஞர்கள் ஏராளமாக கலந்து கொள்வதைப் பார்த்திருக்கிறேன். பெரும்பாலான
திருமணங்களும் அவர்களுக்குள்ளேயே நடக்கிறது.
ஃபெட்னாவும் தமிழ் மொழி வளர்ச்சிக்காக தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது.
ஏனென்றால் நாடிழந்து அல்லது நாடு துறந்து வெளிநாட்டில் வாழும் நாம் மொழியையும் துறந்தால். நாம் யார்
நம் இனம் என்ன என்பது அழிந்துபோய் நாம்
முகமிழந்து உருவிழந்து போய்விடுவோம்.
(தமிழர் திருவிழா
பதிவுகள் தொடரும்.)
//ஏனென்றால் நாடிழந்து அல்லது நாடு துறந்து வெளிநாட்டில் வாழும் நாம் மொழியையும் துறந்தால். நாம் யார் நம் இனம் என்ன என்பது அழிந்துபோய் நாம் முகமிழந்து உருவிழந்து போய்விடுவோம்.// கண்கள் குளமானது. பகிர்வுக்கு நன்றி!உங்கள் எழுத்துப்பணி தொடர வாழ்த்துக்கள்.!
ReplyDeleteநன்றி ஆரூர் பாஸ்கர்.
Deleteநீங்கள் சொன்னது போல குரள் தேனீயின் குடும்பம் பாராட்டுதலுக்குறியது.
ReplyDeleteநிச்சயமாக.நன்றி பாஸ்கர்.
ReplyDeleteஅக்குடும்பத்தாரின் முயற்சிகள் பாராட்டுக்குரியது. பகிர்ந்த உங்களுக்கு நன்றி.
ReplyDeleteமுயன்றால் முடியாதது ஒன்றுமில்லை என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது , வருகைக்கு நன்றி ஐயா.
Delete