Thursday, September 22, 2016

தமிழர் விழாவில் அறுசுவை உணவு!!!!!

Image result for fetna 2016, NJ
Fetna Logo
ஃபெட்னா தமிழர் திருவிழா 2016 பகுதி 10
இதற்கு முந்திய பகுதியைப்படிக்க   இங்கே சொடுக்கவும் 
http://paradesiatnewyork.blogspot.com/2016/09/blog-post_15.html

தமிழர் கூடும் எந்த விழாவிலும் சாப்பாடு என்பது மிகவும் அவசியம். நான் கலந்து கொள்ளும் இம்மானுவேல் தமிழ்த் திருச்சபையிலும் எப்போது நாங்கள் கூடினாலும், ஆலய வழிபாடு முடிந்ததும் மதிய உணவு இருக்கும். ஃபெட்னாவுக்கு பதிவு செய்யும் போதே மதிய உணவு மற்றும் இரவு உணவுக்கும் சேர்த்தே கட்டணம் செலுத்தியிருந்தேன். வெளியே வந்து சாப்பிடுவதில் என் மனைவி மிகவும் கட்டுப்பெட்டி. இந்திய உணவு அதுவும் தென்னிந்திய உணவு அதிலும் தமிழ் உணவு அதுவும் அசைவ உணவை மட்டுமே விரும்பிச் சாப்பிடுவாள். நான் ஒரு சைவக்கொக்கு.

 ஆயிரக் கணக்கானவர்களுக்கு சமைக்க வேண்டுமே சாப்பாடு எப்படி இருக்குமோ என்ற ஒரு பதட்டம் எங்கள் இருவருக்குமே இருந்தது.

அரங்கத்திற்குள் நுழையும்போது  கொடுக்கப்பட்ட துணிப்பையில் கையேடுகள், நிகழ்ச்சி நிரல், விழா மலர், இவைகளோடு ஜானகி முறுக்கும், இனிப்பும் இருந்தன. நிகழ்ச்சி நிரல் கையேட்டில் பல நிகழ்ச்சிகளைப் பற்றிமட்டுமல்ல, உணவு நேரங்கள் மட்டுமல்ல, உணவு வகைகளை பற்றியும் பட்டியல் போடப்பட்டிருந்தது ஆச்சரியத்தைத் தந்தது.

முதல்நாள் மதிய நேரமும் வந்தது. நாங்கள் உணவுக்கூடத்துக்குச் சென்றோம் பந்திக்கு முந்த வேண்டும் என்று இரத்தத்தில் எழுதியிருக்கும் தமிழ் மக்கள் அங்கு ஏராளமானவர் ஏற்கனவே வந்திருந்தனர். இவர்களெல்லாம் நிகழ்ச்சிகள் எதுவும் பார்க்காமல் காலையிலேயே வந்து வரிசையில் நின்றுவிட்டனரோ என்று எண்ணும் வகையில் மிக நீண்ட வரிசை, பாம்பு போல வளைந்து சென்றது.

டைனிங் ஹாலோ, உணவு பரிமாறுவதோ கண்ணுக்குத் தெரியவில்லை. கொடுக்கப்பட்ட டோக்கன்களை கையில் வைத்துக் கொண்டு நின்றோம். ஆனால் நண்பர்கள் பலரையும் பார்க்க சந்தர்ப்பம் கிடைத்தது. எங்களுக்கு முன்னால் சூப்பர் சிங்கர் ஜெசிக்காவின் பெற்றோர் நின்றிருந்தனர். ஜெசிக்கா புலம் பெயர்ந்த மக்களின் டார்லிங் ஆன பிறகு மிகவும் பிஸி ஆனாலும் படிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து எல்லா நிகழ்ச்சிகளையும் ஒத்துக்கொள்வதில்லை என்று சொன்னார்கள்.

சூப்பர் சிங்கர் போட்டியில் ,தந்தையும் மகளும் பாடிய 'அன்று வந்ததும் அதே நிலா" என்ற பாடலை நினைவு கூர்ந்து அவரிடம் சொன்னேன். அவர் சிரித்தபடியே நன்றி சொன்னார்.

ஒருவழியாக வரிசை நகர்ந்து சென்று, ஆப்பிரிக்க கடோத்கஜன்கள் பாதுகாத்த கோட்டைக் கதவுகளுக்கு அருகில் சென்றது. கையில் வைத்திருந்த டிக்கட்டை கவனமாகச் செக் செய்து கதவைத் திறந்து உள்ளே அனுப்பினர்.

கதவு திறந்ததும் உள்ளே பிரம்மாண்டமான டைனிங் ஹாலில் ஏராளமான தமிழ் மக்கள் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அவர்களெல்லாம் எப்போது வந்திருப்பார்கள் என நினைத்து ஆச்சரியமாக இருந்தது. ஹாலில் நுழைந்ததும் வரிசை இரண்டாகப்பிரிந்தது. ஒன்று சைவ வரிசை மறறொன்று அசைவ வரிசை. என் மனைவி தன்னிச்சையாக அசைவ வரிசையில் நகர்ந்து தொடர, நானும் ஆடுபோல் பின் தொடர்ந்தேன். வகை வகையான உணவுகளை  வரிசையில் நின்று பரிமாறினர். அதில் நம் மக்களோடு இணைந்து  சில ஆப்பிரிக்க அமெரிக்கப் பெண்களும் பரிமாறுவதற்கு அமர்த்தப்பட்டிருந்தனர். என்னென்ன உணவு வகைகள் என்று அப்புறம்  சொல்கிறேன். பல குழிகளைக் கொண்ட பிளாஸ்டிக் தட்டில் எல்லாக் குழிகளும் நிரம்புமளவுக்கு அத்தனை வகைகள் பரிமாறப்பட்டன.

அப்போது என் வரிசைக்கு நடுவில் வந்த நியூஜெர்சி தமிழ்ச்சங்கத் தலைவரும், ஃபெட்னா நிகழ்ச்சியைத் திறம்பட நடத்திக் கொண்டிருந்த, “உஷா கிருஷ்ணகுமார்” வந்து ஒரு தட்டைக் கேட்க, தட்டு டிபார்ட்மெண்ட்டின் இன்சார்ஜாக இருந்த ஆப்பிரிக்க அமெரிக்கப் பெண் டோக்கன் கேட்டாள். இனி நடந்த உரையாடலைக் கீழே கொடுக்கிறேன் தமிழில்.

"தயவு செய்து ஒரு தட்டுக் கிடைக்குமா?"
“தயவு செய்து டோக்கன் தாருங்கள்”
"டோக்கனை அங்கேயே கொடுத்துவிட்டேன்"
"சாப்பாடு ஏற்கனவே வாங்கிவிட்டீர்களா"
“ஆமாம் இப்போதுதான் வாங்கினேன்”.
"ஒரு டோக்கனுக்கு ஒரு சாப்பாடுதான் தருவோம்"
"இல்லை இங்கே உட்கார்ந்து சாப்பிட நேரமில்லை. இன்னொரு பிளேட் கொடுத்தால் இந்த சாப்பாட்டை மூடி எடுத்துச் சென்றுவிடுவேன்."
"மன்னிக்கவும் இன்னொரு பிளேட் தரமுடியாது"
உடனே நான் தலையிட்டு, "இவர்கள்தான் உஷா, தமிழ்ச் சங்கத்தலைவர் இந்தத் திருவிழாவை நடத்துபவர் தட்டைக் கொடு" என்றேன்.

அதன்பின்னர் தான் அந்தப்பெண் மன்னிப்புக் கூறி ஒரு தட்டைக் கொடுத்தாள். உஷாவுக்கே அந்தக்கதி. அந்தப் பெண்ணையும் குறை சொல்ல முடியாது. அவளுக்கு இடப்பட்ட பணியை அவள் நிறைவேற்றினாள். கொஞ்ச நேரத்தில் வேர்த்து நொந்து போன உஷா தட்டுடன்  எனக்கு நன்றி சொல்லி நகர்ந்தார். சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்த அவருக்கு நான் அல்லவா நன்றி சொல்லியிருக்க வேண்டும்.



உணவுப் பதார்த்தங்கள் நல்ல ருசியாக இருந்தன. உஷாவிடம் கேட்டபோது பாஸ்டனிலிருந்து வந்த ஒரு குழு அங்கேயே பின்னால் சமைத்துச் சுடச்சுடப் பரிமாறினர் என்று அறிந்துகொண்டேன்.

முதல் நாள் மதிய உணவுக்கு நீண்ட நேரம் நிற்க வேண்டி திரும்பவும் அரங்கு வருவதற்கு நீண்ட நேரம் ஆகிவிட்டதால், அன்றைய இரவே திட்டத்தை மாற்றி, அசைவத்துக்கு இரண்டு இடத்திலும் சைவத்துக்கு இரண்டு இடத்திலும் செட் பண்ணி நீள வரிசையை உடனடியாக குறைத்தனர்.

ஒவ்வொரு நேரமும் எதிர்பார்க்க வைத்த உணவு. அவ்வப்போது அந்த நேரம் வரும்போது, மெனுவை எடுத்துப் பார்த்துக் கொள்வோம். அப்படி என்னதான் சாப்பிட்டீர்கள் என்று கேட்கும் மக்களுக்கு இதோ கீழே முக்கிய உணவு வகைகளைக் கொடுக்கிறேன்.

சென்னை சிக்கன் குழம்பு, செட்டி நாடு சிக்கன், மட்டன் சுக்கா வருவல், ஜிஞ்சர் சிக்கன், மட்டன் பிரியாணி ஆகியவை சில.
Usha Krishnakumar
செவிக்கு மட்டுமல்ல எல்லாப்புலன்களுக்கும் விருந்து கொடுத்ததோடு வயிற்றுக்கும் ஈயப்பட்ட அறுசுவை உணவுக்காக நன்றி. பாஸ்டனிலிருந்து வந்த நளபாகம் சமைத்த நண்பர்களுக்கு நன்றி. இங்கே திருமணத்திற்கே நூறு பேர் என்பதே மிகவும் அதிகம் என்ற நிலையில் 2 ஆயிரம் பேருக்கு உணவு படைத்த நியூஜெர்சி தமிழ்ச்சங்கம் குறிப்பாக அதன் தலைவி உஷாவுக்கு நன்றி.

தமிழர் விழா பதிவுகள் தொடரும்.


பின்குறிப்பு: இதில் என்ன வேடிக்கையென்றால் அறுசுவை உணவு அரங்கிலேயே கிடைக்க, சிலபேர் கட்டுச் சோறுடன் வந்து கார்களில் ஒதுங்கினர்.

2 comments:

  1. நிகழ்வினைப் பகிர்ந்த விதம் ரசனையாக இருந்தது. பின்குறிப்பினை அதிகம் ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. ஒரு வேளை உணவின் சுவையைப்பற்றி எழுதியதால் கூடுதல் ரசனையாய் இருந்ததோ என்னமோ ? வருகைக்கு நன்றி நண்பரே .

      Delete