Showing posts with label தமிழ்ச்சங்கம். Show all posts
Showing posts with label தமிழ்ச்சங்கம். Show all posts

Thursday, January 17, 2019

அமெரிக்காவில் தமிழ் பாரம்பரியம் வளர்கிறதா? தேய்கிறதா?

தமிழ் பாரம்பரியம் அமெரிக்காவில் வளர்கிறதா? தேய்கிறதா?

               பொங்கல் திருநாளை முன்னிட்டு அமெரிக்காவின் முதல் தமிழ் தொலைக்காட்சியான tamerica.tv யில்   சிறப்பு பட்டிமன்றம்  நடந்தது .வாஷிங்டன் பகுதி தமிழ்ச்சங்கத்தின் முன்னாள் தலைவர் அகத்தியன் பெனடிக்ட் அவர்கள் தலைமையில் நடந்த பட்டிமன்றத்தில் அடியேன் கலந்து கொண்டு பேசினேன் .
 தமிழ் பாரம்பரியம் அமெரிக்காவில் வளர்கிறதா? தேய்கிறதா?  என்ற தலைப்பில்  நடந்த இந்த நிகழ்ச்சியை கீழே உள்ள லிங்கில் காணலாம் .







Monday, November 13, 2017

என் மனைவியின் பொன்விழாக்கவிதை !!!!!!!!!!!

My Family

கடந்த நவம்பர் 5ஆம் தேதி என் மனைவியின் ( ரூத் எலிசபெத் )பொன் விழா இம்மானுவேல் தமிழ்த்  திருச்சபையில் , ஆயர் அறிவர் ஜான்சன் ரெத்தினசாமி தலைமையில் சிறப்பாக நடை பெற்றது .குடும்ப உறுப்பினர்கள் ஆலய நண்பர்கள் தவிர சிறப்பு அழைப்பாளர்களாக நியூயார்க் தமிழ்ச்சங்கத்தின் முன்னாள் மற்றும் இந்நாள் தலைவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் .
With Pastor Johnson Family

அப்போது விழாவின் முக்கிய நிகழ்வாக ,   நியூயார்க் தமிழ்ச்சங்கத்தின் செயலாளர் கவிஞர் சிவபாலன் அவர்கள் ஒரு சிறப்பான கவிதையை வாசித்து அளித்தார் .இதோ அந்தக்கவிதை உங்களுக்காக .
 
Sivabalan Kavithai
     பொன்விழா வாழ்த்து!
“அறுநூறு  நிலவுகளைப் பார்த்தது ஒரு நிலவு! . அது
அரை நூற்றாண்டு கண்டது எமக்கு மகிழ்வு!
கால் கட்டுப் போட்டது கல்யாண உறவு! -  அதுவும்
கால் நூற்றாண்டு  கொண்டதில் இன்பமும் வரவு!

பொன் விழா! வெள்ளி விழா! - என்றும்
இவர் வாழ்வில் திருவிழா!
இவ் வருடம் இவருக்கோ
இரண்டு விழா! - அதனால்
இடைவிடாத சுற்றுலா!
இடையில்,
இருவருக்கும் கிடைத்ததும்
இரண்டு வெண்ணிலா!
இல்லறத்தில் அன்போ வேர்ப்பலா!

இறைவன், இவரை,
இவர் தாய் கையில் கொடுத்து ஐம்பது ஆண்டாச்சு!. – இவரோ
இவர் கணவர் கை பிடிச்சு இருபத்தி  அஞ்சாச்சு!.
இணைந்த உறவுகளும்,  இப்போ பெரிசாச்சு!
இடமும், புலம் பெயர்ந்த நிலமாச்சு!

with Sivabalan Family

வடிவில் மயங்கும் வண்ணத்துப் பூச்சி,
படிவில் தோன்றும் வைரத்து கற்கள்,
செடியில் பூக்கும் செம்பகப் பூக்கள்,
கொடியில் தூங்கும் கோவைப் பழங்கள்.,
இயற்கையில் இவை எல்லாம்… அழகு!
இதை விட, இவர் மனமோ பேரழகு!

சிரித்த முகம், சீரான பார்வை
சிறப்பான நட்பு  - நீர்
சிங்கார நாட்டு இளவரசி! - உம்
சிறு விரல்  பட்டாலே
சுவைக்கும் நெல் அரிசி!
செம் பொன்னும் பார்க்குமாம் தமை உரசி!
இருந்தும், உமக்கு
எப்படிக் கிடைத்தார்  இந்தப் பரதேசி?

பண்பும், பண்பாடும் இவர் செயல் வடிவில்!
அன்பும் அனுபவமும்  தாய் வடிவில்!
அகிலம் விழிப்பதோ காலை விடிவில்!
அனிசா,…. அபிசா…. விழித்ததோ இவர் மடியில்!

With Current President Ranga family

கார்த்திகையில் பூப்பது
கார்த்திகைப் பூக்கள்!
இங்கே,
கார்த்திகைப் பூவில்
பூத்தது
இரண்டு ரோஜாப் பூக்கள்!

ஐப்பசியில் மழை வர,
வீசும் ஆடியில் காத்து!
அந்நீர் ஓட,
வளரும் வயலில் நாத்து!
ஆதவன் வரவால்,
மலரும்
தாமரையும் பார்த்து!
ஆனந்த வரவால்
மலரவேண்டும்……
இந்த ரூத்து! [Ruth]

இவர் மாமன்,
சேரனா?
சோழனா?
பாண்டியனா? யார் அறிவார்? - ஆனால் அல்பி
தியாக ராராராஜன்!!!!  என்பதை ஊர் அறியும்! .
அல்பி என்பது அவர் முதற்பெயர்!- அவரோ
அற்பி [கஞ்சன்] ஆனது நிஜப் பெயர்!
இரண்டுக்கு மேல் இவர் நிறுத்திக் கொண்டார்!
இவரை இளமையாய்  வைத்துக் கொண்டார்!
 
Cutting of cake with Ruth;s parents
ஏனோ,.. இவர் கணவர்
எழுத்தாளர் ஆனார்!
நானா விடுவேன்?
பார்!!!!! -என, -  இவர்
அவர்
தலை எழுத்து [ஆளர்] ஆனார்! 
வாழவேண்டும் தம்பதிகள் பல்லாண்டு!. –
பலர் வாழ்த்த
வரவேண்டும் நூறாண்டு!

-அன்புடன், கவிஞர் சிவபாலன் குடும்பத்தினர்-


Thursday, June 8, 2017

நியூயார்க்கில் நித்ய ஸ்ரீ மகாதேவன் கச்சேரி !!!!!!!!!!!!!


          சித்திரைத் திருநாளை முன்னிட்டு நியூயார்க் தமிழ்ச் சங்கம் பிரபல கர்நாடக இசைப் பாடகி நித்யஸ்ரீ மகாதேவன் அவர்களின் தமிழிசைக் கச்சேரியை போன மே 29 ஞாயிறன்று மாலை, நியூயார்க்கில் ஃ பிளஷிங்கில் உள்ள ஹிண்டு டெம்பிள் அருகிலுள்ள ஒரு பள்ளியில் நடத்தியது. வழக்கம்போல் பரதேசி அங்கு ஆஜர். தமிழ்ச்சங்கத்தலைவர் விஜய்குமார் பொருளாளர் ரங்கநாதன், நிர்வாகி ஆற்காடு தியாகராஜன் ஆகியோர்  வரவேற்றனர்.
          பிராங்க்ஸ்  சேப்பல் சர்விஸ் முடித்து சிறிது தாமதமாய் வந்தேன். "ஆரம்பித்து ரொம்ப நேரமாகிவிட்டதா", என்று கேட்டதற்கு தலைவர் 2 பாட்டுதான் முடிந்திருக்கிறது  என்றார்.ஆஹா, கர்நாடக இசையில் 2 பாட்டு என்றால் அரைமணி நேரமாகியிருக்குமே என்று நினைத்துக் கொண்டே உள்ளே புகுந்தேன். சரிதானே ஆலாபனை மட்டுமே ஒரு பத்து நிமிடம் இருக்குமல்லவா.
          கூட்டம் கம்மியாகத்தான் இருந்தது. அதற்குப்பல  காரணங்களைச் சொல்லலாம். முதலாவதாக கர்நாடக இசைக்கு ரசிகர்கள் மிகவும் குறைவு. இரண்டாவதாக இது கடுமையான வின்ட்டருக்குப் பின் வரும் முதல் லாங் வீக்கென்ட். 'மெமோரியல் டே வீக்கென்ட்' என்று சொல்வார்கள். அதனால் பலரும் காலையையும் காரையும் கிளப்பிக் கொண்டு வெளியே எங்காவது போவார்கள். பெரும்பாலும் ரோட் ட்ரிப்பாக இருக்கும். மூன்றாவதாக கோவிலில் ஏதோ முக்கிய பூஜை நடைபெறுவதாகவும்  கர்நாடக இசையை ரசிக்கும் பலரும் அங்கே இருப்பதாகவும் முன்னாள் தலைவி காஞ்சனா அவர்கள் சொன்னார்கள்.
Image result for nithyashree mahadevan

          மேடையில் நடுநாயகமாக  நித்ய ஸ்ரீ உட்கார்ந்து பாடிக் கொண்டிருந்தார். பட்டுப்புடவை கட்டி மல்லிகை பூ சூடி பாந்தமாக உட்கார்ந்திருந்தார்.  வயலின், மிருதங்கம் மற்றும் கஞ்சிரா ஆகிய பக்க வாத்தியங்கள் வாசிப்பவர்கள் சென்னையிலிருந்தே வந்திருந்தனர்.
                    உச்சஸ்தாயி மற்றும் மந்திரஸ்தாயி இரண்டிலும் புகுந்து சஞ்சாரம் செய்யும் கணீர்குரல் நித்ய ஸ்ரீக்கு. ஆனால் பல கச்சேரிகளை முடித்து நியூயார்க்கில் கடைசி கச்சேரி என்பதாலோ என்னவோ உச்சஸ்தாயியில் குரலிலிருந்த ஸ்ட்ரெயின் தெரிந்தது. ஆனால் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் பாடிக் கொண்டிருந்தார்.
          D.K. பட்டம்மாளின் பேத்தி என்பதை விட ஏ.ஆர்.ரகுமான் இசையில்  சில பாடல்களைப் பாடிய பின்தான் என்னைப் போன்ற பாமரர்களுக்கு அவரை அதிகமாக தெரிய வந்தது. ஆனால் சென்னையில் முதல் வரிசைக் கலைஞர்களுள் ஒருவர் அதுவும் தமிழிசைக்கு முக்கியத்துவம் கொடுப்பவர் என்பதால் இவரைப்பிடிக்கும்.
          பக்க வாத்தியங்களோடு அவர் தொடை தட்டி தாளம் போட்டது எனக்கே வலித்தது. அவ்வளவு சத்தமாக தொடை தட்டினார். பாரதியின் தீராத விளையாட்டுப் பிள்ளை இவர் குரலில் கொஞ்சி விளையாடியது. நித்ய ஸ்ரீயின் அம்மா அவர்கள் இயற்றிய சூரியபகவான் பாட்டும் அற்புதமாக இருந்தது.
          ஒரே வருத்தம் எல்லாப் பாடல்களுமே இறைவணக்கப் பாடல்களாய் மட்டுமே இருந்தது. சில தேசபக்திப் பாடல்களையும் பாடியிருக்கலாம். அந்த மாதிரி பாடல்களைப் பாடித்தானே பட்டம்மாள் புகழ் பெற்றார். கச்சேரியை முடிக்கும்போது 'வாழிய செந்தமிழ் வாழ்க நற்றமிழர்' என்று பாடி முடித்தது கொஞ்சம் ஆறுதலாய் இருந்தது.

          ஆரம்ப முதலே கவனித்துக் கொண்டிருந்தேன். எனக்கு முன்வரிசையில் ஐ பேடில் எல்லாப் பாட்டுகளையும் வீடியோ எடுத்துத் தள்ளிக் கொண்டிருந்தார் ஒருவர்.
Mahadevan

          ஒரு பாட்டு 15 நிமிடம் நீண்டாலும் சளைக்காமல் ஐபேடை தூக்கிப் பிடித்துக் கொண்டு எடுத்தார். பக்கத்தில் அவர் மனைவியும் கூட இருந்து ரசித்துக் (?). கொண்டிருந்தார். ஆளைப்பார்த்தால் ஆஜானுபாகனாய் ஸ்ட்ராங்காய் இருந்ததால் அப்படிப் பிடிக்க முடிந்தது என்று நினைக்கிறேன். இருந்தாலும் கூர்ந்து கவனித்தால் கை இலேசாக ஆட்டம் கண்டது. அது தன்னுடைய ஃ பேவரைட் பாடகியின் இசைக் கச்சேரியை  மிகவும் அருகில் இருந்து பார்ப்பதாலும் இருந்திருக்கலாம். பக்கத்து மாநிலமான கனக்டிகட்டிலுருந்து திடீரென்று தலைவரால் டைஹார்டு ஃபேன் என்று அறிமுகப்படுத்தப்பட்டு  மேடைக்கு வந்த அவர் கவிதையும் பாடினார். சிலவரிகள் மிக நன்றாக இருந்தன. உணவு உண்ணும்போது அவரைப் பார்த்துப் பாராட்டிவிட்டு அந்தக் கவிதையை ஈமெயிலில் பெற்றேன். இதோ அது உங்களுக்காக. இவர் பெயரும் மகாதேவன்தான்.


          நியூயார்க் தமிழ்ச்சங்கம் 'நித்யஸ்ரீக்கு' தமிழிசைத் திலகம் என்ற பட்டம் கொடுத்து  கெளரவித்தது. கச்சேரி முடித்து சென்னை தோசாவின் இரவு உணவையும் உண்டுவிட்டு கிளம்பினேன்.
          அருமையான பக்கவாத்தியங்களோடு இணைந்த நித்யஸ்ரீயின் கச்சேரி நன்றாகவே அமைந்திருந்தது. கூட்டம் குறைவாக வருகிறது என்று இந்த மாதிரிக்கச்சேரிகளை நிறுத்திவிடாமல் தொடர்ந்து கொடுக்கும் நியூயார்க் தமிழ்ச் சங்கத்திற்கு வாழ்த்துக்களும் நன்றிகளும்.


Friday, January 20, 2017

ஜல்லிக்கட்டு தமிழ் வார்த்தையா?

Image result for jallikattu

ஜல்லிக்கட்டுக்கான தன்னெழுச்சியான போராட்டம் தமிழகம், ஏன் உலகம் முழுவதும்  பரவி வரும் சூழ்நிலையில், அதனைப்பற்றி அநேக தகவல்கள் வாட்ஸ் அப்பில் உலவி குழப்பத்தை ஏற்படுத்துவதாலும், இதனைப்பற்றி தெரிந்தவர்களைத்தவிர தெரியாதவர்களே அதிகம் என்பதாலும், இதனைக்குறித்து  தெளிவு பெற யாரை அனுகலாம் என்று யோசித்த போது உடனடியாக நினைவுக்கு வந்தவர் நண்பர், முனைவர். பிரபாகர் அவர்கள். இவர் அமெரிக்கன் கல்லூரியின் தமிழ்த் துறையில் நீண்டகாலம் பேராசிரியராக இருப்பதோடு மாணவர்கள் மத்தியில் தமிழ் உணர்வை தொடர்ந்து ஊட்டி வருபவர். சம்பிரதாய நலம் விசாரிப்புக்குப்பின் இதோ என்னுடைய கேள்விகளுக்கு அவரின் பதில்கள்.
Image may contain: 1 person
Professor Dr.R Prabahar
1.  ஜல்லிக்கட்டு என்பது உண்மையிலேயே தமிழ் நாட்டின் பாரம்பரிய விளையாட்டுதானா?
ஆமாம் அதில் எந்த  சந்தேகமுமில்லை.
2.  எவ்வளவு காலம் இது தமிழகத்தில் இருக்கிறது? அதற்கு ஆதாரம் என்ன?
தமிழகத்தில் நிலவுடமை சமூகம் வளர்ந்த காலத்திலிருந்தே காளையுடன் மனிதன் தொடர்பு ஏற்படுத்தி அதனை வீட்டு மிருகமாக்கி(Domesticate)  தன்னுடைய விவசாயத் தேவைகளுக்கு பயன்படுத்த ஆரம்பித்தான். அன்றிலிருந்து இன்று வரை காளை, உழவனின் வாழ்வில் இன்றியமையாத இடத்தைப் பிடித்திருக்கிறது. அப்போதிருந்து இந்த காளை விளையாட்டு வந்திருக்கலாம். வீரயுக காலத்திலிருந்து உருவாகியிருக்கலாம். 2000 வருடம் அல்லது அதற்கும் மேலாகவும் இருக்கலாம். ஆதாரம் என்று எடுத்துக் கொண்டால் கலித்தொகை போன்ற சங்ககாலப் பாடல்களில் இதனைக் காணலாம். பல கல்வெட்டுகளில் இதனைப்பற்றி குறிப்பிடப் பட்டிருக்கிறது. சிந்து சமவெளியின் திராவிட நாகரிகத்தில் காளைச் சின்னம் காணப்படுகிறது. அசோக சக்கரத்தில் கூட காளையின் உருவம் இருக்கிறது. இன்னொரு விஷயம், பண்பாடு அல்லது பாரம்பரியம் என்பது ஆயிரம் ஆண்டுக்கு முற்பட்டதாகத்தான் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. 100 வருடங்களில் கூட பண்பாட்டு மாற்றங்கள் நடைபெற்று  புதிய பண்பாடு தோன்றலாம். அதில் தவறில்லை. ஏனென்றால் தமிழ்ச்சமூகம் மாற்றங்களை வரவேற்று தொடர்ந்து மாறிவருகிற சமூகம்தான். குறிப்பாக உடை, உணவு, ஏன் தமிழ் மொழியில் கூட  எழுத்து மற்றும் பேச்சு வடிவங் கூட 100  வருடங்களில் பெரிய மாறுதலையடைந்திருக்கிறது.
3.  ஜல்லிக்கட்டு என்றால் என்ன அர்த்தம்? இது தமிழ் போலத் தெரியவில்லையே?
சல்லிக்கட்டு என்பதுதான் ஜல்லிக்கட்டு என்று மறுவியுள்ளதாக சொல்கிறார்கள். 'ஜ' என்பது தமிழ் வார்த்தை அல்ல. 'சல்லி' என்றால் காசு அதாவது பணம் என்று பொருள். காளையின் கொம்பில் பணமுடிப்பைக் கட்டி இதில் வெற்றி பெறுபவருக்கு அந்தக் காசுகளை கொடுத்து வரும் விளையாட்டுத்தான் ‘சல்லிக்கட்டு’ என்று அழைக்கப்பட்டிருக்கலாம். 'சல்லிக்காசு கூட இல்லை' என்று சொல்வது இன்றும் வழக்கத்தில் இருக்கிறதே.
Related image

4.  ஏறுதழுவுதல் போன்ற பல பெயர்கள் இருக்கின்றனவே? அவை வேறு வேறா?
சல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு, எருது கட்டு, ஏறுதழுவுதல் ஆகிய பல பெயர்கள் இருக்கின்றன. ஆனால் ஒவ்வொன்றுக்கும் சிறுசிறு  வித்தியாசங்கள் இருக்கின்றன. இப்போது நடக்கும் விளையாட்டை ஏறு தழுவுதல் என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும்.
5.  காளைச் சண்டை என்பது வேறா?
காளைச் சண்டை என்பது இப்போது வழக்கத்தில் இல்லை. ஆனாலும் இதனை ஸ்பெயின், மெக்சிகோவில் நடக்கும் சண்டையோடு ஒப்பிட முடியாது. அங்கு காளையைக் கொன்றால்தான் வெற்றியடைந்தவர் என்று அர்த்தம்.
6.  பொங்கல் சமயத்தில் ஜல்லிக்கட்டு வருவதன் காரணம் என்ன?
பொங்கல் என்பது அறுவடைத்திருநாள். விவசாயி தன் தொழிலுக்கு உதவிய சூரியனுக்கு ஒரு நாளையும் அதற்குச் சமானமாய் மாட்டுக்கு ஒரு நாளையும் ஒதுக்கி கொண்டாடுகிறான். அந்த நாளில்தான் மஞ்சுவிரட்டு, ஏறுதழுவுதல் ஆகியவை நடைபெறுகின்றன.
7.  ஜல்லிக்கட்டில் மாடுகள் துன்புறுத்தப் படுகின்றனவா?
மாடுகளை பிள்ளைகள் போலவும், குடும்பச் சொத்து போலவும் மதிக்கும் விவசாயிகள் அவற்றை துன்புறுத்துவார்களா? அல்லது அதற்கு அனுமதிப்பார்களா? நிச்சயம் இல்லை.
8.  பீட்டா மற்றும் புளுகிராஸ் அமைப்புகள் தவறானவையா?
அப்படி முற்றிலுமாகச் சொல்லமுடியாது. விலங்கு வதைச் சட்டம் சரிதான். ஆனால் ஜல்லிக்கட்டை அதன் கீழ் கொண்டு வரத் தேவையில்லை. நம்முடைய பாரம்பரியம் பண்பாடு, வழக்குமுறை தெரியாத அவர்களின்  பார்வை தவறானது என்று அரசு அவர்களிடம் ஆணித்தரமாக சொல்லவில்லை. வேண்டாம் என்று முற்றிலும் ஒழிக்காமல் அதற்கான சட்டதிட்டங்கள் வரைமுறைகளைப்பற்றி ஆராய்ந்து ஆலோசித்து நடைமுறைப்படுத்த வேண்டும்.
9.  நம்முடைய நாட்டினங்களை அழிக்கும் முயற்சிதான் இது என்று சொல்கிறார்களே?
அப்படி பொத்தாம் பொதுவாகச் சொல்லமுடியாது. நாட்டினங்கள்  அழிந்து போகக் கூடாது என்றால் அரசும், விவசாய சங்கங்களும் தான் நடவடிக்கை எடுத்துப் பாதுகாக்க வேண்டும். அவைகளை வளர்க்க எந்தத்தடையும் இல்லையே . இவை வருமானம், பொருளாதாரம் மற்றும் உலக மயமாக்கலின் பக்க விளைவுகள். விவசாயத்தில் உழுவதற்கு டிராக்டர்கள் வந்துவிட்டதால் காளைகள் பயன்படுத்தப்படுவதில்லை. நம்முடைய பசு மாடுகளைக் காட்டிலும் மற்ற இன மாடுகள் பாலை அதிகமாக கறக்கின்றது. எனவே எது லாபகரமோ அதைத்தானே மக்கள் செய்வார்கள். காளைகள் தேவையில்லையென்றால் யார் அதனை வளர்ப்பார்கள். ஜல்லிக்கட்டு நடக்காததால் மட்டுமே நாட்டினங்கள் அழிந்துபோகும் என்று சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது.
10.            கிரன்பேடி சொல்வதைப்போல் சதி போன்ற தீய பாரம்பரிய பழக்கங்களை விட்டுவிட்டோம். அதுபோல இதையும் விடவேண்டும் என்று சொல்வது சரியான வாதமா?
சதி வழக்கம், குழந்தை மணம், பெண்குழந்தை அழிப்பு போன்ற சமூகத்தீய வழக்கங்களோடு ஜல்லிக்கட்டை பொருத்திப் பார்க்க முடியாது. இது கண்டிப்பாக சமூகத் தீவினைப் பழக்கம் இல்லை.
11.            பொங்கல் என்பது தமிழகத்தின் பொதுவான விழாவா?
ஆம் தீபாவளி போன்ற மற்ற பண்டிகைகள் போலன்றி பொங்கல் என்பது சாதிசமய வேறுபாடுகளைத்தாண்டி தமிழ் பேசும் மக்கள் எல்லாரும் உற்சாகத்துடன் கொண்டாட வேண்டிய பண்டிகை. கிராமங்களில் அப்படித்தான் இன்றுவரை கொண்டாடப்படுகிறது. நகரில் கிறித்துவர்கள் மற்றும் முஸ்லீம்களும் இணைந்து பெருவிழாவாக இதனைக்  கொண்டாட வேண்டும்.
12.            பாரம்பரிய விளையாட்டு என்பதனால் மட்டுமே இந்த ஆபத்தான விளையாட்டை விளையாட வேண்டுமா?
இது ஆபத்தான விளையாட்டு இல்லை. இதனால் மரணங்கள் நிகழ்வது இல்லை அல்லது மிகமிக அரிதாக ஏற்படலாம். காயங்கள் ஏற்படுவது இயல்புதான். அப்படிப் பார்த்தால் எந்த விளையாட்டையும் விளையாட முடியாது.
13.            நம் அழிந்து போகும் அல்லது அழிந்து போன பாரம்பரிய விளையாட்டுகள் வேறெதும் இருக்கின்றனவா?
நாம் சின்ன வயதில் விளையாண்ட பலவகை விளையாட்டுக்கள் இன்று நடைமுறையில் இல்லை. கிட்டிப்புள் விளையாண்டவர்கள் எல்லாம் இப்போது கிரிக்கெட் விளையாடச்  சென்று விட்டார்கள். மற்றும் குஸ்தி, மல்யுத்தம் ஆகியவை முற்றிலும் அழிந்துபோய் இப்போது நகரில் மட்டும் குத்துச் சண்டை  என்ற வெளிநாட்டு பாக்சிங் வந்துவிட்டது. ரெஸ்லிங் என்பது முற்றிலும் வேறு ஒன்று. சிலம்பம் கூட எங்கோ ஓரிரு இடங்களில் தான் இருக்கிறது.
14.            வருங்காலத்தில் ஜல்லிக்கட்டு ம்  அழிந்து போகும் என்கிறீர்களா?
அப்படிச் சொல்ல முடியாது நவீன விஞ்ஞான யுகத்திலும் சில பழக்க வழக்கங்கள் மாறுவதில்லை. அதுபோல ஜல்லிக்கட்டும் நீண்ட நாட்கள் இருக்குமென்றுதான் தோன்றுகிறது. 
15.            பிஜேபி ஆர் எஸ் எஸ் ஆகியோர் தமிழ் நாட்டைப்பற்றி என்னதான் நினைக்கிறார்கள்?.
என்னதான் முயன்றாலும் தமிழ்நாட்டில் அவர்களால் காலூன்ற முடியவில்லை என்ற வெறுப்பு அவர்களுக்கு இருக்கிறது. சமஸ்கிருதம் மற்றும் இந்தி இங்கே வரமுடியவில்லை. வட இந்தியர் நம்மை காட்டுமிராண்டிகள் என்றுதான் நினைக்கிறார்கள். ஆனால் பழமையான, பண்பாடு மிக்க மூத்த மொழியைக் கொண்ட  சமூகம் நாம். திராவிட இயக்கத்தின் மதஞ்சாரா கொள்கையின் எச்சம் இன்னும் இங்கு இருக்கத்தான் செய்கிறது. நம்முடைய வாழ்க்கையிலும் படிப்பறிவிலும் எவ்வளவோ முன்னேற்றம் இருந்தாலும், நம்முடைய உரிமைகளுக்காக ஒன்றுபட்டு தொடர்ந்து போராடித்தான் ஆகவேண்டும் என்ற நிலைதான் இன்னும் இருக்கிறது.
Image result for Jallikattu protest in Tamilnadu
Protest in Tamilnadu

நீங்கள் சொல்வது சரிதான் பிரபா .ஆனால் இந்த முறை நிச்சயம் மாணவர் போராட்டம் வெற்றி பெறும் .உங்கள் பொன்னான நேரத்திற்கு நன்றி பிரபா .