Tuesday, September 6, 2016

அதிசயப்பண்டமும் அக்ரோபேட்டிக் ஷோவும்!!!!!!!!!!!!


சீனாவில் பரதேசி -21
இதற்கு முந்திய பகுதியைப்படிக்க   இங்கே சொடுக்கவும் 

http://paradesiatnewyork.blogspot.com/2016/08/blog-post_29.html


லீ சிரித்துக் கொண்டே என்னை உற்றுப்பார்த்தான். அவன் பார்த்து,  "நீ பிறக்கும்போதே இப்படித்தான் இருந்தியா இல்லை, இப்படித்தான் பிறந்ததிலிருந்து இருக்கியா ?" என்று. நானும் விளங்காமல் பார்க்க அந்த நீண்ட வரிசையில் என்னை நிற்க வைத்துவிட்டு விலகிச் சென்று தியேட்டருக்குள் சென்று மறைந்தான் . அந்த வரிசையில் முன்னும் பின்னும் இருந்தவர்களிடம், “அந்த லைன் எங்கே செல்கிறது?”, என்று நான் கேட்டதைக் கேட்டு அவர்கள் முழிக்க, அவர்கள் அதற்கு சொன்ன பதிலோ என்னவோ கேட்டு நான் முழிக்க கொஞ்சம்  சமாளித்துக் கொண்டு எனக்குத் தெரிந்த ஒரே சீன வார்த்தையான "சிசியே" என்றேன் (நன்றி). அதைக் கேட்டு அவர்கள் மேலும் முழித்தனர். வரிசை கொஞ்சம் கொஞ்சமாக  குறைந்த போது முன்னால் பார்த்தால், வரிசையில் நிற்பவர்கள் ஏதோ ஒரு பண்டத்தை வாங்கிக் கொண்டு சென்றார்கள். வரிசை இன்னும் கிட்டே சென்றபோது அந்தச் சிறு கடையின் உள்ளே பெரிய வாணலியில் ஏதோ சுட்டுக் கொண்டு இருந்தனர்.  சட்டியிலிருந்து எடுக்க எடுக்க சுடச்சுட வாங்கிக் கொண்டு போனார்கள்.

லீ  இன்னும் வந்து சேராமலேயே, என் முறை வந்துவிட்டது. அருகில் பார்த்தபோது  நம்மூர் தவளை வடை போன்று ஒன்றை எண்ணெயில் பொரித்துக் கொண்டிருந்தனர். ஆனால் அது நல்ல அடர்ந்த பிரௌன் கலரில் இருந்தது. நான் அந்தக் கடைக்காரப் பெண்ணிடம் ஏதோ கேட்க, அவள் சொல்ல முயல ஒன்றும் புரியாமல் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து நின்றேன். அதற்குள் என் பின்னால் நின்ற நீண்ட வரிசையில் சலசலப்பு   எழுந்தது.
சைகையில் நாலு கொடு என்று சொல்லிவிட்டு, எவ்வளவு  என்று தெரியாததால் வாலட்டிலிருந்து கொஞ்சம் பணத்தை எடுத்துக் கொடுத்து, மீதம் கொடுத்ததை எடுத்துக் கொண்டு நகர்ந்தேன்.  

பக்கத்திலிருந்த தியேட்டரின் உயரமான படிகளிலிருந்து லீ இறங்கி ஓடி வந்தான். அவனை நான் முறைக்க அவன் "சாரி டிக்கட்டை பேரம்பேசி வாங்கி வந்தேன்" என்றான்.
"அதைவிடு இது என்ன பண்டம், ஒண்ணுமே சொல்லாமல் போயிட்டியே".
“இதற்குப் பெயர் ?&!!@”
வாயில் நுழையும் பண்டங்களுக்குக்கூட வாயில் நுழையாத பேர்களை ஏன் வைக்கிறார்களோ என்று நொந்து கொண்டே, “சரி பரவாயில்லை , இந்தச் சுருக்கமான பண்டத்திற்கு ஏன் இவ்வளவு பெருக்கமான வரிசை ?”.
“இது சீனப் பேரரசர்கள் மற்றும்  அரச குடும்பத்தினர் மட்டுமே சாப்பிட்ட பண்டம். இது இப்போது பொது மக்களுக்கும் கிடைப்பதால் இவ்வளவு கூட்டம், சரி சரி சீன ஷோவுக்கு நேரமாச்சு ஓடு. நாளைக்காலை 9 மணிக்கு வருகிறேன்”.
உடனே அவனுக்குச் சேர வேண்டிய 160 யுவானைக் கொடுத்தேன். கையில் கொடுத்த டிக்கட்டில் விஐபி 220 யுவான் என்று போட்டிருந்தது.
“ஐயையோ எனக்கு எதற்கு விஐபி டிக்கட் வாங்கினாய் இது ரொம்ப அதிகம்”.
“கவலைப்படாதே இது விஐபி டிக்கட்தான். ஆனால் நீ  60 யுவான் கொடுத்தால் போதும்”
“என்னோட கைட் லைசென்ஸைக் காட்டினால் எனக்கு நல்ல டிஸ்கவுன்ட்  கொடுப்பார்கள்” என்றான்.
220 யுவான் டிக்கட் ,60 யுவானுக்கு கிடைக்கிறது என்பதை நம்ப முடியாமல், சீனாவில் எதுவும் நடக்கும் என்று நினைத்தேன். அந்த டிக்கட்டை வாங்கிக் கொண்டு அவனிடம் விடைபெற்றுக் கொண்டு ஷோவுக்கு நேரமாகிவிட்டதால் ஓடி  தியேட்டரில் நுழைந்தேன்.

விஐபி டிக்கட்டை கையில் வைத்துக் கொண்டு, "ஆஹா நானும் விஐபிதான், நானும் விஐபிதான்”  என்று சொல்லிக் கொண்டே உள்ளே நுழைந்தால் ஒரே இருட்டாக இருந்தது.கொஞ்ச நேரத்தில் கண்கள் பழகிவிடதியேட்டரின் பின்புறம் காலியாக இருந்தது. முன்புறத்தில் சிலர் உட்கார்ந்திருந்தனர். அதற்குள் சீனப்  பணியாளன் விரைந்து வந்து நம்மூர் போலவே டார்ச் அடித்து டிக்கட்டைப் பார்த்தான். நானும் நெஞ்சை நிமிர்த்தி பெருமையுடன் பார்த்தேன். ஆனால்  நான் எதிர்பார்த்த விஐபி டிரிட்மென்ட் ஒன்றும் கிடைக்கவில்லை. அலட்சியமாக எங்கேயாகிலும் உட்காரலாம் என்றான். நகர்ந்து முன்னால் சென்றால் சில முன்வரிசைகள் நிரம்பியிருக்க, காலியாக இருந்த ஒரு இருக்கையில் அமர்ந்தேன். என் முன்னால் எல்லா இருக்கைகளும் நிரம்பியிருக்க என் பின்னால் எல்லா இருக்கைகளும் அதாவது முக்கால் வாசி தியேட்டர் காலியாகத் தான் இருந்தது. என் பக்கத்திலும் இருபுறமும் ஒருவருமில்லை. ஆஹா  விஐபி கீட்டேன் என்று என்னை நானே தேற்றிக் கொண்டேன். ஒருவேளை நன்றாய் இருக்காது என்பதால் கூட்டம் இல்லையோ என்று  நினைத்து சிறிது கலக்கமாய் இருந்தது.

சாவகாசமாக உட்கார்ந்து அந்தப்பண்டத்தை எடுத்து சிறிது கடித்தேன். இலேசான இனிப்புடன் இருந்தது. என்னைப்போன்ற சுகர் ஆட்களுக்கு நல்லதுதான் என்று நினைத்தேன். ஆனால் அந்த எண்ணெய் வாசனை ஒரு மாதிரி இருந்தது. இருந்தாலும் பரவாயில்லை என்று அடுத்த கடி கடித்தபோது அந்த எண்ணெய் நெடி  நாசி, நாக்கு, இரண்டையும் தாக்க, அவசரமாக வாந்தி வந்தது. அதோடு சாப்பிடுவதை நிறுத்திவிட்டு, “அடச்சீ இதைச் சாப்பிடுவதற்கா 40 நிமிடம் லைனில் நின்றேன். இதுக்குத்தானா இவ்வளவு நீண்ட வரிசை. இந்த சீன அரச வம்சத்தின் டேஸ்ட் இவ்வளவுதானா?”, என்று நினைத்தேன்.  வாயில் நுழையும் பண்டம் என்று நினைத்தது தப்புதான் . 


சிறிது நேரத்தில் விளக்குகள் அணைய, தியேட்டரின் பிரமாண்ட திரைகள் உயர, படை வீரர்கள் முதலில் அணிவகுத்து வந்தனர். அவர்களைத் தொடர்ந்து வாத்தியக்காரர்கள் வந்தனர். அவர்கள் பின்னால் ஏராளமான மின்னலடிக்கும் அப்சரஸ்கள் வர, தொடர்ந்து பல்லக்கு போன்ற ஒன்றில் சீனப்பேரரசர் உட்கார்ந்து வந்தார். உண்மையிலேயே ஒரு ராஜபவனி போல் இருந்தது.மேடை அமைப்பு, ஒளி ஒலி அமைப்புகள் பிரம்மாண்டமாக இருந்தன.


ராஜபவனி ராஜதர்பாரில் முடிய, பேரரசர் முன்னால் கலைநிகழ்ச்சிகள் ஆரம்பித்தன. அருமையான சீன ஆப்பரா நடனம் ஒன்று நிகழ்த்திக்காட்டப்பட்டது. ஆடிய ஒரு 50க்கு மேற்பட்ட பெண்களும், ஒரே மாதிரி உடையணிந்து தலை அலங்காரங்கள் செய்து, ஒரே உயரத்தில் மட்டுமல்ல ஒரே மாதிரி இருந்தனர். எந்த வித்தியாசமும் இல்லை.

அது முடிந்து, அக்ரோ பேட்டிக்ஸ், ஜிம்னாஸ்டிக் மற்றும் சாகச நிகழ்ச்சிகளும் ஒவ்வொன்றாய் நடந்தன. கண்களைக் கவரும்  அந்த நிகழ்ச்சிகள், ஒரு சர்க்கஸ் கலை நிகழ்ச்சிகள் மேடையில் நடப்பது போல் இருந்தன. வயிற்றின் உள்ளே கேட்ட சத்தம் சாப்பிட்ட சிறிதளவு பண்டத்தாலா இல்லை மின்னல் வேக சாகச  நிகழ்ச்சிகளைப் பார்த்ததாலா என்று தெரியவில்லை.
 

பெண்கள் மட்டுமல்ல ஆண்களின் உடம்பும் வில்லாய் வளைந்தது . ஆஹா சீனர் ஏன் ஜிம்னாஸ்டிக்கில் அவ்வளவு மெடல்கள் வாங்குகிறார்கள்  என்பதின்  காரணம் அன்றுதான் விளங்கியது. இவர்களுக்கு எலும்பே இல்லை என்றும்  சொல்லலாம்.
ஒவ்வொரு காட்சியும் பிரமாண்டமான ஒளி, ஒலி அமைப்புடன் இருந்ததோடு, ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் நடுவில் எந்த இடைவெளியும் இல்லாமல் அதற்கென ஒரு குழு அதிவிரைவாக செயல்பட்டது. இரண்டு மணி நேர நிகழ்ச்சி நன்றாக முடிவடைய, இறுதியில் சீனப் பேரரசர் தன் மனைவியுடன் வந்து கைகாட்டி வழியனுப்பி வைத்தார். ஆஹா நல்ல நிகழ்ச்சிதான் , பீஜிங்கிற்கு வரும் நண்பர்கள் இதனை தவற விட வேண்டாம்.    
Image result for chinese Emperor in acrobatics show beijing

                   
வெளியே வந்து ஹோட்டல் அட்ரஸைக் காண்பித்து, ஒரு டாக்சியில் வந்து சேர்ந்தேன். ஜோஹனா சிரித்தவாறு வரவேற்றாள். அக்ரோபேட்டிக் ஷோவுக்கு சென்று வந்ததை சொன்னேன். “ஓ நான் டிக்கட்  கொடுத்திருப்பேனே”, என்று அதே 220 விஐபி டிக்கட் எடுத்துக் காண்பித்தாள். எவ்வளவு என்று கேட்டேன் 40 யுவான் என்றாள். அட அநியாயமே, இது என்ன ஒவ்வொரு முறையும் எனக்கு இப்படியே நடக்குது என்றெண்ணி சோர்ந்து  உட்கார்ந்தேன்.

அப்பொழுது தான் அந்தப்பண்டம் நியாபகம் வர, பண்டத்தைக் காட்டி எடுத்துக் கொள்ளச் சொன்னேன். “நோநோ  நீ சாப்பிடு, நியுயார்க்கிலிருந்து வந்திருக்கிறாய் கிடைக்காத பண்டம்”, என்றாள். நான் சாப்பிட்டுவிட்டேன் , இது உனக்காக வாங்கினேன்”, என்றேன்.

ஜோஹனா கண்கள் விரிய, முகம் மலர பெற்றுக் கொண்டு மூன்று முறை நன்றி சொல்லிவிட்டு உடனே எடுத்து சாப்பிடவும் ஆரம்பித்தாள்.  எனக்கு மீண்டும் வயிற்றைப் பிரட்ட ரூமுக்கு ஓடினேன்.

தொடரும்.


7 comments:

  1. 40 நிமிஷம் வரிசைல நின்னு வாங்கியது நல்லா இல்லையா.... அடக் கொடுமையே....

    ReplyDelete
  2. நன்றி வெங்கட் நாகராஜ்.

    ReplyDelete
  3. Adei Alfi up to last u didn't tell the name of the sweet.ok enjoyed your self ha.

    ReplyDelete
  4. Adei Alfi up to last u didn't tell the name of the sweet.ok enjoyed your self ha.

    ReplyDelete
    Replies
    1. தெரிஞ்சுக்கிட்டா தெனாவுட்டு பண்றேன் ராஜா .

      Delete
  5. கலை நிகழ்ச்சிப் படங்கள் அற்புதம்
    வாயில் நுழைவதன் பெயர்
    வாயில் வராததை மிகவும் இரசித்தோம்
    வாழ்த்துக்களுடன்...

    ReplyDelete