Showing posts with label சிறுகதை. Show all posts
Showing posts with label சிறுகதை. Show all posts

Thursday, November 16, 2017

பரதேசியும் கொரியப்பெண்ணும்!!!!!!

Related image
Not this girl
"செசமே பேகல் டோஸ்ட் வித் பட்டர்?" என்று அந்தப் கொரியப் பெண் கேட்டு என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தினாள்.
          2000-ஆவது ஆண்டு நான் நியூயார்க்குக்கு வந்த புதிது. கம்ப்யூட்டக் கம்ப்யூட்டர்ஸ் என்ற கம்பெனியில் மனித வளத்துறையில் வேலை. நான் அப்போது தனியாகத்தான் இருந்தேன். என் குடும்பம் என்னுடன் இணைந்து கொண்டது 2001-ஆவது ஆண்டு செப்டம்பர் முதல் வாரத்தில் தான். அதுவரை திருமணமான பேச்சுலர் வாழ்க்கை. கம்ப்யூட்டக் 5-ஆவது அவென்யூவில் எம்ப்பயர் ஸ்டேட் பில்டிங் அருகில் இருந்தது. 32 மற்றும் 31ஆவது தெருவுக்கு நடுவில் உள்ள கட்டிடத்தின் ஐந்தாவது மாடி. சப்வேயில்  இறங்கி 32 -ஆவது தெரு வழி நடந்து 5-ஆவது அவென்யூவில் வலது புறம்  திரும்பினால் அந்தக்கட்டிடம் வரும்.
Related image

          32-ஆவது தெரு பிரட்வேயில் இருந்து 5-ஆவது அவென்யூ வரை உள்ள பகுதி 'கொரியன் வழி' (korean way) என்றழைக்கப்படுவதை நான் முன்னமே உங்களுக்கு சொல்லியிருக்கிறேன். அதில் ஒரு கட்டிடத்தின் உள்ளே எலிவேட்டருக்குப்  போகும் வழியில் ஒரு கடை. பேகல், சாண்ட்விச், காஃபி, டி மற்றும் குளிர்பானங்கள் விற்கும் மிகச்சிறிய கடை, ஒரு 50 சதுர  அடி  இருக்கும். அங்கே எப்போதும் புன்னகை மற்றும் சுறுசுறுப்புடன் ஓனராக கொரியப்பெண் ஒருவள், பேகல் சாண்ட்விச் செய்து கொடுக்க ஓரத்தில் ஒரு ஸ்பானிய பையன், உள்ளே போனால் மக்களுக்கு வழிவிட்டு எதிர் சுவரோரம் நிற்கும் வாடிக்கையாளர்கள். அந்தச்சிறிய இடத்தில்  வியாபாரம் காலை வேளைகளில் மிகவும் சுறுசுறுப்பாக நடக்கும்.
Related image
Sesame Bagel
          அங்கே பேகல் வகைகள் ஒரு கண்ணாடிப் பெட்டியில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். பிளைன், எவ்ரிதிங், ரெய்சின், செசமே  என்று பலவகைகள் இருக்கும். முதன் முதலில் என்ன பேகல் வேண்டும் என்று கேட்கும் போது திக்குமுக்காடி எனக்குத் தெரிந்த மாதிரி இருந்த செசமே அதாவது எள் தூவிய பேகலை கை காண்பிக்க, "டோஸ்ட்? என்று கேட்கும் போது ஆமாம் என்று சொல்லி, கிரீம் சீஸ், ஜெல்லி அல்லது பட்டரா? என்று கேட்கும் போது எனக்குத் தெரிந்த பெயரான 'பட்டர்' என்று சொல்லி ஆர்டர் செய்தேன்.  
          என் முறை வந்து அந்த ஸ்பானிய பையன் என்னைப் பார்த்து முறுவலித்துவிட்டு உறை போட்ட கையில் செசமே பேகலை எடுத்து இரண்டு ஓரங்களை வெட்டிவிட்டு நீளமான பிரட் கத்தியால் இரண்டாக வெட்டிப் பிளந்து அங்கேயிருந்த சிறிய கிரில்லில் வைத்தான். சிறிது நேரம் கழித்து வெளியே எடுத்த பேகலில் லாவகமாக பட்டரை இருபுறம் தடவி, இரண்டு அரை வட்டங்களையும் இணைத்து ஒரு பட்டர் பேப்பரில் வைத்து மீண்டும் மேலிருந்து 2-ஆக வெட்டி கொரியப்பெண்ணிடம் கொடுக்க அதனை ஒரு சிறிய பழுப்பு நிற கவரில் போட்டு கூட 2-3 நாப்கின்களை வைத்து காஃபி டீ? என்று கேட்க, இல்லை இது போதும் என நான் சொல்ல, 75 சென்ட்ஸ் என்றாள்.
Related image
Add caption
          ஆஹா 75 சென்ட்டில் ஒரு காலை உணவா? என்று ஆச்சர்யப்பட்டு அதனை வாங்கிக் கொண்டு அலுவலகத்தில் சென்று கம்ப்யூட்டரை ஆன் பண்ணி உட்கார்ந்து சிறிது எடுத்துக் கடித்துப் பார்த்தேன். உருகிய பட்டரில் சிறிதே கருகிய அந்த பேகல் மொறுகிய நிலையில் நாவில் பட்டு இளகியது. சுவை அபாரமாக இருந்தது. ஒன்று சாப்பிட்டால் மதியம் 3 மணி வரைக்கும் பசி உம்ஹிம். அதன்பின் அதே பழக்கம் தினமும் தொடர்ந்தது. அதே செசமே பேகல் டோஸ்ட் வித் பட்டர். சில சமயங்களில் மற்றவற்றை முயற்சி செய்து பிடிக்கவில்லை. எனவே என்னைப் பார்த்ததும் அந்தக் கொரியப் பெண் என்னைப் கேட்காமலே "செசமே பேகல் டோஸ்ட் வித் பட்டர்" என்று சொல்லிவிடுவாள்.
          இது கிட்டத்தட்ட ஒரு வருடம் தொடர்ந்தது.
(“டேய் சேகர் , எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் , நீ ஒரு வருடம் அந்தக்கடைக்கு திரும்ப திரும்ப போனது பேகளின் ருசிக்காகவா  இல்லை  அந்த கொரியப்பெண்ணைப்பார்க்கும் குஷிக்காகவா தங்கச்சி  வேற    அப்போது  உன்கூட இல்லை” .)
இந்த மகேந்திரன் தொல்லை தாங்க  முடியலை சாமி, அவனை கண்டுக்காதீங்க மக்களே.
அதன்பின் என் மனைவி மக்கள் வந்தபின் அந்தப்பழக்கம் மாறிப்போய் காலையில் இட்லி, தோசை, உப்புமா, பொங்கல் என்று ஆகிப்போனது. சில வருடங்கள் தொடர்ந்த இந்தப்பழக்கம் பின்னர் உடலில் இனிமை கூடிப் போனபோது கைவிடப்பட்டு தினமும் ஓட்மீல் என்று பரிணாம(?) வளர்ச்சியடைந்து கடந்த மூன்று நான்கு  வருடங்களாக இது தொடர்கிறது.
          என் மனைவியை எழுப்பாமல் நானே எழுந்து ரெடியாகி ஓட்மீல் பாக்கெட்டைப் பிரித்து ஒரு சிறிய பாத்திரத்தில் நீர் ஊற்றி வைத்து மைக்ரோ ஓவனில் ஒன்றரை நிமிடம் வைத்தால் என் காலை உணவு ரெடி.
          கடந்த திங்கள்கிழமை காலை எழுந்து பார்த்தால்  மைக்ரோவேவ் ஓவன் வேலை செய்யவில்லை. கடந்த ஆண்டுதான் கிச்சனை ரெனவேட் செய்யும்போது கேபினட்டில் பொருந்தும்படி குக்கிங் ரேஞ் மேல் GE  ஓவன் ஒன்று பொருத்தினோம். சரியாக ஒரு வருட வாரன்டி முடிந்தவுடன் தன் கடமை முடிந்துவிட்டது போல் அது வேலை செய்ய மறுத்துவிட்டது. அதனை ரிப்பேர் செய்யும் செலவுக்கு புதிதாக ஒன்று வாங்கிவிடலாம் என்று முடிவு செய்தோம்.
ஆனால் அது வரை காலை உணவுக்கு வழி? பழைய பேகல் ஞாபகம்வர இப்போது வேலை செய்யும் இடத்திற்கும் பக்கம் என்பதால் அவசரமாகக் கிளம்பி மேன்ஹாட்டன் வந்து சேர்ந்தேன். அந்தச் சிறிய கடை இருக்கிறதோ இல்லையோ என்று நினைத்துக் கொண்டு அங்கே போனால், அந்தக் கடை அங்கேயே இருந்தது. அளவில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் ஸ்பானிய பையனுக்குப் பதிலாக அந்தக் கொரியப் பெண்ணே சாண்ட்விச் பகுதியில் நிற்க, அவளுடைய தங்கை போன்ற ஒரு பெண் கல்லாவில் நின்றிருந்தாள்.
அந்தக் கொரியப் பெண் 17 வருடத்திற்குப் பின்னரும் எந்த மாற்றமும் இல்லாமல் அதே புன்னகையுடன் அப்படியே இருந்தது இன்னுமொரு ஆச்சரியம். இந்த உலகில் தோற்றம் மாறிப்போனது நான் மட்டும்தானா?
“இல்லடா சேகர் நான்தான் போனதடவை நீ வரும்போது பார்த்தேனே நீயும் அப்படியே தாண்டா இருக்கிறாய்”.
(மறுபடியும் மகேந்திரன் போலத் தெரியுது. ஹலோ நண்பர்களே நான் தலைக்கு ஏன் மீசைக்கும் சேர்த்து கறுப்புச் சாயம் அடிப்பதை அவனிடம் சொல்லிராதீங்க ஓக்கே?)
அதைவிட ஆச்சர்யம் என்னவென்றால், “என்னைப் பார்த்தும் “செசமே பேகல் டோஸ்ட் வித் பட்டர்” என்று சொன்னதுதான். என்னவொரு ஞாபக சக்தி இத்தனை வருடங்கழித்தும் மறக்க வில்லையே.
“ஆமாம் என்று சொல்லி “அன்யஹாசியோ” என்றேன். இப்போது அவளுக்கு ஆச்சரியம் வந்தது. கொரிய பாஷையில் முகமன் கூறும் வார்த்தை அது. பேகல் 75 சென்ட்டிலிருந்து 1.25 ஆகியிருந்தது. 17 வருடத்தில் அப்படி ஒன்றும் கூடிவிடவில்லை. வாங்கி விட்டு “கம்சாமிடா” என்றேன். நன்றி என்று அர்த்தம். அவள் ஆச்சர்யத்தில் வாய் பிளக்க நான் புன்னகையுடன் வெளியே வந்தேன். அலுவலகம் சென்று சூடான பேகலை அப்படியே வாயில் வைக்க, உருகிய பட்டரில் சற்றே கருகிய பேகல் மொறுகிய நிலையில் வாயில் இளகியது.

(பின் குறிப்பு 2 மணி நேரம் கழித்து சட்டென ஞாபகம் வந்து சுகர் டெஸ்ட் செய்தால் அளவு எகிறி கூடிப்போய் கும்மாளமிட்டது  )

.

Thursday, October 19, 2017


பொடிதோசையும் முடிதோசையும் !!!!!!!!!!!!!

Related image

            "அத்தான், இன்னிக்கு ராத்திரிக்கு தோசை வேணுமா? சப்பாத்தி வேணுமா?”
"அத்தானா உண்மையிலேயே உன் மனைவி உன்னை அப்படிக்   கூப்பிடுவாங்களா ?" என்று நீங்கள் கேட்கும் குரல் காதில் விழுது. உண்மைதாங்க, அப்படித்தான் அவள் என்னைக் கூப்பிடுவாள். "அப்படின்னா உன் மனைவி உனக்கு சொந்தமா? என்று கேட்டால், "திருமணத்திற்குப் பிறகுதான் சொந்தமானாள்னு சொல்வேன். “அப்ப எப்படி அத்தான்னு கூப்பிடுறாங்க ?". சொல்றேன் சொல்றேன். கல்யாணமான புதுசுல நடந்த உரையாடலை இங்கே தர்றேன்.
          "ஏங்க நான் உங்களை எப்படிக் கூப்பிடுறது".
"ஏன் ஆல்ஃபின்னே கூப்பிடு இல்லை சேகர்னு கூப்பிடு". 
          “பேர் சொல்லிக் கூப்பிடக் கூடாதுன்னு எங்கம்மா சொன்னாங்க” (சத்தியமா நம்புங்க, இது 19ஆவது நூற்றாண்டில நடக்கல 90களில் நடந்தது)
          “உங்கம்மா உங்கப்பாவை எப்படிக்கூப்பிடுவாங்க?”  
          "அத்தான்னு கூப்பிடுவாங்க ஏன்னா அவங்க மாமன் மகன் அத்தை மகள்னு உறவு".
          “நானும் அப்படியே கூப்பிடட்டுமா?”
“ சரி அப்படியே கூப்பிடு”.
          ஆனால் அத்தான்னா என்னன்னு இன்னிக்கு வரைக்கும் அவளுக்குத் தெரியாது. அது ஒரு பேர் போல கூப்பிடுவா. அவள் அத்தான்னு என்னைக் கூப்பிடுவதைப் பார்த்து அவளைக் கேலி செய்யாத ஆட்களே இல்லை. சரி கிளைக்கதைக்கு போயிட்டேன், மெயின் கதைக்கு வருவோம்.
"அத்தான், இன்னிக்கு ராத்திரிக்கு தோசை வேணுமா? சப்பாத்தி வேணுமா?”
          “இது என்ன கேள்வி, தோசைதான் வேணும்”.
          இந்தக் கேள்வியை உங்கள்ட்ட கேட்டாலும் பெரும்பாலானோர் தோசைன்னுதான் பதில் சொல்வீங்கன்னு எனக்குத் தெரியும்.  நமக்குன்னு சில ஸ்டாண்டர்டு பதில் இருக்கில்லியா?
          இட்லியா தோசையா?ன்னா தோசை. சப்பாத்தியா பூரியா?ன்னா பூரி, மட்டன் பிரியாணியா சிக்கன் பிரியாணியா?ன்னு கேட்டா மட்டன் பிரியாணி. சட்னியா சாம்பாரான்னு கேட்டா மட்டும் ரெண்டும்னு சொல்வோம். வடையும் இருந்தா உத்தமம்னு நெனப்போமா இல்லியா?
          நாக்கு வளர்ந்த சமூகம் நம்ம தமிழ்ச்சமூகம். சுகர் வளர்த்த சமூகமும் நாம்தான்.
Image result for podi dosa images
Podi Dosai
           “தோசை வேணுமா சப்பாத்தி வேணுமா?”ன்னு கேட்டா, “இது என்ன கேள்வி தோசைதான் வேணும்”,னு சொன்னேன். “அப்படியே முடிஞ்சா, நீ மனசு வச்சா நீயே பக்குவமா அரைச்ச மிளகாய்ப் பொடியை தோசை வேகும்போதே அப்படியே மேலே தூவி முருகலா போட்டுரு”,ன்னு சொன்னேன்.
          “நாக்கு வக்கனையா கேட்குமே”, என்று முனகிலும், நான் சொன்னபடியே போட்டுக் கொண்டு வந்தாள்.  
          முதல் விள்ளவிலேயே நீளமாய் ஒரு முடி வந்தது. எனக்கு உடனே கோபம் வந்தாலும், அதை அடக்கிக் கொண்டே, “ரூத், பொடி தோசை கேட்டா முடி தோசை தர்றயே", ன்னேன். “எடுத்துப் போட்டுட்டு சாப்பிடு”,ங்கன்னாள்.
          முன்னெல்லாம் சாரி சொல்லிட்டு வேற தோசை கொடுப்பாள், பயப்படுவாள். இப்பதான் 25 வருஷம் ஆயிருச்சே எல்லாமே மாறிப்போச்சு. அதோடு முடி இருந்தா அன்பு அதிகம்னு ஒரு தடவை சொன்னாள். அட அன்புக்கு உயிரைக் கொடுப்பாங்கன்னு சொல்வாங்க. நீ அன்புக்காக  ______ கொடுக்கிறியேன்னு சொன்னதில் இருந்த அவள்  அப்படிச் சொல்வதை நிறுத்திட்டா.


          ஆனாலும் சொன்னேன், “சீக்கிரமா கண்ணாடி போடணும் உனக்கு பாத்துச் செய்”,னு சொன்னேன்.
                    அன்று இரவு ஹீரோடாக்கீசில் தீபாவளி வெளியீடாக ஜோதிகா நடித்த "மகளிர் மட்டும்" படம் பார்த்தோம். அதில் ஒரு சீன் வந்தது. ஹாஸ்டலில் இருந்து ஒண்ணாகப் படித்த மூன்று தோழிகளை அவர்களில் ஒருவரின் மருமகளான ஜோதிகா ஒன்றிணைத்து ஒரு மூன்று நாள் ஒன்றாக இருக்க விடுவார். அதில் பானுப்பிரியாவின் அரசியல் கணவனின் மகன் தன் கூட்டாளிகள் மற்றும் ஆயுதங்களுடன் அவர்களை தேடும்போது, பார்டரில் இருக்கும் ராணுவத்தில் மாட்டிக் கொள்வான். பெண்கள் ராணுவப்பிரிவின் பொறுப்பில் வைத்திருப்பார்கள்.
          அப்போது அவனுக்கும் தோழர்களுக்கும் உணவு கொடுக்கும் போது  பானுப்பிரியாவின் மகன் உணவில் ஒரு முடி இருக்கும். இதுவே அவன் வீடாக  இருந்திருந்தால் இந்நேரம் தட்டுபறந்திருக்கும் என்பதையும் காண்பிப்பார்கள்.
          அப்போது உயர் பெண் ராணுவ அதிகாரி, அவனிடத்தில் வந்து, “நீ நினைப்பதையும் வீட்டில் செய்ததையும் என்னால் ஊகிக்க முடிகிறது. வீட்டில் பெண்கள் இருந்தால் இது சகஜம்தான். இனிமேல் உணவில் முடி இருந்தால் அதனை எடுத்துப்போட்டுவிட்டு சாப்பிடனும் என்ன?”, என்று சொல்லி உணவில் முடியைப் பார்க்கும்போது இது நினைவில் இருக்கட்டும் என்று சொல்லி தலையில் நறுக்கென்று ஒரு குட்டு வைப்பார்.    இதனை நாங்கள் இருவரும் பார்த்துக் கொண்டிருந்தோம். உடனே நான் என் மனைவியைப் பார்க்க அவள் என்னை முறைக்க,நான் உடனே என் கைகளால் தலையை மூடிக்கொள்ள அவள் அடக்க முடியாமல் சிரித்தாள்.
          நல்லவேளை குட்டு எதுவும் விழவில்லை. வீட்டில் உணவில் முடியிருந்தால் எடுத்துப் போட்டுவிட்டு சாப்பிட வேண்டியதுதான் வேறு வழியில்லை மக்களே.
-முற்றும்.
பின்குறிப்பு # 1:
நண்பர்களுக்கு தீபாவளி வாழ்த்துக்கள். வரும் சனிக்கிழமை நியூயார்க் தமிழ்ச்சங்கம் நடத்தும் தீபாவளி விழாவுக்கு செல்கிறேன் .நண்பர்கள் வந்தால் சந்திக்கலாம்.

 பின்குறிப்பு # 2 : நண்பர்களே நான் வரும் ரெண்டு வாரங்கள் ஜெர்மனி செல்ல விருப்பதால்   அக்டோபர் 23 முதல் நவம்பர் 03 வரை பதிவுகள் வராது .தயை கூர்ந்து பொறுத்துக்கொள்ளுங்கள் . ஜெர்மனியில் இருக்கும் நண்பர்கள் தொடர்பு கொள்ளுங்கள்.பெர்லினில் சந்திக்கலாம் .(alfred_rajsek@yahoo.com) .உங்கள் தொடர்ந்த ஆதரவுக்கும் அன்புக்கும் என்றென்றும்  கடமைபட்டிருக்கிறேன்.

Thursday, August 24, 2017

பரதேசியின் கபாலி ஸ்டைல் !!!!!!!!!!!!!

Image result for kabali rajini

அன்னைக்கு ஒரு நாள் காலையிலிருந்து நாடி அரிச்சிட்டே இருந்தது. டிரிம் பண்ணி சுத்தமா வைக்காட்டி தாடி அரிக்கும்னு கேள்விப்பட்டிருக்கேன். இது என்னாது நாடி அரிக்குதுன்னு ஒரே யோசனையா இருந்துச்சு. பாத்ரூம் போய் சோப்பு போட்டு கரகரன்னு தேய்ச்சி நல்லா குளிர்ந்த தண்ணிய முகத்தில அடிச்சு கழுவினேன். திரும்பவும் அரிக்க ஆரம்பிச்சிருச்சு. இது என்னடா சோதனைன்னு மறுபடியும் பாத்ரூம் போய் எல்லா லைட்டையும் போட்டு நாடியை உத்து உத்துப் பார்த்தேன். ம்ஹீம் அதே அசடு வழியும் மூஞ்சியைத்தவிர வேறு  ஒண்ணும் தெரியல.
என் சின்ன மகள் அபிஷா பக்கத்துல வந்து உட்கார்ந்து அவங்கம்மாகிட்ட ஏதோ கேட்டா. நான் வரட்டு வரட்டுன்னு எம்பாட்டுக்கு சொறிஞ்சிட்டு இருந்தேன். சொரிய சொரிய அதுல ஒரு சுகம் தெரிஞ்சிது. ஆகா நல்லாத்தானே இருக்குன்னு நெனைச்சிட்டு தொடர்ந்து  சொரிஞ்சிட்டிருந்தேன். ஒரு சமயம் மகள்  எரிச்சல் ஆகி, “என்ன டாடி என்ன பண்றிங்க”ண்ணு? முறைச்சா. என்ன இது கடவுளே? என் தாடியை  இல்லை இல்லை நாடியை நான் சொரிஞ்சா, டாடின்னு கூப்பிட்டு என் மக மிரட்டுகிறாளே? போடின்னு வேலையை பாத்துக்கிட்டுன்னு சொல்லிறலாமான்னு ஒரே ஆயாசமாக இருந்தது. ஆனாலும் சொரியறத  நிறுத்தாம நான் அவள்ட்ட "என்னவோ தெரியல காலைல இருந்து நாடில அரிக்குதுன்னு". சொன்னேன்.  
அவ உடனே ஐபோன்னுல இருந்த லைட்டை அடிச்சுப் பார்த்தா. ஐபோன்ல டார்ச்சு லைட்டு இருக்குன்னு சத்தியமா அன்னிக்குத்தாங்க தெரிஞ்சிக்கிட்டேன். 
என் மக என்னை டாடின்னு கூப்பிடுறது கொஞ்சம் கஷ்டமா இருக்குது. அப்பா அம்மான்னு கூப்பிட வச்சிருந்தா நல்லா  இருந்திருக்கும் . சின்ன வயலிருந்து டாடி மம்மின்னு கூப்பிட்டுப் பழகிட்டாங்க.. என்ன பன்றது நாட்டின் அருமையும், மொழியும் பெருமையும் எட்டாயிரம் மைல் கடந்து வந்தபின்னாலதான தெரியுது. "சொர்க்கமே என்றாலுமே அது நம்மூரு போல வருவா?” இந்த ஏக்கம் எனக்குத் தெரிஞ்சு இங்க இருக்கிற பல பேருக்கு இருக்கு. அந்த ஏக்கம் சில சமயங்கள்ள அதிகமாயிருச்சுன்னா வெளக்கென்னை குடிச்ச மந்தி மாறி முகம் ஆயிரும். “அப்ப ஏண்டா அங்க இருக்கிற, வந்திர வேண்டியதுதானே?”ன்னு நீங்க கேக்கிறது காதுல விழுகிது. அத ஏன் கேக்கறீங்க இது புலி வாலைப் பிடிச்ச கதை. வாலை விடுறது ரொம்பக் கஷ்டம். குறிப்பா நம்ம பிள்ளைக இங்க வளர்ந்துச்சுன்னா "அதெல்லாம் மறந்துறுங்க" டயலாக்தான்.
ஆனா அப்பப்ப அவங்களை அப்பா அம்மான்னு கூப்பிடச் சொல்வேன்.  'செளன்ட்ஸ் வியர்டு' என்று முணு முணுத்தாலும் சில சமயங்கள்ல கூப்பிடும் போது காதில் தேன் பாயுது. என் தம்பி குடும்பம் அத விட மோசம். அவன் பையங்க கூப்பிடுறது 'பப்பா மம்மா'. அதுக்கு டாடி மம்மியே தேவல. அந்தப் பசங்க அப்படிக் கூப்பிடும் போதெல்லாம் 'பப்பா மம்மா சச்சா' ன்னு ஒரு பாட்டு வேற ஞாபகம் வந்து தொலைக்குது .ஆமா என் தம்பி குடும்பம் இங்கதான் இருக்கிறாங்க. அதுமட்டுமல்ல என் மனைவியின் ரெண்டு தம்பிகளும்  குடும்பத்தோடு இங்கதான் கும்மியடிக்கிறாங்க. இப்படி என் கம்பெனி மூலமா வந்தவங்களையும் சேர்த்தா  மொத்தம எண்ணிக்கை  ஐநூறைத்தாண்டும்கிறதால  டிரம்ப் என்னைத் தேடுறாராம்.
சரி மறுபடியும் டிராக் மாறிட்டேன். என் மகள் லைட் அடிச்சுப் பாத்துட்டு, "ஒண்ணுமில்லே ரேஸர் இச் (Razor Itch or Razor Burns) வந்துருக்கு".
“அப்படின்னா”?
“ஷேவ் செய்ய ரேஸர் யூஸ் பண்ணும் போது இந்த மாதிரி வரும். ஆமா உங்க ரேஸர் பிளேடை எத்தனை நாள் யூஸ் பண்றீங்க?”
“ஐயையோ தெரியலயே. எனக்கு நினைவு தெரிஞ்ச நாள்ளயிருந்து”
“ என்ன சொல்றீங்க, எப்பத்தான் மாத்துவீங்க?”
“எப்ப ரொம்ப எரியுமோ, அப்பத்தான் மாத்துவேன்”.  
“நோநோ வாரம் ஒண்ணு மாத்தனும். மறக்காம மாத்தனும்"
 “ஒரு ரேஸர் குறைஞ்சது 5 டாலர் இருக்குமே. பட்ஜெட்ல கட் விழுமே”.  
“அப்ப முகத்துல கட் விழுந்தா பரவாயில்லையா?”
“நீங்களே பாருங்க”ன்னு லைட்டைப் போட்டு அவளோட கைக் கண்ணடியில காண்பிச்சா. அப்பத்தான் தெரிஞ்சது. நாடிக்கு கீழே கறுப்பு கறுப்பா திட்டுத்திட்டா இருந்தது.
“சரி இதுக்கு என்ன செய்யறது?”
“ஆலுவேரா போடனும், இருங்க”ன்னு சொல்லி ஆலுவேரா ஜெல்லைக் கொண்டு வந்து அவளே போட்டுவிட்டா.
அப்புறம் “ரேஸரை உடனே மாத்துங்க ஒரு 2 வாரம் ஷேவ் பண்ணாதீங்க”ன்னு சொன்னா. பரவாயில்லை நம்ம பசங்க நமக்கு அறிவுரை சொல்ற அளவுக்கு முன்னேறிட்டாங்கன்னு நெனச்சு பெருமையாக இருந்துச்சு. சொறிவதை தொடர, ஆஹா அருமையாகவும் இருந்துச்சு. 
Image result for ajith kumar
Ajith
அடுத்த நாள் ஷேவ் செய்யாம ஆஃபிஸ் போனேன். எல்லாரும் பாத்து "என்னா ஆல்ஃபி உடம்பு சரியில்லையான்னு" கேட்டாங்க. ஏன்னா எனக்கு நினைவு தெரிஞ்ச  நாள்ளலிருந்து நான் ஷேவிங் செய்யாம ஆஃபிஸ் போனதே இல்லை. வேற ஒண்ணுமில்ல வாழ்க்கையில சேவிங் (Saving) பண்ண முடியாட்டியும் (shaving)  ஷேவிங்காச்சும் பண்ணலாமேன்னுதான். கண்ணாடியில பாத்தா எனக்கே அடையாளம் தெரியல. ஒரே நாளில் கொஞ்சம் முள்ளு முள்ளா வந்துருச்சு. எனக்கே ஒரு ஆச்சரியம் என்னன்னா எல்லாமே வெள்ளையா  இல்லை. ஒரு மாதிரி ரெண்டும் கலந்துகட்டி  ஒரு சால்ட் பெப்பர் ஃபீலைக் கொடுத்துச்சு.
ஒரு அஞ்சு நாள் கழிச்சு ஆபிசில கேட்டாங்க, “என்ன  ஆல்ஃபி அஜீத் ஸ்டைலா”ன்னு . அன்று வெள்ளிக்கிழமை டிரஸ் டெளன் டே, ஜீன்ஸ், கேசுவல் ஷர்ட்டு, தாடின்னு எனக்கே கொஞ்சம் வித்தியாசமா இருந்துச்சு. கேட்க சந்தோஷமா இருந்தாலும் சீச்சீ ன்னு விட்டுட்டேன்.
அடுத்த நாள் சனிக்கிழமை என் நண்பன் என்னைப் ஃபேஸ் டைமில் பாத்துட்டு “என்னடா கபாலி ஸ்டைலா?”ன்னு கேட்டான் .பேசி முடிச்சிட்டு திரும்ப பாத்ரூம் போய் எல்லா லைட்டையும் போட்டுட்டு கொஞ்சம் உத்துப்பாத்தேன். ஒரு வேளை அப்படித்தான், இருக்கேனோன்னு, வெளியில கையை காலை உதறி ரஜினி ஸ்டைலில் நடந்து பாத்ரூம விட்டு வெளிய வந்தேன். வெளியே வரும்போது கையை கொஞ்சம் வேகமா ஆட்டிட்டேன் போல கை பட்டுனு கதவில் பட்டு உயிரே போயிருச்சு. அப்படியே கொஞ்ச நேரம் சோபாவில் உட்கார என் மனைவி, “ஏன் ஒருமாதிரி இருக்க என்ன ஆச்சு”?ன்னு கேட்டா? என்னத்த சொல்றது என்னோட ரஜினி ஸ்டைல் கையைப்பதம் பாத்துருச்சுன்னு சொல்லமுடியுமா?
Image result for o panneerselvam
OPS
அடுத்த நாள் சர்ச்சுக்குப் போனேன். என் தம்பி என்னைப் பார்த்துட்டு பதறிப்போய் ஓடி வந்து “என்னன்னே உடம்புக்கு என்ன?”ன்னு கேட்டான். அதுக்குள்ள பாஸ்டர் ஜான்சன் வந்து "என்ன இது OPS ஸ்டைலான்னு கேட்டதும் எனக்குத் தூக்கிவாரிப் போட்டுச்சு. அட இந்த ஆங்கில்ல நான் யோசிக்கவே இல்லையே. மனசு ஒரே  கலவரமாயிருச்சு. வீட்டுக்கு போனவுடனே முதல் வேளையா வலிக்குதோ அரிக்குதோ ஷேவிங் பண்ணனும்.
முற்றும்

   

Thursday, August 10, 2017

அமெரிக்க எலியும் பரதேசியின் கிலியும் !!!!!!!!!!!!!



ஒரு நாள் வெள்ளி மாலை ரிலாக்ஸ் செய்யும் தருணத்தில், நானும் என் மனைவியும் புதிதாக தரவிறக்கம் செய்யப்பட்ட “ஹீரோ டாக்கீஸ்” என்ற தளத்தின் மூலம் ஒரு தமிழ்த் திரைப்படத்தை பார்த்துக் கொண்டிருந்தோம். அப்போதுதான் அதனைப் பார்த்தேன்.
நான் நியூயார்க் வந்து வாழும் இந்த 17 வருடங்களில் பேச்சலராக (?)  தங்கியிருந்த முதல் வருடத்தை விட்டுவிட்டால், குடும்பம் வந்த பிறகு பேச்சிலர் (பேச்சு இலர்) ஆகி 2 வீட்டில் மட்டுமே வாடகைக்கு குடியிருந்து பின் 11 வருடமுன் நான் இப்போ குடியிருக்கும் வீட்டை வாங்கினேன்.
நான் இருந்த இரண்டாவது வீடு ஒரு மூன்று குடும்ப வீடு. அதில் முதல் தளத்தில் (இந்திய வழக்கின்படி கிரவுண்ட் ஃபிளோர்) எங்களுக்கு முன்னாலும் ஒரு தமிழ்க்குடும்பமே இருந்தது. எனவே எலிகளுக்கும் கரப்பான் பூச்சிகளுக்கும் பஞ்சமேயில்லை. மூணு நேரமும் ரொட்டியைத்தின்னு போரடிச்சுப்போய்  அவைகளுக்கு இந்திய அதுவும் தமிழ் உணவு ரொம்ப பிடிக்குமாம்.   ஹவுஸ் ஓனர் மிகவும் நல்லவர்தான். ஆனால் இந்தப் பிரச்சனையை அவரால் இறுதிவரை தீர்க்கமுடியவேயில்லை. வேற வழியில்லாமல் அவைகளையும் குடும்பத்தில் ஒருவராக சேர்த்துக்கொண்டேன்.
ஆனால் சொந்தமாக வீடு வாங்கியபின் இந்த எலி மற்றும் கரப்பான் பூச்சிகளை முற்றிலுமாக ஒழிப்பேன் என்று உளமாற உறுதி கூறுகிறேன் என்று எனக்கு நானே கூறிக்கொண்டேன்.ஊரில் இருக்கும்போதுகூட என் வீட்டில் தங்கியிருந்த  வேலைக்காரப்பெண் எவ்வளவு சொன்னாலும் கரப்பாண்பூச்சியை அடிக்க மாட்டாள் . ஏன்னு  கேட்டா அது லட்சுமியாம் . அப்புறம் லட்சுமியை துரத்திட்டேன் .ஆமாங்க அவ பேரும் லட்சுமிதான் .
அதே போல இரண்டு குடும்ப வீடு ( Two Family house) வாங்கியவுடன். (கற்பனையை ஓட விடாதீங்க, ஒண்ணு வாடகைக்கு விட). முதல் வேலையாக முதல் தளம், இரண்டாவது தளம் மற்றும் பேஸ்மென்ட் ஆகியவற்றில் ஆயிரம் டாலருக்கு மேல் செலவு செய்து எலி மற்றும் கரப்பான் பூச்சிகளை ஒழித்துக் கட்டினேன். அன்று முதல் இந்த 11 வருட காலங்களில் எலியும் இல்லை கரப்பானும் இல்லை.
கோடை காலங்களில் மட்டும் சிறு வகை பட்டுப் பூச்சிகள், எட்டுக்கால் பூச்சிகள் ஆகியவை தென்படும். அவற்றை அவ்வப்போது அகற்றிவிட்டால் போதும்.
images (19)

அதைப்பார்த்தேன்னு சொன்னேன்ல .இருங்க கதைக்கு வரேன். நாங்கள் பார்த்த அந்தப்படத்தின் பெயர் "என்னோடு விளையாடு". அந்தப்படத்தில் ஒரு காட்சி. சென்னையில் வேலைகிடைக்கும் தன் அண்ணணை அங்கு இருக்கும் தன் தோழியின் அறையில் தற்காலிகமாக தங்கிக் கொள்ளலாம் என்று அனுப்பி வைக்கிறார் ஒரு தங்கை. (நம் சென்னை இவ்வளவு முன்னேறி விட்டதுன்னு யாரும் என்னிடம் சொல்லவேயில்லை) பெண்களின் சகவாசம் பிடிக்காத (?). அந்தப் பையன் வேறு வழியின்றி (?) அங்கு தங்க, அவர்களுக்குள் அடிக்கடி முட்டிக் கொள்ளுகிறது. ஒரு கட்டத்தில் அந்தப்பெண் அவனை வெளியே போகப் பணிக்க அவனுடைய பையிலிருந்து ஒரு சுண்டெலி வெளியே ஓட அந்தப்பெண் அந்த எலியைப் பிடித்தால் மட்டுமே நீ வெளியேற வேண்டும் என்று சொல்லிவிடுகிறாள். இரவு முழுதும் கண்விழித்து எலியைப் பிடிக்க முயன்றும் அவனுக்கு ஆட்டம் காண்பிக்கிறது எலி.

mouse trap lures mouse through toilet paper tube to capture in bucket below

அதைப் பார்த்துக் கொண்டிருந்த ,சரியாக அதே சமயத்தில் ஏதோ ஒரு சிறிய வஸ்து கதவு வெளியாக சட்டென வீட்டினுள்ளே பாய்ந்தது. திடுக்கிட்ட நான் என் மனைவியிடம் "ஒரு சுண்டெலி உள்ளே வந்தது".
“என்ன சுண்டெலியா?”
“ஆம் நான் கண்ணால் பார்த்தேன்”.
“பிறகு காதலா பார்ப்பாங்க. ஆனா சுண்டெலி வர சான்சே இல்லை”.
“இல்லை நான் உறுதியாகச் சொல்றேன். அது சுண்டெலிதான்”.
“நானும் தான் பாத்தேன். அவ்வப்போது வரும் பெரிய சைஸ் எட்டுக்கால் பூச்சிதான் அது”.
“இல்லை சுண்டெலிதான்  ரூத்”.
“அது வேற ஒண்ணும் இல்லை படத்தில் சுண்டெலி ஓடுவதை பார்த்துவிட்டு உனக்கு பார்ப்பதெல்லாம் சுண்டெலி மாதிரி தெரிகிறது. முன்னெல்லாம் கனவுலதான் உனக்கு வரும். இப்ப என்ன நினைவிலேயே வந்துருச்சு”.
“கனவுல வர்றது உனக்கு, அது சுண்டெலி அல்ல பாம்பு”.
உண்மைதான். தப்பித்தவறி படத்திலோ டிவியிலோ பாம்பைப் பார்த்துவிட்டால் அன்று இரவு அவள் கனவில் பாம்பு கண்டிப்பாய் வந்து தூங்க விடாமல் செய்துவிடும். அதனால் பாம்பு சீன் வந்தால் சட்டென கண்ணை மூடிக் கொள்வாள்.
எனக்கும் சந்தேகமாய் இருந்தது. ஒரு வேளை சினிமாவில் பார்த்ததனால், வந்தது எலியென்று நினைத்து விட்டேனோன்னு ஒரே குழப்பமா இருந்துச்சு.
அப்புறம் மறந்துபோய் தூங்கிட்டோம். அடுத்த நாள் நான் ஆபிஸ் போனவுடன் என்  மகள் அனிஷா ஒரு டெக்ஸ்ட் அனுப்பியிருந்தாள் . 'ஐ சா தி திங்கி”   என்று. அப்புறம் போனில் கூப்பிட்டால் இரவு ஒரு எலி அவளை அவனுடைய ரூமில் முறைத்துப் பார்த்ததாகச் சொல்லி இரவெல்லாம் தூங்கவில்லை என்று சொன்னாள்.
அவளும் கற்பனை செய்கிறாளோ? என்று எண்ணி என் மனைவிக்கு போன் பண்ணி “எலியைப் பார்த்த கதையை மகளிடம் சொன்னியா?”, என்றேன். “இல்லையே பயப்படப் போறாங்கன்னு ரெண்டு பேர்ட்டயும் சொல்லலை”, என்றாள். அப்போதும் என் மனைவி நம்பவில்லை.
அடுத்த நாள் மாலை வழக்கம்போல் டிவி பார்த்துக் கொண்டிருக்கும் போது அதே எலி என்னை கிண்டலாகவும் என் மனைவியை முறைப்பாகவும் பார்த்துவிட்டு ஹாலில் கிராஸ் செய்து டைனிங் டேபிளின் அடியில் போனது .(பாருங்க எலிக்குக்கூட என்னைப்பாத்தா கிண்டலா இருக்கு).
அப்பத்தான் என் மனைவியும் நம்புனா.
இத யார்ட்டயாவது சொன்னா நம்புவாங்களா. ஏதோ எலிப்படத்தைப் பார்த்தாங்களாம். எலி உடனே அங்கேயும் வந்துருச்சாம். இப்படித்தானே நினைக்கிறீங்க. அதனாலதான் நான் யார்ட்டயும் சொல்லல. நம்பமாட்டிங்கன்னு எனக்குத் தெரியும்.
அன்றைய நாள் இரவு என் சின்னப்பொண்ணை அவளோடு ரூமில் காணோம். எங்கே என்று தேடினால் அவள் அக்காவோட ரூமுக்குப்போய் ரெண்டு பேரும் கொட்டக் கொட்ட முளிச்சிட்டு இருந்திருக்காங்க ராத்திரி பூரா. என்னன்னு கேட்டா? ராத்திரி எலி அவ ரூமுக்கு போய் உருட்ட அவளும் பயந்து போயிட்டா. எப்படிச் சொல்றன்னு கேட்டா ரூமுக்கு வெளியில இருந்து உள்ளேயிருந்த தேங்காய் எண்ணெய் பாட்டிலைக் காண்பிச்சா. எலி அதன் வெளி லேபிளைக் கறும்பி சுரண்டி போட்டிருந்தது.
உடனே முடிவு செய்தோம். நாளைக்கு  எலிப்பொறி வாங்கிட்டு வந்துறேன் என்று. இரவு எலி குளு (Glue) பட்டைகளை வைத்து மொத்தம் எட்டு இடங்களில் வைத்தோம். என் மனைவி சொன்னாள் எலிக்கு கருவாடு புடிக்கும். அதுக்காகவே வரும்னு சொல்லி தஞ்சாவூர்ல இருந்து எங்க பாஸ்டர் கொண்டு வந்த கருவாட கொஞ்சம் வைத்தாள். வீடு முழுதும் ஒரே நாத்தமா இருந்துச்சு. எப்படியோ சமாளிச்சு மூக்கை மூடிட்டே படுத்துத் தூங்கிட்டோம்.
அடுத்த நாள் காலைல எப்படியும் அது மாட்டிரும்னு  நெனைச்சு காலையில கொஞ்சம் சீக்கிரமா எழுந்து பார்த்தா ம்ஹீம் மாட்டவேயில்லை. சாயந்திரம் வந்து பார்த்தாலும் அது மாட்டல. என் சின்னப்பொண்ணு சொன்னா “இது அமெரிக்கன் எலி கொஞ்சம் சீஸ் வைச்சுப் பாருங்கன்னு சொன்னா”. அன்று இரவு கொஞ்சம் சீஸை கருவாட்டுப் பக்கத்தில் வச்சா என் மனைவி.
நாளைக்குக் காலையில தான் தெரியும், அந்த அமெரிக்கன் சுண்டெலி மாட்டுமா இல்லையான்னு.

முற்றும்

Thursday, July 27, 2017

மனது பலவீனமானவர்கள் இதனைப் படிக்க வேண்டாம் !!!!!

Image result for crowded E train car

எச்சரிக்கை 1: மனது பலவீனமானவர்கள், இரத்த அழுத்தம் உள்ளவர்கள் (கொஞ்சம் பார்டரில் இருந்தால் கூட) , எளிதில் உணர்ச்சி வசப்படுபவர்கள் மற்றும் 22 வயதுக்கு கீழே உள்ளவர்கள் இதனைப் படிக்க வேண்டாம் என எச்சரிக்கிறேன். (என்னடா பீடிகை பலமா இருக்கு?).
எச்சரிக்கை 2: எட்டாயிரம் மைல் தள்ளி வாழும் எட்டப்பன் மகேந்திரன் நடுநடுவே பிராக்கெட்டுகளில் என்னை கலாய்க்க வருவான். அவனைப் பொருட்படுத்த வேண்டாமென வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன்.

அவனை ஒரே அடியில என்னோட ஒன்றரை டன் வெயிட்டை,  ஒரு ஃபுலோவில் வந்துருச்சு ப்ரோ - இறக்கி நசுக்கிறனும்னு தோணுச்சு. மதுரைக்காரைங்களுக்கு ரத்தத்திலேயே கொஞ்சம் வீரம் ஒட்டிட்டு இருக்கும் . நியுயார்க்குக்கு வந்து 17 வருஷம் ஆகியும் அந்த மதுரை மண்ணோட  குணமும், வீரமும், ஆர்வக்கோளாறும் இன்னும் என்ட்ட  அப்படியே இருக்குன்னு நினைக்கிறேன்.( (எலேய் சேகரு இது உனக்கே கொஞ்சம் ஓவரா தெரியல ?).  
வீரத்தோடு கூட கொஞ்சம் விவேகமும் இருந்தா ரொம்ப நல்லதுன்னு சொல்வாய்ங்க. மதுரைக்காரைங்களுக்கு  விவேகத்தில் அந்த 'வி' யை மட்டும் தூக்கிட்டா வர்ற வேகம் மட்டும் கொஞ்சம் அதிகமாய் இருக்கும். என்னோட தினவெடுத்த தோள்களுக்கு இங்க வேலை இல்லாததால, புல்தடுக்கி கீழே விழுந்து தோள் உடைஞ்சு போனது பத்தி உங்கள்ட்ட ஏற்கனவே சொல்லியிருக்கிறேன்.  இன்னும் படிக்கலைன்னா  இந்த லிங்க்கை தட்டுங்க. http://paradesiatnewyork.blogspot.com/2015/05/blog-post_11.html (ஏண்டா புல்தடுக்கி விழுந்து சர்ஜரி ஆனப்புறம்தான தினவெடுத்தது உனக்கு ?)
எந்த ஒரு உடற்பகுதியையும் அடிக்கடி பயன்படுத்தினா அது கொஞ்சம்  பலமிழந்து போகும்ன்னு  சொல்வாய்ங்க. அப்படித்தான் என் கையும் காலும் கொஞ்சம் சின்னதாப் போச்சுன்னு நினைக்கிறேன். அதே மாதிரி ரொம்பப் பயன்படுத்தினாலும் ஓஞ்சு போயிரும்னு சொல்வாய்ங்க அப்படியும் வச்சிக்கலாம். (உன்னோட பிறவியே சித்துப் பிறவின்னு எனக்குத் தெரியும்டா).
அது தவிர எலி பிடிச்சு எலி பிடிச்சு என் வலது கை கட்டை விரல் பக்கத்துல கொஞ்சம் தேஞ்சு போச்சு. நந்தக்குமார்ட்ட சொல்லி ஒரு கார்ட்டிசான் கூட போனமாசம் போட்டுவிட்டார்.
Image result for girls in E train


எலி பிடிச்சுன்னு நான் சொன்னது என்னோட  ஆஃபிஸ் கம்யூட்டர் மவுசை. நந்தக்குமார் என்பது என்னோட நியுரோ சர்ஜன், ஈழத்தமிழர்.
அப்புறம் என்ன நடந்துச்சுன்னு சொல்றேன். கொஞ்சம்  பொறுமையாப்படிங்க.
சம்பவம் நடந்த(?) அன்று ஒரு திங்கள்கிழமை காலை. எப்பொழுதும் போல் கிளம்பி வேலைக்குச் செல்ல ஆயத்தமானேன். என்னோட தனிமூனான ஹனிமூன் மாதிரி அன்னைக்கும்  தனியாத்தான்  போனேன். (பின்ன ஆபிசுக்கு குடும்பத்தோடயா  போவே எலேய் வேணாம் எனக்கு வெயில் கொடுமையை விட உன்னோட கொடுமைதாண்டா பெரிசா இருக்கு)
பேயறைஞ்ச கதையைச் சொல்றேன் சொல்றேன்னு ஏமாத்திட்டு வர்ற தம்பி விசு மாதிரி நான் ஏமாத்த மாட்டேன். இந்த தனி மூனான என் ஹனிமூனைப்பத்தி அவசியம் சீக்கிரமாகவே சொல்லிறேன். இப்ப போன திங்கள் கிழமை என்ன நடந்ததுன்னு கொஞ்சம் விலாவாரியாச்  சொல்றேன்.
          இந்த திங்கள் கிழமை வேலைக்குபோவதும் வெள்ளிக்கிழமை வேலைக்குப் போவதும் ரொம்ப கொடுமைங்க. இரண்டு நாளும் எந்த வேலையும் நடக்கவும் நடக்காது. எந்த வேலையும் ஓடவும் ஓடாது, எந்த வேலையும் நகரவும் நகராது (அடேய் எல்லாமே ஒன்னுதான்ரா) .
கொஞ்சம் தூக்கக் கலக்கத்தில எப்படியோ கிளம்பி ரெடியாகி டாலர் கேபைப் பிடிச்சு சப்வேயில் உள்ளே நுழைஞ்சேன். ஒரு நீள இருக்கையிலே மொத்தம் ஆறுபேர் உட்காரலாம். நடுவில பிடிக்கறதுக்கு கம்பி ஒண்ணு டிவைடர் மாறி இருக்கிறதால, ஒவ்வொரு பக்கமும் மூணுபேர் உட்காரலாம் என்பது நியதி. ஆனா எப்பவும் ஆறுபேர் உட்கார முடியாது. ஒரு சமயம் ஒரு பகுதியில் ரெண்டு தொடை பெருத்தவர் அல்லது இடை பெருத்தவர்  உட்கார்ந்தா நடுவில யாரும் உட்கார மாட்டார்கள். உட்கார்ந்தா சட்னி என்பதால் நானும் அந்த ரிஸ்க் எடுக்க மாட்டேன். ஆனால் ஒரு பெரிய உருவம் இன்னொரு சிறிய நபர் இருந்தால் நடுவில் என்னை ஈஸியாக நுழைத்துக் கொள்வேன். இரண்டு சைடுகளிலும் உட்கார போட்டியிருக்கும். அது கிடைக்கவில்லையென்றால் அட்லீஸ்ட் நடுவில் உள்ள கம்பிக்குப்பக்கத்திலாவது  உட்கார நினைப்பார்கள். நினைப்பேன். இரண்டு பேருக்கு நடுவில் உட்காருவது ஒரு கிடுக்கிப்பிடி போல சிலசமயம் அமைஞ்சிரும்.
ஆனால் அன்றைய தினம் அப்படியில்லை. ஒரு விடலைப்பெண் ஒரு விடலைப் பையன். இரண்டு பேருமே ஆப்பிரிக்க அமெரிக்கர்கள். பொண்ணு அழகா இருந்தாங்கறத சொல்றது  இந்த இடத்தில தேவையில்லைன்னு நினைக்கிறன் . நடுவில் உட்கார அதுவும் நான் உட்கார தாராளமான இடம் இருந்தது. என்பதால் 'எக்ஸ்க்யூஸ்மி' என்று சொல்லிவிட்டு இரண்டு பேர் மேலும் படாமல் உட்கார முயன்றேன். அந்தப்பெண் உடனே நகர்ந்து கால்களை நகர்த்தி, தொடைகளை சற்றே ஒடுக்கி உடலை அடக்கி இடம் கொடுத்தாள்.  அனால் அந்தப் பையன் நான் சொன்ன எக்ஸ்க்யூஸ் மியை கண்டு கொள்ளவே இல்லை. சிலபேர் எப்போதும் காதில் இயர்போனை மாட்டிக் கொண்டு பாட்டுக் கேட்பதால் நாம் சொல்வதை கொஞ்சம் சத்தமாக சிறிது சைகை மொழியையும் சேர்த்து சொல்ல வேண்டும். ஆனால் இவன் காதில் ஒன்றுமில்லை. அவனுடைய இடது பாதி தொடை நான் உட்கார வேண்டிய பகுதியில் 25 சதவீதம் அளவுக்கு இருந்தது. ஆனாலும் நான் உட்கார்ந்து விட்டேன். ஆக மொத்தம் இப்போது 3 விடலையர் அங்கு உட்கார்ந்திருந்தோம். (ஏலேய் சீக்கிரமா சுடலை போற அதுவும்  கடலை மட்டுமே போட முடிஞ்ச உடலை வச்சுருக்கிற நீயெல்லாம்  விடலையா ?. ரொம்ப அட்ராசிட்டிடா  இது)
அவனுக்கு என்ன கோவமோ என்ன பொறாமையோ தெரியல ( பொறாமையா ? வேணாண்டா பரதேசி நான் அழுதுருவேன்). ஒரு வேளை அந்தப்பெண் பக்கத்தில்  உட்கார நினைச்சானோன்னு தெரியல. நான் வந்தத இடைஞ்சல்னு நினைச்சானோ?. இருவருமே ஷார்ட்ஸ்தான்  அணிந்திருந்தார்கள் . ஆனால் அந்தப்பெண்ணின் ஷார்ட்ஸ்  ரொம்ம்ம்ப ஷார்ட். அதனால அந்தப்புறம்பட்டால் என் அந்தப்புரம் கோபித்துக்கொள்ளும் என்பதால்  அந்தப்புறம் படாமல் இந்தப்புறம் பட்டால் பரவாயில்லைன்னு உட்கார்ந்தேன். (டேய் அவனா நீ ? இத்தனை நாள் தெரியவேயில்லையே) திரும்பவும் அவனைப் பார்த்து எக்யூஸ்மி என்று சொல்லி அவன் கண்ணைப் பார்த்தேன். அவன் மேலும் தன் முட்டியால் என் முட்டியை நெருக்க எனக்கு வந்ததே கோபம். தாங்க முடியாது  படாரென்று எழுந்தேன்
மதுரைக் காரன்னா சும்மாவா? தலையானங்கானத்து செரு  வென்ற பாண்டியன், மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன், வீர பாண்டிய கட்டபொம்மன், வீர மருதுபாண்டியர், பூலித்தேவன் ஆகிய பாண்டிய பரம்பரை யாவும் நினைவுக்கு வர, தோள் தினவெடுக்க, மீசை துடிக்க, உடம்பு படபடக்க, கண்கள் கோபத்தை கொப்பளிக்க, உதடுகள் அதிர, இதயம் துடித்துடிக்க, அப்படியே அவன் பக்கம் திரும்பாமல் எழுந்தேன். என்னுடைய பையை எடுத்து கொண்டு அவனைத் திரும்பிப் பார்க்காமல் அந்த ரயில் பெட்டியின் கடை கோடிக்குச் சென்றேன் .இப்ப என்னா செய்வே இப்ப என்ன செய்வ .

உட்கார இடம் கிடைக்காதலால் நின்று கொண்டே ஆஃபிஸ் போய்ச் சேர்ந்தேன். (ஏண்டா ஓரம் போறதுதான் உன் வீரமா? அடச்சீ நீயெல்லாம் மதுரைக்காரன் போடாங்க இவனே...) 

Thursday, April 20, 2017

வெள்ளைக்காரன் பொய் சொல்லமாட்டான் !!!



அந்த தந்தச் சிலையைப் பார்த்ததும் என் மனம் துள்ளிக்குதித்தது. “எவ்வளவு?”, என்று கேட்டேன். 200 டாலர் என்றார் அந்த வெள்ளைக்காரர். ‘ஆன்டிக்’ (Antique) என்று சொல்லப்படும் புராதன பொருட்கள் சேகரிப்பது என்னுடைய பொழுதுபோக்கு என்பது உங்களில் சிலருக்குத் தெரிந்திருக்கலாம். இதில் பழைய காலத்து நாணயங்கள், பல நாட்டு கரன்சி தாள்கள், அழகிய போர்சலின்    உருவங்கள்  என்பவையும் அடங்கும். போன ஞாயிறன்று ஆலயம் முடிந்தபின்பு மெல்வில், லாங் ஐலண்டில் நடந்த ஒரு நாணயக்காட்சிக்குச் சென்றிருந்தேன் (Coin Show). மெல்வில்லில் உள்ள பிங்கோ ஹாலில் நடக்கும்.வீட்டிலிருந்து கிளம்பும்போது மணி 12 என்பதால் சாப்பிடவில்லை. மனைவி கொடுத்து அனுப்பிய சிறு வாழைப்பழங்களையும் பெர்சிமன் பழங்களையும் ஒவ்வொன்றாக சாப்பிட்டுக் கொண்டே என்னுடைய வோல்க்ஸ் வேகன் வேனில் சென்றேன்.

Image result for melville coin show new york
என் வீட்டிலிருந்து சுமார் 1/2 மணி நேரம் டிரைவ். டிராஃபிக் அதிகமில்லை. எக்ஸ்பிரஸ் வேயைத் தொட்டபின் பிளேயரைத் தட்டியதில் “அரபிக்கடலோரம் கண்ட அழகை"  விவரித்துப்பாடினார் A.R. ரகுமான். நேர்த்தியான சாலையில் பழச்சுவையோடு இசைச்சுவையும் சேர்ந்து கொண்டு உற்சாகமாய் இருந்தது. அந்த ஷோ மதியம் 1 1/2 மணி வரைக்கும்தான். அதனால் தான்  ஆலயம் முடித்து அவசர அவசரமாக செல்ல வேண்டியிருந்தது. இதன் காரணத்தாலேயே நான் பலகாலமாக அங்கு போகவில்லை .அதனால் கொஞ்சம் வேகத்தை அதிகப்படுத்தினேன்.
காய்ன் ஷோவில் பங்கு கொள்பவர் பலரும் யூதர்கள் என்பதால் ஞாயிற்றுக்கிழமைகளில் (இரண்டாவது மற்றும் நான்காவது) இந்த ஷோ நடக்கிறது. காலை 8 மணிமுதல் மதியம் 2 மணிவரை ஆனால் அதிகப்பேர் இல்லாவிட்டால் 1 1/2 மணிக்கெல்லாம் பெட்டியைக் கட்டிவிடுவார்கள். பொதுவாக பழைய புதிய தங்க, வெள்ளி நாணயங்கள், பல நாட்டு பணத்தாள்கள், அபூர்வ பழைய புதிய ஸ்டாம்புகள், ஒரு சில புராதன பொருட்கள் மற்றும் காயின் சப்ளை என்று சொல்லக்கூடிய ஆல்பங்கள்,  ஃபோல்டர்கள், நாணயங்களைப் பாதுகாக்க உதவும் வில்லைகள், பிளாஸ்டிக் குப்பிகள் என பல பொருட்களும் கிடைக்கும். இளவயது மக்கள் மிகவும் கொஞ்சப்பேர் வருவார்கள் என்னைபோல (?) ஆனால் அதிகம் வருவது நடுத்தர மற்றும் முதியவர்கள் தான். ஏனென்றால் இது அதிகச் செலவுள்ள  ஹாபி (Expensive Hobby).
நான் உள்ளே நுழைந்த போது 12 1/2 ஆகிவிட்டது. அங்கே அதிகம் பேர் இல்லை. எனக்குத் தேவையான எழுதி வைத்திருந்த லிஸ்ட்டை பார்த்தேன். அமெரிக்க நாட்டின் நேஷனல் பார்க் குவாட்டர்கள், ஒரு டாலர் அமெரிக்க அதிபர்களின் நாணயங்கள், அரை டாலர் மற்றும் விட்டுப்போன ஜெஃபர்சன் நிக்கல் ஆகியவற்றில் புதிதாக 2016-2017க்கான வெளியீடுகள் தான் எனக்குத் தேவைப்பட்டன.  
Image result for melville coin show new york

அமெரிக்க ஈகிள் தங்க நாணயங்கள் கிடைத்தால் ஒன்றிரண்டு வாங்கலாம் என்று எண்ணமிருந்தது. எனக்குத் தெரிந்த பலர் என்னைப் பார்த்துக் கையசைத்து "லாங் டைம் நோ சி" என்றார்கள். "ஐ ஆம் ஸ்லோயிங் டவுன் ஆன் காயின்ஸ்" என்று சொல்லி கைகுலுக்கிவிட்டு, தங்க நாணயங்களை எப்போதும் விற்கும் மைக்கை நோக்கி நகர்ந்தேன்.  அப்போதுதான் என் கண்ணில் பட்டது அந்தச் சிற்பம். சிறிய அழகிய வடிவத்தில் ஒரு சீனன் குரங்கோடு இருந்த அந்த செதுக்கப்பட்ட சிற்பம் ஒரு சிறிய மரத்துண்டில் ஒட்ட வைக்கப்பட்டிருந்தது. அதனை விற்றுக் கொண்டிருந்த வெள்ளைக் காரனை நான் ஓரிரு முறை பார்த்திருக்கிறேன். ஆனால் எதையும் வாங்கியதில்லை. என்னை வரவேற்ற அவனிடத்தில் ஒரு புன்னகையை உதிரித்துவிட்டு, “அந்த தந்தச் சிலையைப் பார்க்கலாமா?”, என்றேன். ஆஃப்கோர்ஸ்  என்று சொல்லிவிட்டு அந்தக் கண்ணாடிப் பெட்டியைத் திறந்து ஜாக்கிரதையாக அதனை எடுத்து என் கையில் கொடுத்தான். மிக அழகாக நுணுக்கமான  வேலைப்பாடுகளோடு அமைந்திருந்தது அந்தச்சிற்பம். அதிலேயே விலை 199.00 டாலர்கள் என்று போடப்பட்ட ஒரு விலைக்குறிப்பு தொங்கியது.             "பிடித்திருக்கிறதா ?"
"பிடித்திருக்கிறது ஆனால் விலை அதிகம் என்னால் அவ்வளவு கொடுக்கமுடியாது"
“சரி எவ்வளவு கொடுப்பாய்?”
“நீயே சொல்லு”,
“175 கொடுத்தால் போதும்”
“ பரவாயில்லை எனக்கு வேண்டாம்”, நகர்ந்தேன்.
“150 என்றால் கொடுத்துவிடுவேன், நான் கிளம்பும் நேரம்”.
“100 என்றால் வாங்கிக் கொள்கிறேன்”.
“100க்கு விற்றால் நான் மகிழ்ச்சியடையமாட்டேன்”.
“100க்கு மேல் கொடுத்தால் நான் மகிழ்ச்சியடைய மாட்டேன்”
“ சரி கொடு”,, என்றதும் என் கைப்பையில் வைத்திருந்த சிறு பவுச்சில் இருந்து 2 நோட்டுகளை எடுத்துக் கொடுத்தேன் அதை வாங்கிக் கொண்டு அவன் “என்ஜாய்”, என்று சொல்லி சிற்பத்தைக் கையில் கொடுத்தான். நன்றி சொல்லி வாங்கி நகர்ந்துவிட்டு மற்ற ஸ்டால்களை மேய்ந்தேன். ஒரு சிறு வெள்ளி பார் பிடித்ததால் விலை பேசி 20 டாலருக்கு  வாங்கி திரும்பவும் பவுச்சை திறந்தபோதுதான் கவனித்தேன். அதில் இருந்தவை முழுதும் 100 டாலர் பில்கள். சடக்கென நினைவு வந்தது, அடடே அவனிடம் 2 நோட்டு அதாவது 200 டாலர்கள் கொடுத்துவிட்டேனோ என்று நினைத்துப் பார்த்தால் அவன் ஸ்டாலில் இல்லை. அரங்கு முழுதும் தேடி அவனைக் கண்டுபிடித்து, தனியாக அழைத்துக் கேட்டேன்.
“நான் தவறுதலாக உன்னிடம் 200 கொடுத்துவிட்டேன். எனவே நூறைத் திருப்பிக் கொடு” ,என்றேன். இல்லை நீ ஒரு நோட்டுத்தான் கொடுத்தாய் என்று தன் பாக்கெட்டில் கொத்தாக இருந்த பணத்தில் இருந்த ஒரே ஒரு புதிய நூறு தாளைக் காண்பித்தான். குழம்பிப்போன நான் பரவாயில்லை என்று சொல்லி காருக்குச் சென்றேன். மொத்தப் பணத்தையும் எண்ணிப் பார்த்துவிட்டு நான் கொடுத்தது 200 தான் என்பதையும் கண்டுபிடித்துவிட்டு  மீண்டும் அவனிடம் சென்றேன்.
"இதோபார் நான் நன்கு கணக்குப் பார்த்துவிட்டேன். உன்னிடம் நான் கொடுத்தது 2 நூறு ரூபாய் நோட்டு"
“இல்லை இல்லவே இல்லை ஒன்றுதான் கொடுத்தாய்”.
“இதோபார் அது வங்கியில் எடுத்த புத்தம்புதிய நோட்டுகள், அதன் எண் வரிசை எனக்குத் தெரியும். நமக்குள் முடித்துக் கொண்டால் நல்லது இல்லாவிடில் நான் இந்த நடத்துனரிடம் புகார் கொடுத்து உன்னை உண்டு இல்லை எனப் பண்ணிவிடுவேன். நான் அந்த நூறை விடுவதாக இல்லை”, என்றேன்.
என்னையே சிறிது நேரம் பார்த்துவிட்டு, “உண்மைதான் நீ இரண்டு நோட்டு கொடுத்தாய். என்னை மன்னித்துவிடு, நான் பணக்கஷ்டத்தில் இருக்கிறேன். யாரிடமும் சொல்லாதே”, என்று தழுதழுத்தான். யார்ட்ட என்னை ஏமாத்தமுடியாது என்று ஒரு பெருமிதம் வந்தது.வெள்ளைக்காரன் பொய் சொல்லமாட்டான் என்று யார் சொன்னது. ஒரு நிமிடம் அதனை அவனிடமே கொடுத்துவிடலாம் எனத் தோன்றினாலும் தவறுக்கு துணைபோகக் கூடாதென்று , “நமக்குள் இருக்கட்டும்" என்று சொல்லி வாங்கிக் கொண்டு ஹிக்ஸ்வில்லில் சரவணபவனில் சாப்பிட்டுவிட்டு வீடு வந்து சேர்ந்தேன்.
என் மனைவியிடம் இதைச் சொன்னபோது அவள் என்னைத்தான் சத்தம்போட்டாள். “நீ சரியாகப் பார்க்காமல் கொடுத்துவிட்டு அவனை அழ  வைத்திருக்கிறாய். நீ அந்தப் பணத்தை அவனிடமே கொடுத்துவிடு. நூறு டாலரில் என்னவாகிப் போய்விடப்போகிறது”, என்றாள். நானும் திகைத்துவிட்டேன். ஆனால் நான் வாங்கி வந்தது ஐவரி இல்லை வெறும் பிளாஸ்டிக். 1 டாலர் கூடப் பெறாது என்பதை வரும் வழியில் தெரிந்து கொண்டேன் என்பதை என் மனைவியிடம் சொல்லவில்லை. ப்ளீஸ் நீங்களும் சொல்லிறாதீங்க.  

முற்றும்