Showing posts with label நியூயார்க்கில் பிச்சைக்காரர்கள். Show all posts
Showing posts with label நியூயார்க்கில் பிச்சைக்காரர்கள். Show all posts

Monday, July 22, 2013

நியூயார்க்கில் பிச்சைக்காரர்கள் Part 4 : கொலையாளி ஆன மலையாளி


        என்ன அழகுராணிகளா? பிச்சை எடுக்கிறார்களா? என்று கேட்டால் எனக்கும் அதாங்க பாஸ் ஆச்சரியம். சிலபேர் நம்மூர் அரிதாரம் பூசிய சினிமா அழகிகளை மிஞ்சிவிடுவார்கள். பெரும்பாலும் விடலைப்பெண்கள், சப்வேயின் உள்ளே உள்ள வராந்தாக்களிலும், படிக்கட்டுகளின் ஓரத்திலும் இவர்களைப் பார்க்கலாம். சிலசமயம் குழந்தைகளை கையில் வைத்திருப்பார்கள் (யார் பெத்த குழந்தையோ, பாவம்). ஒரு சமயம் படிக்கட்டு இறங்கும் இடத்தில், பால் கொடுக்கும் ஒரு அழகிய பெண்ணைப் பார்த்தேன். இரண்டாம் தடவை அதே பெண்ணைக் குழந்தையுடன், அதே போசில் பார்க்கும்போது, அதே குழந்தையா? இல்லை வேறு குழந்தையா? என்று சந்தேகித்து உற்றுப் பார்க்கும்போது, நான் வேறு எதையோ பார்க்கிறேன் என்று தப்பாக நினைத்துவிட்டு, நன்றாக மூடி, என்னை ஒரு முறை முறைத்தாள். ஐயையோ விடும்மா தாயி என்று சடுதியாக நகர்ந்து மறைந்தேன். இவர்களுக்கு ஆங்கிலம் தெரியாதா  அல்லது நடிக்கிறார்களா என்று தெரியவில்லை. இவர்களுக்கு வேலை கிடைக்கவில்லை என்பதை ஒத்துக்கொள்ள மாட்டேன் .தம்மை தகுதிப்படுத்திக்கொள்ளவில்லை அல்லது இதிலேய நல்ல வசூல் கிடைக்கிறது என்றுதான்  நினைக்கக் தோன்றுகிறது. யோசித்துப்பார்த்தேன். நம்மூரில் மட்டும் இவர்களை ரோட்டில் பார்த்தால் என்ன நடக்கும் என்பதை நினைத்தால், சரி சரி நினைக்கவில்லை விடுங்கள்.

இசைக்கலைஞர்கள்:


     இவர்கள் தனியாகவோ அல்லது குழுவாகவோ செயல்படுவார்கள். தனிமையாக வந்து சிலர் பாடுவது சகிக்காது. காசு கொடுத்து அவர்களை விரைவாக நகர்த்த வேண்டிவரும். சில இன்ஸ்ட்ருமென்ட் வாசிப்பவர்களின் திறமை ஆச்சரியமூட்டும். குறிப்பாக ஹாலோ கிடாரில் ஒரு வெள்ளைக்காரன் விரல்களால் பிளக்கிங்  பண்ணுவது மிக அருமையாக இருக்கும். ஒரு கொரிய சிறுவன், கேசியோ கீபோர்டில் அநாயசமாக வாசிப்பான். ஒரு ஆப்பிரிக்க இன இளைஞன் டிரம்சில் தனி ஆவர்த்தனம் வாசிப்பான்.
  இன்னொரு ஆப்பிரிக்க முதியவர் சைலபோன் போன்ற எவர்சில்வர் பாத்திரத்தில்  கினிகினி நாதமூட்டி பாடல் இசைப்பார். சில ஆசியப் பெண்கள் பெயர் தெரியாத வாத்தியங்களை இசைப்பார்கள்.
      ஒரு இத்தாலிய முதியவர், கையில் கிடார், வாயில் மௌத் ஆர்கன், காலில் டேம்பரின் ஆகியவையுடன் ஒரு இசை ஃப்யூசன் நடத்திக்காண்பிப்பார். ஒரு வயலின் வாசிப்பவரும் இதையே செய்வார். இந்தியரைப்பார்த்தால் ஜனகனமன வாசிப்பார்.

       ஒரு ஆப்பிரிக்க பாடகர் குழு சப்வேயில், 
ஒவ்வொரு கேரேஜாக சென்று பாடும். சிறப்பு என்னவென்றால் முழுவதுமாக "அக்கபில்லா" என்று சொல்லப்படுகிற இசையின்றி பலவித பார்ட்ஸில் பாடுவது. அதன் செழுமை பல தேர்ச்சிபெற்ற கொயர்களை விட நன்றாகவே இருக்கும். ஒரு மெக்சிகோ 'மரியாச்சி' குழு பல கிடார்களுடன் வந்து அசத்தும்.இவர்கள் எல்லாருமே அனுமதிபெற்றவர்களல்ல. பணம் பெறுவதே குறிக்கோள்.

    சப்வே ஸ்டேசன் உள்ளே ஆனால் ரயிலைவிட்டு வெளியே வாசிக்கும் குழுக்கள் அனுமதிபெற வேண்டும். அதாவது வாசிப்பவர்களின்  குழுவின் பெயர் மற்றும் லைசென்ஸ் நம்பர் போட்ட பேனர் அவர்களது பின்னனியில் கட்டப்படும். ஒரு தேர்ந்த குழுவைப்போல், கிடார், டிரம்ஸ், கீபோர்டு போன்ற சகல வாத்தியங்களையும் வைத்து வாசிப்பார்கள். இந்தக்குழுக்கள் தாங்கள் வெளியிட்ட CD களையும் விற்பார்கள். அவர்களை வெளியே ஏதாவது நிகழ்ச்சிக்கு அழைத்தாலும் வருவார்கள்.இதிலே பலநாட்டைச் சேர்ந்த இசைக்கலைஞர்கள் வித விதமான கருவிகளை பயன்படுத்துவார்கள். குறிப்பாக சிவப்பிந்திய குழுக்களின் இசை மிகநேர்த்தியாக, அரிதாக இருக்கும். நம்ம மதுரைக்கார அண்ணாச்சி கராத்தே புகழ் "ஷிஹான் ஹுசைனி " இங்கு வரும் போது, இப்படித்தான் காசு சேர்த்ததாக  எழுதியிருந்தார் .

         ஆப்பிரிக்கஇளைஞர்குழு,பாத்திரங்கள்,
டிரம்கள், பிளாஸ்டிக் வாளிகளை வைத்து இசையெழுப்பி அதகளம் பண்ணுவர். இவர்களெல்லாம் பிச்சைக்காரர்களா என்று கேட்டால் ஆம் என்றும் இல்லை என்றும் சொல்வேன்.
      வெறும் விளம்பரத்திற்காக மட்டும் வாசிப்பவர்களாகத்தெரியவில்லை, பார்த்து ரசிக்கும் மக்கள், மனமுவந்து டாலர் நோட்டையோ இல்லை சில்லறைகளையோ கொடுத்தாலும் நன்றி சொல்லி ஏற்றுக்கொள்வார்கள். பெரும்பாலான குழுக்களின் முன்னே பெட்டிகள் வைக்கப்பட்டு "டொனெஷன் அக்சப்டெட்" என்று எழுதியிருக்கும்.      எனவே இந்தப்பிச்சைக்காரர்களின் உலகம் தனி உலகம். அவர்களது வருமானம் எவ்வளவென்று கணக்கிட்டு சொல்ல முடியாது.
     இது தவிர பார்க்க நன்றாக இருக்கக்கூடிய சில வெள்ளைக்கார இளைஞர்களும் தெருவில் உட்கார்ந்து பிச்சையெடுப்பார்கள்.

 மிக ஆரோக்யமாகத்தெரியும் இவர்கள் வேலைக்குச் செல்லக் கூடாதா? என்றும் ஒரு வேளை டிரக் அடிக்டாக இருப்பார்களோ என்றும் தோன்றும். பார்த்தால் அப்படியும் தெரியவில்லை.

     சமீபத்தில் ஒரு தெருவில் உட்கார்ந்து பிச்சையெடுத்துக் கொண்டிருந்த இளைஞன், ஒருவன் ஒரு சிறிய போர்டு வைத்திருந்தான். ரேபன் கண்ணாடி வாங்கவும், ஐஸ் காப்பி வாங்கவும் காசு வேண்டும் என்று எழுதியிருப்பதைப் பார்த்து அதிர்ந்தேன். ஆனால் அதன் கீழே சிறிய எழுத்தில் " ஜஸ்ட் கிட்டிங், நீட் மணி டு ஈட் " என்று எழுதியிருந்தது.

 ஒரு நாள் மாலை ஆபிஸ் முடிந்து, சப்வேயில் வந்து இறங்கி வீட்டிற்குச் செல்ல Q-40 பஸ்ஸுக்காக சட்பின் புல்வர்டில் காத்திருந்தபோது, ஒருவன் அருகில் வந்து 'மலையாளியோ? ' என்றான். கண்கள் சிவந்திருந்தது. ஏதோ போதை பானம் வாடை வீசியது. “இல்லை” என்றேன். அவன் விடவில்லை, “பின்ன எந்த ஊர்” என்றான். சென்னை என்றதும், “ஓ தமிழா, எனக்கு நிறைய தமிழ் நண்பர்கள் இருக்கிறார்கள்” என்று சொல்லி “அவசரமாக ஒரு பத்து டாலர் வேண்டும்” என்றான். வாலட்டை எடுத்து ஒரு டாலர் தரலாம் என்று பார்த்தால் 20 டாலர் நோட்டுகள் மட்டும் இருந்தன. குடித்தழிபவனுக்கு 20 டாலர் கொடுக்க மனம் வரவில்லை என்பதால், சில்லறை இல்லை என்றேன்.

 முறைத்துப்பார்த்த அவன் வாலட்டை என்னிடம் காண்பி என்றான். என்னுடைய எல்லா எச்சரிக்கை செல்களும் விழித்துக்கொள்ள உடல் பதறி, மறைத்தேன். அதற்குள் பஸ் வந்துவிட விரைந்து ஏறினேன். அவனும் பின்னால் ஏறி, கட்டணம் செலுத்தாமல் என்பின் உட்கார்ந்து கெட்ட வார்த்தைகளில் திட்ட ஆரம்பித்தான். எனக்கு அவமானமாகவும் ஆத்திரமாகவும், இருந்தது. என்னை கொன்று விடுவதாக வேறு சவால் விட்டுக்கொண்டிருந்தான். சகபயணிகள் வெறுமனே வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர். அடுத்த ஸ்டாப்பில் சட்டென்று இறங்கி ஒரு கடையில் சென்று மறைந்தேன். அவனும் இறங்கி என்னைத்தேடி காணாமல் திரும்பிப்போய்விட்டான். அவனை அவ்வப்போது, மிகுந்த போதையுடன் சட்பின் புலவர்டு அருகில் உள்ள வைன் ஷாப்பில் பார்ப்பேன். வேறு பாதையில் மறைந்து சென்றுவிடுவேன். அன்றொரு நாள் இரவு சப்வேயை விட்டு வெளிவரும்போது அதே இடத்தில் NYPD போலிஸ் கார் அருகில் நிற்க, ஆம்புலன்சில் ஏற்றிக் கொண்டிருந்த உடலைப்பார்த்து திடுக்கிட்டேன்.அந்த மலையாளிதான்.குடிப்பதற்கு பணமாக கேட்டவன் இப்போது பிணமாக .

முற்றியது 



Monday, July 15, 2013

நியூயார்க்கில் பிச்சைக்காரர்கள் Part 3 : “பிச்சைப்பாத்திரம் ஏந்தி வந்தேன்"

Jackson Heights
          நியூயார்க்  உலகத்தின் உன்னத நகரம். பொருளாதார உலகின் தலைநகரம். பல சிறப்புகள் உண்டு. ஆனாலும் இங்கே  பலவித பிச்சைக்காரர்கள் இருக்கிறார்கள் என்பது அதிர்ச்சியூட்டும் உண்மை.

ஹோம்லெஸ்

  அமெரிக்கா பணக்கார நாடாயினும், முதலாளித்துவ நாடு என்பது நம் அனைவர்க்கும் தெரியும், இங்குள்ளவருக்கு மூன்று கொள்கைகள் உண்டு (1) பணம், (2) பணம், (3) பணம்.  
       இந்தியாவிலிருக்கும் போதே, கிரடிட் கார்டினால் கஷ்டப்பட்டதால், இங்கே கிரெடிட் கார்டு வேண்டாம் என்று கொள்கை முடிவு எடுத்து ,பெருமையுடன் அலைந்து கொண்டிருந்தேன் . ஒரு நாள் வந்த புதுதில் , பெஸ்ட் பையில் (Best Buy),  டிவி, இன்ஸ்டால்மென்டில் வாங்கலாம் என்று சென்றிருந்தேன். (ஏலே சேகரு அங்கேயும் போய் இந்த இன்ஸ்டால்மென்டை விடலியாலே). முதல் கேள்வி, கிரடிட் கார்டு இருக்கிறதா? என்று. என்னான்னு கேட்டா, “No Credit is Bad Credit” என்கிறார்கள். எனக்கு தூக்கிவாரிப்போட்டது. நம்மூரில கடனில்லாட்டி நல்ல புள்ளன்னுல சொல்லுவாக. ஆனா இங்கே கிரடிட் ஹிஸ்டரி இல்லாட்டா, இன்ஸ்டால்மென்ட்ல பொருள் வாங்க முடியாது, கார் வாங்கமுடியாது, வீடு வாசல் வாங்க முடியாது என்று தெரிந்து அதிர்ச்சியடைந்தேன். அப்புறம் என்னதேன் செய்யுறதுன்னு கேட்டா, கடனும் வாங்கனும், கரெக்டாவும் கட்டனும்கிராய்ங்க. அட மொள்ளைமாறிகளாஎன்று நினைத்துக்கொண்டு, அப்புறம் பாஸ்டனில் 
உள்ள என்  நண்பன் ஜூடைக் கூப்பிட்டு அவனுடைய Best Buy கார்டில் டி.வி வாங்கினேன்.

இந்த மாதிரி, கடன் வாங்கி, கடன் வாங்கி, ரொம்ப சேர்ந்து போய் , அப்புறம் சோர்ந்து போய், அதுக்கப்புறம் வேலையும்  போய், பில்லை கட்ட முடியாம எல்லாத்தையும் இழந்து தெருவுக்கு வந்தவர்கள்தான் இந்த ஹோம்லெஸ் என்று அழைக்கப்படுகிறதில் முக்கால்வாசி பேர். அதனாலேயே, மனம் பிறழ்ந்து பைத்தியமாகிப் போனோர் இதில் அதிகம். குடும்பத்தாலும் கைவிடப்பட்ட இவர்கள் வேறெங்கு செல்வது, சப்வேயில்தான் தஞ்சம். வெயில் காலத்தில் வெளியே அலையும் இவர்கள், குளிர்காலத்தில் வேறெங்கும் போக முடியாது, குளிக்க முடியாது. சாப்பாட்டுக்கு மட்டும் பஞ்சமில்லை.

இங்குதான் ஒரு டாலர் இருந்தால் போதுமே, ஒரு பேகல் (Bagel) டோஸ்ட் வித் பட்டர், ஒரு பெரிய பிரட்சில் (Pretzel), ஒரு சூடான நாய் (அதாங்க Hot Dog), இதில் எதுவாங்கினாலும் 1 டாலர்தான். ஒன்னு சாப்பிட்டா போதும் இரண்டு வேளைக்கு ஒண்ணும் தேவையில்லை. மெக்டானால்ட்ஸ் போன்ற பல அமெரிக்க உணவகங்களில் டாலர் மெனு இருக்கிறது.
    அதனால் இந்தப்பிச்சைக்காரர்கள் நம்மூர் போல் எலும்பும் தோலுமாக இருக்கமாட்டாய்ங்க. ஒவ்வொருவரும் நல்ல பெரிய சைசில் தொப்பையும் குப்பையுமாக இருப்பார்கள். ஆமாங்க இவங்க சொத்து வெறும் குப்பைதேன். கண்ட கருமாந்திரங்களை எல்லாம் சேர்த்து சேர்த்து மலைபோல் வைத்திருப்பார்கள். சிறு சிறு பைகளில் ஏராளமாய் குவித்து வைத்திருப்பார்கள்.
34th Street, Midtown.

உங்களுக்கு இந்நேரம் ஒரு கேள்வி வந்திருக்கும், காலைக்கடன்களுக்கு என்ன செய்வார்கள் என்று? 
அதேன் உங்களுக்குத் தெரியுமே, இங்கே கழுபுபவர்கள் இல்லை. துடைப்பவர்கள்தான். துண்டு பேப்பர் போதுமே, பக்கத்தில் உள்ள குப்பைத் தொட்டிகள்தான் பாவம். அந்தக் குப்பைகளை அள்ளும் ஊழியர்கள் அதைவிடப் பாவம்.

அரசாங்கம் இவர்களை அழைத்துக்கொண்டு போய், குளிக்கவைத்து, உடுத்தி பராமரித்தாலும், எப்படியாவது திரும்பவும் தப்பி வெளியே வந்துவிடுவார்களாம். என்னத்தைச் சொல்றது.
இவர்களை ஒளிந்து ஒளிந்து   படம் எடுத்ததில் என் அல்லு என்னிடத்திலில்லை. எனவே படங்கள் சரியில்லைன்னு சொல்லாதீங்க.

ஹோம்லெஸ் சங்கத்தினர்:
"காட் பிளஸ்" என்று சொல்லிக்கொண்டு, வீடிழந்தோர் சங்கம் என்று சொல்லிக்கொள்வார்கள். எங்களிடத்தில் பழங்களும் பண்டங்களும் இருக்கிறது. பசியாயிருக்கும் யாரும் வாங்கிக்கொள்ளலாம் என்பார்கள். பையில் உள்ளே என்ன இருக்கிறது என நான் பார்த்ததேயில்லை, யாரு வாங்கப்போகிறார்கள்? சங்கத்திற்காக வசூல் என்பார்கள். எனக்குத்தெரிந்து அவர்கள் பைக்குள் அல்லது வயிற்றுக்குள் அவை போய்விடும்.

ஊனமுற்றவர்:
சப்வே மற்றும் டிராஃபிக் சிக்னல்களில் இவர்களைப் பார்க்கலாம். இருகால் அல்லது ஒரு கால் அல்லது கை இழந்தவர்கள், கண் இல்லாதவர்கள் பிச்சை எடுக்கும்  இவர்களில் சிலர் பழைய ராணுவத்தின் (Veterans) என்று சொல்வதை நம்புவதா இல்லையா என்று தெரியாது. இவர்கள் நல்ல மனநிலையில் இருப்பவர்கள். இவர்கள் காலையில் ஆரம்பித்து மாலைக்குள் சில சமயங்களில் நூறு டாலருக்கு மேல் சம்பாதித்து விடுவார்கள்.


கழைக்கூத்தாடிகள்:


இவர்களில் படிக்கின்ற அல்லது ஸ்கூல் டிராப் அவுட்டுகளைப் பார்க்கிறேன். நான்கைந்து பேர் வந்து, டேப்ரிகார்டரை போட்டுவிட்டு, பிரேக் டான்ஸ் அல்லது சில சாகச நிகழ்ச்சிகளை செய்து காண்பிப்பர். சப்வேயின் குறுகிய இடத்தில் அவர்கள் வெகு வேகமாக சர்க்கஸ் வேலை செய்யும்போது நம்மேல் விழுந்துவிடுவார்களோ  எனப்பயமாக இருக்கும்.

 பெரும்பாலும் இளைஞர்கள். இவர்களுக்கு நல்ல வருமானம். சம்மரில் முக்கிய முச்சந்திகளிலும் இவர்களைப் பார்க்கலாம்.
 
இது தவிர  சில அழகுராணிகளும் பிச்சை எடுக்கிறார்கள்.


அதைப்பற்றி  அடுத்த வாரம் சொல்கிறேன்.

Monday, July 8, 2013

நியூயார்க்கில் பிச்சைக்காரர்கள் Part 2 : அலைகள் ஓய்வதில்லை


      தலைப்பைப் பார்த்ததும் நான் என்னைப்பற்றியே எழுதப்போகிறேனோ என்று கெக்கலி கொட்டி சிரிக்கும் நண்பர்கள் போன்ற எதிரிகளுக்கும், எதிரிகள் போன்ற நண்பர்களுக்கும் தெரியப்படுத்துவது என்னவென்றால், இது என்னைப்பற்றியதல்ல (டேய் நீயே ஒரு பரதேசி, நீ பிச்சைக்காரர்களைப் பற்றி எழுதுவது தேவையா?)
         சரி கதைக்கு வருவோம் .அது பெண் என்று தெரிந்து மேலும் அதிர்ந்தேன். அப்போது என் வாக்மேனில் ," உன் சுவாசக் காற்று வரும்பாதை பார்த்து உயிர் தாங்கி நானிருப்பேன் "என்று  அபத்தமாய் ஒலித்ததும் கடுப்பாகி  அதை ஆஃப் செய்தேன் . அந்த சமயத்தில்தான் அந்த உருவம் என்னை நோக்கி நகர்ந்தது . நான் கேரஜின் மறு ஒரத்திற்கு சென்று ஒண்டியபோது , நாற்றம்  தாங்கமுடியாமல் , காலையில் சாப்பிட்டது ஓங்கரித்து கலர் கலராய் வெளியே வந்தது.
        அதை பார்த்ததாலோ என்னவோ,அந்த உருவம் மீண்டும் உட்கார்ந்து விட்டது. (நாற்றத்தை நாற்றத்தால் வென்ற நாயகன்னு ஒரு பட்டம் கொடுத்திரலாமா சேகர் ? மகேந்திரா  வேணாம் சொல்லிட்டேன் ஆமா) .எழுந்து உட்கார்ந்ததில் மீண்டும் அலை அலையாய், வேறென்ன நாற்ற அலைகள்தான் வந்து நாட்டியமாடின. இதிலே இப்ப என்னோட வாந்தி நாத்தம் வேற சேர்ந்திரிச்சு. இயேசு நாதர் சொன்ன “நல்ல சமாரியன்” கதை ஞாபகம் வந்தது. ஐயையோ ஆளவிடுசாமி. அதற்குள், அடுத்த ஸ்டாப் வர, தெறித்து ஓடி இறங்கி, இருமி வாயைத்திறந்து ஆசுவாசப்படுத்த முயல்கையில், என்னைப்போல் இன்னும் ரெண்டு அப்பாவிகள், நான் தடுக்குமுன் ஏற, தானியங்கி கதவுகள் மூடப்பட்டு வண்டி நகர ஆரம்பித்தது. ஐயோ பாவமே என்று நினைத்து மரபெஞ்சில் உட்கார்ந்தேன்.
அந்தப்பெஞ்சில் உட்கார்ந்திருந்த இருவர், நான் உட்கார்ந்ததும் சட்டென எழுந்து நகர்ந்தனர். ஏன் என்று யோசித்து, என்னை நானே பார்க்கையில் தான் தெரிந்தது. ஐயையையையையே என்மேலும் அந்த நாற்றம் ஒட்டிக் கொண்டிருந்தது.
        அதன் பின்னர் ஆபீஸ் போவதை  கைவிட்டு நடந்தே வீட்டுக்குச் சென்று, அந்த உடைகளை ஜாக்கிரதையாய்க் கழற்றி மூட்டை கட்டி வைத்துவிட்டு, ஒரு மணி நேரம் குளித்து துவட்டி துடைத்த பின்னரும், நாசியினடியில் அந்த ஓசி நாத்தம் மறையவில்லை. ம்க்கும்  ம்க்கும்  என்று அந்த நாள் முழுதும் மூக்கைச் செருமிக் கொண்டு மேலும் ரெண்டு தடவை வாந்தி வேறு எடுத்ததால் ஒன்றும் சாப்பிடவில்லை. சட்டென்று, அந்த துணி மூட்டையை ஒரு குச்சியில் எடுத்து வீட்டுக்கு வெளியே தூரம் சென்று அங்கிருந்த குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு வந்தபிறகுதான் கொஞ்சம் நிம்மதியாயிருந்தது.
         நியூயார்க்கைப் பற்றிய என்னுடைய பல கனவுகளிலும், எதிர்பார்ப்புகளிலிருந்தும் மேலும் ஒன்று கடுமையாக தாக்கப்பட்டு அழிக்கப்பட்டது.
        அதற்கப்புறம் கேரேஜ் காலியாக இருந்தால் ஒன்று A/c வேலை செய்யவில்லை மற்றொன்று நாத்தம் புடிச்ச ஹோம்லெஸ் ஒன்று அங்கே எழுந்தருளியிருக்கும் என்று தெரியுமாதலால், சீபோ என்று விட்டுவிடுவேன்.
       இவர்கள் யார்? ஏன் இப்படி தெருவில் அலைகிறார்கள்? அரசாங்கம் கவனிப்பதில்லையா? தன்னார்வ நிறுவனங்கள் இல்லையா? என்று பல கேள்விகள் என்  உள்ளத்தில் அலைபாய, இவற்றிற்கு விடைகண்டுபிடிக்க முனைந்ததில், சில திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்தன.



Monday, July 1, 2013

நியூயார்க்கில் பிச்சைக்காரர்கள் Part 1 : உன் சுவாசக் காற்று வரும்பாதை பார்த்து !!!!!!!!!!!!!

               
      இதுவரை கூவம்தான், உலகத்திலேயே நாற்றமுடைத்துன்னு எண்ணியிருந்தது அன்றோடு தகர்க்கப்பட்டது. அது ஒரு  திங்கள்கிழமை.வந்த புதிது.  அவசர அவசரமாக வேலைக்குச் செல்ல, சப்வே பாதாள ரயில் நிலையத்தில் இறங்கினேன். மேன்ஹாட்டனுக்கு செல்லும் 'E' ரயிலில் காலை வேளையில் உட்கார இடம் கிடைப்பது, அமெரிக்கன் விசா கிடைப்பதை விடக்கடினம்.
                 சத்தமில்லாமல் வந்து நின்ற 'E'ரயிலில் ஒரு காலி கம்பார்ட்மென்ட் பார்த்தேன். ஆஹா ஆல்ஃபி , இன்று உனக்கு அதிர்ஷ்ட நாள்றா என்று எண்ணிக்கொண்டே ,சட்டென்று ஏறிவிட்டேன். சடுதியாக கதவுகள் மூட, வண்டி வேகமெடுத்தது. அப்போது தான் அது நடந்தது. எனது நாசியை  ஏதோ என்னோமோ செய்தது. ப்ப்ப்ப்ப்பா ஒரு மோசமான குடலைப் புடுங்கும் நாற்றம் முகத்தில் அறைந்தது, உன் நாத்தம் என் நாத்தம் இல்ல அது உலக நாத்தம். காலையில் சாப்பிட்ட பிரட்டும், ஜெல்லியும் நெஞ்சுவரை வந்துவிட்டது. (இட்லி, தோசை மறந்திருந்த நாட்கள் அவை .என் மனைவி பிள்ளைகள் இன்னும் சென்னையிலிருந்து வந்து சேரவில்லை.) விரைவாக நகர்ந்து  கேரேஜின் மறு மூலைக்குச்சென்றேன் .ஆனாலும் நாற்றம் விடாது தொடர்ந்தது.
          தலையைச் சுற்றி மயக்கம் வந்துவிடும் போல் இருந்தது. அப்போதுதான் கவனித்தேன், வண்டியின் ஒரு பகுதியில் ஒரு மூட்டை கிடந்தது. எவனோ ஒரு நீசப்பய, அழுகுன குப்பையைக் கொண்டு வந்து உள்ளே போட்டு விட்டானோ என்று நினைத்த போது, அந்த மூட்டை மெதுவாக  ஸ்லோ  மோஷனில் சற்றே நகர்ந்து. பின் எழுந்தது. ஐயையோ அது மூட்டை இல்ல, ஒரு முழு மனுசப்பய என்று தெரிந்தது. பைத்தியக்காரனோ என்று நினைத்த போது உள்ளமும் உடலும் நடுங்கி  ஏசியிலும் வேர்த்துக் கொட்டியது. நீசப்பய, இல்ல இல்ல நாறப்பய, நாதாரி வேற எடமே கிடைக்கலயா?
            கூட்டம் நிறைந்த ரயிலில், ஒரு கேரேஜ் மட்டும் காலியாக இருப்பது ஏன் என்று யோசிக்க மாட்டியா? என்று நேரந்தெரியாமல் என் மைன்ட் வாய்ஸ் வேறு கண்டித்தது. அடுத்து என்ன நடக்குமோ, என்று பல அதீத கற்பனைகள் வந்துபோனது. அப்போது அந்த உருவம் எழுந்து நின்றது. எது முன், எது பின் என்று தெரியாத ஒரு உருண்டை உருவம் . உற்றுப்பார்த்தால் ,ஐயையையையையையோ அது நாறப்பய இல்ல, நாறச்சிறுக்கி.


நாற்றம் தொடரும்.