சீனாவில் பரதேசி -23
Xianfeng Emperor |
இதற்கு
முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும்.
http://paradesiatnewyork.blogspot.com/2016/09/blog-post_12.html
சீன மக்களுள் வயது வித்தியாசமின்றி யாரைப் பார்த்தாலும் ஒரு
இனம் புரியாத ஒரு சோகம் அப்பியிருந்தது. ஒருவேளை முக அமைப்பே அப்படித்தானோ என்ற
சந்தேகத்தில் லீயைக் கேட்டேன். அவன் சொன்னான். "பீஜிங்கில் வாழ்க்கை மிகவும்
கடினம்?, எங்களுக்கு சிரிக்கவோ, மகிழ்ந்திருக்கவோ நேரமில்லை. எனவே ஓடிக் கொண்டேயிருக்கிறோம்
.எங்கேயாவது உன்னைப்போல
வெளியே சுற்றுலா போனால் ஒருவேளை நாங்கள் சிரித்து மகிழலாம். உதாரணமாக என்னை
எடுத்துக் கொள் ,ஒவ்வொரு நாளும் நிலையில்லாத நிலையில் தானே இருக்கிறேன்”, என்றான். அது உண்மைதானே. ஒருவேளை என்னை வந்து
நியூயார்க்கில் பார்த்தால் நானும் அப்படித்தான் ஓடிக் கொண்டிருப்பேன் எனத்
தோன்றியது.
“சரி லீ
டியனன்மென் ஸ்கொயர் பற்றி மேலும் தகவல்கள் இருக்கிறதா?”
“Gate of Heavenly Peace”, என்ற அர்த்தத்தில் அழைக்கப்படும் இது,முதன்முதலில் 1415ல் மிங் டைனாஸ்டி ஆளும் போது வடிவமைக்கப்பட்டது. அதன்
பின்னர் மஞ்சு இனத்தவரின் சிங் டைனாஸ்டி (Qing Dynasty)ஆளும் போது 'லி ஜிக்செங்’ கின்' (Li Zicheng) 'புரட்சிப்படை இதனைத் தாக்கி முற்றிலும் அளித்துவிட்டனர்.
அதன்பின்னர் 1651ல் இது மீண்டும் கட்டப்பட்டது. 1950ல் தான் இப்போதிருக்கும் அகலமான சதுக்கம் உருவானது.
சதுக்கத்தின்
நடுவில் "பெரிய மிங் வாயில்" (Great Ming Gate) இருந்தது. இதுவே “பெரிய சிங் வாயில்” என்று சிங் பரம்பரையினர் ஆளும் போது
பெயர்மாற்றம் செய்யப்பட்டது. சீனக்குடியரசு ஆட்சியில் "கேட் ஆஃப் சைனா"
என்று அழைக்கப்பட்டது.
The great wall of China |
1860ல் நடந்த இரண்டாம் ஓப்பியம் யுத்தத்தில் பிரிட்டிஷ் மற்றும் ஃபிரெஞ்சுத் துருப்புகள் இந்த அலங்கார
வாயில் மற்றும் விலக்கப்பட்ட நகரத்தை எரித்துவிடத் திட்டமிட்டனர். இறுதியில்
இவைகளை விட்டுவிட்டு சம்மர் பேலஸை எரித்து
தன் ஆத்திரத்தைத் தனித்துக் கொண்டனர். அதன்பின்னர் சியன்ஃபெங் பேரரசர் (Xianfeng
Emperor) அந்நியத்துருப்புகள் தங்கிக்கொள்ள அனுமதி அளித்ததோடு,
அந்த நாடுகள் தங்கள் அலுவலகங்களைக் கட்டிக் கொள்ளவும்
ஒத்துக் கொண்டார். ஆனால் 1900ல் நடந்த எட்டு
நாடுகள் இணைந்து மேற்கொண்ட பாக்சர் புரட்சியின்போது அவர்கள் பீஜிங்கை
முற்றுகையிட்டு இந்த அலுவலகங்கள் அனைத்தையும் எரித்துவிட்டனர்.
Monument of People's Heroes |
1954ல் 'கேட் ஆஃப் சைனா'
முற்றிலுமாக எடுக்கப்பட்டதால் சதுக்கம் இன்னும் அகலமானது.
மாவோ சேதுங் இந்த சதுக்கத்தை உலகத்திலேயே அகலமான சதுக்கமாக ஆக்குவதற்கு முயற்சி எடுத்து நவம்பர் 1958ல் ஒரு ஆணையை பிறப்பித்தார். அவருடைய ஆசை, இந்தச் சதுக்கம்
குறைந்து 5 லட்சம் பேர் கூடக் கூடிய அளவில் இருக்க வேண்டும் என்பது. 1959 ஆகஸ்ட்டில் இந்த பிராஜக்ட் முடிவடைந்தது. இதற்காக
சுற்றியிருந்த பல கட்டடங்களும் அமைப்புகளும் இடித்துத் தள்ளப்பட்டன. 1958-59-ல் சீனக்குடியரசின் 10ஆவது ஆண்டுவிழாவைக் கொண்டாடும் வண்ணம் சதுக்கத்தின் தென்புறத்தில் சீன ஹீரோக்களுக்கு ஒரு
நினைவுத்தூண் அமைக்கப்பட்டது. அது தவிர சுற்றிலும் 10 முக்கியமான பெரும் கட்டிடங்கள் அமைக்கப்பட்டன. ஒவ்வொன்றும்
சீனக்கட்டடக்கலையை பறை சாற்றும் பிரமாண்டங்கள். அரண்மனைகளே தோற்றுப் போகும்
அளவுக்கு அழகாக அமைந்த கட்டடங்கள் அவை.
The Great Hall of People |
“தி கிரேட்
ஹால் ஆஃப் தி பீப்புள்”, “நேஷனல் மியூசியம் ஆஃப் சைனா”, ஆகியவை குறிப்பிடத்தகுந்தவை.
1976ல் மாவோ இறந்தபிறகு "கேட் ஆஃப் சைனா” இருந்த இடத்தில் ஒரு மாபெரும்
மசூலியம் அவருக்காக கட்டப்பட்டது. அதனால் கூட்டம் இன்னும் அதிகரிக்கலாம் என்று
நினைத்து சதுக்கம் மேலும் அகலமாக்கப்பட்டு, இப்போது முழுச் செவ்வக வடிவில்
காட்சியளிக்கிறது. இப்போது இங்கே ஆறுலட்சம் பேர்வரை கூட முடியுமாம்.
Great Hall inside |
நினைவுத்தூண்
அருகில் சென்று பார்த்தேன். “சுமார் 125 அடி உயரம்”, என்றான் லீ. இந்தச் சதுக்கம் முற்றிலுமாக
வெட்டவெளியில் இருந்தது. எங்கும் மரங்கள்
கிடையாது. ஆனால் உயரமான விளக்குத்தூண்கள்
ஆங்காங்கே இருந்தன. ஒவ்வொரு தூணிலும்
கேமரா பொருத்தப்பட்டிருந்தது. எல்லா இடங்களிலும் சீனப் போலீஸ்காரர்களைக்
காண முடிந்தது. சீக்ரட் சர்வீஸ் ஆட்களும்
இங்கு யூனிபார்ம் இல்லாமல் இருப்பார்கள் என்று லீ சொன்னான்.
பக்கத்தில்
உள்ள சாங்கன் அவென்யூவில் தான் ஊர்வலங்கள் நடக்கும் என்றான். நியூயார்க்கில் உள்ள
ஐந்தாம் அவென்யூ போல.
இந்தச்
சதுக்கத்தின் இன்னொரு சிறப்பு 1949ல் அக்டோபர் 1ஆம் தேதி, இங்குதான் மாவோ சேதுங் மக்கள் சீனக்குடியரசை
பிரகடனம் செய்தார். (People's Republic of China). அதுமட்டுமல்லாமல்
ஆண்டு விழாக்களில் சீன ராணுவத்தின் அணிவகுப்பும் இங்குதான் நடக்குமாம்.
'தி கிரேட் ஹால் ஆஃப் சைனா', என்பது நம்மூர் பார்லிமென்ட் கட்டடம் போல. சீன அரசின் உயர்
தலைவர்கள் இங்குதான் கூடி முக்கிய முடிவுகளை எடுக்கின்றனர்.அதன் பக்கத்தில் உள்ள
பெரிய ஹாலில் காலை நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகள் ஆகியவை நடக்குமாம்.
சதுக்கத்தின்
நடுவிலிருந்து பார்த்தால் முன்புறம் சாலையைத் தாண்டி விலக்கப்பட்ட நகரின்
முன்வாயில் தெரிந்தது.
Entrance of Forbidden City |
அதன் பிரதானமாக மாவோ சேதுங் அவர்களின் பெரிய படமொன்று
மாட்டப்பட்டிருந்தது. நடுவில் நினைவுத் தூண் இருந்தது. இடதுபக்கம் கிரேட் ஹால்,
வலதுபக்கம் மியூசியம். என்னுடைய பின்புறத்தில் மாவோ
சேதுங்கின் மசூலியம். அதன் பின்னால் ஜெங்கியாங்மென் என்றழைக்கப்படுகிற பீஜிங்கின்
நுழைவாயில் கோபுரம் வண்ணமயமாக ஜொலித்தது.
மாவோவின்
மசூலியத்தில் அவரின் பாடம் செய்யப்பட்ட உடல் வைக்கப்பட்டிருக்கிறது என்பது ஞாபகம்
வர,
லீயிடம் கேட்டேன் “உள்ளே அனுமதிப்பார்களா”?, என்று.
“தாராளமாக வா
போகலாம். நான் வெளியே நின்று கொள்கிறேன். நீ உள்ளே போய்விட்டுவா”, என்றான்.
மசூலியத்தின் பிரமாண்டமான கட்டடத்தை நோக்கிச் சென்றோம்
கிட்டப்போய்ப் பார்த்தால் அங்கு மக்கள் நீண்ட வரிசையில் நின்றிருந்தனர். மாவோவின்
உடலைப் பார்க்கும் ஆவலோடு நானும் வரிசையில் நின்றேன்.
-
தொடரும்.
எத்தனை தகவல்கள்.....
ReplyDeleteதொடர்கிறேன்.