நியூஜெர்சி மாநிலத்தில் உள்ள நுவார்க் (Newark) (இதனை நெவார்க் என்று பலர் உச்சரிக்கின்றனர்,அது தவறு) என்ற
ஊரில் உள்ள மிகப்பெரிய புருடென்ஷியல் சென்ட்டரில்
மறுபடியும் இளையராஜா கச்சேரி என்று கேள்விப்பட்டவுடன் மனைவியிடம் சொன்னேன். "ஐயையோ இளையராஜாவா வேணவே வேணாம்",
என்றாள். என்னவென்று கேட்டபோது போன தடவை இளையராஜா கச்சேரிக்குப்போய்
அவஸ்தைப் பட்டு வந்ததைச் சொன்னாள். அவள் ஏற்கனவே சொன்னது அப்போதுதான் ஞாபகம்
வந்தது.
போன முறை 3-4
வருடங்களுக்கு முன்னர் இளையராஜா வந்தபோது, கச்சேரி
ஆரம்பிக்குமுன் யாரும் நடுவில் கை தட்டக்கூடாது, விசில் அடிக்கவே கூடாது என்று
சொன்னதோடு அப்படிச் செய்த கூட்டத்தைப் பார்த்து திட்டினாராம். அதோடு கச்சேரியும்
சுதி சேராமல் நன்றாகவே இல்லை என்று சொன்னாள். ஆலயத்தில் ஏதோ மீட்டிங் இருந்ததால்
அப்போது நான் செல்ல முடியவில்லை. இளையராஜாவின் ரசிகன் (அவர் பாடல்களுக்கு மட்டும்)
என்ற முறையில் இந்தத்தடவை எப்படியாவது போய்விட வேண்டும் என்று என் மனைவியை ஒத்துக்
கொள்ள வைத்து, நான், என் மனைவி , என்
தம்பி அவன் மனைவி ஆகிய நாலு பேருக்கும் டிக்கட் வாங்கினேன்.
கச்சேரி செப்டம்பர் 24, 2016 சனிக்கிழமை மாலை ஏழு மணிக்கு. கொஞ்சம்
சீக்கிரமாகவே கிளம்பி வெரஜோனா (இந்தப்பாலத்திற்கு என் வயது ஆனால் அது மிகவும்
உறுதியாய் இருக்கிறது.) பாலத்தைத் தாண்டி நான்காவது மாடியில் காரை பார்க்
செய்துவிட்டு அரங்கில் நுழைந்தோம். என் தம்பி மனைவி ஊர் ஞாபகத்தில்
முறுக்கு, மிக்சர், காராச் சேவு என்று ஒரு பைநிறைய தின்பண்டங்களை எடுத்துவர அதை
அனுமதிக்க மறுத்தனர். எனக்கு ஆஹா வடை
போச்சே மொமெண்ட். திரும்பவும் ஒரு நடை போய் காரில் வைத்துவிட்டு
மெட்டல் டிடக்டர் மூலம் உள்ளே நுழைந்தோம். ஒரு ஆப்பிரிக்கப் பெண்மணி எங்களை அன்போடு(?) வரவேற்று உள்ளே அழைத்துச் சென்று, எங்கள் டிக்கட்டுகளை வாங்கிக் கொண்டு, “உங்களுக்கு
இடதுபுறம் முன்வரிசையில் இருக்கைகள்
ஒதுக்கப்பட்டிருக்கின்றன”, என்று சொல்லி $250 டாலர் டிக்கட்டுகளைக் கொடுத்தாள். “இல்லை இல்லை $70 டாலர் டிக்கட்டுகளே போதும்”, என்று சொன்னபோது,
"இல்லை இது உங்களுக்கு இலவச
அப்கிரேட்", என்றாள். என்னடாது நான் வருமுன்னேயே என் புகழ் இங்கு
வந்துவிட்டதோ என்று நினைத்து அரங்கில் உள்ளே நுழைந்தால் அரங்கு கிட்டத்தட்ட காலி,
ஓ அதுதான் விஷயமா? என்று உள்ளே போய் உட்கார்ந்தோம்.
Add caption |
புருடன்ஷியல் அரங்கு 5000 பேர் அமரக்கூடிய அரங்கு. போன தடவை டொரன்டோ மற்றும்
நியூஜெர்சி ஆகிய இரண்டு இடங்களுக்கு மட்டுமே இளையராஜா வந்ததால் ,அதுவும் முதல்முறை
என்பதால் பல தூர ஊர்களிலிருந்து மக்கள் விமானத்தில் பறந்து வந்து
கலந்து கொண்டதால் அரங்கு நிறைந்ததாகக் கேள்விப்பட்டேன். இப்போது பல ஊர்களில்
கச்சேரி இருந்ததால் நியூயார்க், நியூஜெர்சி, டெலவேர் மற்றும் கனடிக்கட் ஆகிய ஊர்களிலிருந்து மட்டுமே
வந்திருந்தனர். அதுமட்டுமல்லாமல் இது தெலுங்குப் பாடல்களும் கொண்ட கச்சேரி
என்பதால் பல தமிழர்கள் வராமல் இருந்திருக்கலாம். அதோடு போன தடவை திட்டு
வாங்கியவர்கள் வருவதைத் தவிர்த்திருக்கலாம். என் மனைவி கூட மிகுந்த தயக்கத்துடன்
தான் வந்தாள்.
ஒரு வருடம் முன்பு ஆரம்பிக்கப்பட்ட 8K ஆன்லைன் தமிழ் ரேடியோவின் பொறுப்பாளர் சுரேஷ் அவர்கள்தான்
இளையராஜாவின் அமெரிக்க டூருக்கு ஏற்பாடு செய்தவர். இம்முறை,
வாஷிங்டன் DC, சான் ஃபிரான்சிஸ்கோ , சியாட்டல் ,டல்லாஸ்
,அட்லாண்டா,
நியூஜெர்சி ஆகிய
இடங்களில் கச்சேரி இருந்தது. நியூஜெர்சியில் நடந்த இசை நிகழ்ச்சிக்கு,
நியூஜெர்சி, நியூயார்க், டெலவேர், கனடிக்கட் தமிழ்ச் சங்கங்களும், தெலுங்கு அசோயேஷன்களும் உதவி புரிந்தன.
உள்ளே நுழைந்த போது மேடை முழுதும் இந்தியாவிலிருந்து வந்திருந்த சுமார் 50 இசைக்கலைஞர்கள் தங்கள் கருவிகளை ஆயத்தம் செய்து கொண்டு இருந்தனர். முக்கிய பாடகர்களாக,
மனோ, சித்ரா, கார்த்திக், சாதனா சர்க்கம், ஆகியோரும் கோரஸ் பாடுவதற்காக சுறுமுகி,
அனிதா, NSK ரம்யா, பிரியா ஹிமேஷ், வாசு, செந்தில், ஷ்யாம், ஹரிஷ் போன்ற தேர்ந்த பாடகர்களும்
வந்திருந்தனர். இதுதவிர சர்ப்ரைஸ் கூடுதலாக யுவன் சங்கர் ராஜாவும் வந்திருந்தார்.
பேஸ் கிடார், ரிதம் கிட்டார், லீட் கிட்டார், ஷெனாய், சாக்சபோன், டிராம்ஸ் 3, கீபோர்டு -3, தபேலா 3, காங்கோ, தவில், செல்லோ 3, எஃபக்ட்ஸ், ரிதம் பேட்ஸ், வயலின் 20, புல்லாங்குழல், வீணை-3, ஆகியவை இருந்தன. லீட் கிடாரில் சுதர்சனம் மாஸ்டர் மகன் சதா,
சாக்சபோன் MSV ராஜா,
காங்கோ தவிலில் மதுரைக்கார நண்பர் சுந்தர்,
செல்லோவில் குன்னக்குடி
வைத்தியநாதனின் பையன், தபேலாவில் பிரசாத், பேஸ் கிட்டாரில் சசி, கீபோர்டு பரணிதரன், புல்லாங்குழலில் நெப்போலியன் என்ற
அருண்மொழி இவர் சிறந்த பாடகரும் கூட, சாக்சபோன் மேக்ஸ் ஆகியோர் குறிப்பிடக் கூடிய கலைஞர்கள். இதுதவிர
இளையராஜாவிடம் வெகுகாலமாக இருக்கும் கண்டக்டர் பிரபாகர். எல்லோரையும் ஒரே மேடையில்
பார்ப்பது மிகவும் ஆனந்தமாக இருந்தது. ஒவ்வொருவரும் அற்புதக்கலைஞர்கள்.
8k மைல்ஸ் தீனாவும் தெலுங்கு RJ ஒரு பெண்ணும் வந்து தமிழிலும் தெலுங்கிலும் வந்தவரை
வரவேற்று, நடிகர் நெப்போலியனை மேடைக்கு வரவழைத்தனர். நெப்போலியன் இப்போது
பெரும்பாலும் இருப்பது நியூஜெர்சியில். பாரதிராஜாவின் துணை இயக்குநராக இருந்து,
அவரால் ‘புதுநெல்லு புதுநாத்து' என்ற படத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு பல படங்களில்
நடித்துப் புகழ்பெற்றார். பின்னர் திமுகவில் இணைந்து MP
யாகி, முக அழகிரியை வெளிப்படையாக ஆதரித்ததால் ஒதுக்கப்பட்டு
அரசியலில் இருந்து தற்சமயம் விலகி யிருக்கிறார்.
ஒரு மென்பொருள் நிறுவனத்தை ஆரம்பித்து அது நன்றாக நடப்பதாகக் கேள்வி. அவரின்
முழுக்குடும்பமும் முன்னால் அமர்ந்திருந்தது. தேனிக்காரர் என்பதால் மேடையில் வந்து
இளையராஜாவின் பண்ணைப்புரம், பாரதிராஜா, இப்போது பாரெங்கிலும் உள்ள புகழைப்பற்றி சுருக்கமாக
உரையாற்றி இறங்கினார்.
இசை கூட்டி கூடி அரங்கை நிரப்ப, கோரஸ் பாடகர்கள், "குருப்பிரம்மா, குரு விஷ்ணு" என்று தங்கள் குருவான இளையராஜாவைப்
பற்றிப்பாட, வெள்ளை ஜிப்பா, வெள்ளை வேட்டி, வெள்ளை செருப்புடன் ஒரு சிறிய உருவம் மேலே ஏறி மேடைக்கு
நடுவில் வந்தது. அரங்கு முழுவதும் கிட்டத்தட்ட எழுந்து நின்று அதிர அதிர கைதட்டி
அமர,
இளையராஜாவின் ஹார்மோனியம் உயிர் பெற்றது. அதன்பின் எதிர்பார்த்தவண்ணமே, "ஜனனி ஜனனி ஜகத்காரணி நீ" என்று சற்றே கரகரத்த குரலில்
இளையராஜாவின் நாதம் எழுந்து அரங்கில் மிதந்து வந்து காதில் பாய்ந்தது.
பின்னால் திரும்பிப்பார்த்தால் மக்கள் ஓரளவுக்கு வந்து சேர்ந்திருந்தனர்.
அதன்பின் வந்த பாடல்களையும், நடுவிலே நடந்த சுவையான நிகழ்வுகளையும் அடுத்தடுத்த பதிவுகளில் எழுதுகிறேன்.
தொடரும்
என்னது நீயூஜெர்ஸியில் இளையராஜா நிகழ்ச்சி நடந்ததா? அது கூட தெரியாமால் நான் இருந்திருக்கிறேன் பாருங்கள்
ReplyDeleteஅய்யய்யோ அப்ப மாட்டியது நான் மட்டும்தானா ?
Deleteஅவரு ரெண்டு வருசத்துக்கு ஒரு முறை அமேரிக்கா முழுக்க ஒரு ரவுண்டு வருவாரு. அன்னக்கிளியில் ஆரம்பிச்சு தாரா தப்பட்டை வரை வாசிச்சிட்டு சூப்பர் கிளாப்ஸ் கூட சரியான கல்லாவும் வாங்கிட்டு போவார்.
Deleteஉனக்கும் எனக்கும் தான் அதை போய் பார்க்கும் ரசிப்புத்தன்மை இல்லை. நமக்கு தான் யு டியூப் இருக்கே.
மச்சானா பாத்திங்களா ... அதை அங்கே போய் அவர் எதிரில் கேட்டா என்ன? இல்ல வீட்டுல பூரிகாட்டிக்கு பயந்து ஹெட் போன் போட்டு கேட்டா என்ன?
சரி.. பரதேசி அங்கே என் போனாரா?
அம்பி .. அவர் Celebrity! ரிப்பன் வெட்ட கூட கூப்பிட்டு இருப்பாங்க!
ரிப்பன் வெட்ட கூப்பிட்டாங்களா, அட சாமி இப்படியெல்லாம் ஏத்தி விட்டு கழுத்தை வெட்டாம இருந்தா சரி .
Deleteஅண்ணே, அது சரி.. 70 டாலர் டிக்கட் 250 க்கு அப் கிரேட் ஆச்சி! எனக்கு மதுரைக்கு எல்லாம் எழுபதே அப் கிரேட் தான்.
ReplyDeleteஅட கூட்டம் சேரலை தம்பி அதனாலதான் அந்தக்கூத்து நடந்துச்சு.
Deleteஆல்பி சார், நீங்க வர்ரீங்கனு அப்கிரேட் தந்திருப்பாங்க.
ReplyDeleteஇசைஞானியின் பாடல் தேர்வை அறிய கணிணி பெட்டி அருகே
ஆவலாக கையை வைத்து காத்திருக்கிறோம். :)
நன்றி பாஸ்கர், அடுத்த பாடல் என்னவென்று பெப்பின் சொல்லிவிட்டார் .மற்றவற்றை அடுத்த பதிவில் சொல்கிறேனே .
Deleteநியூவர்க்கின் ப்ரூடன்ஷியல் அரங்கம்.
ReplyDeleteதமிழகத்தின் தார்மீக உரிமையான காவேரி நீரை உரிய
நேரத்தில், உரிய அளவில் கர்நாடகா திறந்திருக்குமானால் எப்படி ஆகப் பிரவாகமாக தமிழகத்தை நோக்கி காவேரி பாய்ந்து வந்திருக்குமோ, அதே பிரவாகம் அன்று இசை வடிவில் நிகழ்ந்தது. இப்படியொரு இசை விருந்து அந்த அரங்கில் நிகழ்ந்திருக்குமோ என்பது ஐயமே!
RJ தீனா மற்றும் நெப்போலியனின் மிகச்சிறிய உரைகளுடன் நிகழ்ச்சித் தொடங்குகிறது. ஜனனி ஜனனி என்று ராஜா பாட ஆரம்பிக்கும்போது
ஏற்பட்ட உற்சாகம், உவகை, உடல் சிலிர்ப்பு அடங்க மூன்றரை மணித்துளிகள் ஆனது. தொடர்ந்து நான் கடவுள் படத்தில் இடம்பெற்ற "ஓம் சிவோகம்" பாடல் ஒரு ஆன்மீக அனுபவத்தைக் கொணர்ந்தது. இந்த இரு பாடல்களைக் கேட்டால் நாத்திக நல்லவர்களும் இறை நம்பிக்கை பெற்றிடும் பேராபத்து இருக்கின்றது.
இது போன்று ஒரு நிகழ்வு நான் கண்டதில்லை, 16 ஆண்டுக்கால அமெரிக்க அனுபவத்தில்!
So electrified right from the beginning to the end of the show!!!
உண்மைதான் பெப்பின், நீங்கள் வருவது தெரிந்திருந்தால் சந்தித்து இருக்கலாமே ?
Deleteஆமாம் Alfy .சந்தித்து இருக்கலாம்...நீங்கள் வருவது தெரியவில்லை.
ReplyDeleteநிறைய நண்பர்களைச் சந்திக்க முடிந்தது.