ஃபெட்னா
தமிழர்
திருவிழா
-2016 பகுதி -8
இதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும்
இதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும்
http://paradesiatnewyork.blogspot.com/2016/09/blog-post.html
கடந்த ஜூலை 1 முதல் 4 வரை நடந்த வடஅமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை நடத்திய தமிழர் திருவிழாவில் விழா அரங்கைச் சுற்றி பலவித ஸ்டால்கள் இருந்தன.
இடைவேளையில் அரங்குகளை நானும், என் மனைவியும், ஃபிளோரிடாவில் இருந்து வந்த கவிஞர் ஆரூர் பாஸ்கரும் வளைய வந்தோம். வெளியே 'மகளிர் மட்டும்' சூழ்ந்து கொண்டு ஒரு ஸ்டாலை மொய்த்துக் கொண்டிருந்தனர். என்னவென்று எட்டிப் பார்த்தால், மண மணக்க மல்லிகைப்பூவும், கனகாம்பரமும் விற்றுக் கொண்டிருந்தனர். ஆஹா இங்கு பெண்கள் கூட்டம் கூடுவதில் ஆச்சரியமில்லைதான். ஒரு முழம் ஆறு டாலர்கள். இதில் என்ன அதிசயம் ? என்று கேட்பீர்களென்றால் நீங்கள் இங்கு அமெரிக்காவில் வாழவில்லை என்று அர்த்தம்.
ஏனென்றால் இந்தப் பூக்களெல்லாம் இங்கு கிடையாது. இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பூக்களை விற்பனை செய்த பெண்ணே இது சூப்பர் ஐடியா. அதோடு ஆயிரக்கணக்கான பெண்கள் அதுவும் தமிழ்ப்பெண்கள் கூடும் இடத்தில் அந்தப் பூக்கள் மடமடவென்று விற்றுத் தீர்ந்தன. அதன்பின் அரங்கம் சென்றால் "மல்லியப்பூ வாசம் என் மாமன் மேல வீசும்" என்று சுகந்த நறுமணம் அங்கே நிரம்பியிருந்தது. என் மனைவியும் ஆசையுடன் வாங்கி வைத்துக் கொண்டாள்.
மாலை நேரத்தில், எங்கள் முன்னால் உட்கார்ந்திருந்த பல பெண்கள் சூடியிருந்த மலர்கள் வாடிவிட்டது. என் மனைவியின் தலையிலும் பூ வாடியும்,
கொட்டிப்போன இடத்தில் நாறும் தொங்கிக் கொண்டு இருந்தது.
அந்த நாரை இழுத்துவிட்டு
"பூவோடு சேர்ந்த நாறும் மணம் வீசும் தானே"
என்றேன்.
:பூதான் உதிர்ந்து போச்சே”
“இந்த இடத்தில் பூ என்று உன்னைத்தான் சொன்னேன்”
சிரிப்பதற்குப்
பதில் முறைத்தாள்.
பூவுக்குள் பூகம்பம்.
எனக்கு நேர் எதிரே உட்கார்ந்திருந்த ஒருவர் சூடிய மலர் மட்டும் வாடாமல் இருந்தது. எனக்குத் தொட்டுப் பார்க்க வேண்டும் போல தோன்றியது. ஆனால் எப்படி அடுத்த பெண்ணின் தலையைத் தொட்டுப் பார்ப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கையில், என் எண்ண ஓட்டங்களை அறிந்தது போல், என் மனைவி சட்டென பெண்ணின் பூவைத் தொட்டுவிட்டாள். அந்தப் பெண் உடனே திரும்பிப் பார்க்க, 'நான் இல்லை இவள் தான்" என்று என் மனைவியைக் காண்பித்தேன். கோபப்படாமல் அவள் சிந்திய புன்னகைப் பூக்களில் சில மல்லிகைப் பூக்கள் தெரிந்தன.
என் மனைவி சொன்னாள் "அது உண்மையான மலரல்ல" என்று.
“அய்யய்யோ அப்ப பல் செட்டா ?”
“என்ன உளர்றீங்க ?”
“இல்லை இல்லை ஒண்ணுமில்லை”
என் மனைவி பேசுவது அந்தப்
பெண்ணின் தலையில் இருந்த மலரைப்பற்றி
என்று சட்டென உறைத்தது. ஆனால் அது அச்சு அசலாக உலராத மலராத
மல்லிகைப்பூச் சரம் போலவே இருந்தது. அட இது கூட சூப்பர் ஐடியாதான்.ஆனாலும்
பிளாஸ்டிக் மலருக்கு மணமில்லையே. “வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது”, என்ற பாடல் ஞாபகம்
வந்தது.
என் மனைவிக்கு ரெண்டு சீட் தள்ளி முன்னால்
உட்கார்ந்திருந்த பெண்ணின் தலையிலும் வாடாத மல்லிப்பூ
இருந்ததை நான் சுட்டிக் காண்பித்தேன். “அது பொய் மலர் போலத் தெரியவில்லை”,
என்றேன். என் மனைவி, “இல்லை இல்லை அதுவும் பிளாஸ்டிக்தான்”, என்று
சொல்லி இடதுபுறம் சாய்ந்து சிறிது எக்கி தலையைத்
தொட்டுப் பார்த்தாள். என்னிடம் ஆச்சரியமாக 'ஓ இது ரியல்' என்றாள்.அந்தப் பெண்ணும் திரும்பிப்பார்க்க,
"உங்கள் தலையில் மட்டும்
எப்படி பூ வாடவில்லை ?", என்று கேட்டாள்.
பூ விற்கும் பெண் மாலையில் மறுபடியும் வந்து விற்க,
நிறையப்பேர் வாடிய பூவை தூக்கி எறிந்துவிட்டு,
மீண்டும் புதிய மலர்களை வாங்கிக் கொண்டனர் என அந்தப் பெண்
சொன்னார்.
என் மனைவியும் உடனே
வெளியே போய் திரும்பவும் மல்லிகைப் பூச்சரத்தை வாங்கி வந்தாள். மலராத மொட்டாய்
ஈரம் சொட்ட சூடிக் கொண்டு வந்தாள். " ஒரு மல்லிகை மொட்டு,
மலர்க்கரம் பட்டு", என்ற பாடலை முணுமுணுத்தபடி தமிழை ரசித்தேன்.
ஆஹா அரங்கு நிறைந்த மல்லிகை வாசத்தோடு தமிழ் மணமும் இணைந்து
வீச,
அதிக வாசனை வீசுவது மலரா? தமிழா? என்று பட்டிமன்றம்
வைக்கலாம் போலத் தோன்றியது.
தமிழர் திருவிழா மணக்க மணக்க நடந்து, அரங்கம் ஏதோ பூலோக சொர்க்கம் போலக்
காட்சியளித்தது. அருமையாக நடத்திய அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
-தொடரும்.
பின்குறிப்பு : ஏதோ பழைய பாடல்களைக்குறிப்பிட்டதால்,
நான் பழைய ஆள் என்று நினைக்கவேண்டாம் .எனக்கு பழைய பாடல்கள் பிடிக்கும் அவ்வளவுதான்
.
ஆகா...தமிழ்மணம் வீசும் ஃபெட்னாவில் மல்லிகை மலர்வாசமா?
ReplyDeleteமணக்க மணக்க எழுதிய ரசனையை ரசித்தேன்.
ஆமா...மலர்மணம் பற்றிச் சரி, அரங்கில் வீசிய தமிழ்மணம் பற்றி அடுத்த வாரம் எழுதுவீர்களா? எதிர்பார்ப்புடன்..நண்பன், நா.முத்துநிலவன்.
ஐயாவுக்கு வணக்கம் , பெட்னா தமிழர் திருவிழாவைப்பற்றிய எனது எட்டாவது பதிவு இது .தொடர்ந்து எழுதிக்கொண்டு இருக்கிறேன் .
Deleteஆல்பி சார், விழாவில் எனக்கு பக்கத்திலிருந்த நீங்கள் மலரின் வாசம் அறிய புறப்பட்ட பாண்டியனாகியது எனக்குத் தெரியாமல் போய்விட்டதே !? :)
ReplyDeleteநம்ம பாண்டிய ரத்தம் எங்கே போனாலும் விடமாட்டேங்குது கவிஞரே
Deleteஆஹா ஆறு டாலரில் மல்லிகை... எஞ்சாய்.
ReplyDeleteஎன்ன டெல்லியிலே இதை விட அதிகமா ?
DeleteOur people never giveup our habits where ever they gone.jasmine ,love for their husband,children,and sharing to their mom by phone everything for hours
ReplyDeleteOur people never giveup our habits where ever they gone.jasmine ,love for their husband,children,and sharing to their mom by phone everything for hours
ReplyDeleteThank you Raja,
Deleteமதுரை மல்லியின் வாசம்
ReplyDeleteஇந்தப் பதிவின் மூலமும்
நுகர முடிந்தது
வாழ்த்துக்களுடன்...
நன்றி ரமணி .
Delete