Showing posts with label பாலா சுவாமிநாதன். Show all posts
Showing posts with label பாலா சுவாமிநாதன். Show all posts

Thursday, August 23, 2018

சுப வீரபாண்டியனின் பேச்சும் ஞான சம்பந்தனின் வீச்சும் !!!!!


Fetna – 2018 பகுதி 4
இதற்கு முந்திய பகுதியைப்படிக்க  இங்கே சொடுக்கவும்.
http://paradesiatnewyork.blogspot.com/2018/08/blog-post.html
Image result for fetna 2018 dallas

வெள்ளியன்று நிகழ்ச்சிகள் முடிந்து சனிக்கிழமை காலை கிளம்பி ரெடியாகி அரங்குக்குச் சென்றோம். அருமையான காலை உணவு முடிந்து அரங்கில் அமர்ந்தோம். அரங்கு முற்றிலுமாக மாற்றியமைக்கப்பட்டிருந்தது. வட்ட மேஜைகள் அகற்றப்பட்டு வெறுமனே நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. பேரவையின் ஆண்டு விழாவின் பொதுநாளான அன்று மிகத்திரளான தமிழ் மக்கள் வந்திருந்தனர். மொத்த எண்ணிக்கை 5500ஐத்  தாண்டி விட்டது என்று யாரோ சொன்னார்கள். அன்றைய நாளில் நடந்த நான் ரசித்த முக்கிய நிகழ்ச்சிகளை மட்டும் சொல்கிறேன் .
இந்தியாவிலிருந்து வந்திருந்த நாதஸ்வர தவில் குழு மங்களகரமான துவக்கத்தைக் கொடுத்தார்கள். அடுத்தது தமிழ்த்தாய் வாழ்த்தும் அமெரிக்க தேசிய கீதமும் பாடி  முடித்தனர்.
அது முடிந்தபின் திருக்குறள் ஓதும் நிகழ்ச்சி நடந்தது. ஓதப்படக் கூடிய ஓதப்படவேண்டிய  ஒன்றுக்கான எல்லாத்தகுதிகளும் திருக்குறளுக்கு நிச்சயமாக உள்ளது தானே.
Chair / Co-Chair person
செந்தாமரை பிரபாகர்
Fetna அமைப்பின் தலைவர், செந்தாமரை பிரபாகர் முகமலர்ச்சியுடன் வரவேற்புரை ஆற்றினார். செந்தாமரையல்லவா மலர்ச்சியில்லாமல் இருக்குமா? அவரைத் தொடர்ந்து ஒருங்கிணைப்பாளர் கால்டுவெல் வேள் நம்பியும் வரவேற்று மகிழ்ந்தார் நெகிழ்ந்தார். அடுத்து நர்த்தகி நடராஜ் அவர்களின் பயிற்சியில் ஏராளமான குழந்தைகளும், பெண்களும் திருக்குறள் நடனம் ஆடி அசத்தினர். இதுவரைக்கும் இப்படியொன்றை நான் பார்த்ததில்லை. அற்புதமாக இருந்தது. பிள்ளைகளின் திறமை மட்டுமல்லாமல் பயிற்சியாளரின் திறமையும் அங்கே ஒருங்கே வெளிப்பட்டது. அதோடு திருக்குறளுக்கு ஆடியது மேனியை சிலிர்க்க வைத்தது.
Chair / Co-Chair person
கால்டுவெல் வேள்நம்பி
சிறப்பாக வந்திருந்த விழா மலர் வெளியீடு முடிய, கன்னியாகுமரியிலிருந்து வந்திருந்த தம்பதியினர், முனைவர் அருள்செல்வி மற்றும் ஆனந்த் குழுவினர் வந்து மரபு சார்ந்த பறை, பம்பை சிலம்பம் ஆகியவற்றைப் பயன்படுத்தி  அருமையான நிகழ்ச்சியொன்றை நடத்தினர். Fetna முடிந்த கையோடு பல ஊர்களுக்கும் இவர்கள் சென்று பறை பயிலும் பட்டறைகளை நடத்தினர். நியூயார்க்கிலும் நியூயார்க் தமிழ்க் கல்விக் கழகத்தின் தலைவர் பாலா சுவாமிநாதன் அவர்கள் முயற்சியாலும், நியூயார்க் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் அரங்கநாதன் ஆதரவிலும் ஒரு பயிற்சிப் பட்டறை இங்கும் நடத்தப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை என்பதால் என்னால் இதில் பங்கு கொள்ள முடியவில்லை. என்னவோ தெரியவில்லை. அமெரிக்காவெங்கும் பறை கற்றுக் கொள்வதற்கு மிகுந்த ஆர்வம் நிலவுகிறது. குறிப்பாக நியூயார்க், நியூஜெர்சி, கனக் டிக்கட், வாஷிங்டன் ஆகிய ஊர்களில் குழுக்களும் இருக்கின்றன. அருமையாக வாசித்து அசத்துகிறார்கள்.
பறை என்பது தாழ்த்தப்பட்டவர்களின் இசைக்கருவி என்ற தவறான எண்ணம் நீங்கி தமிழரின் பாரம்பரிய இசைக் கருவி என்று மாறி அதனைக் கற்றுக் கொள்ள ஆர்வம் கொள்வது அமெரிக்கத் தமிழர் மத்தியில் தான் அதிகம் காணப்படுவதாக தெரிகிறது.
Chair / Co-Chair person
பழனிச்சாமி
அந்த நிகழ்ச்சி முடிந்தவுடன் சுப. வீரபாண்டியன் தலைமையில் கருத்துக்களம் நடந்தது. அடியேனும் இதில் கலந்து கொண்டேன். மகளில் மரபு  மற்றும் மழலையர்  மரபு அன்றும் இன்றும் என்ற தலைப்புகளில் இரண்டு அணிகளாக மொத்தம் 10 பேர் உரையாற்றினோம். உரையாற்றுபவர்களை  ஏற்கனவே தேர்ந்தெடுத்து அதற்கு வாட்ஸ்அப் குழு அமைத்து அதற்கு பழனிச்சாமி என்ற நல்ல ஒரு நெறியாளரை ஏற்பாடு செய்திருந்தனர். அவர் எங்களை எல்லாம் மிகவும் பொறுமையாக வழி நடத்தி, ஆலோசனைகளைச் சொல்லி நெறிப்படுத்தி வந்தார். ஒவ்வொரு  ஞாயிற்றுக் கிழமை இரவும் 9 மணிக்கு தொலைபேசியில் ஒரு கலந்துரையாடல் நடந்தது. பல ஊர்களிலிருந்தும்  ஏன் கனடாவிலிருந்தும் கூட இதில் மொத்த பத்துப்பேரும் ஆர்வமாக கலந்து கொண்டனர். நான் ஞாயிற்றுக்கிழமை என்பதால் பல முறை கலந்து கொள்ள முடியாவிட்டாலும் ஒவ்வொரு முறையும் பழனி பரவாயில்லை என்று சொன்னது என்னை குற்றப்படுத்தி நெகிழவைத்து விட்டது. பேசிய பலரும் சங்க காலத்திலிருந்து இந்தக் காலம் வரை எடுத்துப்பேசி அசத்தினர். ஆனால் சுப வீரபாண்டியன் அவர்களின் தொகுப்புரை மிகவும் அருமை. ஒரு தேர்ந்த பேச்சாளிக்கு என்னென்ன குணங்கள் தேவை என்பதை அவரைப் பார்த்துக் கற்றுக் கொள்ளலாம். ஒவ்வொருவர் பெயரையும் ஞாபகம் வைத்து அவர்களுடைய  கருத்துகளுக்கான மாற்றுக்  கருத்துகளை நாசூக்காக வைத்ததாகட்டும், பிற்போக்குச் சிந்தனைகளை விட்டு முற்போக்காக எப்படி வரவேண்டும் என்று சொன்னதாகட்டும், நேரத்துக்குள் முடிக்க வேண்டிய கட்டாயத்திலும் சொல்ல வேண்டியவற்றை அருமையாக தொகுத்துச் சொல்லியும் அற்புதமாக இருந்தது. தாம் கொண்ட திராவிட சிந்தனைகளிலிருந்து வழுவாது ஆனால் வேறு எவரையும் புண்படுத்தாது இவர் பேசியபோது இவரை மாதிரியான ஒரு தலைவர் அல்லவா நமக்கு இருக்க வேண்டும் என நினைத்தேன். அவர் கூட சில நிமிடங்கள் பழகியதும் மேடையைப் பகிர்ந்து கொண்டதும் எனக்குக் கிடைத்த பெரும் வாய்ப்பென்று நினைக்கிறேன். 

பேசிய கடைசிப் பேர்களில் ஒருவனாக இருந்தாலும் பழனி சீக்கிரமாகப் பேசி முடிக்க வேண்டியதாலும், என் உரை இன்னும் சிறப்பாக அமைந்திருக்கலாம் என்பது என் கருத்து. ஏற்கனவே தயாரித்திருந்த உரையில் நேரக் கட்டுப்பாடு கருதி எங்கே வெட்ட வேண்டும் எங்கே ஒட்ட வேண்டும் என்று உடனுக்குடன் முடிவு செய்வது ஒரு கலை தான்.

அதன்பின் வெவ்வேறு தமிழ்ச் சங்கங்களிலிருந்து சிறப்பு நிகச்சிகள் நடத்தப்பட்டன. மதிய நிகழ்வுகளில் முக்கியமாக  பேராசிரியர் ஞானசம்பந்தன் தலைமையில் கவியரங்கம் நடந்தது. தமிழன்பன் தலைமையில் நடக்க வேண்டிய ஒன்று அவர் வந்து சேர முடியாதலால் ஞானசம்பந்தன் தலைமை தாங்கினார். தமிழன்பன் ஏற்கனவே சொல்லியிருந்த தலைப்புகளில் கவிதைகள் எழுதப்பட்டு தேர்வு செய்யப்பட்ட கவிதைகள் மட்டுமே அரங்கேறின.    

கவியரங்கத்தில் ஞானசம்பந்தன் பேசிக் கொண்டே இருந்தார். பல சமயங்களில் அவர் பேசியது சுவையாக இருந்தாலும் சிரிப்பை வரவழைத்தாலும், தொட்டுத்தொட்டு நான்ஸ் டாப்பாக போய்க் கொண்டிருந்தது எல்லோரையும் அயர வைத்துவிட்டது. கவியரங்கத்தில் பேசுவதும் காணாத ஒன்றுதான்.
நிறைய கவிதைகள் சிறப்பாக இருந்தன குறிப்பாக அல்லது வழக்கம்போல் மகேந்திரன் பெரியசாமி மற்றும் கனிமொழி ஆகியோரின் கவிதைகள் சுவையாக இருந்தன.
Image result for fetna 2018 dallas

-தொடரும்.

Thursday, March 22, 2018

அடிமைத்தனத்தை ஒழித்த ஆப்ரகாம் லின்கன் !


Image result for Lincoln movie
பார்த்ததில் பிடித்தது
லின்கன்
ஆப்ரகாம் லின்கன் அவர்களின் வாழ்க்கையின் முக்கிய பகுதிகளை வேறு ஒரு கோணத்தில் காட்டுகிற படமே லின்கன் என்ற இந்தப் படம். 2012ல் வெளிவந்த இந்தப்படம் இப்போது நெட் பிலிக்சில் உள்ளது.
அமெரிக்க நாடு பழமையான நாடு அல்ல.  இந்தியாவைத் தேடி அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்த கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடிக்கும் போது இதுதான் இந்தியா என்று தான் நம்பினார். இங்கு வாழ்ந்த பழங்குடி மக்களை இந்தியர் என்றே நினைத்தார். அதனால்தான் இவர்களுக்கு சிவப்பிந்தியர் என்ற பெயர் இன்றுவரை நிலைத்திருக்கிறது. சிறுசிறு பகுதிகளாகப் பிரிந்து பல மொழிகள் பேசின பழங்குடி மக்கள் இங்கு வாழ்ந்து வந்தனர். ஒவ்வொரு  குழுவுக்கும் ஒரு தலைவன்  இருந்தான்.நாகரிகத்தில் பின் தங்கியிருந்த இந்த மக்களை தோற்கடிப்பது பெரிதான காரியமாக இருக்கவில்லை. பெரும்பாலான தென் அமெரிக்க வட அமெரிக்கப் பகுதிகளிலும் பழங்குடி மக்கள்தான் சிறுசிறு குழுக்களாக வாழ்ந்து வந்தனர். எனவே ஐரோப்பியர் இந்தப் பகுதிகளுக்கு வந்து நிரம்பினர். தென் அமெரிக்கா முழுவதுமாக ஸ்பானிஷ் மொழி பேசும் மக்கள் நிறைந்தது இப்படித்தான். வட அமெரிக்காவில் இருக்கும் கனடா, மெக்சிக்கோ, அமெரிக்க ஐக்கிய நாட்டிலும் பெருவாரியாக இவர்கள் குடியேறினர். இவற்றுள் பல பகுதிகள் ஸ்பெயின் அரசனின் கட்டுப் பாட்டில் இருந்தது. புதிய  வல்லரசாக உலகத்தின் பல பகுதிகளை ஆக்ரமித்த இங்கிலாந்தின் கண்ணில் பட, கனடா மற்றும் அமெரிக்க பகுதிகளை அவர்கள் ஆக்ரமித்துக் கொண்டனர். இந்த ஆக்கிரமிப்பு பல வருடங்களாக தொடர்ந்த பின் அமெரிக்காவில் வாழ்ந்த பல இன மக்களை ஒன்று சேர்ந்து  பிரிட்டிஷாரின் ஆக்கிரமிப்பை எதிர்த்து போர் புரிந்து  ஆங்கிலேயரை விரட்டி அடித்து தங்கள் சொந்த அரசை நிறுவினர்.
Image result for Lincoln movie

அவ்வாறு நிறுவிய காலத்திலிருந்து மிகுந்த தொலைநோக்கு கொண்ட பல தலைவர்கள் அமெரிக்காவை தொடர்ந்து முன்னேற்றி வந்ததால் இப்போது உலகின் தலைசிறந்த நாடாக அமெரிக்க ஐக்கிய நாடு விளங்கி வருகிறது. வெறும் 13 காலனிகளைக் கொண்டு சுதந்திரப் பிரகடனம் செய்த அமெரிக்க நாடு இப்போது மொத்தம் 50 மாநிலங்களைக் கொண்டு இருக்கிறது. இதில் போரினால் வென்று இணைக்கப்பட்டவை என்று பெரும்பாலும் இல்லையென்றே சொல்லலாம்.
முழு நாடும் இரண்டாகப் பிரிந்து ஒன்றோடு ஒன்று யுத்தம் செய்து உள்நாட்டுப் போரில் வாடிக் கொண்டிருந்த சமயத்தில், அமெரிக்க ஐக்கிய நாட்டின் தலைவராக இருந்த ஆப்ரகாம் லின்கன் அவர்கள் எடுத்த சீரிய முயற்சியால் போர் முடிந்து அமைதி திரும்பியதோடு, அமெரிக்காவில் வாழும் எல்லோருக்கும் எல்லா உரிமையும் உண்டு என்பதைக் கொண்டு வந்த மாபெரும் தலைவர் ஆப்ரகாம் லின்கன்  அவர்கள்.
அந்தச் சமயத்தில் கறுப்பின மக்கள் பெரும்பாலும் அடிமைகளாக இருந்தார்கள். ஓட்டுரிமை கிடையாது. அரசாங்கத்தில் பங்கு கிடையாது. அது மட்டுமல்ல பெண்களுக்கும் கூட ஓட்டுரிமையோ சம உரிமையோ இல்லாத காலமது.
ஆப்ரஹாம் லின்கன் எந்த எதிரிப்புகளையும் பொருட் படுத்தாது, அடிமைத்தனம் என்பதை  முற்றிலும் ஒழித்து எல்லோருக்கும் சம உரிமை கொடுக்க  வகை செய்தார். நல்ல காரியங்களை செய்வதற்கு சில குறுக்கு வழிகளில் சென்றால் பரவாயில்லை,  இறுதிப் பயன் மட்டும் நன்மையாக இருந்தால் போதும் என நினைத்து செயலாற்றிய உறுதியான மனம் படைத்தவர் ஆப்ரகாம் லின்கன். நல்ல தலைவர்களை இந்த உலகம் உயிரோடு விட்டுவைக்குமா ? ஆப்ரகாமின் நிலமையும் அப்படித்தான் ஆயிற்று .
Image result
Stephen Spielberg
உலகத்தின் தலைசிறந்த இயக்குநர்களில் ஒருவரான ஸ்டீபென் ஸ்பீல்பர்க் அவர்கள் தயாரித்து இயக்கிய படமிது. எனவே தரத்திற்கு எந்தக் குறைவுமில்லை. நடிகர்கள் எல்லாம் உண்மைக் கதாபாத்திரங்கள் போலவே இருக்கிறார்கள், நடிக்கிறார்கள். குறிப்பாக லின்கனாக நடித்த டே லூவிஸ் (Day Lewis) தூள் கிளப்பியிருக்கிறார். இந்தப்படம் டோரிஸ் கேர்ன்ஸ் (Doris Kearns Goodwiin) குட்வின் எழுதிய “டீம் ஆப் ரைவல்ஸ் தி பொலிட்டிகல் ஜீனியஸ் ஆப் ஏப்ரகாம் லின்கன்” என்ற புத்தகத்தின் அடிப்படையில்  திரைக்கதை அமைத்தவர் “டோனி குஷ்னர்” .ஜான் வில்லியம்-ன் இசை சிவில் வார் யுகத்தை அப்படியே கொண்டு வந்திருக்கிறது.
Image result for day lewis
Day Lewis
ஒரு வித்தியாசமான ஆப்ரகான் லின்கனின் மறுபுறமான  கணவன், தந்தை, நாட்டின் பொறுப்பான தலைவர் என்ற பல முகங்களை இந்தப் படத்தின் மூலம் எடுத்துக் காட்டியிருக்கிறார் ஸ்டீபன் ஸ்பீல்பர்க்.
அமெரிக்க வரலாற்றின் முக்கிய பகுதியான லின்கனின் வாழ்க்கை பார்க்க வேண்டிய ஒன்றாகும்.
முற்றும்
முக்கிய அறிவிப்பு 

டொரோண்டோவில்  நடக்கும் ஒரு ஆலய நிகழ்ச்சியில் பங்கு பெறுவதற்காக மார்ச் 24 மற்றும் 25 தேதிகளில் கனடா வருகிறேன் .சந்திக்க விரும்பும் நண்பர்கள் தொடர்பு கொள்ளவும் ( 1212-363-0524 , alfred_rajsek@yahoo.com)


Wednesday, January 24, 2018

நியூயார்க்கில் வாழும் எட்டாவது வள்ளல் !!!!!!!!!!!

Image result for bala swaminathan stony brook
Bala and Praba
           ஹார்வர்ட் தமிழ் இருக்கைக்கு நிதி திரட்டும் வண்ணமாக ஜனவரி ஏழாம் தேதி,  நியூயார்க்  , லாங் ஐலண்டில் உள்ள அக்பர் ரெஸ்டாரண்டில் நடைபெற்ற ஒரு மதிய உணவு நிகழ்ச்சியில்( Lunch Banquet) அடியேனும் மனைவியுடன் கலந்துகொண்டேன். தலைக்கு $250  என்ற போதிலும் நான் எதிர்பார்க்காத வண்ணம் நியூயார்க் வாழும் தமிழர்கள் பெருந்திரளாக குடும்பம் குடும்பமாக கலந்து கொண்டனர். 
Image result for bhuvana karunakaran
Bhuvana Karunakaran


இதற்கு பெரு முயற்சி எடுத்தவர்கள் நண்பர் பாலா சுவாமிநாதனும், புவனா கருணாகரன் அவர்களும். அவர்களோடு இணைந்து நியூயார்க் தமிழ்ச்சங்க தலைவர் அரங்கநாதன் , இலங்கைத்தமிழர் சங்கமான முத்தமிழ்  மன்றத்தின் தலைவர் மருத்துவர் நந்தகுமார் , தமிழ்நாடு பவுண்டேஷன் தலைவர் டாக்டர் குப்தா ஆகியோர் கொடுத்த ஆதரவுடன் சிறப்பாக நடந்து முடிந்தது .
தமிழ் இருக்கை


 சிறப்பு  அழைப்பாளர்களாக ஹார்வர்ட் தமிழ் இருக்கையை முன்னெடுத்து அதனை ஒரு உலகத்தமிழர் இயக்கமாக மாற்றிய பெருமை கொண்ட மருத்துவர் சம்பந்தம் , மருத்துவர் ஜானகிராமன், ஹார்வர்ட் தமிழ் பேராசிரியர் ஜானதன் ரிப்ளி ஆகியோர் கலந்து கொண்டனர் .இந்த நிகழ்வு மூலமாக மொத்தம் ஒண்ணே கால் லட்சம் டாலர்கள் சேகரிக்கப்பட்டது .எங்களுடைய இம்மானுவேல் தமிழ் ஆலயம் சார்பாகவும் ஒரு தொகை வழங்கப்பட்டது.
தமிழ் இருக்கை

               ஆனால் அதிசயவண்ணமாக ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டது.அது என்னவென்றால் லாங் ஐலண்டில் இருக்கும் சிறப்பு வாய்ந்த பல்கலைக்கழகமான ஸ்டோனி ப்ரூக்கில் நண்பர் பாலா சுவாமிநாதன் தன் சொந்த செலவில் ஒரு தமிழ் இருக்கையை உருவாக்கி இருக்கிறார் என்பதே அந்தச்செய்தி. இவர் ஏற்கனவே ஹார்வர்ட் தமிழ் இருக்கைக்கு கொடுத்தைப்பற்றி உங்களிடம் சொல்லியிருக்கிறேன் . தன் கொடையால் அரசையும் மிஞ்சிவிட்ட நண்பர் பாலாவுக்கு , அரங்கநாதன் , புவனா முயற்சியில் ஜனவரி 14ஆம் தேதி பொங்கல் தின மாலையில் ஹெரிடேஜ் இந்தியா என்ற உணவகத்தில் ஒரு சர்ப்ரைஸ்  பார்ட்டி கொடுத்தோம் .அதிலும் நண்பர்கள் திரளாய் வந்து பாலாவை பாராட்டு மழையில் நனைய விட்டனர் .அந்தச்சமயத்தில் அடியேன் வாசித்த கவிதையை கீழே கொடுக்கிறேன்    
With Ranga and Bala

மூச்சுக்கொடுத்த ஆண்டவனுக்கும்
பேச்சுக் கொடுத்த  தமிழ் அன்னைக்கும்
வாய்ப்புக் கொடுத்த அவைக்கும்
வணக்கங்கள் பலப்பல

பொங்கல் திருநாளில்
உங்கள் உள்ளத்திலும் இல்லத்திலும்
மகிழ்ச்சி பொங்கட்டும்
பொங்கல் வாழ்த்துக்கள் !!!

அதன் காணொளியைக்காண இங்கே க்ளிக்கவும்




                                                 
                                                  Courtesy: Pastor Johnson Rethinasamy.

பாலாவுக்கு நன்றி சொல்லி
பாடவந்தேன் இந்த பரதேசி !

தட்ட வேண்டிய இடங்களில் தட்டுங்கள் - கைகளைத்தான்,
குட்ட வேண்டிய  இடங்களில் குட்டுங்கள் - மேசையைத்தான்.

சங்கம் வளர்த்த
தங்க மாமதுரையில்
அங்கம் வளர்த்தவன் நான்!
(ஆனால் அவ்வளவாக வளரவில்லை)

ஆனால் பாலாவோ அதே
சங்கம் வளர்த்த
தங்க மாமதுரையில்
அறிவை வளர்த்தவர்
அதுதான்  இப்போது
வளர்ந்து கிளர்ந்து உயர்ந்து
தமிழை வளர்க்கிறது!

தமிழ்ப்பணி செய்வதில்
பாலா ஒரு கெத்து வெட்டு!
ஆனால் இந்தப்
பரதேசி ஒரு வெத்துவேட்டு!

மதுரை மண்ணில் ஒருமுறை
வலம் வந்தாலே
செம்மண் புழுதியும் அப்பிக் கொள்ளும்
செம்மொழித் தமிழும் ஒட்டிக் கொள்ளும் 
- இதில் சிக்கிய ஒருவர்தான் ஜானத்தன் ரிப்ளி

எனில் அங்கேயே
பிறந்து தவழ்ந்து
எழுந்து இருந்து
வளர்ந்து உயர்ந்த
பாலாவை தமிழ் சும்மா விடுமா?

இந்த பாலா யார்?

பள்ளி கொண்ட பெருமாள் சுவாமி
பாருக்கே தெரியும் ஆனால்
பள்ளி கண்ட பெருமாள் சுவாமி
யாருக்குத் தெரியும்? அது நம்ம
பாலா சுவாமிதான்
அவர் பள்ளி கொண்டது திருப்பாற்கடலில்
இவர் பள்ளி கண்டது அட்லாண்டிக் கடலில் (ஸ்டோனி புரூக்  )

முதல் இடை கடைச்சங்கங்கள் தெரியும்
இப்போது அமைந்திருப்பது கடல்ச் சங்கம் இந்தக்
கடற்சங்கத்தை அமைத்த
எட்டாவது வள்ளல்
என் தோழன் பாலா

பாலா ஒரு சிங்கம்
வீறு கொண்டு நடக்கும் சிங்கமல்ல - ஆனால்
நடக்குமிடமெல்லாம் தமிழ் முத்திரை பதிக்கும்  சிங்கம்
மீசை முறுக்கி வீரம் காட்டும் சிங்கமல்ல, தமிழ் மேல்
ஆசை காட்டி விவேகம் வளர்க்கும் சிங்கம்
பெருமை பேசி கர்ஜிக்கும் சிங்க மல்ல
நாக்கை நாசூக்காகக் கடித்து தமிழ் நலன் பேசும் சிங்கம்

பாலா
புகழ் உனக்குப் பிடிக்காது. ஆனால்
புகழுக்கு உன்னை ரொம்பப்பிடிக்கும்.


இப்போது பிரபா பற்றி (பாலாவின் மனைவி)
பிரபாவின் கண்களில் எப்போதும்
ஒரு சிறு மின்னல் மறைந்திருக்கும்
அதில் ஒரு குறு நகை உறைந்திருக்கும்
அது யாரிடமிருந்து யாருக்கு வந்தது?
பாலவிடமிருந்து பிரபாவுக்கா? இல்லை
பிரபாவிடமிருந்து பாலாவுக்கா?

இவரைப் பார்க்கும்போது
அள்ளிக்கொடுக்கும் பாலாவுக்குச்
சொல்லிக் கொடுப்பவர் போலவே தெரிகிறது.

ஆம்
இவரைப் பார்த்தால்
தட்டிக் கேட்பவர் போலத் தெரியவில்லை
தட்டிக் கொடுப்பவர் போல்தான் தெரிகிறது.
பிரபா, இதுதான்
உன் தமிழ் மரபா?

மனைவி அமைவதெல்லாம்
இறைவன் கொடுத்த வரம் என்பர் -ஆனால்
பாலாவுக்குப் பிரபா
அன்னை கொடுத்த வரம்
தமிழ் அன்னை கொடுத்த வரம்!

தமிழ்ச்சங்கம் கண்டவன் பாண்டியன்
தமிழ்ப்பள்ளி கண்ட பாலாவும் பாண்டியன் தான், அதைப்
பாட்டில் சொன்ன பரதேசியும் பாண்டியன் தான்.

பொங்கலின் இனிப்பு போல
உன் வாழ்க்கை என்றும் இனிக்கட்டும்
தமிழின் சிறப்பு போல
உம் வாழ்க்கை என்றென்றும் சிறக்கட்டும்
தையும் பிறந்தது
புது வழிகளும் திறக்கட்டும்
தமிழ் இருக்கைகளும் அமையட்டும்.

ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும்
ஆதவன் மறைவதில்லை
ஆயிரம் மைல்கள் கடந்து வந்தாலும் நம்மில்
அன்னைத் தமிழ் குறைவதில்லை

தமிழால் இணைவோம்
தமிழாய் முனைவோம்
தமிழாய் வாழ்வோம்

வாழிய செந்தமிழ்
வாழ்க நற்றமிழர்
வாழிய பாரத  மணித்திரு நாடு
வாழிய புகுந்த அமெரிக்க நாடும்
நன்றி வணக்கம்