Showing posts with label ஹிட்லர். Show all posts
Showing posts with label ஹிட்லர். Show all posts

Thursday, February 15, 2018

நேதாஜி செய்த தவறு !!!!!

Bosefilm.jpg

பார்த்ததில் பிடித்தது
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் - தி ஃபர்காட்டன்  ஹீரோ
            இந்தப் படத்தை ஏற்கனவே நான் பார்த்திருந்தாலும் நெட் ஃபிலிக்சில் மீண்டும் கண்ணில் தட்டுப்பட்டதால் கிறிஸ்துமஸ் விடுமுறை காலத்தில் உட்கார்ந்து பார்த்து முடித்தேன். சிறிது நீளமான திரைப்படம் என்றாலும் அவசியமாய் அனைவரும் பார்க்க வேண்டிய படம். சப் ஹெட்டிங் அல்லது குளோஸ்டு கேப்ஷன் (CC) இருப்பதால் இந்தி தெரியாதவர்களும் பார்க்கலாம்.
          நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் அவர்கள் இந்திய விடுதலைக்காக தான்   வகுத்துக் கொண்ட பாதையில் தளராது நடைபோட்டு இறுதிவரை போராடிய மாவீரர். அவர் பெயரைச் சொன்னாலே பிரிட்டிஷ் அரசாங்கம் நடுங்கியது. இந்திய நாடெங்கும் மட்டுமல்ல, ரஷ்யா, ஜெர்மனி, ஜப்பான் என்று பல நாடுகளில் அறியப்பட்டவராக இருந்தார். அவர் பெயர் சிலருக்கு அச்சத்தையும் பலருக்கு மரியாதையையும் ஊட்டியது.  
Image result for netaji subhash chandra bose

          காங்கிரஸ் கட்சியின் மீதும் காந்தி நேரு ஆகியோரின் மீதும் பெரும் மதிப்பு வைத்திருந்தார். கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அவர்களையோ காங்கிரஸ் பெரியக்கத்தையே அவர் ஒருபோதும் தரக்குறைவாகப் பேசியதுமில்லை. விமர்சித்ததும் இல்லை. தன்னுடைய படைப்பிரிவுகளுக்கு காந்தி நேரு எனப் பெயர் சூட்டியதிலிருந்து அதனை அறிந்து கொள்ளலாம் ஆனால் அவர்களின் மிதவாத கொள்கைகளினால் சுதந்திரம் தள்ளிப்போகிறது. அதனை  பிரிட்டிஷார் பலவீனமாக நினைத்துக்கொண்டு சுதந்திரம் தரமறுக்கிறார்கள் என்று நினைத்தார். போர் தொடுத்து  விரட்டினால் மட்டுமே பிரிட்டிஷாரை துரத்த முடியும் என நம்பினார். அதற்கான காரியங்களை தன் உயிரைப்பணயம் வைத்து நிறைவேற்ற முயன்று, அதே முயற்சியில் தன் இன்னுயிரையும் துறந்த உன்னதத்தலைவர் அவர்.     அவர் எடுத்த சில தவறான முடிவுகளாலும், உலகப் போரின் திசை மாறிப்போனதாலும் அவர் எடுத்த முயற்சி பலிக்கவில்லை.
Image result for netaji subhash chandra bose

          பிரிட்டனுக்கும் ரஷ்யாவுக்கும் ஒரு கோல்டு வார் இருந்தது. ஆனால் எதிரிக்கு எதிரி நண்பன் என்ற வகையில் பிரிட்டன், பிரான்ஸ் ரஷ்யா ஆகிய நாடுகள் ஒன்று சேர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
          நேதாஜிக்கு  வேறு வழியின்றி ஜெர்மனியிடம் செல்ல வேண்டிய நிலைமை. ஆனால் ஜெர்மனி ஒரு பைத்தியக்கார சர்வாதிகாரியான ஹிட்லர் கையில் இருந்தது. போஸ் அவர்கள் ஹிட்லரைப் பார்த்தும் அதனால் எந்த பிரயோஜனமும் இல்லை.
          போஸ் சற்றும் எதிர்பாராத விதமாக ஜெர்மனி ரஷ்யாவைத் தாக்கியது. அதற்கு ஜெர்மனியில் இருந்த இந்திய போர்க்கைதிகள் சுபாஷின் தலைமையில் உதவ வேண்டும் என்றும் எதிரிபார்த்தது.  நல்லவேளை அப்படி ஒரு தவறை அவர் செய்யவில்லை.
          ஜெர்மனியின் உதவி கிடைக்காது என்று தெரிந்தவுடன் அவர் பர்மாவுக்குக் கிளம்பினார். நல்லவேளை ஹிட்லர் அவரைச் சிறைப்படுத்தவில்லை. ஆனால் அங்கிருந்த  இந்திய போர்க்கைதிகள் 5000 பேரை அப்படியே விட்டுவிட்டு வரவேண்டிய  நிலைமை.
          ஆனால் ஜப்பானின் உதவி கிடைத்தது. எனவே இந்தியா தேசிய ராணுவம், பர்மா சிங்கப்பூர் பகுதிகளில் ஜப்பானின் உதவியோடு பல பிரிட்டிஸ் பகுதிகளில் முன்னேறியது.
          இதற்கிடையில் ஜப்பான் முட்டாள்தனமான ஒரு  காரியம் செய்தது. அது அதிகபட்ச திமிர்த்தனத்துடன் அமெரிக்காவின் பேர்ல் ஹார்பரைத் தாக்கியது. அது சிங்கத்தின் பிடரியை உலுப்பிய கதையாகிவிட்டது. அது வரை நடுநிலை காத்த அமெரிக்காவும் போரில் குதித்தது. அது பிரிட்டனுக்கு பெரும் சாதகமாக அமைந்தது.
          ஜப்பானில் நாகசாகி, ஹிரோஷிமாவில் அணுகுண்டைப் போட்டதோடு ஜப்பானின் பெருமை முற்றிலுமாக அழிந்து  போக அவர்கள் சரண்டர் ஆகி எல்லா நிலைகளிலுமிருந்தும்  பின்வாங்கி தங்கள் நாட்டுக்குள் முடங்கினர். இன்றுவரை அவர்கள் ராணுவத்தை முற்றிலும் குறைத்துக் கொண்டு தங்களுடைய உள்நாட்டு வளர்ச்சியில் மட்டுமே கருத்தில் கொண்டு வெகு சீக்கிரம் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ஆட்டோமொபைலில் உலகத்தில் தலைசிறந்து விளங்குகிறார்கள்.
          திடீரென்று முற்றிலும் மாறிப்போன சூழ்நிலையில் இந்திய தேசிய ராணுவம் வேறுவழியின்றி பின்வாங்கி சரண்டராக, போஸ் அவர்களின் முயற்சி வெறும் கனவாக முடிந்தது.
          ஜப்பானின் விமானத்தில் சென்ற அவர் விபத்தில் இறந்துபோனதாக அறிவிக்கப்பட்டது. அவருடைய முடிவு இன்றைய நாள்வரை ஒரு மர்மமாகவே இருக்கிறது.
          ஆனாலும் போஸ் அவர்களின் பெருமுயற்சியும் நம் நாட்டின் விடுதலைக்கு ஒரு பெரும் காரணமாக இருந்தது என்பதை யாராலும் மறுக்க முடியாது. அதுவும் அவர் மறைந்த  இரண்டு வருடங்களுக்குள் கிடைத்தது.
          இயக்குநர் ஷியாம் பெனகலின் உன்னத வரலாற்றுப் படைப்பு இது. ஆனால் வழக்கம்போல இந்தப் படத்திற்கும் எதிர்ப்பு வந்தது. குறிப்பாக தன் தலைவர் ஒரு ஆஸ்திரியப் பெண்ணை மணந்தது போல் காட்டப்பட்டதற்கும், அவர் தைவானில் விமான விபத்தில் இறந்ததுபோல் காட்டப்பட்டதற்கும்  கல்கத்தாவில் செயல்பட்ட  ஃபார்வர்டு பிளாக் கட்சியிலிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது.  எல்லாக் கட்சியினரும்  தங்கள் தலைவரை ஆதர்ஷ தலைவராக ஏற்றுக் கொள்ளும்போது அவரும் எல்லா ஆசாபாசங்களும் உள்ள ரத்தமும் சதையிலுமான மனிதர் என்பதை ஏனோ ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள். எனவே போஸ் அவர்களின் சொந்த ஊரான கல்கத்தாவில் திரையிடப்படவில்லை.
Image result for shyam benegal
Shyam Benegal
          அதோடு படத்திற்கு இன்னொரு முக்கியமான ஒன்று A.R. ரகுமானின் இசை. படத்தின் தரத்தை  வெகுவாக கூட்டுவதில் இசை பெரிதும் உதவுகிறது.
          2004ல் லண்டன் திரைப்பட விழாவில் வெளியிடப்பட்ட இந்தப்படம் சிறந்த தேசிய ஒருமைப்பாட்டுப் படம் என்ற நர்கிஸ் தத் விருதையும், சிறந்த கலை அமைப்புக்கான தேசிய திரைப்பட விருதையும் பெற்றது.
Image result for Actor sachin khedekar
Sachin Kedetkar
           சச்சின் கெடெக்கர் சுபாஷ் ஆக தன் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். ஆனால் ஏதோ ஒன்று குறைவாகவே தெரிந்தது.
          30 கோடி செலவில் எடுக்கப்பட்ட இந்தப்படம் கிட்டத்தட்ட 2 1/2 மில்லியன் ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்தது.
          இந்தியர் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய வரலாறு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் இந்திய தேசிய ராணுவத்தின் வரலாறு. படத்தின் தலைப்பில் மறந்து போன நாயகன் (Forgotten Hero)  என்று வருகிறது. மறக்கக்கூடிய மனிதரா அவர்?

-முற்றும்.

Thursday, September 14, 2017

சர்ச்சிலைக்கொல்ல நடந்த சதி !!!!!

Image result for கழுகு தரை இறங்கிவிட்டது.
படித்ததில் பிடித்தது
கழுகு தரை இறங்கிவிட்டது.
ஜேக் ஹிக்கென்ஸ் - தமிழில் கொரட்டூர் கே.என் ஸ்ரீனிவாஸ் - கண்ணதாசன் பதிப்பகம்.
வரலாற்று நவீனம் (Historical Fiction), அதுவும் உலகப்போர் சமயம் நடந்தது அதுவும் தமிழில் என்பதால் இந்தப் புத்தகத்தை உடனே வாங்கினேன்.
Image result for winston churchill
Winston Churchil
கண்ணதாசன் பதிப்பகத்தில் இப்படி சில முயற்சிகள் செய்திருக்கிறார்கள். எந்த அளவுக்கு வெற்றியடைந்திருக்கிறது? எவ்வளவு பிரதிகள் விற்றது என்று தெரியவில்லை. ஆங்கிலத்தில் எழுதும் நவீனங்கள், இங்கிலாந்திலோ அமெரிக்காவிலோ ஹிட் ஆகிவிட்டால் அதனை எழுதிய எழுத்தாளர்கள் மிகப் பிரபலமடைவார்கள். அதோடு பெரும் பணக்காரர்கள் ஆகிவிடுவார்கள் . அவர்களின் நாவல் கண்டிப்பாக சினிமாவாகவும் வந்துவிடும். உதாரணத்திற்கு டேன் பிரவுனைச் சொல்லலாம்.  
ஆனால் இந்தியாவில் சங்க காலத்திலிருந்து இதனைப் படிக்கும் உங்க காலம் வரைக்கும் இப்படி ஒருவரைக் கூட சொல்லமுடியாது. ஓரளவுக்கு புகழ் கிடைக்கலாம். ஆனால் நட்சத்திர எழுத்தாளர்களுக்கு கூட பெரும் பணம் கிடைக்க வாய்ப்பேயில்லை. ஆங்கிலத்தில் நான்கு புத்தகங்கள் எழுதி சம்பாதிப்பதை இங்கு நாநூறு புத்தகங்கள் எழுதினாலும் அதில் ஒரு சிறு சதவீதம் கூட அவர்கள் சம்பாதிக்க முடியாது. முழு நேர எழுத்தாளர் என்பது இப்போதெல்லாம் சுத்தப் பைத்தியக்காரத்தனம்.  ஏனென்றால் சுஜாதா போன்ற நட்சத்திர எழுத்தாளனின் புத்தகங்கள் கூட 2000 பிரதிகளுக்கு மேல் விற்காதாம்.
Related image
Jack Higgins
இங்கு ஒரு சில நாவல்கள் எழுதிப் உலகப்புகழ்பெற்ற ஜேக் ஹிக்கின்ஸ் (Jack Higgins) எழுதிய "தி ஈகிள் ஹேஸ் லேன்டட்" (The Eagle has landed) என்ற புத்தகத்தை வெகுகாலத்திற்குப்பின் கண்ணதாசன் பதிப்பகம் தமிழில் கொண்டுவந்திருக்கிறார்கள். புகழ் பெற்ற புத்தகங்களை மொழியாக்கம் செய்து வெளியிட பதிப்புரிமைக்கு மிகவும் செலவாகும். இது மிகவும் பழையது என்பதால் ஒருவேளை சல்லிசாக கிடைத்திருக்கும் என நினைக்கிறேன்.
Image result for Hitler
Hitler
இரண்டாம் உலகப்போர் மும்முரமாக நடந்து கொண்டிருந்த சமயம். ஜெர்மனின் ஆதிக்கம் கொஞ்சம் கொஞ்சமாக தகர்ந்து கொண்டிருந்தது. ஹிட்லர், ஹிம்லர், கோயபல்ஸ், கனாரிஸ் ஆகியோர் காரசாரமாக விவாதம் செய்கிறார்கள். ஏதாவது செய்து தோல்வியைத் தவிர்க்க வேண்டும் என்ற அழுத்தம். ஹிட்லர் எல்லோர் மேலும் எரிந்து விழ ஹிம்லர் ஒரு விபரீத முடிவை எடுக்கிறார்.
Image result for himmler
Himmler
அதுதான் இங்கிலாந்துக்கு ஒரு தற்கொலைபாராசூட் படையை அனுப்பி வின்ஸ்டன் சர்ச்சிலைக் கொலை செய்வது அல்லது கடத்திக் கொண்டு வருவது என்பது. ஏற்கனவே இந்த அதிரடிப் பாராசூட் படை இத்தாலியின் சர்வாதிகாரியான முசோலினியைக் கடத்திவந்திருந்தது.
இதற்கு மாஸ்டர் மைண்டாக மேக்ஸ் ரேடில் என்ற ஜெர்மானிய மேஜர் ஒருவர் செயல்பட்டு திட்டம் வகுக்கிறார். இதற்கிடையில் ஸ்டட்லி கான்ஸ்டபிள் என்ற பகுதிக்கு ஒரு சிறு ஓய்வுக்கு ரகசியமாக சர்ச்சில் வருகிறார் என்ற செய்தி ஒரு பெண் உளவாளி மூலமாகக் கிடைக்கிறது.

இங்கிலாந்தின் மேல் கோபங் கொண்ட டெவ்லின் என்ற ஒரு ஐரிஸ்காரர் முன்னே சென்று ஆயத்தங்கள் செய்யும் வேளையில் டாலி என்ற  ஆங்கிலப் பெண்ணிடம் காதலில் விழுகிறார். கர்னல் ஸ்டைனர் என்றவரின் தலைமையில் பாராசூட் படை அந்த ஊரில் ரகசியமாக இங்கிலாந்தின் நட்பு நாடான போலந்து ராணுவத்தின் யூனிபார்மில் வந்து இறங்குகிறார்கள். 
Image result for The Eagle has landed

அவர்கள் என்னமாதிரி திட்டமிட்டார்கள்? சரியான திட்டம்தானா? அவர்களின் முயற்சி எந்தளவுக்குப் பலித்தது என்பதை புத்தகம் படித்து தெரிந்து கொள்ளவும் அல்லது திரைப்படத்தையும் கண்டுபிடித்து பார்க்கலாம். இதே பெயரில் திரைப்படமும் வந்து கலக்கியது. 1977ல் இந்தப்படம் வந்தது. மைக்கல் கெய்ன் ஸ்டைனராகவும், டோனால்ட் சதர் லேண்ட் டெவ்லினாகவும், ராபர்ட் குவாலி ரேடிலாகவும், டோனால்ட் பிளசன்ஸ் ஹெய்ன்ரிச் ஹிம்லராகவும் நடித்துள்ளார்கள். நெட்பிலிக்சில் இது இல்லை. நூலகம் போய்த் தேட வேண்டும்.
இந்தப் புத்தகத்தை மொழி பெயர்த்த முனைவர் கொரட்டூர்  கே.என். ஸ்ரீனிவாஸ்  முடிந்தளவிற்கு முயன்றிருக்கிறார். ஆனாலும் சில அமெரிக்க அல்லது ஆங்கில லோக்கல் ஸ்லாங்களை  அவர் சரியாக மொழிபெயர்க்கவில்லை. சில உரையாடல்களை அப்படியே (Literal) மொழி பெயர்க்கக் கூடாது. அதனை தமிழில் பேசினால் எப்படியிருக்கும் எனக்கற்பனை செய்து தமிழாக்கம் செய்வது அவசியம். ஆனால் கதையின் சுவாரசியம் உங்களை ஆட்கொண்டு மற்ற சிறு தவறுகளை மறக்கடிக்கிறது.
கண்ணதாசன் பதிப்பகத்தின் முயற்சிகளையும் பாராட்ட வேண்டும். இது போன்ற கிளாசிக் நாவல்கள் தமிழில் மொழி பெயர்க்கப் படவேண்டியது அவசியம். ஒவ்வொரு நாவலை எழுதுவதற்கும் அமெரிக்கரோ, ஆங்கிலேயரோ, எவ்வளவு முயல்கிறார்கள் என்பதையும் நாம் அறிந்து கொள்ளலாம்.
இரண்டாவது உலகப்போரில் நடந்த மறைக்கப்பட்ட சம்பவத்தின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்த நாவலை வரலாற்று ஆர்வலர்கள் படித்து மகிழலாம்.

முற்றும் .