படித்ததில் பிடித்தது
இந்தியப் பயணக் கடிதங்கள்.
எலிஸா ஃபே,
சந்தியா பதிப்பகம்
தமிழில் அக்களூர் ரவி.
இந்திய
நாடு ஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்டுக் கிடந்தபோது, கிரேட் பிரிட்டன் என்றழைக்கப்பட்ட இங்கிலாந்து நாட்டிலிருந்து, ஆளும் தரப்பின் அதிகாரிகளாகவும், அலுவலர்களாகவும், இராணுவ
வீரர்களாகவும், வியாபாரம் செய்பவர்களாவும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு வந்தவர்கள்
ஏராளமானவர்கள்.
இங்கிலாந்திலிருந்து
மட்டுமல்ல, ஃபிரான்சு, ஜெர்மனி,
ஹாலன்ட் போன்ற பல நாட்டவர் நாடு பிடிக்க இங்கு வந்தனர். வணிகம்
செய்ய வந்தவர்களைச் சொன்னால்
கணக்கிலிடங்காது.
Eliza Fay |
இப்படி
உலகின் பல பகுதிகளிலிருப்பவர்களையும் ஈர்த்திழுக்கும் வகையில் செல்வ வளமிகுந்த
நாடாக இருந்தது இந்தியத் திருநாடு.
இங்கிலாந்தின்
முதல் நுழைவாயிலாக இருந்தது, கல்கத்தா என்பதால் அதிகளவில் அங்கு ஆங்கிலேயர்
வரத்துவங்கினர். அதன்பின் சென்னையில் புனித ஜார்ஜ் கோட்டை அமைந்தபின் சென்னை
ஆங்கிலேயர் ஆட்சிக்கும் வர்த்தகத்திற்கும் மையமானது.
இங்கிலாந்தின்
கிழக்கிந்தியக் கம்பெனியின் மையமாக கல்கத்தா விளங்கியபோது அங்கு பிழைப்புத்தேடி
வந்த ஒரு வழக்கறிஞர் புதிதாக திருமணமான தன் மனைவியையும் தன்னோடு அழைத்துவந்தார்.
அந்த மனைவியின் பெயர்தான் எலிஸா ஃ பே (Elissa Fay) விமான வசதிகள் இல்லாத அந்தக் காலத்தில் வெளிநாட்டுப் பயணத்திற்கு ஒரே வழி கப்பற்பயணம் தான்.
எலிஸா
ஃபே அவர்கள் இங்கிலாந்திலிருந்து இந்தியா வந்த பயணத்தின் போது ஊரிலிருந்த
உறவினர்களுக்கு அவருடைய பயண அனுபவங்களை
அப்படியே அவ்வப்போது கடிதங்களாக எழுதினார்.
அந்தக் கடிதங்களில் தன்னுடைய பயணத்தில் நடந்த சுவையான நிகழ்வுகளையும்,
இக்கட்டுகளையும் பற்றி விரிவாக எழுதியுள்ளார். அதன் தொகுப்புதான்
இந்தப்புத்தகம், ஆங்கிலத்தில் எழுதப்பட்ட மூலத்திலிருந்து
தமிழில் மொழிபெயர்த்தவர் அக்களூர் ரவி அவர்கள். சில இடங்களில் சில
ஆங்கிலப்பதங்களை (slang) அப்படியே மொழி பெயர்த்திருந்தது பொருந்தவில்லை, ஆனால் பெரும்பாலும்
நன்றாகவே மொழிபெயர்த்திருக்கிறார்.
1779ல் லண்டனிலிருந்து கிளம்பி காலே வரை வந்த பயணத்தில் அந்தக் காலக்கட்ட
வரலாற்று சமூக சூழல்கள் வெளிப்படுகின்றன. அது படிப்பதற்கு ஒரு நாவல் போலச் சுவையாக
இருக்கின்றன. அதில் சில தகவல்களை மட்டும்
கீழே தருகிறேன். முழுவதுமாக அறிந்து கொள்ள புத்தகத்தை வாங்கிப்படியுங்கள்.
1)
முதலில் அவர்
இந்தியப்பயணத்தை பெரும்பாலும் சாலைவழியாக ஏன் மேற்கொள்ள வேண்டுமென தெரியவில்லை.
அதுவும் ஐரோப்பா வழியாக வந்ததாகக் குறிப்பிடுகிறார்.
2)
ஐரோப்பாவில்
தெருவில் கரடி, முள்ளம்பன்றி போன்றவற்றை வைத்து
வித்தைகள் நடந்து கொண்டு இருந்ததையும், கழைக்கூத்தாடிகள் நம்
இந்தியாவைப்போல் அங்கு இருந்ததையும் குறிப்பிடுவது ஆச்சரியமாக இருக்கிறது.
3)
சாலைப்பயணத்தில் ஒரு
சமயம் எட்டுக்குதிரைகள் பூட்டிய அஞ்சல் வண்டியில் இடம் கேட்டு சென்றதாகக்
குறிப்பிடுகிறார்.
4)
செயின்ட் டென்னிஸ்
என்ற கத்தோலிக்க ஆலயத்தில் புனிதர் தாமஸின் கண், மேரியின் பால் என்று வினோத பொருட்கள் இருப்பதை எழுதி கேலி செய்கிறார்.
5)
பாரிசின் வழியாக
பயணம் செய்யும்போது பிரெஞ்சு பேரரசி மேரி அன்டைனட்டைப் பார்த்ததாகவும். அந்தப் பேரரசி
மிகவும் நல்லவள் என்றும் சொல்லுகிறார்.
6)
யூதர்கள்
கொல்லப்படுவது சீன் நதியில் தள்ளப்படுவது என்பதையெல்லாம் எழுதி கண்டிக்கிறார்.
7)
பாரிசு நகரில்
நுழையும் போது, அது பெரிய ஒரு குப்பைத் தொட்டி போல இருந்தது
என்று சொல்கிறார். அங்கு தங்கிய விடுதியை மிகவும் மோசம் என்று குறிப்பிடுகிறார். ஆனால் இப்போது பாரிசு எந்தளவுக்கு
முன்னேறியுள்ளது என்பதைப் பார்க்கும்போது நம்நாடும் மிகவும் விரைவில் முன்னேற
வேண்டுமெனத் தோன்றுகிறது.
8)
தேயிலை தயாரிக்க
அங்கு மண்பாண்டங்கள் பயன்படுத்தப் பட்டன என்கிறார்.
9)
பாரிசில் சலோன் சர்
சாவோன் என்ற இடத்தில் பார்த்த லெகான் கோழிகளைப் பற்றி எழுதுகிறார்.
10)
கப்பல் பயணம்
செய்யும்போது ஜோடியைப் பிரிந்த புறா தற்கொலை செய்ததைப்பார்க்க நேரிட்டதை உருக்கமாக
விவரிக்கிறார்.
11)
அலெக்சாண்டிரியாவில்
குதிரைகளை முஸ்லீம்கள் மட்டும்தான் பயன்படுத்த வேண்டும் என்றும் மற்றவர்களுக்கு
கழுதைதான் என்பதைச் சாடுகிறார்.
12)
அங்கு செயின்ட்
ஏதோனேசியஸ் என்ற பாரம்பரிய கிறிஸ்துவ ஆலயம் மசூதியாக மாற்றப்பட்டது,
கிறிஸ்துவர்களுக்கு தனி வரி ஆகியவைச் சொல்லிச் செல்கிறார்.
13)
சிதைந்துபோயிருந்த
கிளியோபாட்ராவின் அரண்மணையைப் பார்வையிட்டதை விளக்குகிறார்.
14)
கெய்ரோவில் உள்ள
நைல் நதி,
அங்கு நடந்த பைபிளில் சொல்லப்பட்டிருக்கும் ஜோசப்பின் கதையை நினைவு
கூர்வதோடு, அங்குள்ள பிரமிடுகளை கட்டியது அடிமையாக இருந்த
யூதர்கள் என்று சொல்லுகிறார்.
15)
பெரிய நகரமாக
இருந்தாலும் அழகு, மேன்மை மற்றும்
ஒழுங்கில்லாமல் இருந்ததைச் சுட்டிக் காட்டுகிறார்.
16)
கிறிஸ்தவர்களை அங்கு
Frank
என்று அழைக்கிறார்கள் என்று குறிப்பிட்டிருக்கிறார்.
17)
மோச்சா பாலை
நிலப்பயணத்தில் கொள்ளையரிடம் சிக்கி உயிர் தப்பித்து பின்னர் கடற்பயணத்தின் மூலம்
மலபார் கள்ளிக்கோட்டைக்கு (calicut) வந்திறங்கியிருக்கிறார்.
அப்போது அது ஹைதர் அலி வசம் இருந்திருக்கிறது. ஹைதர் அலியின் கேப்டன் அய்ரேஸ்
அவர்களை சிறைப்பிடித்து 15 வாரம் அடைத்து வைத்து
விட்டிருக்கிறார். அங்கு தேளும் பூரானும் நிறைந்திருந்தனவாம்.
18)
அங்கிருந்து கொச்சி
வழியாக இலங்கையின் காலே சென்று பின்னர்
சென்னை சென்றடைகிறார்கள்.
19)
சென்னை இத்தாலிய
நகரம் போன்ற மிக அழகிய நகரம் என்றும், மக்கள் விரும்பும் எந்த மதத்தையும் சுதந்திரமாக அங்கு பின்பற்றலாம் என்று எழுதியிருப்பது
பெருமையாக இருந்தது.
20)
சென்னையில் செயின்ட்
தாமஸ் மவுண்ட் சாலை மரங்கள் சூழ்ந்து அழகாக இருந்தது. அடையாறு ஆலமரம் சென்றது
என்று விவரிக்கிறார்.
21)
அதன்பின் கல்கத்தா
வந்து சேருகிறார். பூரி ஜெகன்னாதர் உற்சவத்தில் தேரடியில் விழுந்து உயிர்விடும்
மக்கள் நேரடியாக சொர்க்கம் செல்வார்கள் என்று பின்பற்றப்பட்ட மூடநம்பிக்கையைச்
சாடுகிறார்.
22)
ஹுக்ளி நதி தேம்ஸை
விட அழகானது
அகலமானது என்று
சொல்லுகிறார்.
23)
வில்லியம்
கோட்டையில் வாரன் ஹேஸ்டிங்சை சந்தித்தது, அவருடைய மனைவி ஆன் மரியாவுடன் நட்பு
பாராட்டியது என்று விளக்குகிறார்.
24)
கல்கத்தாவில்
வக்கீல்களின் கட்டணம் இங்கிலாந்தை விட அதிகம் என்று சொல்கிறார்.
25)
சதி,
வியாதியஸ்தரை களிமண் பூசிக்கொல்தல் போன்ற கொடிய பழக்கங்களைச்
சாடுகிறார்.
இப்படி இப்புத்தகத்தைப் படித்தால்
அந்தக் கால கட்ட பல சமூக வரலாற்று சூழ்நிலைகளை பற்றி தெரிந்துகொள்ளலாம்.
முற்றும்
அழகான அறிமுகம் . அவ்வளவு தூரம் ஏன் சார், 50 வருடங்களுக்கு முன்புவரைக்கூட சென்னை அழகாய் இருந்திருக்கும்.
ReplyDeleteஅப்ப நீங்களும் நானும் பிறந்தபிறகுதான் இப்படி ஆயிருச்சா பாஸ்கர்?
Deleteசுவாரஸ்யமான புத்தகம் என்று தெரிகிறது. வாங்கவேண்டும். புகைப்படங்கள் எதுவும் இணைத்திருக்கிறார்களா? விலை?
ReplyDeleteபுகைப்படங்கள் அதிகமில்லை .சில படங்கள் உள்ளன .விலை ஞாபகம் இல்லை .ஆனால் அதிகம் இல்லை.நன்றி ஸ்ரீராம்.
Deleteஇன்றைய சூழலுக்கு நிறையவே அறிந்து கொள்ள வேண்டும்... அதற்காகவே இந்தப் புத்தகத்தை வாங்க வேண்டும்...
ReplyDeleteவருகைக்கு நன்றி நண்பரே .
Deleteஇது ! நான் எல்லாம் இங்கே பள்ளி கூடத்தில் நடந்த சில்லறை விஷயங்களை எழுதினு இருக்கும் போது நீங்க பாருங்க.. அருமையான தகவல். நிஜமாகவே இந்த அம்மணியோட புத்தகத்தை வாங்கி படிக்க போறேன். நன்றி அண்ணே!
ReplyDeleteசில்லறை விஷயங்கள்தான் கல்லறை வரைக்கும் நினைவில் இருக்கும் தம்பி விசு
Delete