FETNA
-2018 பகுதி 5.
இதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும்.
http://paradesiatnewyork.blogspot.com/2018/08/blog-post_23.html
அல்லது தெரிந்தவர்கள் என்பதால்
அவர்கள் கவிதைகளை மட்டும் நான் உன்னிப்பாக கவனித்திருக்கலாம்.
ஹார்வர்டு தமிழ் இருக்கையின்
வெற்றிவிழா நடந்தது. உலகத்தமிழர் ஒன்று சேர்ந்தால் என்னவெல்லாம் அதிசயங்கள்
நடத்தலாம் என்பது இதன் மூலம் விளங்கியது. இந்தக்குழு இதோடு விடுவதாய்த் தெரியவில்லை. உலகின் அனைத்து முக்கிய
பல்கலைக்கழகங்களியும் தமிழ் இருக்கைகளை அமைத்துவிட்டுத்தான் ஓய்வார்கள்
போலத்தெரிகிறது. இதோ அடுத்து இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜில் தமிழ் இருக்கை அமைக்க
உழைக்கத் துவங்கிவிட்டனர். இதில் முக்கியமான பணியாற்றிய மருத்துவர் ஜானகிராமன்
மற்றும் மருத்துவர் சுந்தரேசன் ஆகியோரை எவ்வளவு பாராட்டினாலும்
தகும்.
சிறிய வயதிலேயே தன்னுடைய முதல் நாவலான
காவல்
கோட்டத்திற்கு சாகித்ய அக்காடெமியின் விருது பெற்ற சு.வெங்கடேசன்
கீழடி அகழ்வாராய்ச்சியைக் குறித்தும் தொன்மையான தமிழர் வரலாறு எவ்வாறு
புறக்கணிக்கப்படுகிறது மறைக்கப்படுகிறது என்பதை தெளிவாக விளக்கினார்.
வெளிநாடுகளில் தமிழ் இருக்கை அமைப்பதோடு வெளிநாடு வாழ் தமிழரின் கடமை
முடிந்துவிடாது என்பதை உணர்த்தும் போக்கில் அந்த உரை அமைந்தது. தமிழகத்திலும் ஒரு
கண் இருக்க வேண்டும். இந்த நாவலைப்
படித்து நான் எழுதிய உரையைப் படிக்க இங்கே சுட்டவும்.
http://paradesiatnewyork.blogspot.com/2014/02/blog-post_19.html
இதற்கிடையில் பக்கத்தில் நடந்த இணை
நிகழ்வில் திரு. மம்மது அவர்களின் இசை உரையும் நாடகம் பற்றிய பேராசிரியர்
ஞானசம்பந்தனின் உரையும் கேட்டு மகிழ்ந்தேன். தமிழிசை மற்றும் கர்நாடக இசையில்
பாண்டித்யம் பெற்ற மம்மது தன்னுடைய பேத்தி பாடல்களைப் பாட அதனின் ராக தாளங்களை
விவரித்துப் பேசினார்.
இவரும் பேராசிரியர் மருதநாயகமும் ஃபெட்னா
முடிந்த கையோடு நியூயார்க் வந்து நியூயார்க் தமிழ்ச்சங்கம் ஏற்பட்டு செய்த ஒரு
நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சொற்பொழிவு ஆற்றினார்கள். இது எங்களுடைய ஆலயமான
இம்மானுவேல் லுத்தரன் திருச்சபையின் அரங்கில்
நடந்தது.
பின்னர் எல்லோரும் ஆவலோடு
எதிர்பார்த்த இசை நிகழ்ச்சி ஆரம்பமானது. பாடகர் கார்த்திக்,
டிரம்ஸ் சிவமணி மற்றும் பாடகி சத்திஸ்ரீ கலந்து கொண்ட இசை நிகழ்ச்சி,
பிரபலமான பேஸ் கிட்டார் வாசிக்கும் கீத் பீட்டர்ஸ் இதற்கு வாசித்தது
ஆச்சரியம் அளித்தது.
திரும்பிப்பார்த்தால் அரங்கு
முதன்முறையாக நிரம்பி வழிந்தது. எந்த இணை நிகழ்வும் இல்லாமல் இளைஞர்,
சிறியவர்கள் தவிர இதற்கென்றே வந்தவர்கள் போல ஏராளமானவர்கள்
இருந்தார்கள்.
பாடகர் கார்த்திக்கின் எனர்ஜியை நான்
நேரில் சிலமுறை பார்த்திருக்கிறேன். சில ஆண்டுகள் முன்பு சென்னை காமராஜர் அரங்கில்
லஷ்மண் ஸ்ருதி அவர்கள் வழங்கிய "சென்னையில் திருவையாறு" என்ற
நிகழ்ச்சியில் கார்த்திக் வழங்கிய கர்நாடக இசைநிகழ்ச்சி மிகச் சிறப்பாக இருந்தது.
குறிப்பாக அவரது ஆலாபனை மிக நீண்டது. அதன்பின்பு நியுஜெர்சியில் நடந்த அவரது இசை
நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு வெகுவாக ரசித்தேன். http://paradesiatnewyork.blogspot.com/2014/06/blog-post_12.html
ஆனால் இந்த முறை கார்த்திக்கின் இசை
நிகழ்ச்சி என்னைக் கவரவில்லை. ஏனென்றால் பெரும்பாலும் சில வருடங்களுக்கு முன்னர்
பாடிய அதே பாடல்களை அதே ஸ்டையில் பாடியதால் வெறுத்துவிட்டேன். அவர் பாடிய பாடல்கள்
மட்டுமல்ல சில பழைய பாடல்களும் அதே
பாடல்கள் வந்தன. ஓகே கண்மணியில் வந்த சினாமிக்கா தவிர எல்லாம் பழையன. சக்திஸ்ரீ
யாவது வேறு பாடல்கள் பாடுவாரென நினைத்தால் அவரும் அதே பாடல்களை பாடியதால்
அயர்ந்துவிட்டேன்.
ஆனால் சிறப்பம்சமாக டிரம்ஸ் சிவமணி
வந்து கிட்டத்தட்ட முக்கால் மணிநேரம் அவர் கொண்டு வந்திருந்த பல இசை கருவிகளை
வாசித்து அசத்தி விட்டார். இத்தனை தோல் கருவிகளை எப்படிக்கொண்டு வந்தார் என்பது
ஆச்சரியமாக இருந்தது. சிவமணியும் இல்லையென்றால் சுத்தப்போர்தான். ஆனால் கார்த்திக்
சக்திஸ்ரீ இசை நிகழ்ச்சியை முதன்முறையாகப் பார்த்தவர்கள் மிகவும் ரசித்தனர்
என்றுதான் சொல்ல வேண்டும்.
அதோடு அன்றைய நாள் நிகழ்ச்சிகள்
நிறைவு பெற்றன.
அந்தோணிதாசன் |
அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை ஜூலை 1,
2018 காலையில் ஃபெட்னா அமைப்பின் நிர்வாகக்குழு கூடியது. அதில் அடுத்த தலைவராக வாஷிங்டன் DC பகுதியைச் சேர்ந்த சுந்தர் குப்புசாமி அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அனைத்துப் பதவிகளுக்கும் தேர்தலோ சண்டை சச்சரவோ இல்லாமல் தேர்வு செய்யப்பட்டது
மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது.
நான்காவது நாளில் முக்கிய நிகழ்வாக
பிரபல நாட்டுப்புறப்பாடகர்கள் ஆக்காட்டி ஆறுமுகம் மற்றும் அந்தோணிதாசன் அளித்த இசை
நிகழ்ச்சி பட்டையைக் கிளப்பியது. நாதஸ்வரம் இல்லாமல் சீவாளி
போன்ற ஒன்றை வாயில் வாசித்தது சோபிக்கவில்லை. நாதஸ்வரமும்
இருந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். ரசிகர்களின் விருப்பத்திற்கிணங்க
அந்தோணிதாசன் பாடி மிகப்பிரபலமடைந்த சொடக்கு மேலே சொடக்கு போடுது என்ற பாடலையும் பாடினார்.
ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ் அதிகாரி கலியமூர்த்தி அவர்களின் உரை மிகச்சிறப்பாக இருந்தது.
கலியமூர்த்தி |
இன்னொரு அதிரவைத்த நிகழ்ச்சி நர்த்தகி
நடராஜ் அவர்களின் பரதநாட்டியம். வெகு சிறப்பாக இருந்தது. அவர் நாட்டியத்திற்கு
வந்த கதை நெகிழ வைக்கும் கதை.
நர்த்தகி நடராஜ் |
அடுத்து மாலையில் சிறப்பு
நிகழ்ச்சியாக முருக பூபதியின் “மணல்
மகுடி நாடக நிலம்” வழங்கிய பூழிப்பாவை
நடைபெற்றது. தெரு நாடகம் (Street Theater) அடிப்படையில் 80
களில் நான் நிஜ நாடக இயங்கங்களில் பெரிதும் கலந்து கொண்டு
இருக்கிறேன். இப்போது அது மிகச்சிறப்பான வடிவத்தில் உயர்ந்திருப்பது கண்டு
மகிழ்ச்சியடைந்தேன். அதனைப்பற்றி இன்னும் தெளிவாக அடுத்த பகுதியில் சொல்லுகிறேன்.
தொடரும்
சிறப்பான நிகழ்ச்சி தொகுப்பு.
ReplyDeleteநன்றி முத்துச்சாமி.
Delete