வேர்களைத்தேடி பகுதி –22
இதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும்.
https://paradesiatnewyork.blogspot.com/2018/08/blog-post_6.html
அப்போது காலை 10.20, என் அம்மா வரும் நேரம் 10:30 மணி எனக்கு இருந்தது 10 நிமிடம் மட்டுமே. முன் கதவைப் பூட்டினால் சந்தேகம் வரும் என்பதால்
பூட்டவில்லை. ஜன்னலை மூடிவிட்டு டப்பாக்களை
அடுக்கிவிட்டு முன்னறைக்கு வர மூன்றிலிருந்து ஐந்து நிமிடங்கள் தான்.
ஜன்னலை லேசாக திறந்தபோது மெலிதான வெளிச்சக் கீற்று உள்ளே வந்தது. உள்ளே கானும் அவன்
மனைவியும்....
இருந்தார்கள். கான்
ஒரு ஈரத்துண்டுடன் அமர்ந்திருக்க கானின் மனைவி அவன் முன்னால் தட்டை வைத்து
இட்டலிகளைப் பரிமாறினாள். புதினா சட்னியில் விண்ட இட்லிகளை நன்கு தோய்த்து ஊட்டி
விட்டாள். பின்னர் கானும் இட்லிகளை அதே மாதிரி ஊட்டி விட்டான். (ஏலேய் பரதேசி
நீ இவ்வளவு மோசமானவனாய் இருந்திருக்கியே ? )
கானின் மனைவி தான்
சாப்பிட்டுவிட்டதாகக் கூறினாலும் கான் விடவில்லை. அங்கு தெரிந்த காட்சிகளில்
பச்சையாகத் தெரிந்தது சட்னி மட்டும் தான். மிகவும் மெதுவாக ஜன்னலை மூடிவிட்டு ஒரு
பெருமூச்சு விட்டேன். அதில் தெரிந்தது நிம்மதியா அல்லது ஏமாற்றமா என்று சொல்லத்
தெரியவில்லை.
டப்பாக்களை அடுக்கி
வைத்துப்பின் முன்னால் வந்து கதவைத் திறந்து வைத்துவிட்டு வழக்கம்போல் ஈஸி சேரில்
உட்கார்ந்து கால்களை மேலே போட்டுவிட்டு புத்தகத்தைத் திறக்கவும் அம்மா உள்ளே
நுழையவும் சரியாக இருந்தது. கலவரமுகத்துடன் வந்தவர் என்னை ஈஸி சேரில் பார்த்ததும்
நிம்மதியடைந்தது போல் தெரிந்தது. "நூலகம் போகவில்லையா" என்று கேட்டுக்
கொண்டே உள்ளே வந்தவர் நேராக சமையலறைக்குப் போனார்கள். "இன்னும் படித்து
முடிக்கவில்லையம்மா" என்று சொன்னேன்.
ஒரு 15 நிமிடம் கழித்து வந்த பரபரப்பு மாறாமல் வெளியே வந்தார்கள். முகம்
மீண்டும் கலவரமாய் இருந்ததன் காரணம்
தெரியவில்லை.
மதியமும்
வழக்கம்போல் சாப்பாடு உண்ண அனைவரும் வந்து சென்றனர். அம்மாவுக்கும் எனக்கும்
பெரிதாக பேச்சு ஒன்றும் நடக்கவில்லை. கொஞ்சம் உம்மென்று இருந்தது போலவே எனக்குத்
தெரிந்தது. ஏனென்று தெரியவில்லை.
அப்பா மாலை ஊமை
ஆசாரியுடன் வந்தபோது கூட எனக்கு ஒன்றும் தெரியவில்லை. ஆனால் ஊமை ஆசாரி நேராக
சமையலறைக்குச் சென்று குறுக்குச் சட்டங்கள் போட்டு ஜன்னலை நிரந்தரமாக மூடியபோது
தான் எனக்குத் தெரிந்தது. ஜன்னலைத் திறந்ததை அம்மா எப்படியோ
கண்டுபிடித்துவிட்டார்கள் என. என் அப்பாவிடம் சொல்லி விடுவார்களோ என்று நான் மிகவும் பயந்தேன். ஆனால் அம்மாவோ அப்பாவே அதனைப்பற்றி என்னிடம்
கேட்கவேயில்லை.
அம்மா
கண்டுபிடித்தாலும் அப்பாவிடம் சொல்லவில்லை என்று புரிந்து கொண்டேன். ஏனென்றால்
அப்பா அப்படியெல்லாம் இருப்பவரல்ல. தெரிந்தால் அடி வெளுத்திருப்பார். ஆனால் 9ம்
வகுப்புப் படிக்கும் போது அடிவாங்கிய பின் அடிப்பதை முழுவதுமாய் நிறுத்திவிட்டார்.
அம்மாவுக்கு
எப்படித் தெரிந்தது என்று யோசித்து யோசித்து தலை வலித்தது. ஜன்னலைச் சரியாகத் தான் மூடினேன்.
டப்பாக்களையும் திரும்ப அடுக்கி வைத்துவிட்டேன். அம்மா வரும் போது கதவு திறந்தே
இருந்தது. நானும் ஈஸி சேரில் புத்தகம் படித்துக் கொண்டுதான் இருந்தேன். பிறகு
எப்படி?.
அப்போதுதான்
சட்டெனத் தோன்றியது. அம்மா முன் ஜாக்கிரதையாக டப்பாக்களை ஒரு வரிசைக் கிராமத்தில்
அடுக்கியிருக்க வேண்டும். அதனைக் கலைத்தால்
கண்டுபிடிக்கும் அளவுக்கு அந்த வரிசையை அமைத்திருக்க வேண்டும்.எவ்வளவு கில்லாடி
பாருங்கள். நானும் அது தெரியாமல் டப்பாக்களை எடுத்து என் பாட்டுக்கு அடுக்கி
வைத்துவிட்டேன். அதனால்தான் அம்மாவுக்குத் தெரிந்து போனது.
இரண்டு மூன்று நாள்
அம்மாவைப் பார்க்கவே ஒருமாதிரி இருந்தது. அதற்குள் லீவு முடிய தம்பித்தோட்டம்
விடுதிக்கு கிளம்பி ச் சென்றுவிட்டேன்.
அந்தச் சம்பவத்தை இப்போது
நினைத்தாலும் வெட்கமாக இருக்கிறது.
நான் ஒன்பதாவது படித்தபோது நடந்த இன்னொரு சம்பவத்தைச் சொல்கிறேன். தேவதானப்பட்டி
மெயின் ரோட்டில் நடந்து செல்லும் போது மேட்டு வளைவு தாண்டி வருவது போலீஸ் ஸ்டேஷன். தேவதானப் பட்டி மற்றும் பக்கத்தில் இருந்த பதினெட்டுப் (?)
பட்டிகளுக்கும் அதுவே காவல் நிலையம். அதில் சப் இன்ஸ்பெக்டர் என்று
அழைக்கப்படும் உதவி ஆய்வாளர்தான் தலைவர். அதன் பக்கத்தில் பிள்ளையார் கோவில்
இருக்கிறது. அதன் பின்புறம் ஊரின் பூங்கா. இந்து நடு நிலைப்பள்ளியில் படிக்கும்
போது வருட முடிவில் இங்குதான் வந்து குரூப் போட்டா எடுப்பார்கள்.
வத்தலக்குண்டிலிருந்து முத்து ஸ்டூடியோக்காரர் வந்து எடுப்பார். அந்தப்பார்க்கின்
எதிரில்தான் எங்கள் ஊரின் வாரச் சந்தை புதன்கிழமை தோறும் கூடும். அந்தச் சந்தையைப்
பற்றிப் பிறகு கூறுகிறேன். சந்தை இல்லாத நாட்களில் உள்ளே இருக்கும் புளிய மரத்தோப்பில்
என் நண்பர்கள் கூடி சீட்டு விளையாடுவார்கள். காசெல்லாம் இருந்தாலும் சும்மாதான்
விளையாடுவார்கள். எனக்கும் சில முறை சொல்லித்தர முயன்றாலும் என்னவோ கற்றுக் கொள்ள இஷ்டப்படவேயில்லை.
இன்றுவரை சீட்டு விளையாடத் தெரியாது. எனக்குள்ள "தெரியாது" என்ற தலைப்பில்
உள்ள நீண்ட வரிசையில் சீட்டு விளையாடுவதும் ஒன்று. ஒரு நாள் கண்ணன் ஓடிவந்தான்.
"என்னடா இப்படி ஓடி வர்ற" என்று கேட்டேன்." சேகர் நம்ம நண்பர்களை
போலீஸ் பிடிச்சிட்டாய்ங்க."
"என்ன போலீஸ்
பிடிச்சிட்டாய்ங்களா?" இவிங்க என்னடா பண்ணாங்க?
"ஒண்ணும்
பண்ணலடா, சந்தையில சீட்டு விளையாடிட்டு இருந்தாய்ங்க".
"காசு வச்சு
விளையாண்டாய்ங்களா?"
“தெரியலடா ஆனா,
போலீஸ் பிடிச்சுட்டுப் போய்ட்டாங்க"
வாடா போய்ப்
பார்ப்போம்" என்று சொல்லி இருவரும் விரைந்து கரட்டிலிருந்து
இறங்கி பார்க்குக்குள்
நுழைந்தோம். பார்க்கிலிருந்த சுவர்வழியே எட்டிப்பார்த்தோம்.
அங்கே முனியாண்டி,
முத்தலீப், கன்னையா உள்ளிட்ட ஆறு பேர்
குத்தவச்சு உட்கார்ந்திருந்தாய்ங்க. பக்கத்தில் ஓரிரண்டு போலீஸ் கையில் லத்தியோடு.
அவங்களை விசாரித்தார் போல தெரிந்தது. கொஞ்சம் காதைத் தீட்டிட்டு கேட்டோம்.
அதற்கப்புறம் நம்ம பையன்களை போலீஸ் காரங்க செய்யச் சொன்ன
செயல் எங்க இரண்டு பேரையும் அதிர்ச்சியடைய வைத்தது.
- தொடரும்.
ஏன் அண்ணே.. பாக்க இந்த பூனையும் பால் குடிக்குமான்னு ஒரு லுக்..ஆனா இந்த மாதிரி வேலை எல்லாம் பண்ணி இருக்கீங்க..
ReplyDeleteபாத்தியா மதுர.. இதுக்கு தான் இந்த அமைதியா இருக்க ஆசாமிகளை நம்ப கூடாதுங்கிறது !
இந்த மாதிரி கேட்பீங்கன்னுதான் நான் பால் எல்லாம் குடிக்கிறது கிடையாது தம்பி .ஆமா இந்த அமைதியாக இருக்கிறான்னு சொல்றீங்களே அது யாருண்ணேன் ?
Delete/அங்கு தெரிந்த காட்சிகளில் பச்சையாகத் தெரிந்தது சட்னி மட்டும் தான். //
ReplyDeleteஹா.... ஹா... ஹா...
அது உங்கள் கண்களில்படும் என்று எனக்குத்தெரியும் ஸ்ரீராம் .
Deleteஎன் அப்பா கூட அவர் புத்தக அலமாரியை, அல்லது மேசையை களைத்து விட்டு திருப்பி சரியாய் வைத்து விட்டதாய் நான் நினைத்துக் கொண்டாலும் இதே போல கண்டுபிடித்து விடுவார்!
ReplyDeleteநம்முடைய அப்பா, அம்மாக்கள் எல்லோரும் எம காதகர்கள் .
Delete//அதற்கப்புறம் நம்ம பையன்களை போலீஸ் காரங்க செய்யச் சொன்ன செயல் எங்க இரண்டு பேரையும் அதிர்ச்சியடைய வைத்தது.//
ReplyDeleteயூகிக்க முடிகிறது. எவ்வளவு தமிழ்ப்படங்கள் பார்த்திருக்கோம்...!!!!
என்ன பெட் , இதை கண்டிப்பாய் யூகிக்க முடியாது ஸ்ரீராம் .
Deleteநினைத்தது போல இல்லை என்றால் நேர்மையாக ஒத்துக்கொள்வேன்!
Deleteஎங்க ஊர்க்காரர் என்றால் சும்மாவா...?
ReplyDeleteஇது எல்லா ஊர்க்கார்களும் செய்வதுதான் தனபாலன் .
Deleteஅங்கு தெரிந்த காட்சிகளில் பச்சையாகத் தெரிந்தது சட்னி மட்டும் தான்....ha..ha...enjoyed reading it!
ReplyDeleteவருகைக்கு நன்றி பிரபாலா
Delete