Tuesday, September 4, 2018

போலீஸ்காரர் கொடுத்த உவ்வே தண்டனை !!!!!!!!!!!!

Image result for card magic


வேர்களைத்தேடி பகுதி 23
  இதற்கு முந்திய பகுதியைப்படிக்க  இங்கே சொடுக்கவும்.
http://paradesiatnewyork.blogspot.com/2018/08/blog-post_27.html
அவர்கள் உள்ளே பேசிக் கொண்டிருந்தது, ஜன்னலுக்கு அருகில் இருந்த சுற்றுச்சுவரின் மறுபுறம் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த எங்களுக்குத் தெளிவாகவே கேட்டது.
போலீஸ் : யாருடா நீங்க! எந்த ஊர்டா?
முத்தலிப்: (இருப்பவர்களில் கொஞ்சம் தைரியமானவன்) சார் இந்த ஊர்தான் சார் நாங்க?
போலீஸ்-2: ஒவ்வொருத்தன் பேரையும் உங்கப்பா பேரையும் சொல்லுங்கடா.
முத்தலிப்: ஒவ்வொருவராகப் பேர் சொல்லிவிட்டு, சார் எங்கப்பா பேரை இங்க இழுக்க வேண்டாம்.
போலீஸ்-1: ஏண்டா?
முத்தலிப்: இந்தச் சின்ன விஷயத்துக்கு எதுக்கு, பெரியவங்கள இழுக்கிறீங்க?
போலீஸ் : ஏண்டா இதுவா சின்ன விஷயம்? சந்தைக்குள்ள சூதாடிட்டு  இருந்தீங்கள்ள? (லத்தியைச் சுழற்ற மற்ற மூன்று பேரும் அழ ஆரம்பிக்கிறார்கள்)
முத்தலீப்: சார் சூது அது இதுன்னு சொல்லாதீங்க? நாங்க சும்மா பொழுதுபோகாம ஆடினோம்.
போலீஸ்-2: என்னாது பொழுது போகலயா? பள்ளிக்கூட நேரத்தில ஏண்டா சந்தைப் பக்கம் போனீங்க.
முத்தலீப்: சார் வாத்தியார் வரல சார்.
போலீஸ்1: எந்தப்பள்ளிக் கூடம்டா?
முத்தலீப்: கள்ளர் ஸ்கூல் சார் (பொய் சொன்னான்)
போலீஸ்-2: ஏண்டா வடக்குத் தெருவுல இருந்து இங்கயா விளையாட வந்தீங்க? லத்தியை எடுக்க, முத்தலீப் தவிர மற்றவர் பெருங்குரலெடுத்து அழ ஆரம்பித்தனர்.
உள்ளே நுழைந்த SI: யோவ் ஏட்டு என்னய்யா நடக்குது இங்க?
போலீஸ் 1- சல்யூட் அடித்துவிட்டு, சார் பயல்க சீட்டு விளையாண்டுட்டு இருந்தாங்க.   
எஸ்.ஐ: யோவ் வேற கேசே கிடைக்கலியா, பசங்களை வார்ன் பண்ணி விடுங்கய்யா.
எஸ்.ஐ. உள்ளே தம் அறைக்குள் போய்விட,
போலீஸ் 2:  எங்கடா சீட்டுக்கட்டு ?
            முத்தலிப் முனியாண்டியிடம் இருந்த சீட்டுக்கட்டை எடுத்துக் கொடுக்க, போலீஸ்காரர் அதிலிருந்து ஒரு சீட்டை மட்டும் உருவியெடுத்து ஒருவனிடம் கொடுத்து "அந்த சீட்டை நக்குடா, என்றார். அவன் தயங்க போலீஸ் மிரட்ட முனியாண்டி  தயக்கத்துடன் சீட்டை நக்கினான். அவர் முத்தலீப்பைப் பார்த்து 'நீயும் நக்குடா" என்றவுடன் “சார் இன்னொரு சீட்டைக் கொடுங்க" என்றான். "இன்னொரு சீட்டா மாப்ள  முட்டியப் பேத்துறுவேன். அதே சீட்டை நக்குடா" ,என்றார். இப்படி ஆறு பேரும் ஒரே சீட்டின் ஒரே பக்கத்தை நக்க, எனக்கும் கண்ணனுக்கும் குமட்டிக் கொண்டு வந்தது. இதில் எனக்கு வாந்தியே வந்து ஓங்கரிக்க, சத்தம் கேட்டு அப்போதுதான் ஜன்னல் வழியே எங்களைப் பார்த்த போலீஸ்காரர், "அங்கே யார்ரா, என்னடா செய்றீங்க ?”, என்றதும் நாங்கள் இருவரும் தலை தெறிக்க ஓடிவிட்டோம்.
Image result for தேவதானப்பட்டி காவல் நிலையம்

மற்ற ஐவரில் மூவர் வாந்தியெடுத்ததால் சத்தம் கேட்டு வந்த எஸ்.ஐ. போலீசாரைக் கடிந்து கொண்டு நண்பர்களை விரட்டிவிட்டாராம்.
அடுத்த நாள் மற்றவர் கூனிக்குறுகி வர  முத்தலிப் நெஞ்சை நிமிர்த்திக்  கொண்டு வந்தான்.
“டேய் முத்தலீப் உனக்கு வெட்கமே இல்லையா?”
“எதுக்கு?”
“எதுக்கா, ஏண்டா சீட்டின் ஒரே பக்கத்தை மாறி ,மாறி நக்கினீர்களே, உனக்கு குமட்டல்லையா?”
“எதுக்கு குமட்டுது?”
“என்னடா நாதாரிப்பயலே சொல்ற?”
நான்தான் நக்கவேயில்லையே?”
-பாக்கெட்டில் கையைவிட்டு புதிய சீட்டுக்கட்டை வெளியே எடுத்து  அதிலிருந்து ஒரு சீட்டை உருவி நாக்கை முழுவதாக நீட்டி நக்குவது போல் செய்தான். ஆனால் நாக்கு சீட்டின் மேல் படவில்லை. சீட்டின் மிகமிக அருகில் சென்ற நாக்கு அதில் படாமலேயே நாசூக்காக வாயினுள் சென்றது.
இயேசுவே, நல்லவேளை எனக்கு நாக்கில் அப்படியெல்லாம் சாகசம் செய்யத் தெரியாது. நான் மாட்டியிருந்தால் என்ன ஆயிருக்கும். இப்படி நல்லவேளைகளை கீழே பட்டியலிடுகிறேன்.
Ø நல்லவேளை நான் அன்று கட் அடிக்கவில்லை.
Ø நல்லவேளை எனக்கு சீட்டு விளையாடத் தெரியாது.
Ø நல்லவேளை நான் போலீசிடம் மாட்டவில்லை.
Ø நல்லவேளை அப்படி நக்கின அனுபவம் எனக்கில்லை.
Ø ஒருவேளை நான் இன்றுவரை சீட்டு விளையாடாமல் இருப்பதற்கு இதுவும் ஒரு காரணமாய் இருக்கலாம்.
அடுத்து கரட்டுப் பள்ளிக் கூடத்தில், அதாங்க என்னுடைய உயர்நிலைப்பள்ளியில் நடந்த இன்னொரு சம்பவத்தைச் சொல்கிறேன். 
எவ்வளவு வெயிலாக இருந்தாலும் பள்ளியின் மேற்புறம் இருக்கும் கரட்டு மேலே ஏறினால் வெயில் தெரியாது. ஜிலுஜிலுவென்று காற்றடிக்கும். அதன் எதிரே மறுபுறம் முருகமலை இருக்கிறது. அதன் மேலே ஏறிப் போக வேண்டும் என்ற என் ஆசை இன்றுவரை நிறைவேறவில்லை. எல்லாவற்றிற்கும் வீட்டில் தடா தான்.
ஆனால் இந்தக் கரட்டு மேலே ஏறிச் செல்வது எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. ஏறுவது சற்றுக்கடினம். சரளைக் கற்கள் நிறைந்த மொட்டைப் பாறையில் கொஞ்சம் தவறினாலும்  சறுக்கிவிடும். ஆனால் ஏறிவிட்டால் லேசான வேகத்தில் இறங்க ஆரம்பித்து அப்படியே வேகம் கூடக்கூட தலை தெறிக்கும் வேகமாகி அப்படியே நிறுத்தாமல் ஓடி வந்து கரட்டின் கீழிருக்கும் கபடி மைதானத்தில் இருக்கும் மணலில் விழுந்துவிடுவேன். மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கி இதயம் வாயின் வழியாக வந்துவிடுவது போலிருக்கும். ஆனாலும் கேம்ஸ் பீரியட்டில் ஒருமுறையாவது மேலேறி கீழே வருவேன்.
கரட்டு மேலே சிறுசிறு கள்ளிப்புதர்கள் தான் இருக்கும். சிறிதும் பெரிதுமாக மொட்டைப்பாறைகள் இருக்கும். நிழலுக்கு ஒரு மரம் கூட இருக்காது. 12 மணியிலிருந்து 3 மணி வரை பாறைகள் சுடும். ஆனால் பெரும்பாலும் கேம்ஸ் பீரியட் 3 மணிக்கு மேல்தான் வருமாகையால் அப்போது பாறைகள் அவ்வளவாக சுடாது. அதோடு  மாலை நேரம் நெருங்க நெருங்க அப்படியே குளிர்ந்துவிடும். சுடும் பாறையில் கூட உட்கார்ந்து பேசி நிறைய தடவை சூடு பிடித்துக் கொண்டு சொட்டு மூத்திர நிலை ஆயிருக்கிறது. பலமுறை மாலையில் உட்கார்ந்து இருட்டும் வரை கதை பேசிக் கலைந்திருக்கிறோம்.
ஒரு நாள் மகேந்திரன் கடன் கேட்டானென்று இருந்த காசை ஒரு பெரிய பாறையின் கீழிருந்த புதரில் ஒளித்து வைத்தான் வெங்கடேஷ். நானும் கூட இருந்தேன். பின்னர் அதனை மறந்தே போய்விட்டோம். ஐஸ் பெட்டிக்காரர் வந்தபோது காசில்லாமல் தவித்த போது எனக்கு பாறையின் கீழ் வைத்த காசு ஞாபகம் வந்து வெங்கடேசனிடம் சொன்னேன். நீயே போய் எடுத்துக்கொண்டு வா என்று சொன்னதால் என் காரை (வாயில்தான்)  ஸ்டார்ட் செய்து மேலே போய் சட்டென பாறையின் கீழே கைவைத்த போது அங்கேயிருந்த பாம்பை நான் பார்க்கவில்லை.
தொடரும்.

4 comments:

  1. சத்தியமா இதை நான் எதிர்பார்க்கவில்லை!

    ஒரு வாட்ஸாப் ஃபார்வேர்ட் உண்டு. மனா உறுதி, சகிப்புத்தன்மை பற்றியோ, ஸ்மார்ட்னெஸ் பற்றியோ, ஏதோ வகுப்பெடுக்கும் நபர் சாக்கடைத்தண்ணீரில் விரல் விட்டு வாயில் வைத்துக்கொண்டு உங்களால் முடியுமா என்று மாணவர்களைக் கேட்க அவர்களும் செய்த உடன் அவர் சா.தண்ணீரில் வைத்த விரல் வேறு, வாயில் வைத்த விரல் வேறு.. அதுதான் வித்தியாசம் என்று விளக்குவார். அது நினைவுக்கு வந்தது!

    ReplyDelete
  2. பாம்பபாயத்தை எப்படி சமாளித்தீர்கள் என்பதைப் படிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்!

    ReplyDelete
  3. இப்படியும் ஒரு தண்டனையா...? உவ்வேக்...

    ReplyDelete
  4. யோசித்துக் கண்டுபிடித்த போலீஸ் தண்டனை சற்று உவ்வே தான்.

    ReplyDelete