Monday, August 6, 2018

ஜன்னலுக்குப்பின்னால் ?


வேர்களைத்தேடி பகுதி -21
    இதற்கு முந்திய பகுதியைப்படிக்க  இங்கே சொடுக்கவும்.
http://paradesiatnewyork.blogspot.com/2018/07/blog-post_30.html
எங்கள் வீட்டின் பின்புறம் ஒரு சிறிய இடைவெளிவிட்டு ஒரு திண்ணை, இரண்டு சிறிய ரூம்கள் இருந்த ஒரு வீடு இருந்தது. ரூம்களுக்கு லாகடம் வைத்து திண்ணையின் மேல் கூரை வேய்ந்திருக்கும். அங்கே சொக்கர் என்ற பெண் தன் முதிய தாய் மற்றும் இரு பிள்ளைகளுடன் வசித்து வந்தார். கணவன் இறந்துவிட அந்தக் குடும்பம் மிகவும் நொடித்துப் போனது. ஒரு காலத்தில் முன்புறம் இருந்த எங்கள் வீடும் அவர்களுக்குப் சொந்தமாக இருந்தது. அதன்பின் ரைஸ்மில் செட்டியாரிடம் கடன் வாங்கி கொடுக்க முடியாமல் அந்த வீடு அவருக்குப் போய்ப்பின் சில ஆண்டுகள் கழித்து அவர் எங்களுக்கு விற்றுவிட்டார். சொக்கர் குடும்பம் பின்னாலிருந்த வீட்டில் முடங்கினார்கள். அவ்வப்போது எங்கள் வீட்டுக்கு வந்து மாவரைத்துக் கொடுப்பது, துணி துவைப்பது பாத்திரம் துலக்குவது போன்றது சிறுசிறு வேலைகளைச் செய்து பணம் பெற்றுக் கொள்வார். எங்கள் வீட்டிலிருந்து சாப்பாடும் துணிகளும் போகும். அந்த சொக்கர் அந்த வீட்டையும் வாடகைக்கு விட்டுவிட்டு இன்னும் கொஞ்சம் தொலைவிலிருந்த சிறு வீட்டுக்குச் சென்றுவிட்டார் .
அப்போது அங்கு குடிவந்தவன்தான் கான். மெயின் ரோட்டில் சைக்கிள் கடை வைத்திருந்தான். அவனை எனக்குத் தெரியும்  கருப்பாக, எற்றுப்பல் கொண்டு முகமெங்கும் தழும்புகள் இருக்கும் அவனைப் பார்த்தால் பயமாக இருக்கும். ஆனால் மிகவும் நல்ல பையன்.
ஜன்னல் திரைச்சீலை கழன்று விழுந்ததால் மனைவியை விவாகரத்துச் செய்த கணவன்

என்னுடைய அக்ரஹார வீட்டில் சமையலறைதான் கடைசி அறை. அதிலே 2 ஜன்னல்கள் உண்டு. ஒன்று மேடை அடுப்பின் பின்புறம், புகை போவதற்காக, இன்னொன்று நுழைந்தவுடன் எதிரே இருந்த ஒரு சிறிய ஜன்னல். அந்த ஜன்னல் எப்போதும் மூடித்தான் இருக்கும். ஏனென்றால் அதனைத் திறந்தால் பின்வீடு முழுவதுமாகத் தெரியும். அதோடு அந்த ஜன்னல் மாடத்தில் பலவிதமான சிறுசிறு பலசரக்கு டப்பாக்களை அம்மா வைத்து அடைத்திருந்தார்கள்.
சொக்கரைக் கூப்பிட வேண்டுமென்றால், அந்த ஜன்னல் வழியேதான் கூப்பிடுவார்கள். ஆனால் பெரும்பாலும் ஜன்னலைத் திறக்க வேண்டிய அவசியம் இருக்காது.
அன்று நான் தண்ணீர் குடிக்க சமையலறைக்குச் சென்ற போது பின்னால் சிரிக்கும், சிணுங்கும் சத்தம் கேட்டுத் திடுக்கிட்டேன். ஜன்னல் வழியே இருந்த மிகச்சிறிய இடைவெளி வழியாக உள்ளே பார்த்தால் அரசல் புரசலாகத் தெரிந்த காட்சிகள் முருகன் கொண்டு கெட்ட  புத்தகத்தை நினைவுபடுத்தியது. ஒரு நொடிதான் இருக்கும். அம்மா முன்புறத்தில் வீட்டைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தார்கள். என்னை சமையலறை ஜன்னலருகில் பார்த்துவிட்டு "டேய் அங்கே  செய்றேன்னு?" கேட்டுக் கொண்டே விரைந்து வர, தண்ணீர் குடிக்க வந்தேன்னு  சொல்லிட்டு முன்னே வந்தேன். அம்மா ரொம்ப ஷார்ப் உடனே புரிந்துவிட்டது அவர்களுக்கு.
"ஏண்டா எப்பவும் வீட்டுல அடைஞ்சு கிடக்கிற, காலாற வெளியே போயிட்டு வர வேண்டியது தானே" அம்மா சொல்ல எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. எப்போதும் அவர்கள் சொல்வது" "டேய் சேகர் வெயில்ல அங்க இங்க சுத்தாம வீட்டிலருந்து ரெஸ்ட் எடு". டயலாக் மாறிப்போனது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. "சரிம்மா நான் லைப்ரரி போறேன்னுட்டு வெளியே வந்தேன்.
கான் தன் சைக்கிள் கடையை காலை ஏழு மணிக்குத் திறப்பான். 10 மணிக்குக் கிளம்பி வீட்டுக்கு காலை உணவு சாப்பிட வருவான். காலை எட்டு மணிக்கு ஆரம்பிக்கும் என் அம்மா பள்ளியில் 10.30-க்கு இடைவேளையில் 10:35-க்கு வீட்டுக்கு வந்து குழம்பு தாழித்து ரசம் வைத்துவிட்டு தன் காலை உணவைச் சாப்பிட்டுவிட்டு 11:00 மணிக்குள் திரும்பிவிடுவார்கள்.
10:15 -க்குள் காலை உணவு சாப்பிட்டு முடிக்கும் கான் 11 மணிக்கு திரும்பவும் கடைக்குத் திரும்புவான். இந்த நேரம் எனக்குத் துல்லியமாகத் தெரிந்தது எப்படியென்றால் தெருவழியாக சைக்கிளில் மணியடித்துக் கொண்டு அவன் வருவான் போவான். 10:15 லிருந்து 11 மணி வரை கானின் நேரம்.
இதில் ஒன்றைச் சொல்ல வேண்டும். கானின் மனைவியை இதுவரை எங்கள் ஊரில் நான் பார்த்ததில்லை. வெளியூர்ப் பெண்ணாக இருக்க வேண்டும். செக்கப் செவேர் என்ற நிறம் கொண்ட பேரழகி. கானுக்கு இப்படி ஒரு மனைவியா என்று மிகுந்த ஆச்சரியமாக இருந்தது.
நூலகம் போய்த் திரும்பி வந்த போது கிச்சனுக்குச் சென்று பார்த்தேன். ஒரே நிசப்தம். அப்படியே ஒரு நாள் கழிந்தது. அடுத்த நாள் எல்லோரும் எழுந்து ரெடியாகி பள்ளிக்குப் போய் விட்டனர்.
நானும் வழக்கம்போல் எழுந்து கிளம்பி ரெடியாகி ஈஸி சேரில் உட்கார்ந்து சங்கர்லாலில் ஆழ்ந்தேன். ரப்பர் நடையணிகள் இல்லை, இந்திரா இல்லை, தேநீர் இல்லை. கத்தரிக்காய் இல்லை ஆனால் கால்களை ஈஸி சேரின் இருபுறம் போட்டுக்கொண்டு கையில் கனமான புத்தகத்தோடு சங்கர்லால் போலவே உணர்ந்தேன். தமிழ்வாணனின் தமிழ், தமிழ்ப் பெயர்கள், எனக்கு மிகவும் பிடிக்கும் நாம் அன்றாடம் பயன்படுத்தும் ஆங்கிலப்பதங்களைக் கூட  மொழிபெயர்த்து கையாண்டிருப்பார். ஆனால் நம் மக்கள் இருக்கிறார்களே என்ன படித்துக் கிழித்துவிட்டாய் என்ற சொல் வழக்கை உண்மையாக்குவது போல் கடைசியில் உள்ள பக்கங்களை கிழித்துவிடுவர். தமிழ்வாணன் புத்தகத்தின் எல்லா சஸ்பென்சுகளையும் கடைசியாகத்தான் விடுவிப்பார். தவிர 23-ஆம் பக்கம் பார் என்று எழுதுவர். உடனே 23-ஆம் பக்கம் போனால் பொறுமை, 43 ஆம்பக்கத்தில் ரகசியம் சொல்கிறேன் என்று முடிவில்லாமல் போகும்.

நூலகப் புத்தகங்களில் இப்படிச் செய்பவர்களுக்கும் பள்ளியின் சுவர், பாத்ரூம் சுவர்களில் படம் வரைந்து பாகங்கள் குறிப்பவர்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. ஒரு வித மனநிலை வக்கிரம்தான் இதுவும்.
புத்தகத்தைப் படித்துக் கொண்டிருக்கும்போது, சைக்கிள் மணி கிண்கிணி கினிகினி என்று அடித்தது. ஆஹா கான் வந்துவிட்டான் மணி 10:1 நேரத்தை சரியாக கடைப்பிடிக்கிறான். வந்து குளித்து உடைமாற்றி காலை உணவு சாப்பிட்டு முடிக்கும்போது காலை 10:20 எங்கம்மா வருவது 10:30-க்கு. நான் சொல்லச் சொல்ல கேட்காமல் என் கால்கள் என்னை சமையலறைக்கு எடுத்துச் சென்றன. ஜன்னலிலிருந்த டப்பாக்களைக் கீழே இறக்கினேன். 10.25 ஆனது. ஜன்னலை மிக மெதுவாகத் திறந்தேன். ஜன்னலில் மெலிதான கீறல் விழுந்தது.
-தொடரும்.

4 comments:

  1. ஹா... ஹா... ஹா... இளமையின் ஆர்வம்!

    ReplyDelete
    Replies
    1. அது ஒரு காலம் ஸ்ரீராம்

      Delete
  2. Replies
    1. கொஞ்சம் பொறுங்க தனபாலன், ரொம்ப அவசரமோ ?

      Delete