Thursday, January 26, 2017

எம்ஜியாரை மடக்கிய இயக்குனர் மகேந்திரன். !!!!!!

Image result for சினிமாவும் நானும் இயக்குநர் மகேந்திரன்
படித்ததில் பிடித்தது
சினிமாவும் நானும் - இயக்குநர் மகேந்திரன்: பகுதி 1
கற்பகம் புத்தகாலயம், சென்னை.
இயக்குநர் மகேந்திரன் எனக்கு மிகவும் நெருக்கமானவர். முதலிலேயே சொல்லிவிடுகிறேன், ஆனால் அவருக்கு நான் நெருக்கமானவன் அல்ல.
“என்னடா ஒரே குழப்பமா இருக்கு, எப்பவுமே நீ குழப்பவாதிங்கறத திரும்பவும் புரூவ் பண்ணிட்டடா”.
“வாடா மகேந்திரா என்ன ரொம்ப நாளா ஆளக்காணோம்?”.
“போடா இவனே, `உங் கூட பேசக்கூடாதுன்னு நெனைச்சேன்”.
“ஏண்டா நான் என்ன பண்ணேன் உன்னை ?”.
“போடா இவனே, இவ்வளவு தூரம் ஊருக்கு வந்திருக்கிற, அதுவும் 20 வருஷத்துக்கு அப்புறம், என்ட்ட சொல்லவேயில்லை, பார்க்கவும் வரல”.
“இல்லடா மகேந்திரா திடீர்னுதான் வந்தேன். உன்னைக் கேட்டேன்.  ஊர்ல இல்லன்னு சொல்லிட்டாய்ங்க”.
“ஊர்ல இல்லன்னுதானே சொன்னாய்ங்க, உலகத்தில இல்லைன்னு சொன்னாய்ங்களா?
“சரிடா மகேந்திரனை பத்தி எழுத்திட்டிருக்கேன் அப்புறம் உன்ட்ட பேசறேன்”.
“என்னடா என்னைப்பத்திக் கூட எழுதப்போறியா?”
“நீ இல்லடா இது இயக்குனர் மகேந்திரன் பத்தி”.
“அப்படியா சரிடா குடியரசு  தின வாழ்த்துக்கள், மனசு கேக்கல வாழ்த்தத்தான் வந்தேன்.
“ரொம்ப நன்றிடா, ஆனா  இப்ப நம்ம தமிழர் இருக்கிற மனநிலையில ஒருத்தரும் கொண்டாடுற மாதிரி  தெரியலை.”.
இப்ப உங்களுக்கு தெரிஞ்சிருக்கும். அடிக்கடி நம்ம பதிவு நடுவில வந்து தொந்தரவு பண்ற அந்த மகேந்திரன் வேற. நான் எழுத வந்தது , நம்ம எல்லோருக்கும் தெரிந்த இயக்குனர் மகேந்திரன் பத்தி. அவருக்கு நான் நெருக்கமானவன் இல்லையென்று சொன் னேன், ஆனால் எனக்கு அவர் நெருக்கமானவர் என்று ஏன் சொன்னேன் என்றால் அதற்குள்ள காரணங்களைக் கீழே கொடுக்கிறேன்.
எனக்கு தமிழில் மிகவும் பிடித்த படங்களில் சிலவற்றை இயக்கியவர் மகேந்திரன் அவர்கள். அவை, “முள்ளும் மலரும்”, “உதிரிப்பூக்கள்”, “நெஞ்சத்தைக் கிள்ளாதே” ஆகியவை.
அவரும் என்னைப் போலவே மதுரை அமெரிக்கன் கல்லூரி மாணவர்.
என்னைப்போலவே மதுரைக்காரர். இளையான்குடி அவர் சொந்த ஊர்.
புத்தகக் கண்காட்சியில் அவர் எழுதிய மேற்சொன்ன புத்தகத்தைப் பார்த்ததும் உடனே வாங்கினேன். அதில் நமக்கு தெரிந்த விஷயங்களை விட  தெரியாத அநேக தகவல்கள் இருந்தன. அதனை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவே இந்தப்பதிவு.
Related image

'நாடோடி மன்னன்' படத்தின் வெற்றி விழாக்  கொண்டாட்டத்திற்காக மதுரை வந்திருந்தார் புரட்சி நடிகர் எம்ஜியார். அப்போது காரைக்குடி அழகப்பா கல்லூரி மாணவர்கள் தங்கள் இலக்கிய வட்டத்தில் அவரை பேச அழைத்தார்கள். எம்ஜியாருக்கு காரைக்குடி திட்டம் எதுவுமில்லை என்றாலும் இளம் மாணவர்களின் வேண்டுகோளை ஏற்று அழகப்பா கல்லூரிக்கு வர ஒத்துக்க கொண்டார். ஆனால் பேச மட்டும் சொல்லிவிடாதீர்கள் என்றும் நிபந்தனை விதித்தார். மேடையில் எம்ஜியார் வீற்றிருக்க, மூன்று மாணவர்கள் வெவ்வேறு தலைப்புகளில் பேசுவதாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முதலிரண்டு மாணவர்கள் நடுக்கத்துடன் பேச ஆரம்பித்து, மாணவர்கள் கூச்சலிட்டதால் ஆரம்பத்திலேயே அகன்று விட மூன்றாவதாக வந்த மாணவன் தான் நம் மகேந்திரன். பயம் கொஞ்சம் இருந்தாலும் தற்கால தமிழ் சினிமா பற்றி விமர்சித்து, டூயட் பாடுவது,மரத்தைச் சுற்றி ஓடி வந்து செயற்கையாக பாடுவது போன்றவற்றை சாடி ஒரு நீண்ட சொற்பொழிவாற்ற, கூடி இருந்த மாணவர்கள், ஆசிரியர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் அமைதியாக கேட்டு அசந்து போயினர். அதுவும் எம்ஜியாரை வைத்துக் கொண்டு அப்படி பேசியதற்கு அசாத்திய துணிவு வேண்டும்தான். ஆனால் கோபப்படுவதற்குப் பதில் வாழ்த்துச் சொல்லி எதிர்காலத்தில் சிறந்த விமர்சராக வருவாய் என்று எழுதி கையெழுத்துப் போட்டுக் கொடுத்து விட்டுச் சென்றுவிட்டார் எம்ஜியார்.
Image result for எம்ஜியார்

பட்டப்படிப்பு முடித்தபின் தஞ்சாவூரில் உள்ள அத்தை உதவி செய்கிறேன் என்று கூறியதினிமித்தம் சட்டம் பயில சென்னை வந்தார். ஆனால் சில மாதங்களிலேயே அத்தையின் உதவி நின்றுபோனதால் சட்டக் கல்லூரிப் படிப்பை தொடர முடியாத நிலை. ஊருக்குத்திரும்புவதற்கு ஆயத்தப்படுகையில் திமுக பத்திரிகைகளுள் ஒன்றான 'இன முழக்கம்' என்ற பத்திரிகையில் வேலை கிடைத்தது. வேலை என்னவென்றால் அவருக்கு மிகவும் பிடித்த சினிமா விமர்சனம். அது கொஞ்ச நாள் போய்க் கொண்டிருக்கும்போது அங்கு வந்த எம்ஜியார் அவரைப் பார்த்து அடையாளம் தெரிந்து கொண்டு அவருக்கு வேறு வேலை தருவதாக அழைத்துச்சென்று தன்னுடைய T நகர் வீட்டிலேயே மாடியில் தங்க வைத்தார். எம்ஜியாருக்கு கல்கி  எழுதிய பொன்னியின் செல்வன் கதையை சினிமாவாக எடுக்க வேண்டும் என்ற ஆசை. அதற்காகத்தான் மகேந்திரனை அழைத்துச் சென்றவர், பொன்னியின் செல்வன் நாவலைக் கையில் கொடுத்து, அதனை திரைக்கதை வசனமாக எழுதப்பணித்தார். அந்த வேலையை மூன்று மாதத்திற்குள் முடித்துக் கொடுத்தார் மகேந்திரன்.
Related image

பொன்னியின் செல்வனை படமாக எடுக்க எத்தனைபேர்தான்  ஆசைப்பட்டனரோ. ஆனால் இதுவரை ஒருவருக்கும் அந்த வாய்ப்பு கிட்டவில்லை. மகேந்திரன் எழுதிய திரைக்கதை வசனமும் யாரிடம் இருக்கிறதென்று தெரியவில்லை.
அப்போது சாப்பாட்டுக்கு கூட இல்லாது மகேந்திரன் கஷ்டப்படுவதை அறிந்த எம்ஜியார் தன்னிடம் அதனைப்பற்றி சொல்லாததை கடிந்து கொண்டு முழுதாக ஆயிரம் ரூபாயை எடுத்துக் கொடுத்தாராம். அது அந்தக் காலத்தில் பெரிய தொகை என்பதில் சந்தேகமில்லை.
அதன்பின் துக்ளக் பத்திரிக்கையில் வேலை கிடைக்க அங்கும் சினிமா விமர்சனம் எழுதும் வேலைதான். எம்ஜியார் உதவி செய்தவர், தன்னை பாராட்டியவர் என்று எதையும் நினைக்காமல் அவருடைய படத்தை கடுமையாக விமரிசனம் செய்து எழுதினார் மகேந்திரன். விமர்சனத்துக்கு  பதிலாக அல்லது எதிர்வினையாக அந்தப்படத்தில் நடித்த நடிகர் அல்லது இயக்குநரிடம் அவர்கள் கேட்டு அதற்கு அடுத்த வாரம் வெளியிடுவது அப்போது துக்ளக்கின் பழக்கம். அது போல எம்ஜியாரை அணுகியபோது ஏற்கனவே விமர்சனத்தை படித்திருந்த அவர் பெரிதும் கோபப்பட்டு பதில் கொடுக்க மறுத்து திருப்பி அனுப்பிவிட்டாராம். ஆனால் மகேந்திரன் அதற்கெல்லாம் பெரிதாகக் கவலைப் படவில்லை.
இவ்வாறு இருமுறை எம்ஜியாருக்கு எதிராக மகேந்திரன்  நடந்து கொண்டாலும் எம்ஜியார் அதையெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாது, “முள்ளும் மலரும்” வெற்றிக்கு பாராட்டியதோடு “உதிரிப்பூக்கள்” வெள்ளி விழாவிலும் கலந்து கொண்டு பாராட்டியிருக்கிறார்.
தற்செயலாக எழுத்தாளர் மற்றும் டைரக்டராக ஆனது முதற்கொண்டு மகேந்திரன் வாழ்வில் பல நிகழ்வுகள் நடந்ததை விவரிக்கும் மகேந்திரன் திரைத்துறைக்கு தான் வர காரணமானவர் எம்ஜியார் என்று சொல்லி இப்புத்தகத்தையும் அவருக்கே சமர்ப்பித்திருக்கிறார்.
தொடரும்

Image result for குடியரசு தின  நாள்


நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய குடியரசு தின  நாள் நல்  வாழ்த்துக்கள் .இந்தியாவுக்குள் நமக்கு இருக்கும் உரிமைகளை போராடிப்பெறும் நிலைமைதான் இப்போதும் இருக்கிறதென்றாலும், போராடுவதற்கு நாம் நமது அரசியல் வியாதிகளை நம்பாமல் நம் இளைஞர்களை நம்புவோம் . அவர்கள் முன்னெடுக்கும் எல்லா போராட்டங்களுக்கும் உலகத்தமிழரின் ஆதரவு என்றும் உள்ளது என்பதை  தெரிவித்துக்கொள்கிறேன் . நாம் இந்தியர் , என்பதும் நாம் தமிழர் என்பதும் ஒன்றுக்கொன்று இணைந்தவை என்பதை நினைவில்கொள்வோம் .


9 comments:

  1. மிகவும் பிடித்த டைரக்டர் பற்றிய உங்கள் படித்ததில் பிடித்தது எங்களுக்கும் பிடித்துப் போனது..ரசித்த ஸ்வாரஸ்யமான பதிவு..பகிர்விற்கு மிக்க நன்றி.

    கீதா

    ReplyDelete
  2. நல்லதொரு பகிர்வு....

    குடியரசு தின வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி வெங்கட் நாகராஜ்.

      Delete
  3. சமீபத்தில் உதிரிப்பூக்கள் படம் மீண்டும் பார்த்தேன்....எல்லோரும் மிக இயல்பாக நடித்திருப்பார்கள்....

    கிளைமாக்ஸ் ல, ஒரு சாதாரண வசனம் மிகப்பெரிய வலியை ஏற்படுத்தியது...

    விஜயன், தன் குழந்தைகளிடம் சொல்வார்:
    "அப்பா குளிக்கப் போறேன்...."

    படம் முழுக்க நாம் விஜயன் மீது கோபமாக இருப்போம்
    ஆனா அந்த climax scene Climax "நெஞ்சுல ஊசி வச்சு குத்துன மாதிரி இருக்கும்..."

    சொல்லவே வேணாம்.....படம் முழுக்க ராஜா பின்னியிருப்பார்....இப்படி ஒரு படம்னா அவருக்கு அல்வா சாப்பிடற மாதிரி...!

    What a movie from Mahendran....!

    ReplyDelete
    Replies
    1. படத்தை மறுபடியும் பார்த்த பெரும்பாலானோர் உணர்ந்ததைத்தான் நீங்களும் அனுபவத்திருக்கிறீர்கள் பெப்பின் , நன்றி .

      Delete
  4. இன்னும் சிறப்பாக வளர்ந்திருக்கவேண்டியவர் இயக்குனர் மகேந்திரன். ஆனால், தமிழ் சினிமாவின் சூழல் மாறிவிட்டதே! அந்த மாறுதலுக்கு ஏற்ப தன்னைப் புதுப்பித்துக்கொள்ள முடியவில்லை அவரால். - இராய செல்லப்பா நியூஜெர்சி

    ReplyDelete
    Replies
    1. அப்படியும் சொல்லிவிட முடியாது .தமிழ் திரையுலகில் இதுவும் நடக்காலம் எதுவும் நடக்கலாம் .நன்றி இராய செல்லப்பா.

      Delete
  5. பெயர் மறைப்பு ஏன்?

    ReplyDelete