Tuesday, January 10, 2017

மு.க. ஸ்டாலின் முன்னால் உள்ள சவால்கள் !!!!!!!!

Image result for Mu ka stalin

1966ல் இளைஞர் அமைப்பாளராக தி.மு.கவில்   இணைந்து, 23 வயதில் மிசாவில் சிறை சென்று, சட்ட மன்ற உறுப்பினர், சென்னை மாநகர மேயராக மக்களால் இருமுறை தேர்ந்தெடுக்கப்பட்டு பின் உள்துறை மந்திரியாக வளர்ந்து, துணை முதல்வராக உயர்ந்து, 2015ல் சட்டமன்றத் தேர்தலைத் தனியாகச் சந்தித்து அதிக இடங்களை வென்று, தற்சமயம் சட்ட மன்ற எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் ஸ்டாலின் அவர்கள் இப்போது திமுகவின் செயல் தலைவர்.
அவர் திமுகவின் செயல்படும் தலைவராகி பல ஆண்டுகள் ஆனாலும் இந்தப் பொறுப்பு தாமதமாக வந்தாலும், கருணாநிதியின் காலத்திலேயே இது வந்தது மிகவும் நல்லது. இதைத்தான் நானும் என்னுடைய முந்தைய பதிவு ஒன்றில் சொல்லியிருந்தேன். ( http://paradesiatnewyork.blogspot.com/2016/05/blog-post_31.html) என்ன, கருணாநிதியும் பொதுக்குழுவுக்கு வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

Image result for stalin meets Karunanidhi after the General body

ஆனாலும் அன்பழகன் மற்றும் துரைமுருகன் புடைசூழ ஸ்டாலின் கருணாநிதியிடம் ஆசி வாங்கும் புகைப்படம் ஒன்று   போதும், இது கருணாநிதியின் சம்மதத்துடன் நடந்த ஒன்று தான் என்று நிரூபிக்க. அதோடு பேராசிரியர் அன்பழகன் அவர்களும் மிகப்பெரிய தலைவர்தான். திமுகவின் பொதுச் செயலாளரான அவர் தலைமையில் பொதுக்குழு நடந்ததும் ஒன்றும் குறைவானதில்லை.
பொறுப்பு ஏற்ற முதல் நாளே முதலமைச்சரை(?) நேரில் சந்தித்து சில கோரிக்கைகளை வைத்தது, மிகவும் நல்ல காரியம்
செயல்தலைவர் என்பது தலைவருக்கு இணையான பதவி என்பதோடு இது பதவியல்ல பெரும் பொறுப்பு என்று முகஸ்டாலின் சொல்லியிருக்கிறார். சொல்வதோடு அதை உணர்ந்து செயல்பட்டால் திராவிட இயக்கம் பாதுகாக்கப்பட்டு அதனை  அடுத்த தலைமுறைக்கு  எடுத்துச்செல்ல  முடியும்.
மு.க.ஸ்டாலின் முன் உள்ள சவால்களை ஒவ்வொன்றாக பார்ப்போம்.
1.   ஆரோக்கியமான அரசியலை முன்னெடுத்து கடந்த கால எதிர்க்கட்சி  என்றில்லாமல் எதிரிக்கட்சி நிலை போன்ற கசப்பான நினைவுகளை களைய வேண்டும்.
2.   எல்லாத் தலைவர்களுடனும் பொது நிகழ்வுகளிலும், தனிப்பட்ட குடும்ப நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு காழ்ப்புணர்ச்சி அரசியலை கட்டுப்படுத்த வேண்டும்.
3.   “மக்கள் பணியே மகேசன் பணி”  என்று  செயல்பட்டு எந்த முடிவினை எடுத்தாலும் அது மக்களுக்கு உதவுமா இல்லையா  என்று பார்த்து எடுக்க வேண்டும்.
4.   உடனடியாக குடும்ப உறுப்பினர்களை முதலில் தனித்தனியாகவும் பிறகு மொத்தமாகவும் சந்தித்து குடும்ப ஒற்றுமையை நிலை நிறுத்த வேண்டும். இதுதான் ஸ்டாலினின்  தலையாய தலைவலி.
5.   அண்ணன்தானே என்பதால் எந்த விதத்தயக்கமும் இன்றி முக.அழகிரியை மதுரைக்கே சென்று சந்தித்து மனக்கசப்புகளையும் மனவேறுபாடுகளையும் களைய வேண்டும். தேவைப் பட்டால் முக.அழகிரியின் மகனுக்கு ஏதாவது பொறுப்புக் கொடுக்கலாம்.
6.   கனிமொழியையும் ராசாத்தி அம்மாவையும் சந்தித்து, எந்தப் பயமும் வேண்டாம் என்று உற்சாகப் படுத்தி தொடர்ந்து கட்சிப் பணிகளில் ஈடுபடுத்தலாம். அவர் மேல் உள்ள குற்றச் சாட்டு நீங்கும்வரை அரசுப் பணிகள் கொடுப்பதை தவிர்ப்பது நலம்.
7.   முடிந்த அளவுக்கு குடும்ப உறுப்பினர்களுக்கு கட்சிப்பதவி வழங்காமல் மற்ற பொறுப்புகளைக் கொடுக்கலாம்.
8.   கட்சிக்குள் கட்டுப்பாட்டை கொண்டுவந்தாலும் ஒரு நல்ல ஜனநாயக அமைப்பாக செயல்பட உறுதியெடுக்க வேண்டும்.
9.   ஊழலில் ஈடுபட்டு வெளியே தெரிந்தும், தெரியாமலும் இருக்கும் பழம்பெருச்சாளிகளை ஓரம் கட்டி பதவி நீக்கி, கட்சிப் பணியில் ஈடுபடுத்த வேண்டும்.
10.                எல்லோரும் குறிப்பாக கட்சித் தொண்டர்கள் இலகுவில் அணுக முடியும் தலைவராக விளங்க வேண்டும்.
11.                தலைவர்களின் தலைவர் என்பதைவிட தொண்டர்களின் தலைவர் என்பது தான் எப்போதுமே உயர்வைத்தரும்.
12.                அடுத்தக் கட்ட தலைவர்களை உருவாக்க முயன்று திமுகவில் திறமையான பலரை தயார்ப்படுத்த வேண்டும்.
13.                அண்ணா அறிவாலயத்தில் அன்பழகன் தலைமையில் திராவிடப் பல்கலைக்கழகம் அமைத்து, திமுகவின் சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களாக விரும்புவர்கள், கட்சிப் பொறுப்புகளுக்கு வருபவர்கள் என எல்லோரும் அதில் பயின்று சான்றிதழ் பெறுவது அவசியம் என்ற நிலையினைக் கொண்டு வரவேண்டும்.
14.                திமுகவின்  சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட பொறுப்பிலிருக்கும் அனைவருக்கும் கணிணிப் பயிற்சி அளித்து அடுத்த கட்ட தலைமைக்கு ஆயத்தப்படுத்த வேண்டும்.
15.                தலைமைப் பொறுப்புகளுக்கு மேலிருந்து கீழ் என்றில்லாமல் கீழிருந்து மேல் என்று கொண்டுவரும் நிலையை உருவாக்க வேண்டும்.
16.                கட்சியின் உறுபினர்களிடம் மாத உறுப்பினர் தொகை வசூலிக்கப்பட்டு கட்சியின் கிளைக்கழக பொறுப்பாளர்களுக்கு ஊதியம் வழங்கலாம்.
17.                கிராமங்களில் வளர்ச்சிப் பணிகளை முன்னெடுத்து எல்லாவற்றுக்கும் அரசாங்கத்தை எதிர்பார்க்காமல் கட்சியின் நிதியிலிருந்து செலவழித்து சிறுசிறு பணிகளைச் செய்து முடிக்க வேண்டும். கிராமத்து மக்களும் இத்தகைய பணிகளுக்கு மனமுவந்து உதவுவார்கள். அந்த ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தி கணக்கு வழக்குகளை பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்.
18.                ஓட்டுக்கு காசு கொடுக்கும் வழக்கத்தை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும். எப்போதும் மக்கள் பணி செய்வது திமுகதான் என்றால் மக்கள் மகிழ்ச்சியுடன் உதவுவார்கள்.


19.                எதிர்க்கட்சியாக இருப்பதால் எல்லாவற்றையும் எதிர்க்காமல் எதிர்க்க வேண்டியவற்றை எதிர்த்து, பாராட்ட வேண்டியதை பாராட்டி, வரவேற்க வேண்டியதை எதிர்த்து நல்ல அரசியல் செய்ய வேண்டும்.
20.                எதிர்க்கட்சியில் இருந்தாலும் ஆளுங்கட்சியில் இருந்தாலும் தமிழ்நாட்டின் ஒட்டு மொத்த வளர்ச்சியை முன்னெடுத்து நாடு நல்ல வளர்ச்சியடைய பாடுபட வேண்டும்.
Image result for karunanidhi family



எந்த ஒரு எதிர்க்கட்சியினையும் குறைவாக மதிப்பிடாமல் இருந்து,    இவற்றையெல்லாம் கடைப்பிடித்தால் மு.க.ஸ்டாலின் தனிப் பெருந்தலைவராக உருவெடுத்து மக்கள் மனதில் நீங்காத இடம் பிடிக்கலாம்.  திராவிட இயக்கத்தை அடுத்த தளத்திற்கு எடுத்துச் சென்று சாதி சமய வேறுபாடில்லாத சமத்துவ சமுதாயத்தை அமைக்கலாம்.

8 comments:

  1. அரசியல் ஆலோசகர் பதவி காலியா இருக்றதா கேள்விப்பட்டேனே ? :)

    ReplyDelete
    Replies
    1. அது தீபாவுக்கு தேவைப்படுவதாகத்தான் சொன்னார்கள்.வேண்டாம் என்று சொல்லிவிட்டேன் பாஸ்கர் .அங்கு ஒன்னும் பேராது போலிருக்கு .

      Delete
  2. அருமையான யோசனைகள்..

    ReplyDelete
    Replies
    1. கொஞ்சம் ஸ்டாலினிடம் சொல்லுங்களேன் நண்பா.

      Delete
  3. Replies
    1. அது உங்களுக்குப்புரியுது வெங்கட், ஆனா ___________
      .

      Delete
  4. விரைவில் நீங்கள் வந்து விடுங்கள்... அது தான் தமிழ்நாட்டிற்கு நல்லது தல...

    ReplyDelete
    Replies
    1. நான் வரதுக்கு ரெடி , ஆனா மக்கள் ரெடியான்னு கொஞ்சம் கேட்டுச்சொல்லுங்களேன் .

      Delete