Thursday, July 21, 2016

வெள்ளைக்காரனின் தமிழும்! மதுரைக்காரனின் தாராளமும்!

ஃபெட்னா தமிழர் திருவிழா-2016 : பதிவு 2
Me in Fetna
ஃபெட்னா தமிழர் திருவிழா நடந்த அரங்கைச் சுற்றிலும் நிறைய ஸ்டால்கள் இருந்தன. அதில் ஒன்று ஹார்வர்டு தமிழ் இருக்கை அமைப்பு போட்டிருந்த ஸ்டால்.
கொஞ்சம் காலம் முன்னால், ஆனந்த விகடனில் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் ஒரு தமிழ் இருக்கை அமைப்பது பற்றியும் அதற்கு முயற்சி எடுக்கும் அமெரிக்காவில் வாழும் இரண்டு தமிழ் மருத்துவர்கள் பற்றியும் படித்து ஆச்சரியப்பட்டேன். அதைப் படிக்கும்போது இதெல்லாம் வீண் முயற்சி என்றுதான் எண்ணத்தோன்றியது. இது தேவையா என்று கூட  நினைத்தேன்.
முதல் நாள் விழாவில் பல அறிஞர்கள் தமிழில் உரையாற்ற, எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்று  இருந்தது. அப்போது ஒரு வெள்ளைக்காரனை மேலே அழைத்து ஹார்வர்டு பல்கலைக் கழகத்திலிருந்து வந்திருக்கிறார் என்று அறிமுகம் செய்து வைத்தனர்.
'எல்லோருக்கும் வணக்கம்' என்று அவர் ஆரம்பித்த போது அரங்கம் கைதட்டலால் நிறைந்தது. எனக்கு அது ஆச்சரியத்தை அளிக்காதலால் வாளாயிருந்தேன். ஆனால் அடுத்து அவர், "என்னடாது ஒரு வெள்ளைக்காரன் தமிழ்ல பேசறான்னு ஆச்சரியமா இருக்கா ?" என்று கேட்ட போது அரங்கம் அதிர்ந்தது. இந்த முறை அது என்னையும் ஆச்சர்யப்படுத்த நானும் சேர்ந்து கைதட்டினேன்.  அதற்கப்புறம் அவர் பேசிய தங்கு தடையற்ற தமிழ் தொடர்ந்து கைதட்டலை அள்ளியது.
அவர் பெயர் ஜோனத்தன் ரிப்ளி ( Jonathon Ripley ). சில வருடங்களுக்கு முன்னால் மதுரை அமெரிக்கன் கல்லூரிக்கு வந்த இவர், இரண்டு வருடங்கள் அங்கே தங்கியிருந்தாராம்.
நான் படித்த மதுரை அமெரிக்கன் கல்லூரியில் வெள்ளைக்காரர்களைப் பார்ப்பது ஒரு அதிசயம் அல்ல. ஆங்கில இலக்கியம், இயற்பியல், விலங்கியல் ஆகிய துறைகளின் தலைவர்கள் வெள்ளைக்காரர்கள்தாம். அதுதவிர வகுப்பறைகளிலும் வெளிநாட்டுக்காரர்களைப் பார்க்கலாம். அதோடு ஓபர்லின் ரெப் என்று ஓரிருவர் வந்து குறைந்த பட்சம் 2 ஆண்டுகள் தங்கிப் படித்துச் செல்வர். அப்படி இயற்பியல் துறைத்தலைவர் ரீஸ் என்பவரின் பரிந்துரையில், மதுரையில் உள்ள ஊனமுற்றவர்களுக்கு ஆங்கிலத்தைக்  கற்றுக் கொடுத்து வந்தவர்தான் ஜோனத்தன் ரிப்ளி. ஆங்கிலம் கற்றுக் கொண்டாரோ இல்லையோ நன்றாக தமிழ் பேசக் கற்றுக் கொண்டார். 

அவருடைய பேச்சைக் கீழே கொடுத்திருக்கிறேன் கேளுங்கள். எப்படி எனக்கு தமிழில் ஆர்வம் வந்தது என்று கேட்டபோது உள்ளூர் நண்பரின் தாயார் சொன்னாராம், "போன பிறவியில் நீ மதுரையில் பிறந்திருப்ப" என்று. இவர் உண்மையிலேயே தமிழில் பேசுகிறாரா இல்லை ஆங்கிலத்தில் தமிழை அப்படியே எழுதி பேசுகிறாரா என்று நண்பர் ஆரூர் பாஸ்கரிடம் கேட்டபோது, அவர் போய் பார்த்துவிட்டு வந்து சொன்னார். இல்லை அவர் கையில் இருக்கும் ஸ்கிரிப்ட் தமிழில் டைப் செய்யப்பட்டுள்ளது என்று.


ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் “Preceptor” ஆக வேலை பார்க்கும்  ஜோனத்தன் தமிழிருக்கையின் அவசியம்பற்றிச் சொன்னார்.


Harvard University
            தமிழ் மொழியின் சிறப்பையும், தொன்மையையும், இலக்கியங்களையும் உலக மாணவர்கள் அறிந்து கொள்ள  இருக்கை அமைக்கலாம் என்பதை ஹார்வர்டு கொள்கை அளவில் ஏற்றுக் கொண்டுள்ளது. இதன் மூலம் ஹார்வர்டின் தெற்காசிய ஆய்வுத்துறையின் கீழ் சங்கத்தமிழ் இருக்கை அமைய முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.  இலக்கியம் என்பது மக்களின் கலை மற்றும் கலாச்சாரத்தையும், நாகரிகத்தையும் மொழியின் மூலம் காட்ட வல்லது. தமிழ்க் கல்விக்காக போலந்து, செக், ஸ்வீடன், பின்லாந்து, ஹாலந்து போன்ற நாடுகளில் தமிழ் இருக்கைகள்  இருக்கின்றன. ஆனால் 1636 ஆம் ஆண்டு ஸ்தாபிக்­கப்­பட்ட ஹார்வர்ட் பல்­க­லைக்­க­ழ­க­மா­னது உலகத் தர­வ­ரி­சையில் முத­லி­டத்தில் உள்­ளது. எனவே இங்கு தமிழ் இருக்கை ( Tamil Chair) அமைவது தமிழுக்கும் தமிழருக்கும் பெருமை தரும்.

தமிழ் இருக்கையின் தேவை:
1.   தமிழ்மொழி என்பது 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட இலக்கிய எழுத்து மொழி.
2.    உலகில், கிரேக்கம், சமஸ்கிருதம், இலத்தீன், ஹீப்ரூ, பெர்சியன், சீனம் ஆகிய செம்மொழிகளுடன் (Classical Language) சற்றும் குறையாது  அந்தஸ்து பெற்ற உலகின் ஏழு செம்மொழிகளில் ஒன்று தமிழ் மொழி  .
3.   இவற்றுள் பேச்சு வழக்கில், பலமொழிகள் அழிந்து போனாலும், இன்னும் சீரிளமை திறம் வியக்கும் வகையில், இன்றும் பலர் பேசும் மொழி தமிழ்மொழியாகும்.
4.   தற்சமயம் தமிழ்மொழி உலகமெங்கும் பேசப்படும் மொழிகளில், 80 மில்லியன் மக்களால் பேசப்பட்டு 20-ஆம் இடத்தில் இருக்கிறது.
5.   ஆனால் தமிழ்மொழி இன்னும் உயர்ந்த இடத்தில் உலகத்தோர் ஆராய்ச்சி செய்து புதிய பரிணாமங்களை வெளிப்படுத்தத் தகுந்த மொழியாகும்.
6.   ஹார்வர்டில் தமிழ் இருக்கை அமைவதின் மூலம் உலக மாணவர்கள் தமிழையும் தமிழ்க்கலாச்சாரத்தையும் அறிந்து கொள்வதன் மூலம் தமிழ்மொழியை ஆராய்ச்சி மூலம் இன்னொரு தளத்திற்கு எடுத்துச் செல்ல முடியும்.
7.  அதோடு இங்கே இருக்கை அமைவது தமிழுக்கும் தமிழருக்கும் நிரந்தரமான பெருமையளிக்கும் செயலாகும்.

எவ்வளவு தேவை?
Dr. Vijay Janakiraman
ஹார்வர்டில் தற்சமயம் பெங்காலி, இந்தி, சமஸ்கிருதம்மற்றும் தமிழ் ஆகிய இந்திய மொழிகள் கற்றுக் கொடுக்கப்படுகின்றன. ஆனால் இருக்கை அமைத்து தமிழ்மொழி ஆராய்ச்சியைத் தூண்டுவது நல்ல முன்னேற்றத்தைக் கொடுக்கும். இதை முன்னெடுத்துச் செய்பவர்கள் Dr. சுந்தரேசன் சம்பந்தம் (திருவாரூர்) மற்றும் Dr.விஜய் ஜானகிராமன் (தஞ்சாவூர்). இவர்கள் ஏற்கனவே ஹார்வர்டு சென்று தமிழ் இருக்கை அமைப்பதற்கு அனுமதியும் பெற்றுவிட்டார்கள். 
sundaresan
Dr.Sundaresan Sampantham 
தன்னார்வ நிறுவனத்தைத் துவங்கி நன்கொடைகளைப் பெற்று வருகிறார்கள்.  இந்த நிரந்தர தமிழ் இருக்கையை அமைக்க 6 மில்லியன் டாலர்கள் செலுத்தப்பட வேண்டும். ஆறு மில்லியன் என்பது அறுபது லட்சம் டாலர்கள்.  ஒரு லட்சம் டாலர்கள் என்பது நம் இந்திய மதிப்பில் 70 லட்சம் ரூபாய் என்றால் நீங்கள் கணக்குப் பண்ணிக்கொள்ளுங்கள். இந்த இரு டாக்டர்களும் தங்கள் சார்பாக தலைக்கு ஐந்து லட்சம் டாலர்கள் நன்கொடையின் மூலம் 1 மில்லியன் டாலரை கொடுத்துள்ளார்கள். இது வரை இவர்கள் அளித்த நன்கொடையையும் சேர்த்து சுமார் 2 மில்லியன் சேர்ந்துள்ளது. தேர்தலுக்கு முன்னால் அம்மாவிடம் இந்த டாக்டர்கள் சென்றதில் அம்மா உதவி செய்வதாக உறுதி கூறி , தன்னுடைய தேர்தல் வாக்குறுதிகளிலும் இதனை ஒன்றாக இணைத்தார்கள். இப்போது வெற்றி பெற்று விட்டதால் ஏதேனும் செய்யலாம் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது .பொறுத்திருந்து பார்க்கவேண்டும்.
Ranga, me and Dr.Bala 

இதனைக் கேள்விப்பட்ட நண்பர் பாலா, உடனே தன்னுடைய சொந்த பணத்தில் 50,000 டாலர்களை நன்கொடையாக அளித்தார். அதுமட்டுமல்ல அதைப் பற்றி அறிவிக்கவும் வேண்டாம் என்று சொல்லியுள்ளார். ஆனாலும் மற்றவர்களை ஊக்குவிக்கும்பொருட்டு, அது மேடையில் அறிவிக்கப்பட்டது. அவரை மேடையில் பலமுறை அழைத்தும் அவர் மேடைக்கு வரவில்லை. அதீத தமிழ் ஆர்வம் கொண்ட பாலா சுவாமிநாதன் நியூயார்க் லாங் ஐலன்டில், தன்னார்வ நண்பர்களைக் கொண்டு தமிழ்ப்பள்ளி ஒன்றை நடத்திவருவது குறித்து ஏற்கனவே சொல்லியுள்ளேன். அதனைப்படிக்க இங்கே சொடுக்கவும்.
http://paradesiatnewyork.blogspot.com/2016/04/blog-post_21.html 
இது எவ்வளவு பெரிய தொகை என்பது அமெரிக்காவில் வாழும் எங்களுக்குத்தான் தெரியும் .மாதச் சம்பளம் வாங்கும் ஒருவர் இவ்வளவு பெரிய தொகையை ஒரே செக்கில் நன்கொடையாக கொடுப்பது மிகப்பெரிய விஷயம். இதைச் சேர்ப்பதற்கு எவ்வளவு காலம் ஆகியிருக்கும் என்பதை நினைத்தால், பாலா அவர்கள் தன்னுடைய எதிர்காலத்தை விட , தன் குடும்பத்தின் எதிர்காலத்தை விட ,தன் தாய் மொழியாம் தமிழ் மொழியின் எதிர்காலத்தைத்தான் பெரிதாக நினைக்கிறார்  என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.பாலா நீர் கடையெழு வள்ளல்களை மிஞ்சிவிட்டாய் .உன்னால் தமிழ் வாழும் ,தமிழால் நீயும் வாழ்வாய் , வாழ்த்துக்கள் .
Dr Bala in  Fetna

  தமிழ் இருக்கைக்கு நன்கொடை அளிக்க விரும்பும் நண்பர்கள் www.harvardtamilchair.com என்ற தளத்தின் மூலம் அளிக்கலாம். இதற்கு வரிவிலக்கு உண்டு.

 ஃபெட்னா பதிவுகள் தொடரும்



18 comments:

  1. ஏற்கென்வே வாஷிங்டன் செல்ல
    அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுவிட்டதால்
    அன்றைய நிகழ்வுக்கு வர இயலாமல் போனது
    அது எத்தகைய பெரிய இழப்பு என்று
    தங்கள் பதிவு மற்றும் நிகழ்ச்சியின் காணொளிப்
    பார்க்கப் புரிந்தது

    வாழ்த்துக்களுடன்...

    ReplyDelete
    Replies
    1. அடுத்த முறை சந்திக்கலாம் ரமணி.

      Delete
  2. நன்றி ஆல்ஃபி! பாலா தான் செய்தது போதாதென்று இன்னமும் நிதி திரட்டிக்கொண்டிருக்கிறார்!!!

    ReplyDelete
    Replies
    1. பாலா வாழ்க , அவர் குலம் வாழ்க , அவர் நண்பர்களும் வாழ்க ,அதான் ரங்கா நீங்களும் நானும் .

      Delete
    2. பாலா வாழ்க , அவர் குலம் வாழ்க , அவர் நண்பர்களும் வாழ்க!!!

      Delete
    3. நீங்களும் அவர் நண்பரா ? அப்ப நீங்களும் வாழ்க .

      Delete
  3. மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என் அமெரிக்கன் கல்லூரி தோழன் ஆல்பிரட். ஹார்வர்ட் பல்கலைகழகத்தில் தமிழ் இருக்கை விரைவில் அமைய வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி தாஸ் ஜெயக்குமார்.

      Delete
  4. ஓர் அருமையான பணியைப் பகிர்ந்தமைக்கு நன்றி. பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி.

      Delete
  5. வாவ்..... அவரது ஆர்வம் ஆச்சர்யம் தந்தது. அவருக்கு எனது பாராட்டுகளும்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி.

      Delete
  6. நல்லதொரு பதிவு. தேவையான தரவுகளை தேடி எடுத்து எழுதியிருக்கிறீகள். தமிழ் வாழ்க!!

    ReplyDelete
    Replies
    1. தமிழ் வாழட்டும் , நீங்களும் நானும் தமிழால் வாழ்வோம் பாஸ்கர் .

      Delete
  7. வணக்கம் ...உங்கள் பதிவுகள் தொடர்ந்து படித்து வருகிறேன். அருமை. அதிலும் வெள்ளைகாரனின் பேச்சு மிக அருமை நான்மதுரை -திருமங்கலத்தை சேர்ந்தன்.அ.தமிழ்ச்செல்வன.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி தமிழ்ச்செல்வன.

      Delete
  8. Replies
    1. நன்றி தாமரைச்செல்வன் .

      Delete