Thursday, July 7, 2016

முல்லைக்குத் தோள் கொடுத்த பரதேசி !!!!!!!!

crowded Penn Station
E train Crowd 

நியூயார்க் சப்வேயில் பயணம் செய்வது அனுதினமும் சாகசம் நிறைந்தது. முடிவு பண்ணிட்டா ரெண்டு பிரச்சனை. முதலில் எந்தப்பக்கம் போகிறது என்பதை நன்கு பார்த்து முடிவு செய்து பின்னர்தான் உள்ளே நுழையணும். இல்லேன்னா எதிர்ப்பக்கம் போயிருவோம். எந்தப்பக்கம்னு முடிவு பண்ணிட்டா, ரெண்டு பிரச்சனை. வண்டியில் முன்புறம் ஏறுவதா, பின்புறம் ஏறுவதானு, நல்லா பார்த்து றனும். இல்லேன்னா ஒவ்வொரு பகுதியும் வேறு ஒரு தெருவில கொண்டுபோய் விட்டுறும், அப்புறம் அல்லாடனும்.

அதுக்கப்புறம் உள்ளே ஏறும்போது ரெண்டு பிரச்சனை. காலியா இருக்கா, கூட்டமா இருக்கானு. காலியா இருந்தா ஏறக்கூடாது. ஆஹா அதிர்ஷ்டம்னு ஏறினீங்கன்னா, அங்க மூலையில் ஒரு ஹோம்லஸ் படுத்திருக்கும்.  என்னான்னா அந்த வண்டியின் கேரேஜில் உள்ள நறுமணம் ஓசியில நாசியைத்துளைச்சி, மாஸ் காண்பிச்சு, மூக்கில நுழைஞ்சு மூளை வரைக்கும் ஏறிரும்.
Inside the train
தப்பிச்சு அடுத்த கேரேஜில் ஏறினா பாதிக்கப்பட்ட பலரும் கூட்டமாய் கண்ணு கலங்கிப்போய், மூக்கை மூடிட்டு இருப்பாய்ங்க. மிச்ச சொச்ச வாடை அவங்க மேலேயும் லேசா அடிக்கும்.

 கேரேஜில ஏறிட்டீங்கன்னா ரெண்டு பிரச்சனை. உட்கார இடம் இருக்கா இல்லையான்னு. நின்னுட்டு வரதுன்னா ரெண்டு பிரச்சனை. பிடிக்கிறதுக்கு கம்பி எட்டுமா இல்லையான்னு. உட்கார இடம் கிடைச்சா ரெண்டு பிரச்சனை. ரெண்டு பக்கமும் 2 அசுரர்கள் இல்லேன்னா அசுரிகள் உட்கார்ந்து உங்களை நசுக்க, பிதுக்க பாத்துட்டு இருக்காங்களா, இல்லை ரெண்டு பக்கமும் ரெண்டு தேவதைகள் நாசூக்காய் உட்கார்ந்து பட்டும் படாமலும் இருக்காங்களான்னு.

அபூர்வமாக சிலசமயம் ஓர சீட்டும் கிடைக்கும். இதுல என்ன விசேஷம்னா பிரச்சனை ஒரு பக்கம்தான் வர சான்ஸ் இருக்கு. அப்படி ஒரு அதிர்ஷ்ட நாள்ல, சப்வே காரில் ஓர சீட் கிடைச்சு சாவகாசமா  உட்கார்ந்து, ஏதாவது எழுதலாம்னு பேனா பேப்பரை எடுத்தேன். பக்கத்தில் ஒரு கடோத்கஜன் தொடைகளை விரித்து உட்கார்ந்திருக்க, நான் பல்லி போல் ஓர சீட்டில் ஒட்டிக்கொண்டு இருந்தேன்.  

கடோத்கஜன் தொடையை விரித்துக் கொண்டே போக, நான் என் உருவத்தை சுருக்கிக் கொண்டே போக, ஒரு சமயத்தில் என் ஒத்தை நாடி சரீரம் அரை நாடி சரீரமாக அடங்கி ஒடுங்கி ஒதுங்கியது. அடச்சீ இதுக்கு நின்னுக்கிட்டே இருக்கலாம்னு நெனைச்ச போது ஜீரோ சைசில் ஒரு ஸ்பானிய தேவதை எனக்கு முன்னால் நின்று கொண்டு இதையெல்லாம் வேடிக்கை பாத்துக்கிட்டே சிரித்துக்கிட்டே இருந்தது.

இதுக்கிடையில யூனியன் டர்ன்பைக் வந்துவிட, கடோத்கஜன் மிகவும் முயன்று எழுந்து வெளியேறினான். என் பக்கத்தில் இன்னும் ரெண்டுபேர் உட்கார இடம் இருப்பது போல் தெரிந்தது. அந்த ஸ்பானியப் பெண் புன்னகை மாறாமல் பக்கத்தில் உட்கார்ந்தாள். பக்கத்தில் உட்கார்ந்த அவளைப் பார்த்து "கொமாஸ்தாஸ் ?" என்றேன். "பியன்" என்று சொல்லிவிட்டு புன்னகைத்தாள். மெக்ஸிகோவில் கற்றுக் கொண்டது அப்போது உதவியது.

நானும் கொஞ்சம் ஆசுவாசப்பட்டு மீண்டும் அரை நாடி உடம்பை ஒத்தை நாடியாக மாற்றி சரியாக உட்கார்ந்து பேப்பரை எடுத்து எழுத ஆரம்பிச்சேன்.

எழுதுவதை அந்தப் பெண் உத்து உத்துப் பார்த்ததால், நான் நிதானப்பட்டு முடிந்தவரை அழகாக எழுத ஆரம்பித்தேன். அவள் கண்கள் விரிய என்னை ஒருமுறை பார்த்துவிட்டு, "என்ன மொழி இது?”, என்று கேட்டாள்.


நானும், "கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே" என்று ஆரம்பித்தவுடன் அவள் சிறியதாக ரோஸ் நிற ஈறுகள் தெரிய ஒரு கொட்டாவியை விட்டாள். நானும் விடாமல் எம்மொழியாம் செம்மொழியைப் பற்றி மேலும் கூற முற்பட, அவள் தூங்கிவிழ ஆரம்பித்தாள். கொஞ்சம் கொஞ்சமாய் நெருங்கி வந்த அவள், ஒரு கட்டத்தில் என் வலதுபுற தோளில் தலைவைத்து மூசு மூசுன்னு தூங்க ஆரம்பித்தாள். பாவம் சிறு பெண் என்று நினைத்து நானும் வாளாவிருக்க, அவள் விட்ட சிறு குறட்டை காதுக்கருகில் இருந்ததால் கொஞ்சம் பெருங்குரட்டை போலவே கேட்டது.

என்னுடைய அரட்டை தாங்காமல் வந்த குறட்டை என்பதால் நானும் பொறுத்துக் கொண்டேன். என்னடா இது, இந்த பரதேசி தோள்ல யாரோ ஒரு பிறதேசி தூங்கிட்டு இருக்கேன்னு, யாரும் பாத்தா என்னை தப்பா நினைச்சுருவாங்களேன்னு வேற பயமாயிருந்துச்சு. தொடர்ந்து எழுதினால் தோள் அசைவு ஏற்பட்டு அவள் எழுந்துவிடப் போகிறாள் என்று நினைத்து எழுதுவதையும் நிறுத்திவிட்டேன். இதுல நம்ம ஸ்டாப் வந்துட்டா என்ன செய்யறதுன்னு வேற ஒரு பக்கம் ஓடிட்டிருந்துச்சு.

தமிழன் வரலாற்றை தாராளமாகச் சொல்ல நினைத்த நான், தாரகை தூங்கி விட்டதால் சிறிது ஏமாந்து போனாலும், “முல்லைக்குத் தேர் கொடுத்தான் பாரி, இந்தக்  கிள்ளைக்கு தோள் கொடுத்தான் பரதேசி”, என்று நினைத்து நம் தமிழ்க் கலாச்சாரத்தை காத்த வள்ளல் போல் பெருமையுடன் கண்களை மூட, அருகில் இருந்த கதகதப்பாலோ, இல்லை நேத்து ராத்திரி லேட்டா தூங்கினதாலோ, நானும் கொட்டாவி விட்டேன்.

இந்தக் கொட்டாவி என்ற கெட்டாவி வந்தால், தூக்கமும் வந்துடும்னு தெரிஞ்சும் முடிஞ்சளவு உஷாரா இருந்தும், எப்படியோ நானும் தூங்கிட்டேன். 

34-ஆவது தெரு வந்துவிட்டதுன்னு கன்டக்டர் சொல்றது PA சிஸ்டத்தில கேட்டவுடனே டக்குன்னு முழிப்பு வந்துருச்சு. வலது தோள் கனமாவே இருந்துச்சு. ஆஹா இன்னும் இந்தப்பெண்ணோட ஸ்டாப் வரலை போலிருக்குன்னுன்னு நினைச்சு ஓரக்கண்ணால பார்த்தேன்.

பாத்தா இது அந்த ஸ்பானிஸ் பொண்ணு மாதிரி தெரியல.

இன்னும் கொஞ்சம் முயற்சி செஞ்சு பாத்தப்பதான் தெரிஞ்சது. இப்ப என் தோள்ல படுத்திருந்தது ஜீரோ சைஸ் தேவதை இல்லை, இது பீரோ சைஸ் கடோத்கஜி. தலை மொட்டை, அவ்வளவு அகலமான ஆழமான மூக்கு ஒன்றை நான் இதுவரை இவ்வளவு குளோசப்ல பார்த்ததே இல்லை. கொஞ்சம் மூச்சை இழுத்துவிட்டா நானே உள்ளே போயிருவேன் போல இருந்தது.

என்னடாது என் தோள் என்ன பப்ளிக் பிளாட்பாரமான்னு நினைச்சு, அசைச்சு அசைச்சு எழுந்தேன். வாயில் லேசாக ஜொள் வடிய  சிரித்தாள்.




மக்களே இப்ப வலது தோளும் ஒரு வாரமா வலிக்குது. திரும்பவும் உள்ளே எலும்பில் கீரல்?.

முற்றும்.


4 comments:

  1. ஹாஹா.... செம அனுபவம் தான்....

    ReplyDelete
    Replies
    1. செம அனுபவம் இல்லை வெங்கட் அது சுமை அனுபவம்.

      Delete