Monday, July 11, 2016

ஆண் லீயும் பெண் லீயும் !!!!!!!!!!!!

சீனாவில் பரதேசி -15

லீயை ஏற இறங்கப் பார்த்தேன். ஆள் வாட்ட சட்டமாய் உயரமாய் நல்ல எனர்ஜியுடன் இருந்தான். மொத்தத்தில் என்னைப்போல இல்லை. ஆஹா டூரிஸ்ட் கைட் மட்டும் இல்லை, எனக்கு நீ நல்ல பாடி கார்டாகவும் இருப்பாய் என நினைத்துக் கேட்டேன். ( ஆமா நீ பெரிய செலிபிரிட்டி , உனக்கு பாடி கார்டு வேற ஒரு கேடா? : யார்ராது எனக்கு தெரியாம உள்ளே புகுந்தது , மகேந்திரனா  இருக்குமோ இல்லை நம்ம மனசாட்சியா ?  ) 

உன் முழுப்பெயர் என்ன லீ ?.

“பரவாயில்லை உன்னை லீ என்றே கூப்பிடுகிறேன்”.

“உங்க முழுப்பெயர் என்ன ஆல்ஃபி ?”

“பரதேசி ஆல்ஃபிரட்  ராஜசேகரன் தியாகராஜன்”

“வேண்டாம், நான் உங்களை ஆல்ஃபி என்றே கூப்பிடுகிறேன்”.

எப்பூடி என் கிட்டேயா நெருப்புடா , தமிழன்டா என்று நினைத்துக் கொண்டே அவனைப்பார்த்து சிரித்தேன்.

          “லீ நமக்கு முழுதாக அரை நாளுக்கு மேல் இருக்கிறது. என்ன செய்யலாம்? என்ன பார்க்கலாம்?”.

“அப்படி யென்றால் என்ன அமர்த்திவிட்டீர்களா?”

“ஆமாம்”, என்று தலையசைக்கும் போது, ஒரு அல்ட்ரா மாடர்ன் கறுப்புக் கண்ணாடி அணிந்த, ஒரு மஞ்சள் பெண் அதீத புன்னகையுடன் அருகில் வந்தாள். ஐயையோ கொஞ்சம் அவரசப்பட்டுட்டேன் போல.

“ஹாய், யு மஸ்ட் பி ஃரெம் இண்டியா”  

“எஸ் ஐ ஆம்”

“ஐ ஹேவ் பீன் டு பாம்பே, நைஸ் பிளேஸ்”

யா ?”
“இண்டியா இஸ் எ பியூட்டி ஃபுல் கன்ட்ரி”

“எஸ் இண்டீட்”

என்னடாது எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கேன்னு யோசிக்கிறீங்களா, அட ஆமாங்க ஆமா ,  போன பதிவில் வரிக்கு வரி லீ சொன்ன அதே வார்த்தைகளை அவளும் சொல்ல உங்களை மாதிரியே நானும் திகைத்துப்போனேன்.   (ந்தப்பதிவை படிக்க இங்கே சொடுக்கவும் http://paradesiatnewyork.blogspot.com/2016/07/blog-post.html )
“ஐ ஆம்... லீ ,  *?!@&@%*+.. லீ”   என்றாள்.

என்னாது இவளும் லீயா?

“பரவாயில்லை உன்னை லீ என்றே கூப்பிடுகிறேன்”

“நைஸ்டு மீட் யூ”, என்று கைகுலுக்க, அதற்குள், ஆண் லீ வந்து இந்த பெண் லீயுடன் ஏதோ காரசார சீன பாஷையில் பேசினான். சீனர்கள் சாதாரணமாக பேசுவதே சண்டை போடுவது போல்தான் தெரியும். எனவே உண்மையில் அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று எனக்குப் புரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் தெரிந்தது, ஆண் லீயைப் போல, இந்தப் பெண் லீயும் கைட்தான் போல. ஆண் லீ தன் கஸ்டமரை அபகரிக்க வந்த பெண் லீயுடன் தகராறு செய்வது போல்தான் தெரிந்தது.

இருவரையும் பார்த்தேன், இந்த பீஜிங் இளவரசி பெண் லீ பியூட்லியாகத் தெரிய அந்த ஆண் லீ அக்லியாக தெரிய கொஞ்சம் அவசரப்பட்டுட்டோம்னு நெனைச்சேன். இருவரும் மீண்டும் அருகில் வந்து “எங்கள் இருவரில் உங்களுக்கு கைடாக யார் வேண்டும் ?”, என்று கேட்டார்கள்.

என் மனசு “பெண் லீ பெண் லீ”, என்று அலற அதனை அலட்சியம் செய்து ஆண் லீயைக் காண்பித்தேன். (ஆமா இவரு பெரிய உத்தம புத்திரன் : யார்ரா இது மறுபடியும் நடுவில , எனக்கும் கொஞ்சம் மனசாட்சி இருக்கு பாஸ்). அதனைப் புன்னகையுடன் ஏற்றுக் கொண்ட பெண் லீ அவ்விடம் விட்டு நகர்ந்தாள். அட , அவள் முகத்தில் ஒரு முறைப்போ எரிச்சலோ தெரியவில்லை மாறாக ஆச்சரியம்தான் தெரிந்தது . “போகுதே போகுதே”, என்று என் மனம்பாட பின்னால் திரும்பிப் பார்த்தேன், அங்கே ஒரு இளவயது வட இந்தியன் கேப்பும் ஜீன்சும் அணிந்து வர, இந்தப் பெண் லீ அவனிடம் சென்று.

"ஹாய் யு மஸ்ட் பி ஃபிரம் இண்டியா" என்றாள்.

அடுத்து என்ன பேசியிருப்பார்கள் என்று உங்களுக்கும் தெரியும். எனக்கும் தெரியும், பரவாயில்லை அவர்கள் ஜோடிப்பொருத்தம் நன்றாகவே இருந்தது.
'ஓகே லீ என்ன பிளான் ?' என்றேன் ஒரு பெருமூச்சுடன்.

“நமக்கு நேரம் இருக்கிறது. இங்கிருந்து ஒரு அரை மணி நேரப்பயணத்தில் சம்மர் பேலஸ் போகலாம்”.

“சரி ஒரு டாக்சியைப் பிடி”

“வேண்டாம் மெட்ரோவில் போகலாம், விரைவாகவும் சென்றுவிடலாம். கட்டணமும் கம்மி, தவிர இந்தச் சமயத்தில் கூட்டமும் கம்மியாக இருக்கும்”.

“சரி போகலாம்”.

சிறிது தூரம் நடந்து, சப்வே என்று நாங்கள் இங்கே சொல்லக் கூடிய மெட்ரோ ஸ்டேஷனை அடைந்தோம், டிக்கட்டை வாங்கினோம். நியூயார்க்கில் போல அல்லாது தூரத்திற்குத் தகுந்தாற்போல் கட்டணம் வாங்கினார்கள். நியூயார்க்கில் ஐந்து போரோவுக்குள் எங்கே எவ்வளவு தூரம் போனாலும் ஒரே கட்டணம் தான்.

இரண்டு டிக்கட்டை வாங்கிக் கொண்டு உள்ளே நுழைவதற்கு முன்னால் முழுவதுமாக சோதனை பண்ணித்தான் அனுப்பினார்கள்.

“என்னது இங்கே சப்வேயில் கூட சோதனை நடக்கிறதே?”.

“ஆமாம் இங்கே சில புரட்சிவாதிகள் உண்டு”.

“என்னது திருநெல்வேலிக்கே அல்வாவா?”

“வாட்?”

“இல்லை கம்யூனிஸ்ட்டுக்கே எதிராக புரட்சியா?”

“சீனாவில் சில பகுதிகள் தனி நாடு வேண்டும், சுதந்திரம் வேண்டும் என்று ஆயுதப் போராட்டம் நடத்துகிறார்கள்”.

“ஐயையோ இங்கேயுமா? பயணம் பாதுகாப்பானது தானா ?”

“ ஒன்றும் கவலைப்படாதே, நான் இருக்கிறேன்”.

          சப்வேயைப் பார்த்து அசந்துவிட்டேன். மிகவும் சுத்தமாக புதிதாக, பளிச்சென்று இருந்தது. அதோடு மிகுந்த பாதுகாப்புடன் இருந்தது. எப்படியென்றால் தொடர் வண்டிக்காக காத்திருக்கும்போது, பயணிகளுக்கும் வண்டி வரும் பாதாளத்திற்கும் இடையில் ஒரு கண்ணாடித் தடுப்பு இருந்தது. வண்டி வந்த பின்னர்தான் அது திறந்து வழிவிடுகிறது. அதன் பின் வண்டியின் கதவுகள் திறக்க, நாம் உள்ளே போகலாம். இரண்டுமே தானியங்கிக் கதவுகள். இங்கே நியூயார்க்கில் பள்ளத்தின் ஓரமாக நிற்க வேண்டும். எந்த பாதுகாப்பும் இல்லை. நியூயார்க்கில் வண்டிக்கு காத்திருக்கும் போது பள்ளத்தில், தவறியோ தற்கொலைக்காகவோ, அல்லது சண்டையிலோ உள்ளே விழுந்து இறந்து போன கதைகள் உண்டு.

இதையெல்லாம் பாராட்டி வியந்த வண்ணம் நின்று கொண்டிருந்த போது, வண்டி வந்தது. உள்ளே எல்லாரும் முண்டி அடித்துக் கொண்டு ஏறினர். ஆஹா இதோ ஆசியத்தன்மை வந்துவிட்டதே. வண்டி முழுவதும் ஆட்கள் நிறைந்து உட்கார இடம் கிடைக்கவில்லை.

“என்ன இது மதிய நேரத்தில் இவ்வளவு கூட்டம், கூட்டம் இருக்காதுன்னு சொன்னியே”.

“இதெல்லாம் ஒரு கூட்டமேயில்லை”

“என்ன கூட்டமில்லையா?”

“ ஆமாம் பீக் நேரத்தில் நிற்கக் கூட இடம் கிடைக்காது”.

“சரி அதை விடு , அந்த பெண் லீயிடம் என்ன பேசினாய்?”

““நானும் அவளும் காலையிலிருந்து நின்று கொண்டிருந்தோம். நீங்கள் தான் முதல் கஸ்டமர்”.

“ஆமாம் ஒரு பெண்ணுக்கு விட்டுக் கொடுக்க வேண்டியது தானே? பாவம் அவளிடம் ஏன் சண்டை போட்டாய்?”

“என்ன சண்டைபோட்டேனா, இல்லவே இல்லை அவளுக்கு கஸ்டமர் கிடைக்க வாழ்த்துச் சொல்லிவிட்டு, ஒன்றும் கிடைக்கவில்லையென்றால் வீட்டுக்குப்போ என்றேன்”

“அவளை வீட்டுக்குப் போகச்சொல்ல நீ யார்?”

“ஏனென்றால் நான் தான் அவளுடைய அப்பா”

தொடரும்


8 comments:

  1. If possible add more photos..especially subway photos..article is very interesting and informative.thanks for sharing

    ReplyDelete
  2. அப்பா.......டி!

    அந்த வசனங்கள் அவர்கள் குடும்ப டயலாக் போல!

    ReplyDelete
    Replies
    1. ஒவ்வொரு நாட்டுக்கும் இப்படி டயலாக் வைத்திருப்பார்களோ ?

      Delete
  3. அப்பா லீ அக்லீயா? உங்க மைண்ட் வாய்ஸ் அவருக்கு கேட்டிருந்தா நீங்க இட்லீக்கு சட்னீ!!!

    ReplyDelete
    Replies
    1. நல்ல வேளை ரங்கா , லீக்கு இட்லியும் தெரியாது சட்னியும் தெரியாது.

      Delete
  4. Replies
    1. அப்பாவே தான் வெங்கட் .

      Delete