Thursday, May 5, 2016

நானே நானா யாரோதானா?

எழுபதுகளில் இளையராஜா பாட்டு எண்: 31
'அழகே உன்னை ஆராதிக்கிறேன்' என்ற படத்திற்காக இளையராஜா இசையமைத்து வெளிவந்து பட்டையைக் கிளப்பிய சூப்பர் ஹிட்  பாடல் இது. பாடலை ஒருமுறை கேட்டுவிடுங்கள்.

பாடலின் சூழல்:
தெரிந்தோ தெரியாமலோ, மதுவருந்திய பெண் தன்னை மறந்த நிலையில் தன் மன எண்ணத்தையும், விரக தாபத்தையும் வெளிப்படுத்தும் பாடல் இது.
இசையமைப்பு:

நல்ல ஒரு லீட் கிடார் பீசோடு ஆரம்பித்து, பேஸ் புல்லாங்குழல் சேர்ந்து கொள்ள அதோடு டிரம்சின், ஹையாட்ஸ் சேர்ந்து முடிய, பெண்குரலில் 'நானே நானா' என்று பாடல் ஆரம்பிக்கிறது. பாடல் ஆரம்பித்தவுடன், குரலுக்கு இணையாக காங்கோஸ் இசைக்க ஆரம்பிக்கிறது.  பல்லவி முடிந்த பின் முதலாவது பிஜிஎம், வயலின் குழுமம் மற்றும் கெட்டில் டிரம்ஸ், டிரம்பட், டிரம்ஸ் ஹையாட்ஸ் இணைந்து சீறி முடிய, "ஒருவன் நினைவிலே' என்று சரணம் ஆரம்பிக்க திரும்ப காங்கோஸ் இணைகிறது.
இரண்டாவது BGM -ல் வயலின் துடித்து அடங்க, கெட்டில் டிரம்ஸ் கவாத்து முடிய கிடார் லீட் அப்படியே காதைத் தழுவி இசைத்து முடிக்க "பிறையில் வளர்வதும்" என்று பாடல் ஆரம்பித்து முடிகிறது.
பாடலின் வரிகள்:
நானே நானா யாரோதானா?
மெல்ல மெல்ல மாறினேனா?
தன்னைத்தானே மறந்தேனே..
என்னைநானே கேட்கிறேன்..

ஒருவன் நினைவிலே உருகும் இதயமே இதோ துடிக்க..
உலர்ந்த உதடுகள் தனிமைக்கவிதைகள் ஏதோ படிக்க..
மதுவின் மயக்கமே உனதுமடியில் இனிமேல் இவள்தான்,
சரணம்..சரணம்..

பிறையில் வளர்வதும் பிறகு தேய்வதும் ஒரே நிலவு..
உறவில் கலப்பதும் பிரிவில் தவிப்பதும் ஒரே மனது..
பருவ வயதிலே இரவும் பகலும் விரகம். நரகம்.
சரணம்..சரணம்..

நானே நானா யாரோதானா?
மெல்ல மெல்ல மாறினேனா?
தன்னைத்தானே மறந்தேனே..
என்னைநானே கேட்கிறேன்..
Vaali with Ilayaraja

பாடலை எழுதியவர் கவிஞர் வாலி. ஒவ்வொரு வரியிலும் ஒரு பெண்ணின் விரகதாபத்தை சொல்லில் வடித்துள்ளார். கவிஞர், பெண்ணின் மனதுக்குள் புகுந்து இந்தச் சூழ்நிலையில் அவள் எப்படியெல்லாம் உருகுவாள் என்பதை பாடல் வரிகளில் வெளிப்படுத்துகிறார். அவளின் தன்மை முழுவதும் பல்லவியிலேயே வெளிப்படுகிறது.
"நான் நான்தானா, இல்லை வேறு யாரோவா? இல்லை மெல்ல மெல்ல மாறிப்போனேனா?" என்ற வரிகளை இணைத்து, கவித்துவத்தை சிறிது குழைத்து, எதுகை மோனையை கொஞ்சம் அழைத்து, பாடல் வரும்போது நம்மை அறியாமல் சிலிர்க்கிறது. இரண்டாவது சரணத்தில் கவிஞரின் முத்திரை விழுகிறது.
'பிறையில் வளர்வதும் பிறகு தேய்வதும் ஒரே நிலவு
உறவில் கலப்பதும், பிரிவதில் தவிப்பதும் ஒரே மனது'
அதுமட்டுமல்லாமல் அடுத்த வரிகளில், பருவ வயதில் இரவு மட்டுமல்ல, பகலும் விரகம்தான், அது நரகம் தான் என்று சொல்லும்போது கவிஞர் சூழலை அப்படியே படம் பிடிக்கிறார். வாலிக்கு இணை இவரே.
பாடலின் குரல்:
Vani Jaeyaram
பாடலைப்பாடியவர் வாணி ஜெயராம் அவர்கள். வாணி ஜெயராம் பாடிய பல சிறந்த பாடல்களில் இது மிகவும் வித்தியாசமான பாடல். இந்தப் பாடலும், ‘ரோசாப்பூ ரவிக்கைக்காரி' என்ற படத்தில் வந்த "என்னுள்ளில் எங்கோ" என்ற பாடலும் ஒரே விரக சூழலை வெளிப்படுத்திய இளையராஜாவின் பாடல்கள். தெள்ளிய குரல் தெளிவான உச்சரிப்பு தெவிட்டாத இனிமையோடு ஒலிக்கிறது பாடல். தேன் தடவிய குரலை கொஞ்சம் மதுவும் நனைத்தால் எப்படி ஒலிக்குமோ அப்படியே ஒலிக்கிறது பாடல்.
வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்கள் (FETNA) நடத்திய, நியூயார்க்கில் நடந்த விழாவில் வாணிஜெயராம் கச்சேரியில் இந்தப்பாடலைப் பாடியது இன்னும் என் கண்முன்னால் தெரிகிறது, காதுகளில் ஒலிக்கிறது. வாணி ஜெயராம் நம் தமிழுக்குக் கிடைத்த சிறந்த தமிழ்ப் பாடகி. இவருக்கு இன்னும் சிறந்த இடம் கிடைத்திருக்க வேண்டும் என்பது என் ஆதங்கம்.
நல்ல மேற்கத்திய தரத்தில், நம் மெல்லிசை இணந்து இசையமைக்கப்பட்ட இந்தப்பாடல், இளையராஜா இசையமைத்த பாடல்களில் சொல்லக்கூடிய சிறந்த பாடல்களில் ஒன்றாக நிச்சயம் இருக்கிறது. அதே போல வாணிஜெயராம் பாடிய சிறந்த பாடல்களில் ஒன்றாகவும் இது அமைகிறது.

- தொடரும்.

6 comments:

  1. வாணி ஜெயராம் குரலில் கேட்க தனி பாடல் லிஸ்ட்டே வைத்திருக்கிறேன்!

    ReplyDelete
    Replies
    1. சூப்பர் ஸ்ரீராம் முடிந்தால் அனுப்பி வையுங்கள் alfred_rajsek@yahoo.com

      Delete
  2. அருமை - நண்பர் alfy.. சிறு வயதில் இந்த வரிகளுக்கு அர்த்தம் தெரியாது.. ஆனால் இதன் இசையின் காரணமாக மிகவும் பிடிக்கும்..

    ReplyDelete
    Replies
    1. நீண்ட நெடிய இடைவெளிக்குப்பின் வருகை தரும் வாஷிங்டன் பகுதி வட்டச்செயலாளர் நண்பாவுக்கு நான் உள்ளபடியே சொல்லிக்கொள்வது என்னவென்றால் இன்றைய தினம் நீர் வந்தது என்னை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தியுள்ளது என்றால் அது மிகையில்லை .

      Delete
  3. National award winning song, I think.

    ReplyDelete
    Replies
    1. Vani Jayaram actually won Tamilnadu State Award for this movie.Thanks for coming Dhan palani.

      Delete