Tuesday, May 31, 2016

மு.க ஸ்டாலின் செய்ய வேண்டியது என்ன?

தமிழக தேர்தல் 2016 :பகுதி 3


தெரிந்தோ தெரியாமலோ அரசியலுக்கு வந்தாகிவிட்டது. முழு நேர அரசியல்வாதியாகவும்   ஆகியாகிவிட்டது. கட்சிப் பதவிகளில் இளைஞர் அணியில் ஆரம்பித்து, எம்ஜியார், சாதிக் பாட்ஷா, ஆற்காடு வீராசாமி ஆகியோர் அலங்கரித்த பொருளாளர் பதவி வரை வந்தாகிவிட்டது.

அரசியல் பதவிகளில், சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர், மேயர், மற்றும் துணை முதலமைச்சர் போன்ற பதவிகளையும் அடைந்தாகிவிட்டது. ஆனால் உங்கள் எதிர்காலம் என்ன? என்ன செய்ய வேண்டும்?

பலம்:

1.   திராவிட இயக்கத் தூண்களில்  முக்கியமான ஒருவரும்,ஐந்துமுறை முதலமைச்சர் பதவியை அலங்கரித்தவருமான, கலைஞர் மு.கருணாநிதியின் மகன் மற்றும் அரசியல் வாரிசு.
2.   பலமான கட்டமைப்புக் கொண்ட ஒரு கட்சியின் முக்கிய பொறுப்பில் இருப்பதோடு, அடுத்த தலைவராக வருவதற்கு பெரும்பாலானோரால் ஏற்றுக் கொள்ளப்பட்டவர்.
3.   அதிகமான ஊழல் குற்றச் சாட்டுகளுக்கு ஆளாகாதவர்.
4.   கடுமையான உழைப்பாளி.
5.   அரசியலில், கருணாநிதி மகன் என்றாலும் கட்சியில் படிப்படியாக உயர்ந்தவர்.
6.   திமுகவின் இரண்டாம், மூன்றாம் கட்ட தலைவர்களாலும், தொண்டர்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டவர்.
7.   2016- தேர்தலில் திமுகவின் வாக்கு வங்கியை உயர்த்திக் காட்டியவர்.

பலவீனம்:


1.   கருணாநிதியின் மகன் என்பதால் அவருக்கு வருகிற, அவர்மேல் சுமத்தப்படுகிற குற்றச் சாட்டுகளையும், விமர்சனங்களையும் சேர்த்து சுமக்க வேண்டிய நிலை.
2.   உலக மற்றும் இந்திய அரசியலை ஆழ்ந்து கற்றுத் தேறவில்லை
3.   வெறும் மாநில  அரசியலை மட்டும் முன்னெடுத்து, இந்திய அளவில் எதிலும் பங்கு பெறாத நிலை.
4.   இந்திய அளவிலோ, மாநில அளவிலோ பிற தலைவர்களுடன் ஒட்டாத நிலை.
5.   சகஜமாக பழகாமல் எப்போதும் தள்ளியிருந்து தனியாகவே இருப்பது.
6.   சொந்த அண்ணன் முக அழகிரியே இவருக்கு எதிராக இருப்பது.
7.   குடும்ப உறுப்பினர்களான கனிமொழி, தயாநிதி மாறன் ஆகியோர் மேலுள்ள ஊழல்  குற்றச்சாட்டு.
8.   கருணாநிதி குடும்பத்தின் மீதுள்ள குடும்ப அரசியல், வாரிசு அரசியல் போன்ற குற்றச்சாட்டுகள்.

என்ன செய்யவேண்டும்?


1.   தோல்வியை ஒப்புக் கொண்டு, ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக செயல்பட உறுதியெடுத்தல்.
2.   எப்போதும் மோதல் போக்கைக் கடைப்பிடிக்காமல் நல்ல திட்டங்களுக்கு ஆதரவையும் மற்றவற்றிற்கு எதிர்ப்பையும் தெரிவித்தல்.  
3.   சட்டசபையில் மாற்றுக்கட்சியினரும் மதிக்கும் வகையில் ஒரு தேர்ந்த தலைவராக பரிணமித்தல்.
4.   நாடு முழுதும் மீண்டும் ஒரு சுற்றுப்பயணம் செய்து, ஓட்டுப்போட்ட மக்களுக்கு நன்றி தெரிவித்தல்.
5.   ஜெயித்த MLA -க்களை நன்கு  ஒருங்கிணைந்து, அவரவர் தொகுதிகளில் மக்களோடு இணைந்து நலத்திட்டங்களைச் செய்தல்.
6.   ஜெயலலிதாவை சந்திப்பது, வேண்டுகோள் விடுப்பது என்று எந்த ஈகோ பார்க்காது நடந்து கொள்ளுதல்.
7.   திமுகவில் படித்த இளைஞர்களுக்கு பதவியைக் கொடுத்தல்.
8.   அரசியலில் ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு அரசியல் பாடம் எடுத்து ஒவ்வொரு தெருவுக்கும், வார்டுக்கும், கிராம நகர அளவில் மக்களோடு ஒன்றிணைந்து பணியாற்ற பயிற்சி கொடுத்தல்.
9.   எதிர்கட்சித் தலைவர்கள் மற்றும் MLA -க்களை தனிப்பட்ட முறையில் விமர்சிக்காமல் முடிந்தவரை நட்பு பாராட்டுதல்.
10.               தன் கட்சிக்காரர்களாக இருந்தாலும் தவறைத் தட்டிக் கேட்டு தண்டனை கொடுத்தல்.
இதெல்லாம் செய்தால் கருணாநிதி போல், ராஜதந்திரி, ஆளுமை நிறைந்தவர், சிறந்த நிர்வாகி என்று பெயர் எடுப்பதைக் காட்டிலும், நல்ல  மனிதர், மக்கள் தலைவர், மக்கள் நலனை தன் நலனாகக் கருதுபவர், கறைபடியாதவர், நேர்மையானவர் என்று பெயரை எடுக்க முடியும்.
திமுக மிகக் குறைவான ஓட்டு சதவிகிதத்தால் தோற்றாலும் ஓட்டு வங்கியை அதிகப்படுத்தியதும், சட்டசபையில் எப்போதுமல்லாத அதிக அளவு MLA -க்களை பெற்றதும், சென்னையை மீட்டெடுத்ததும், மக்கள் நம்பிக்கையைப் பெற்றதும் ஸ்டாலினே உங்களால் தான்.  
பலவீனங்களைக் களைந்து, பலங்களை அதிகரித்து தொடர்ந்து மக்களோடு நெருங்கி உழைத்தால் நீங்கள் உங்கள் அப்பாவை விட ஒப்பற்ற தலைவராக விளங்கும் நாள் வெகு தூரத்திலில்லை.


2 comments:

  1. ஐயா, ஸ்டாலின் பற்றிய ஆய்வு சரியாக உள்ளது. மேலும் சென்னை வென்றதன் மூலம் ஸ்டாலின் இருப்பை உறுதி படுத்திவிட்டார்.தமிழக அரசியல் வாதிகள். இந்திய அரசியலில் பங்களிப்பு ,நட்புறவு இல்லாமல் இருப்பது தவறு,

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நாச்சியப்பன்.

      Delete