Monday, May 2, 2016

விலக்கப்பட்ட நகரும் விளக்கப்பட்ட வரலாறும் !!!!!!!!

சீனாவில் பரதேசி -9
View of the Hall of Supreme Harmony from the south
The Hall of Supreme Harmony)
வின்ட்டரில் சம்மரை அமர்த்தியது தவறு என்று நினைக்கும்போது மறுபுறம் யாருக்கோ அவர்கள் செல்போனில் படம் எடுத்துக் கொண்டிருந்தாள். "சம்மர், புதிய, மொழி தெரியாத இடத்தில் எனக்குப் பயமாக இருக்கிறது. என்னைவிட்டு எங்கேயும் போகாதே”, என்றேன்.
"சிறு பிள்ளைபோல் இருக்கிறாய் நீ என்னைப் பார்க்கா விட்டாலும் நான் உன்னைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன். கவலைப்படாதே"என்று முதுகில் தட்டிவிட்டு விரலை நீட்டினாள். நானும் கொஞ்சமும் வெட்கமில்லாமல் அதைப் பிடித்துக் கொண்டு பின்னால் சென்றேன்.
அந்தக் குளிரிலும் ஏராளமான மக்கள் அங்கு வந்திருந்தனர். இந்த விலக்கப்பட்ட நகரின் சீனப்பெயர் 'சிஜின் செங்' (Zijin cheng) என்பது. இதன் அர்த்தம் "Purple Forbidden City". 1576-ஆம் ஆண்டிலிருந்து இந்த அரண்மனைக்கு இந்தப் பெயர்தான். ஆனால் பொதுவாக பெய்ஜிங்கில் இதன் பெயர் 'குகாங்க்' (Gugong). இதன் தமிழாக்கம் "முன்னாள் அரண்மனை" என்பதாகும். இப்பொழுது, "அரண்மனை மியூசியம்" என்றும் அழைக்கப்படுகிறது.
Emperor Zhu Di.
பேரரசர் ஹோங் வு-வின்( Hong Vu) மகன் ஸூ டி (Zhu Di) யாங்க்லி பேரரசர் ஆனபோது, அவன் தலைநகரத்தை நான்ஜிங் (Nanjing)-லிருந்து பீஜிங்குக்கு மாற்றினான்.  அந்த வருடமான 1406ல் தான் இந்த அரண்மனை கட்ட  ஆரம்பிக்கப்பட்டதாம்.  கட்டிமுடிக்க 14 ஆண்டுகள் ஆயிற்றாம்.
1644-ல் அது மஞ்சூரியரின் வசம் வந்தது. அப்போது அரண்மனையின் சில பகுதிகள்  எரியூட்டப்பட்டன. சிறிது காலத்தில் சீனா முழுவதும் மஞ்சூரியரின் ஆதிக்கத்தில் வந்தது. பின்னர் மஞ்சூரியரின் சிங் பரம்பரை (Qing Dynasty) ஆளத்தலைப்பட்ட போது, அரண்மனையைப் புதுப்பித்து அதில் வாழத்துவங்கினர். ஒவ்வொரு  அரண்மனைக் கட்டடத்தின் மேலேயும் பட்டுத்துணியில் சீன மற்றும் மஞ்சு மொழியில் அதன் பெயர்கள் மாற்றி எழுதப்பட்டன.   
Portrait of Tzu-hsi by Hubert Vos, 1906
Empress Cixi
 ஓப்பியம் போரில் ஆங்கில- பிரெஞ்சு கூட்டுப்படை, அரண்மனையை ஆக்ரமித்து போர் முடியும்வரை உள்ளேயே தங்கியிருந்தனர். 1900ல் பாக்ஸர் புரட்சி நடக்கும்போது பேரரசி சிக்ஸி (Empress Orchid alias Cixi)  இந்நகரத்தை விட்டு வெளியேற வேண்டியநிலை வந்தது. இவரைப்பற்றி விவரமாக என்னுடைய முன்னாள் பதிவில் பார்க்கலாம். கிட்டத்தட்ட ஒரு வருடம் இந்த  நிலை நீடித்தது.  (http://paradesiatnewyork.blogspot.com/2013/05/blog-post_1.html )
மொத்தம் 24 பேரரசர்கள் ஆண்ட இந்த இடம், 1912ல் கடைசிப் பேரரசரான புயீ (Puyi) பதவியிறக்கம் செய்யப்பட்டதோடு தன் முக்கியத்துவத்தை இழந்தது. ஆனால் புதிய சீனக்குடியரசோடு பண்ணப்பட்ட ஒப்பந்தத்தின்படி புயீ உள்ளே பின்பகுதியில் இருந்த வளாகத்தில்  (Inner court) தங்கியிருக்க அனுமதிக்கப்பட்டார். மற்ற இடங்களெல்லாம் பொது இடங்கள் ஆயின. அதன் பின்னர் 1924ல் நடந்த ஒரு புரட்சியின் பின் அவர் வெளியேற்றப்பட்டார். 
Puren - who has died aged 96 - was the youngest brother of the final Qing monarch Puyi (above), who ruled for four years until 1912
Puyi, The Last Emperor.
1925 முதல் இந்த அரண்மனை வளாகம் மியூசியமாக மாற்றப்பட்டது. 1933ல் ஜப்பான் சீனாவை ஆக்ரமிக்க முயன்றபோது, அரண்மனையின் மதிப்பு மிகுந்த பொருட்கள் அப்புறப்படுத்தப்பட்டு பத்திரப்படுத்தப்பட்டன. இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் அவற்றில் பாதி இங்கு கொண்டுவரப்பட மீதி தைவானுக்குக் கொண்டு செல்லப்பட்டது. இப்போது அவை தாய்பெய்-ல் உள்ள தேசிய அரண்மனை மியூசியத்தில் இருக்கின்றன.
1949-ல் சீனாவில் மக்கள் குடியரசு ஏற்பட்ட சமயம், புரட்சி வேகத்தில் அரண்மனையின் சில பகுதிகள் தகர்க்கப்பட்டன.  ஆனால் அப்போதிருந்த சீன அதிபர்  ஜோவு என்லாய் (Premier ZHOU ENLAI) ஒரு ராணுவப்பிரிவை அனுப்பி அரண்மனையைப் பாதுகாக்க  ஆணையிட்டார்.
நகரின் நடுவில் இருக்கும்படி அமைக்கப்பட்ட இந்த அரண்மனை வளாகம் 3153 அடி நீளமும் 2470 அடி அகலமும் கொண்டது. 980 கட்டடங்களையும் அதில் 8886 அறைகளும் இருக்கின்றனவாம். ஒரு காலத்தில் 9999 அறைகள் இருந்தன என்று சொல்லப்படுகிறது.
எப்படி மதுரையில் மீனாட்சியம்மன் கோவிலை மையமாக வைத்து முழு நகரும் வடிவமைக்கப்பட்டதோ, அதே வகையில்தான் இந்த அரண்மனையை மையமாக வைத்து பீஜிங் நகர் கட்டமைக்கப்பட்டது.
View ogf the Tongzi moat, Forbidden City, Beijing
Tower in the corner
இந்த வளாகம் முழுவதுமாக கோட்டைச் சுவரால் சூளப்பட்டு இருக்கிறது. இந்தச்சுவர் 26 அடி உயரமும், அடியில் 28 அடி அகலமும், மேலே 22 அடி அகலமும் கொண்டவை. அதன் நான்கு மூலைகளிலும் அழகாக வடிவமைக்கப்பட்ட டவர்கள் இருக்கின்றன. இந்த சுற்றுச்சுவரின் நான்கு புறங்களிலும் நான்கு பெரிய நுழைவாயில்கள் இருக்கின்றன. தென்புறம் இருக்கும் பிரதான புராதன நுழைவாயிலுக்குப் பெயர் மெரிடியன் கேட். இதன் வழிதான் நான் உள்ளே வந்தது. மற்ற நுழைவாயில்களின் பெயர்கள் முறையே டிவைன் மைட் (Divine Might), ஈஸ்ட் குளோரியஸ் கேட் மற்றும் வெஸ்ட் குளோரியஸ் கேட். இதில் என்ன சிறப்பு என்றால், ஒவ்வொரு வாயிற்கதவும் நன்கு வேலைபாடுடன் அமைந்திருப்பது மட்டுமல்லாமல் ஒவ்வொன்றும் 9 வரிசையில் ஆன தங்க ஆணிகளால் வடிவமைக்கப்பட்டது.
Looking back to the Meridian Gate from the north
Golden River
நான் பார்த்த முதல் அத்தானி மண்டபத்தின் பெயர் 'திஹால் ஆஃப் சுப்ரீம் ஹார்மனி' (The Hall of Supreme Harmony) என்பது. இதற்குச் செல்லும் வழியில் சிறுசிறு பாலங்கள் இருந்தன. அதன் கீழே ஒரு சிறிய ஓடை போன்று ஓடிக் கொண்டிருந்தது. அதன் பெயர் 'தங்க நீர் ஆறு'  (Golden Water River).
இந்த முழு நகரமும் அவுட்டர் கோர்ட் மற்றும் இன்னர் கோர்ட் என்று பிரிக்கப்பட்டிருக்கிறது. எல்லா நிகழ்வும் அவுட்டர் கோர்ட்டில் நடக்கும். இன்னர் கோர்ட் என்பது பேரரசர் மற்றும் அவர் குடும்பம் வாழுகின்ற இடம். அவர் குடும்பம் தான் ரொம்பப் பெரிசே.

இந்த ஹால் ஆஃப் சுப்ரீம் ஹார்மனியில்தான் பதவியேற்பு, திருமணம் போன்ற  முக்கிய நிகழ்ச்சிகள் நடக்கும். அடிப்பகுதி வெள்ளைப் பளிங்காலும் மற்றவை மரத்தாலும் அமைந்த மூன்று அடுக்குமாளிகை இது. 98 அடி உயரம் கொண்ட இதுதான் விலக்கப்பட்ட நகரில் உள்ள எல்லா கட்டடங்களையும் விட பெரியது.
அதன் பின்புறம் இறங்கினால் வரிசையாக இதே போன்ற பலவிதமான கட்டடங்கள் வந்தன. ஒவ்வொன்றுக்கும் ஒரு பெயர், ஒவ்வொன்றுக்கும் வேறுவேறு பயன்பாடுகள். வாருங்கள் ஒவ்வொன்றாய்ப் பார்ப்போம்.

- தொடரும்.

4 comments:

  1. அறியாத பல செய்திகளை இப்பதிவு மூலமாக அறியமுடிகிறது. தொடர்கிறேன்.

    ReplyDelete
  2. பல புதிய விஷயங்களை அறிந்து கொள்ள முடிந்தது. நன்றி நண்பரே.

    ReplyDelete
    Replies
    1. நன்றி வெங்கட் நாகராஜ்.

      Delete