Thursday, May 26, 2016

ஜெயலலிதா இப்போது என்ன செய்ய வேண்டும் ?

தமிழக தேர்தல் 2016 :பகுதி 2 
Supreme Court on Friday extended the bail granted to former Tamil Nadu Chief Minister Jayalalithaa and four other accused till the Karnataka High Court disposes off their appeals against conviction in a disproportionate assets case.

கடந்த  நான்கு முறைக்கு மேலாக, ஒவ்வொரு தேர்தலிலும் மாறி மாறி, "ஆட்சி செய்யும் அரசுக்கு " எதிரான மனநிலையில் வாக்களிக்கும் மக்கள் (Ant incumbency) , டாஸ்மாக்கால் சீரழிந்த குடும்பங்களின் சாபங்கள், சென்னையை மூழ்கடித்த வெள்ளத்தின் போது அரசின் கையறு நிலை, மக்கள் நலப் பணியாளர்கள், அரசு ஊழியர்கள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோரின் உரிமைக் குரல்களை கண்டுகொள்ளாத அலட்சிய மனோபாவம், பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தீர்ப்பு, ஜெயில் வாசம், குமாரசுவாமியின் கணக்குக் குளறுபடி, செயல்படாத அடிமை அமைச்சர்கள், சரிந்து வரும் உடல் நிலை என ஜெயலலிதாவுக்கு எதிரான எத்தனையோ காரணிகள் இருந்தும் மயிரிழையில் தப்பித்து தனிப் பலத்துடன் மீண்டும் ஆட்சியைப் பிடித்த தென்பது ஒரு ஆச்சரியப்படவைக்கும் இமாலய சாதனைதான். வாழ்த்துக்கள்.

பலம்:

1.   திரைத்துறை மூலம் அவருக்கு வந்த தனிப்பட்ட புகழ், வசதி வாய்ப்புகள்.
2.   எம்ஜியார் அவர்களின் அரசியல்வாரிசாக ஒருமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டவர்.
3.   எம்ஜியாரின் புகழ், அவர் கொடுத்த இரட்டை இலைச் சின்னம் ஆகியவை இன்னும் மங்காத நிலையில் இருப்பது.
4.   அதிமுகவை அடுத்த நிலைக்கு எடுத்துச் சென்ற திறமை.
5.   தனியே தன்னந்தனியே நின்று நிலைத்து சமாளிக்கும் மன உறுதி.
6.   யாருக்கும் தலைவணங்காத இரும்பு உள்ளம்.
7.   சட்டென அதிரடி முடிவுகள் எடுத்து  உடனே செயல்படுத்தக் கூடிய தைரியம்.
8.   முழுக்கட்சியையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் சாதனை.
9.   கருணாநிதி போன்ற பெரிய சக்தியை எதிர்த்து பலமுறை வென்ற பராக்கிரமம். 
10.               தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, கன்னடம், தெலுங்கு போன்ற பன்மொழித் திறமை. 
பலவீனங்கள் :
1.   சுப்ரீம் கோர்ட்டில் உள்ள வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு.
2.   ஆலோசனை கூற யாருமில்லா நிலமை
3.   தவறான முடிவுகளை சடுதியில் எடுத்துப் பின் மாற்றுவது.
4.   யாரும் எளிதில் நெருங்க முடியா வண்ணம் இரும்புக் கோட்டைக்குள் காணாமல் போவது.
5.   யாரையும் தன்னிச்சையாக செயல்படவிடாத, தன்மேல் உள்ள அதிகாரகுவிப்பு.
6.   அதிமுகவில் அடுத்த நிலைத் தலைவர்கள் இல்லாத நிலைமை, யாரையும் நம்பமுடியாத நிலை.
7.   எந்தத் தலைவருடனோ மத்திய அரசுடனோ ஒத்துழைக்காத விரோத மனப்போக்கு.
8.   திமுக என்ன செய்தாலும் எதிர்க்கும் மனநிலை. உதாரணம் சட்டமன்றக் கட்டிடம், அண்ணா நூலகம் ஆகியவை.
9.   தளர்ந்து வரும் உடல்நிலை.
10.               கூடவே இருக்கும் சசிகலா குடும்பம்.
என்ன செய்ய வேண்டும்?


1.   எந்த முடிவானாலும் நிதானமாக யோசித்து முடிவெடுக்க வேண்டும். எடுத்துவிட்டு அடிக்கடி மாற்றுவது நல்ல நிர்வாகத்தின் அடையாளம் அல்ல.
2.   வெறும் துதிபாடிகளை ஒதுக்கி, இரண்டாம் கட்ட தலைவர்களை தேர்ந்தெடுத்து வளர்த்தெடுத்தல்.
3.   ஏராளமாகச் சேர்ந்திருக்கும் தமிழ்நாட்டுக் கடனை அடைக்க முயற்சி எடுத்தல்.
4.   நாட்டு மக்களோ, தலைவர்களோ தொழிலதிபர்களோ யாராக இருந்தாலும் எளிதில் சந்திக்கக் கூடிய தலைவராக உருவெடுத்தல்.
5.   எதிர்க்கட்சிகளை எதிரிக்கட்சியாக பார்க்காமலிருத்தல்.
6.   சட்டசபையில் ஆரோக்கியமான விவாதத்திற்கு இடம் கொடுத்து, மக்கள் நலத் திட்டங்களை அமல்படுத்துதல்.
7.   அதிமுக ஜெயித்த தொகுதிகள் மட்டுமின்றி மற்ற எல்லாத் தொகுதிகளிலும் முன்னேற்றப் பணிகளை முடுக்கிவிடுதல்.
8.   நாட்டுக்கு இக்கட்டு வரும் சூழ்நிலையில் எதிர்க்கட்சிகளை  அழைத்து ஆலோசித்து முடிவெடுத்தல்.
9.   நதிநீர் இணைப்புத் திட்டத்தை முதலில் மாநில அளவில் செயல்படுத்தி தமிழகத்தில்  மீண்டும் விவசாய ,பயிர்வளர்ச்சியை உறுதிப்படுத்தல்.
10.               மத்திய அரசோடும், அண்டை மாநிலங்களோடும் நட்பு பாராட்டி, தமிழகத்திற்கு நன்மை பயத்தல்.
ஜெயலலிதாவிடம் நல்ல மாற்றம் தெரிகிறது. கட்-அவுட்டுகள், இல்லாமல், காலில் விழுதல் இல்லாமல், புரட்சித் தலைவி முழக்கம் இல்லாமல் பதவியேற்றது மிகவும் வரவேற்கத்தக்கது.
முதல் நாளிலேயே, 500 டாஸ்மாக் கடைகளை அடைத்தது, திறந்திருக்கும் நேரத்தைக் குறைத்தது, சிறுகுறு விவசாயிகளின் பயிர்க்கடன் ரத்து ஆகியவை நல்ல ஆரம்ப அறிகுறிகள்.
இந்த ஐந்துவருடங்கள் உங்கள் கையில். மீண்டுமொருமுறை  வருவீர்களா என்று தெரியாது. மக்களுக்கு நன்மைகள் செய்து மனதில் மறக்கமுடியாத இடம்பிடிக்க நல்லதொரு வாய்ப்பு, செய்வீர்களா, செய்வீர்களா.


முற்றும்.

Monday, May 23, 2016

கருணாநிதி என்ன செய்ய வேண்டும்?

தமிழக தேர்தல் 2016 : பகுதி 1

கருணாநிதி தன் வாழ்நாளில் செய்த பெருந்தவறு, தன் உற்ற நண்பனாக இருந்த எம்ஜியாரைப் பகைத்துக் கொண்டது. அண்ணாவுக்குப் பின், அன்பழகன், நெடுஞ்செழியன், சம்பத் போன்ற மூத்த அரசியல் வாதிகள் பலர் இருந்த போதும் கருணாநிதி முன்னிலை பெறவும், மாபெரும் இயக்கத்தை வழிநடத்த அவருக்குத்தளம் அமைத்துக் கொடுத்தவரும் எம்ஜியார்தான்.

எம்ஜியாரின் மக்கள் பலத்தை, முன்கூட்டியே கணிக்கத்தவறிய கருணாநிதியை, அது இன்றுவரை பாதித்து வருகிறது. எம்ஜியாரின் வாழ்நாளில் கருணாநிதி தலையெடுக்கவே முடியவில்லை. ஜெயலலிதாவை  இந்தமுறையும் குறைவாகவே மதிப்பிட்டது  மேலும் செய்த தவறு . இப்போது ஜெயலலிதாவும் எம்ஜியார் செய்த அதே சாதனையைச் செய்திருக்கிறார்.
MGR பிரிந்து சென்றபோது, திமுகவின் இளைஞர் படை அவரோடு சென்றுவிட்டது. அதிமுக மற்றும் இரட்டை இலையின் வாக்கு வங்கி, காலங்கள் மாறினாலும் காட்சிகள் மாறினாலும் மாறாத ஒன்று. ஜெயலலிதாவின் அராஜகம், ஆணவம், செயல்படாத தன்மை, ஊழல், தன் அமைச்சர்களைக் கூட அடிமைகளாக நடத்துவது, சசிகலா குடும்பத்தின் ஆதிக்கம், இவையெல்லாவற்றையும் மீறி அந்த வாக்கு வங்கி அப்படியே இருக்கிறது. அதுவும் தமிழகத்தின் வாக்குவங்கிகளில் 30 முதல் 35 வரை பெற்று முதலிடம் வகிக்கிறது. தற்போது நாற்பதுக்கு மேல் எகிறியிருக்கிறது.

கருணாநிதியும், MGR  என்ற மாபெரும் சக்தியை எதிர்த்து பலமுறை தோற்றாலும், கட்சியைக் கட்டுக்கோப்பாக வைத்திருந்து மாறி மாறி ஜெயித்து, இன்றுவரை காப்பாற்றி வருகிறார். இதற்கு மிகுந்த திறமையும் பொறுமையும் வேண்டும். திமுக-வின்   வாக்கு வங்கி அன்றிலிருந்து இன்று வரை மாறாமல் இருந்தாலும், இரட்டை இலையின் வாக்கு வங்கியை விட, உதய சூரியனின் வாக்கு வங்கி குறைவானதுதான் ,25 முதல் 30 வரை தான்.
எனவே தனித்தனியே நின்றால், எப்பொழுதும் அதிமுகதான் ஜெயிக்கும். இது கலைஞருக்கு நன்கு தெரியும். முற்காலத்தில் கூட அதிமுகவை இருமுறை வென்றது சொந்த பலத்தால் அல்ல, கூட்டணி பலத்தால்தான்.
எனவே 'பழம் நழுவி பாலில் விழும்' என்று தன் வெட்கத்தை விட்டு விஜய்காந்துக்கு காத்திருந்து ஏமாந்தார்.
திமுகவிடம் நெருங்கி வந்த விஜயகாந்த், வைகோ, திமுகவிடம் ஏற்கனவே இருந்த திருமாவளவன், கம்யூனிஸ்ட் கட்சிகள், ஏன் வாசனின் தாமாகாவையும் சேர்த்து ஓர் மெகா கூட்டணியை  அமைத்திருந்தால் வெற்றிக்கனி நழுவியிருக்காது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் இருந்ததால் வாசன் எப்படி சேர முடியும்? என்று நீங்கள் கேட்கலாம். அப்படி சேர்ந்திருந்தால் வாசனின் கூட்டணி திமுகவிடம் தான் தவிர காங்கிரசோடு அல்ல என்று நினைத்துக் கொள்ளலாம். ஏன் காங்கிரசில் இருந்து பிரிந்த, ஷரத் பவார், மம்தா பானர்ஜி போன்றோர் அதன்பின் காங்கிரசோடு கூட்டணி வைத்ததோடு அமைச்சரவையிலும் பங்கு கொண்டனரே. இதைவிட முன் உதாரணம் வேறொன்று வேண்டுமா?
இதையெல்லாம் விட்டுவிட்டு, மு.க.ஸ்டாலினின் பேச்சைக்கேட்டு பலத்தை பெருமளவு இழந்துபோன காங்கிரசை மட்டும் பிடித்துக் கொண்டு களம் கண்டதால்தான் தி.மு.க. தோற்றுப்போனது. குறைந்தபட்சம் இதில் ஒன்று இரண்டு கட்சிகளாவது, திமுகவின் பக்கம் வந்திருந்தால், நிச்சயம் வெற்றி பெற்று இருப்பார்கள் .ஏனென்றால் விகித வித்யாசம் வெறும் 1:1 சதவிகதம்தானே .கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்றுதான் சொல்லவேண்டும் .
இதில் ஜெயலலிதாவின் சாதுர்யமும் வியூகமும் நிச்சயம் பாராட்டப்பட வேண்டிய ஒன்று. அவர் தன்னம்பிக்கை என்பது இந்தச் சமயம் ஓவர்கான்ஃபிடன்ஸ் இல்லை.
வைகோ கூட்டணியில் விஜய்காந்த் சேருவதாக அறிவித்தபோதே, அதிமுகவினர் பட்டாசு வெடித்து மகிழ்ந்தனர். அப்போதே அதிமுகவின் வெற்றி உறுதி செய்யப்பட்டுவிட்டது.
தேர்ந்த அரசியல்வாதியான வைகோ, இப்படி ஒரு தற்கொலை முடிவு எடுத்தது எதனால்? என்ற கேள்வி எழும்போது, இதுவும் ஜெயலலிதாவின் வியூகமாக இருக்குமோ? என்ற சந்தேகம் எழுவது தவிர்க்க முடியாத ஒன்று.
கருணாநிதி பெரிதும் எதிரிபார்த்த இந்தத் தேர்தல் தோல்வியில் முடிந்ததோடு கருணாநிதியின் அரசியல் வாழ்வும் இத்தோடு முடிந்ததாகத்தான் கருத வேண்டும். ஏனென்றால் இன்னும் ஐந்து வருடங்களில் கருணாநிதியின் வயது 98 ஆகிவிடும். அவர் உயிரோடு இருந்தால் கூட தேர்தலில் நிற்பது, பரப்புரைக்குச் செல்வது என்பதெல்லாம் உடல் பூர்வமாக முடியாத ஒன்று .
ஆனாலும் கட்சியைக் காக்கவும் அடுத்த தலைமுறைக்கு முழுதாகக் கொடுக்கவும் அவர் செய்ய வேண்டியது என்ன?

1.   தோல்வியின் காரணங்கள் எதுவாக இருந்தாலும், தோல்வியை ஒப்புக்கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துச் சொல்லவேண்டும்.
2.   உடனடியாக அமைப்பு ரீதியில் தேர்தல்  நடத்தி, கட்சியின் தலைவரையும்,பொதுச் செயலாளரையும் தேர்ந்தெடுக்கவேண்டும்.  
3.   இதில் முக ஸ்டாலின் ஜெயித்தால் , அவர் தலைமை ஏற்கலாம்.
4.   குடும்பத்தகராறுகளை உடனடியாக பேச்சுவார்த்தை அல்லது சொத்துப் பிரித்தல் மூலமாக தீர்க்க வேண்டும்.
5.   மு.க. அழகிரி மட்டுமல்ல, கனிமொழி, தயாநிதிமாறன் ஆகியோரை அரசியலை விட்டு ஒதுங்கியிருக்கச் செய்ய  வேண்டும்.
6.   எதிர்காலத்திலும் குடும்ப  உறுப்பினர்கள் அரசியலில் வரவிடாது பார்த்துக் கொள்ள வேண்டும்.
7.   எதிர்க்கட்சித்தலைவராக செயல்பட விரும்பாவிட்டாலோ, சட்டசபைக்குச் செல்வதை தவிர்த்தாலோ, தன் MLA  பதவியை ராஜினாமா செய்து, வேறொருவருக்கு வழிவிட வேண்டும்.
8.   ஆக்கபூர்வமான எதிர்க்கட்சியாக திமுக செயல்பட, ஸ்டாலினுக்கும் கட்சியினருக்கும் உதவ வேண்டும்.
9.   தான் மட்டுமன்றி தன்னுடன் இருக்கும் பல மூத்த வயதுகடந்த  அரசியல் வாதிகளையும் ஓய்வு பெற வைக்க வேண்டும்.
10.               அதன்பிறகு அரசியலை விட்டு ஒதுங்கி, நிம்மதியாக ஓய்வெடுக்கலாம்
11.               ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் கேட்டால் மட்டுமே சொல்ல முனைய வேண்டும்.
12.               அறிவாலயத்தில் திராவிட இயக்கத்தின் நிரந்தர பொருட்காட்சியை அமைத்து உறுப்பினர்களுக்கும் பொதுமக்களுக்கும் திறந்து விடலாம்.
13.               பேரப்பிள்ளைகளோடு அதிக நேரத்தை செலவழிக்கலாம்.
14.               முரசொலியில் மட்டுமல்லாது பிற பத்திரிகைகளிலும் அவ்வப்போது கட்டுரைகள் எழுதலாம் .
15.               நெஞ்சுக்கு நீதி கடைசி அத்தியாயத்தை எழுதி முடிக்கலாம்.

தன்  மீதியுள்ள காலத்திலாவது கருணாநிதி அவர்கள் அமைதியாகவும் , நிம்மதியாகவும் அரசியலை விட்டு ஒதுங்கி மகிழ்ச்சியுடன்   காலத்தை  கழிக்க வேண்டும் .

Thursday, May 12, 2016

தி பட்லர்: உண்மைக்கதை

பார்த்ததில் பிடித்தது


ஒரு அமைதியான ஞாயிற்றுக்கிழமை மதியம். வீடு முழுதும் நிசப்தமாக இருந்தது. ஏனென்றால் என் மனைவி தூங்கப் போய்விட்டாள். என் இரு மகள்களும் தங்கள் தங்கள் ரூமில் அடைந்து போக, அப்பாடா என்று ஒரு நிம்மதிப் பெருமூச்சுடன் கொறிக்கும் பொருட்களை காலடியில் நகர்த்திவிட்டு, நெட்ஃபிலிக்சில் தேடியதில் கிடைத்த ரத்தினம் தான் "தி பட்லர்"  என்ற திரைப்படம்.
ஏற்கனவே இதனைப்பற்றி கேள்விப் பட்டிருந்தாலும் பார்ப்பதற்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. 2013ல் வெளிவந்த அமெரிக்க வரலாற்று நாடகம். அதாவது நீங்கள் நினைக்கும் நாடகம் அல்ல, 'டிராமா' என்று சொல்வார்கள்.

கதைக்கரு: 2009 ஆம் வருடம், வெள்ளை மாளிகையில் வேலை பார்க்கும் முதிய கறுப்பின ‘சிசில்’, புதியதாக பதவியேற்ற அமெரிக்க அதிபரை வரவேற்கக் காத்திருக்கையில், தன் வாழ்க்கையை திரும்பிப் பார்க்கும் ஃப்ளாஸ் பேக்குடன் படம் ஆரம்பிக்கிறது.

1926ஆம் வருடம் சிசில் ஏழு வயதாக இருக்கும் போது, அவன் பெற்றோர்கள் ஜார்ஜியாவில் இருக்கும் ஒரு பருத்திக் காட்டில் கூலி வேலை செய்து வருகிறார்கள்.அப்போது அங்கு வந்த பண்ணையின் வெள்ளை முதலாளி, சிசிலின் அம்மாவை அழைத்துக் கொண்டு போய் கற்பழித்து விடுகிறான். அதனைத் தட்டிக்கேட்ட சிசிலின் அப்பாவை முதலாளி சுட்டுக் கொன்றுவிட, அவனுடைய அம்மாவுக்கு சித்தப்பிரம்மை பிடிக்கிறது. இந்தச் சூழலில், முதலாளியின் அம்மா சிசிலை அழைத்துக் கொண்டு தன் வீட்டில் வைத்து 'ஹவுஸ் செர்வன்ட்' ஆக்குகிறாள். அங்கு பலவித பழக்கவழக்கங்களையும், சம்பிரதாயங்க்களையும் அறிந்து கொள்கிறான் சிசில்.

1937ல் அவனுக்கு 18 வயதாகும்போது சிசில், அந்தப் பண்ணையையும் ஊமையாகிபோன தன் தாயையும் விட்டுப் பிரிந்து ஓடிவிடுகிறான். ஒரு இரவிலே பசி தாங்க முடியாமல் ஒரு கேக் கடையை உடைத்துத் திறந்து கேக்குகளை எடுத்து ஆவலாய்ச் சாப்பிட ஆரம்பிக்கிறான். அப்போது வரும் கடையின் உரிமையாளர், முதலில் கோபப்பட்டாலும், பின்னர் பரிதாபப்பட்டு அவனை அந்தக் கடையிலேயே வேலைக்குச் சேர்த்துக் கொள்கிறார். அங்கிருந்து வாஷிங்டன் DC யில் உள்ள பெரிய ஓட்டலில் வேலைக்குச் சேருகிறான். அங்கு அவனுக்குத் திருமணம் ஆகி இரண்டு பிள்ளைகளும் பிறக்கின்றனர். அப்போது தான் அவனுக்கு வெள்ளை மாளிகையில் பட்லராக வேலை கிடைக்கிறது. அச்சமயம் ஐசன்ஹோவர் அமெரிக்க அதிபராக இருக்கிறார். அதற்கப்புறம் வந்த ஜான் F. கென்னடி, லிண்டன் B.ஜான்சன், ரிச்சர்ட் நிக்ஸன், ரொனால்ட் ரீகன் ஆகிய பலருக்கும் நெருங்கிய பட்லராக இருக்கும்போது நடக்கும் பலவித அரசியல் சமூக மாற்றங்களை திரைப்படம் அழகாக படம் பிடிக்கிறது.


‘கறுப்புச்  சிறுத்தைகள்' அமைப்பில் சிசிலின் மகன் சேருவது, வெள்ளை அதி சமூக KKK க்கு எதிராக போராடுவது, அதில் சிசிலின் வெறுப்பு, பின்னர் ஈடுபாடு, வெள்ளை மாளிகையில் ஒரே வேலை செய்யும் கறுப்பருக்கும் வெள்ளையருக்கும் வேறுவேறு சம்பளம் இருந்ததை சிசில் எதிர்த்தது, மார்டின் லூதர் கிங் ஜூனியர்  சுட்டுக் கொல்லப்படுவது என்று ஆரம்பித்து கறுப்பினத் தலைவர் ஒபாமா அதிபராக  வருவது வரை அமெரிக்க வரலாறை அள்ளித்தரும் படம் இது.

சிசிலாக நடித்தது ஃபாரஸ்ட் விட்டேகர், அவர் மனைவி குளோரியாக மிகப்பிரபலமான டிவி ஸ்டார் ஒபரா வின்ஃபரே. இருவரும் தம் பண்பட்ட நடிப்பால் அப்படியே கதாபாத்திரங்களாக வாழ்ந்திருக்கிறார்கள். இன்னும் இதில் நடித்த அனைவரும் தங்கள் தங்கள் பாத்திரங்களை மிகவும் சிறப்பாக நடித்துள்ளனர்.

Lee Daniel
திரைக் கதையை டேனி ஸ்டிராஸ் எழுத, தயாரித்து இயக்கியவர் லீ டேனியல். வெய்ன்ஸ்டின் கம்பெனி மூலம், ஆகஸ்ட் 2013ல் வெளியிடப்பட்ட இந்தப்படம் $30 மில்லியன் டாலரில் தயாரிக்கப்பட்டு உலகம் முழுதும் திரையிடப்பட்டு மொத்தம் 176 மில்லியன் சம்பாதித்தது.

இந்தப்படம் ஆஸ்கார் போன்ற பல விருதுகளுக்கும் பரிந்துரை செய்யப்பட்டாலும் வாங்கிய விருதுகளை மட்டும் கீழே தருகிறேன்.

1.   ஆப்ரா வின்ஃபிரேவுக்கு “பெஸ்ட் சப்போர்டிங் நடிகை என்ற விருது: AARP - Annual Movies for Grownups Awards.
2.   ஹாலிவுட் ஃபிலிம் அவார்ட், லீ டேனியலுக்கு 'சிறந்த இயக்குநர்' விருது கொடுத்தது.
3.   அதே நிறுவனம் டேவிட் ஓயிலோவுக்கு 'ஸ்பாட்லைட்' விருது கொடுத்தது.

அமெரிக்க கறுப்பின வரலாற்றில் ஆர்வம் உள்ளவர்களும், 20 ஆம் நூற்றாண்டில் அமெரிக்காவில் நடந்த அரசியல், சமூக மாற்றங்கள், பலவித சம்பவங்கள் பற்றி அறிந்து கொள்ள விரும்புபவர்களும் இந்தப் படத்தை பார்த்து ரசிக்கலாம்.

 முற்றும்.

Monday, May 9, 2016

தமிழ்நாட்டின் அடுத்த முதலமைச்சர் யார்?


கலைஞர் மு.கருணாநிதி:

என்னால் நடக்க முடியாது. இப்போதெல்லாம் என்னால் அதிகநேரம் பேசமுடியவில்லை. அதிக நேரம் என்னுடைய வேனில் உட்காரமுடிவதில்லை. உடல் நலம் அவ்வளவு சரியில்லை. ஆனால் உங்களுக்காக ஓடி ஆடி உழைப்பேன் என உறுதி கூறுகிறேன். எனக்கு 93 வயதாகிறது, 103 ஆனாலும் உங்களுக்காக உழைப்பேன் யாரப்பா அங்கே பரப்புரை இடங்களை கொஞ்சம் குறைங்கப்பா, என்னால முடியல. எங்களாலும் தாங்க முடியல.
புரட்சித்தலைவி ஜெயலலிதா:
Add caption
“சசி, அடுத்த இடம் எங்க?”
“மதுரை அக்கா”
“சரிசரி பூமிபூஜை போட்டாச்சா?”
“போட்டாச்சு அக்கா”
“இந்தத்தடவை களப்பலி ஆகாம இருக்கணும். ஆமா ஹெலிகாப்டர் ரெடியா?”
ரெடி அக்கா”.
“சசி, ஹெலிகாப்டர் நம்ம மொட்டைமாடிக்கு வருமா?”
ஏற்கனவே கேட்டாச்சு, வராதாம்”
இல்ல நடக்க முடியல”
ஒரு வீல்சேர் ரெடி பண்ணலாம்னு அதுக்குத்தான் சொன்னேன்”
“ நோ நோ, அந்தாளும் வீல்சேர்ல வந்து நானும் வந்தா நல்லாருக்காது, ஆமா சொன்னேனே வேனில சீட்டை கொஞ்சம் பெரிசாகச் சொல்லி”,
இதுக்கு மேலே சீட்டை பெருசாக்க முடியாதாம்”.
“சரிசரி வேனை நேராக மேடைக்கு விடச் சொல்லு. மேடையில் லிப்ஃட் ரெடியா?” ரொம்ப மூச்சு வாங்குது, யாரையும் என் கிட்ட வரவிடாதே, இன்ஃபெக்ஷன் ஆயிறப்போவுது.
          “மேடையில எவ்வளவு AC இருக்கு ?”,
“ 20 டன் இருக்கு அக்கா”
“ பத்தலை 30 டன்னா ஆக்கிரு”. “நான் பேசும் போதே மக்கள் கிளம்பிராங்களே ஏன் அப்படி விடுறீங்க? வந்து உட்கார்ந்தவுடனே சுற்றிலும் உயரமா இரும்பு வேலி போட்டிருங்க”. பேச்சு ரெடியா?
அதெல்லாம் ரெடி அக்கா”.
“எழுத்தை இன்னும் கொஞ்சம் பெரிசா எழுத முடியுமா? சரியாத் தெரியல”
இதுக்கு மேல பெரிசாக்கினா, ஒரு பக்கத்துக்கு 2வரி கூட எழுத முடியாது அக்கா”,
 பேசத்துவங்குகிறார்.
மக்களுக்காக நான் மக்களால் நான்
புரட்சிக் கலைஞர் விஜய்காந்த்:
Add caption
“டேய் தள்ளிப் போங்கடா”,
“கீழே விழுந்துறக் கூடாதுன்னதான் நெருக்கமா வர்றோம்.
“என்னடா ஆச்சு எனக்கு ஏறினாலும் தடுமாறுது, இறங்குனாலும் தடுமாறுது, நடந்தாலும் தடுமாறுதுபேசினாலும் தடுமாறுது,ஒரு பக்கம் கோவம் கோவமா வருது, இன்னொரு பக்கம் அழுகை அழுகையா வருது”
“ஹேங் ஓவரா இருக்கும் கேப்டன்”
“இல்லடா அதெல்லாம் விட்டாச்சே”
“அப்ப பழக்கதோஷமா இருக்கும்”.
“இதுக்குத்தான சொன்னேன் , இதெல்லாம் விடக்கூடாதுன்னு”
பேசத்துவங்குகிறார்.
“நான் கிங்காதான் இருப்பேன்னு சொன்னேன். அவிங்க சரின்னு சொல்லிட்டாய்ங்க மக்களே மறக்காம ஓட்டுபோடுங்க. எவண்டா குறுக்கே குறுக்கே பேசறது, வந்தேன்னா தூக்கிபோட்டு மிதிச்சிறுவேன்”.
சீமான் என்ற சைமன்:

“நான் பெரியாரின் வழியில் வந்தவன், ஆனா எனக்கு பெரியாரைப் பிடிக்காது, ஏன்னா அவர் தமிழன் இல்லை.
மதிப்பிற்குரிய அண்ணன் வைக்கோவைப் பிடிக்கும் ஆனா பிடிக்காது.
சினிமாக்காரர்கள் அரசியலைக் கெடுத்துவிட்டார்கள்.
(அப்ப நீங்க?)
எனக்கு ஹிட்லரைப் பிடிக்கும்.
தமிழ்நாட்டை தமிழன் ஆளவேண்டும்.
என் முப்பாட்டன் முருகன், பாட்டன் சோழன், தாத்தன் பாண்டியன். தமிழன் தமிழனாக வாழ வேண்டும். ஆனா நான் ஜீன்ஸ்தான் போடுவேன்.
இளநீரை தேசிய பானமாக்க வேண்டும்.
திருமலை நாயக்கர் மஹாலை இடிக்க வேண்டும்.
அடிரா கையைத் தூக்கி சல்யூட்,
 (பாதி வேட்பாளர்களுக்கு கையில் சுளுக்கு)
அன்புமணி:

“எங்கப்பா மரம்வெட்டி, என் தளபதி காடுவெட்டி,
என் தொண்டர்கள் ஆள்வெட்டி
டாக்டருக்கு ஒரு வாய்ப்புக் கொடுங்க.( எதுக்கு போஸ்ட்மார்டம் பண்ணவா ?)
வன்னியர் தவிர மத்தவர் எங்களுக்கு அந்நியர், வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும்.  ஆனால்  எங்கள் கட்சி சாதிக் கட்சி இல்லை,



 இதுல யாருக்கு உங்கள் ஒட்டு.
நம்ம நெலமையைப் பாருங்க மக்களே.

Thursday, May 5, 2016

நானே நானா யாரோதானா?

எழுபதுகளில் இளையராஜா பாட்டு எண்: 31
'அழகே உன்னை ஆராதிக்கிறேன்' என்ற படத்திற்காக இளையராஜா இசையமைத்து வெளிவந்து பட்டையைக் கிளப்பிய சூப்பர் ஹிட்  பாடல் இது. பாடலை ஒருமுறை கேட்டுவிடுங்கள்.

பாடலின் சூழல்:
தெரிந்தோ தெரியாமலோ, மதுவருந்திய பெண் தன்னை மறந்த நிலையில் தன் மன எண்ணத்தையும், விரக தாபத்தையும் வெளிப்படுத்தும் பாடல் இது.
இசையமைப்பு:

நல்ல ஒரு லீட் கிடார் பீசோடு ஆரம்பித்து, பேஸ் புல்லாங்குழல் சேர்ந்து கொள்ள அதோடு டிரம்சின், ஹையாட்ஸ் சேர்ந்து முடிய, பெண்குரலில் 'நானே நானா' என்று பாடல் ஆரம்பிக்கிறது. பாடல் ஆரம்பித்தவுடன், குரலுக்கு இணையாக காங்கோஸ் இசைக்க ஆரம்பிக்கிறது.  பல்லவி முடிந்த பின் முதலாவது பிஜிஎம், வயலின் குழுமம் மற்றும் கெட்டில் டிரம்ஸ், டிரம்பட், டிரம்ஸ் ஹையாட்ஸ் இணைந்து சீறி முடிய, "ஒருவன் நினைவிலே' என்று சரணம் ஆரம்பிக்க திரும்ப காங்கோஸ் இணைகிறது.
இரண்டாவது BGM -ல் வயலின் துடித்து அடங்க, கெட்டில் டிரம்ஸ் கவாத்து முடிய கிடார் லீட் அப்படியே காதைத் தழுவி இசைத்து முடிக்க "பிறையில் வளர்வதும்" என்று பாடல் ஆரம்பித்து முடிகிறது.
பாடலின் வரிகள்:
நானே நானா யாரோதானா?
மெல்ல மெல்ல மாறினேனா?
தன்னைத்தானே மறந்தேனே..
என்னைநானே கேட்கிறேன்..

ஒருவன் நினைவிலே உருகும் இதயமே இதோ துடிக்க..
உலர்ந்த உதடுகள் தனிமைக்கவிதைகள் ஏதோ படிக்க..
மதுவின் மயக்கமே உனதுமடியில் இனிமேல் இவள்தான்,
சரணம்..சரணம்..

பிறையில் வளர்வதும் பிறகு தேய்வதும் ஒரே நிலவு..
உறவில் கலப்பதும் பிரிவில் தவிப்பதும் ஒரே மனது..
பருவ வயதிலே இரவும் பகலும் விரகம். நரகம்.
சரணம்..சரணம்..

நானே நானா யாரோதானா?
மெல்ல மெல்ல மாறினேனா?
தன்னைத்தானே மறந்தேனே..
என்னைநானே கேட்கிறேன்..
Vaali with Ilayaraja

பாடலை எழுதியவர் கவிஞர் வாலி. ஒவ்வொரு வரியிலும் ஒரு பெண்ணின் விரகதாபத்தை சொல்லில் வடித்துள்ளார். கவிஞர், பெண்ணின் மனதுக்குள் புகுந்து இந்தச் சூழ்நிலையில் அவள் எப்படியெல்லாம் உருகுவாள் என்பதை பாடல் வரிகளில் வெளிப்படுத்துகிறார். அவளின் தன்மை முழுவதும் பல்லவியிலேயே வெளிப்படுகிறது.
"நான் நான்தானா, இல்லை வேறு யாரோவா? இல்லை மெல்ல மெல்ல மாறிப்போனேனா?" என்ற வரிகளை இணைத்து, கவித்துவத்தை சிறிது குழைத்து, எதுகை மோனையை கொஞ்சம் அழைத்து, பாடல் வரும்போது நம்மை அறியாமல் சிலிர்க்கிறது. இரண்டாவது சரணத்தில் கவிஞரின் முத்திரை விழுகிறது.
'பிறையில் வளர்வதும் பிறகு தேய்வதும் ஒரே நிலவு
உறவில் கலப்பதும், பிரிவதில் தவிப்பதும் ஒரே மனது'
அதுமட்டுமல்லாமல் அடுத்த வரிகளில், பருவ வயதில் இரவு மட்டுமல்ல, பகலும் விரகம்தான், அது நரகம் தான் என்று சொல்லும்போது கவிஞர் சூழலை அப்படியே படம் பிடிக்கிறார். வாலிக்கு இணை இவரே.
பாடலின் குரல்:
Vani Jaeyaram
பாடலைப்பாடியவர் வாணி ஜெயராம் அவர்கள். வாணி ஜெயராம் பாடிய பல சிறந்த பாடல்களில் இது மிகவும் வித்தியாசமான பாடல். இந்தப் பாடலும், ‘ரோசாப்பூ ரவிக்கைக்காரி' என்ற படத்தில் வந்த "என்னுள்ளில் எங்கோ" என்ற பாடலும் ஒரே விரக சூழலை வெளிப்படுத்திய இளையராஜாவின் பாடல்கள். தெள்ளிய குரல் தெளிவான உச்சரிப்பு தெவிட்டாத இனிமையோடு ஒலிக்கிறது பாடல். தேன் தடவிய குரலை கொஞ்சம் மதுவும் நனைத்தால் எப்படி ஒலிக்குமோ அப்படியே ஒலிக்கிறது பாடல்.
வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்கள் (FETNA) நடத்திய, நியூயார்க்கில் நடந்த விழாவில் வாணிஜெயராம் கச்சேரியில் இந்தப்பாடலைப் பாடியது இன்னும் என் கண்முன்னால் தெரிகிறது, காதுகளில் ஒலிக்கிறது. வாணி ஜெயராம் நம் தமிழுக்குக் கிடைத்த சிறந்த தமிழ்ப் பாடகி. இவருக்கு இன்னும் சிறந்த இடம் கிடைத்திருக்க வேண்டும் என்பது என் ஆதங்கம்.
நல்ல மேற்கத்திய தரத்தில், நம் மெல்லிசை இணந்து இசையமைக்கப்பட்ட இந்தப்பாடல், இளையராஜா இசையமைத்த பாடல்களில் சொல்லக்கூடிய சிறந்த பாடல்களில் ஒன்றாக நிச்சயம் இருக்கிறது. அதே போல வாணிஜெயராம் பாடிய சிறந்த பாடல்களில் ஒன்றாகவும் இது அமைகிறது.

- தொடரும்.

Monday, May 2, 2016

விலக்கப்பட்ட நகரும் விளக்கப்பட்ட வரலாறும் !!!!!!!!

சீனாவில் பரதேசி -9
View of the Hall of Supreme Harmony from the south
The Hall of Supreme Harmony)
வின்ட்டரில் சம்மரை அமர்த்தியது தவறு என்று நினைக்கும்போது மறுபுறம் யாருக்கோ அவர்கள் செல்போனில் படம் எடுத்துக் கொண்டிருந்தாள். "சம்மர், புதிய, மொழி தெரியாத இடத்தில் எனக்குப் பயமாக இருக்கிறது. என்னைவிட்டு எங்கேயும் போகாதே”, என்றேன்.
"சிறு பிள்ளைபோல் இருக்கிறாய் நீ என்னைப் பார்க்கா விட்டாலும் நான் உன்னைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன். கவலைப்படாதே"என்று முதுகில் தட்டிவிட்டு விரலை நீட்டினாள். நானும் கொஞ்சமும் வெட்கமில்லாமல் அதைப் பிடித்துக் கொண்டு பின்னால் சென்றேன்.
அந்தக் குளிரிலும் ஏராளமான மக்கள் அங்கு வந்திருந்தனர். இந்த விலக்கப்பட்ட நகரின் சீனப்பெயர் 'சிஜின் செங்' (Zijin cheng) என்பது. இதன் அர்த்தம் "Purple Forbidden City". 1576-ஆம் ஆண்டிலிருந்து இந்த அரண்மனைக்கு இந்தப் பெயர்தான். ஆனால் பொதுவாக பெய்ஜிங்கில் இதன் பெயர் 'குகாங்க்' (Gugong). இதன் தமிழாக்கம் "முன்னாள் அரண்மனை" என்பதாகும். இப்பொழுது, "அரண்மனை மியூசியம்" என்றும் அழைக்கப்படுகிறது.
Emperor Zhu Di.
பேரரசர் ஹோங் வு-வின்( Hong Vu) மகன் ஸூ டி (Zhu Di) யாங்க்லி பேரரசர் ஆனபோது, அவன் தலைநகரத்தை நான்ஜிங் (Nanjing)-லிருந்து பீஜிங்குக்கு மாற்றினான்.  அந்த வருடமான 1406ல் தான் இந்த அரண்மனை கட்ட  ஆரம்பிக்கப்பட்டதாம்.  கட்டிமுடிக்க 14 ஆண்டுகள் ஆயிற்றாம்.
1644-ல் அது மஞ்சூரியரின் வசம் வந்தது. அப்போது அரண்மனையின் சில பகுதிகள்  எரியூட்டப்பட்டன. சிறிது காலத்தில் சீனா முழுவதும் மஞ்சூரியரின் ஆதிக்கத்தில் வந்தது. பின்னர் மஞ்சூரியரின் சிங் பரம்பரை (Qing Dynasty) ஆளத்தலைப்பட்ட போது, அரண்மனையைப் புதுப்பித்து அதில் வாழத்துவங்கினர். ஒவ்வொரு  அரண்மனைக் கட்டடத்தின் மேலேயும் பட்டுத்துணியில் சீன மற்றும் மஞ்சு மொழியில் அதன் பெயர்கள் மாற்றி எழுதப்பட்டன.   
Portrait of Tzu-hsi by Hubert Vos, 1906
Empress Cixi
 ஓப்பியம் போரில் ஆங்கில- பிரெஞ்சு கூட்டுப்படை, அரண்மனையை ஆக்ரமித்து போர் முடியும்வரை உள்ளேயே தங்கியிருந்தனர். 1900ல் பாக்ஸர் புரட்சி நடக்கும்போது பேரரசி சிக்ஸி (Empress Orchid alias Cixi)  இந்நகரத்தை விட்டு வெளியேற வேண்டியநிலை வந்தது. இவரைப்பற்றி விவரமாக என்னுடைய முன்னாள் பதிவில் பார்க்கலாம். கிட்டத்தட்ட ஒரு வருடம் இந்த  நிலை நீடித்தது.  (http://paradesiatnewyork.blogspot.com/2013/05/blog-post_1.html )
மொத்தம் 24 பேரரசர்கள் ஆண்ட இந்த இடம், 1912ல் கடைசிப் பேரரசரான புயீ (Puyi) பதவியிறக்கம் செய்யப்பட்டதோடு தன் முக்கியத்துவத்தை இழந்தது. ஆனால் புதிய சீனக்குடியரசோடு பண்ணப்பட்ட ஒப்பந்தத்தின்படி புயீ உள்ளே பின்பகுதியில் இருந்த வளாகத்தில்  (Inner court) தங்கியிருக்க அனுமதிக்கப்பட்டார். மற்ற இடங்களெல்லாம் பொது இடங்கள் ஆயின. அதன் பின்னர் 1924ல் நடந்த ஒரு புரட்சியின் பின் அவர் வெளியேற்றப்பட்டார். 
Puren - who has died aged 96 - was the youngest brother of the final Qing monarch Puyi (above), who ruled for four years until 1912
Puyi, The Last Emperor.
1925 முதல் இந்த அரண்மனை வளாகம் மியூசியமாக மாற்றப்பட்டது. 1933ல் ஜப்பான் சீனாவை ஆக்ரமிக்க முயன்றபோது, அரண்மனையின் மதிப்பு மிகுந்த பொருட்கள் அப்புறப்படுத்தப்பட்டு பத்திரப்படுத்தப்பட்டன. இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் அவற்றில் பாதி இங்கு கொண்டுவரப்பட மீதி தைவானுக்குக் கொண்டு செல்லப்பட்டது. இப்போது அவை தாய்பெய்-ல் உள்ள தேசிய அரண்மனை மியூசியத்தில் இருக்கின்றன.
1949-ல் சீனாவில் மக்கள் குடியரசு ஏற்பட்ட சமயம், புரட்சி வேகத்தில் அரண்மனையின் சில பகுதிகள் தகர்க்கப்பட்டன.  ஆனால் அப்போதிருந்த சீன அதிபர்  ஜோவு என்லாய் (Premier ZHOU ENLAI) ஒரு ராணுவப்பிரிவை அனுப்பி அரண்மனையைப் பாதுகாக்க  ஆணையிட்டார்.
நகரின் நடுவில் இருக்கும்படி அமைக்கப்பட்ட இந்த அரண்மனை வளாகம் 3153 அடி நீளமும் 2470 அடி அகலமும் கொண்டது. 980 கட்டடங்களையும் அதில் 8886 அறைகளும் இருக்கின்றனவாம். ஒரு காலத்தில் 9999 அறைகள் இருந்தன என்று சொல்லப்படுகிறது.
எப்படி மதுரையில் மீனாட்சியம்மன் கோவிலை மையமாக வைத்து முழு நகரும் வடிவமைக்கப்பட்டதோ, அதே வகையில்தான் இந்த அரண்மனையை மையமாக வைத்து பீஜிங் நகர் கட்டமைக்கப்பட்டது.
View ogf the Tongzi moat, Forbidden City, Beijing
Tower in the corner
இந்த வளாகம் முழுவதுமாக கோட்டைச் சுவரால் சூளப்பட்டு இருக்கிறது. இந்தச்சுவர் 26 அடி உயரமும், அடியில் 28 அடி அகலமும், மேலே 22 அடி அகலமும் கொண்டவை. அதன் நான்கு மூலைகளிலும் அழகாக வடிவமைக்கப்பட்ட டவர்கள் இருக்கின்றன. இந்த சுற்றுச்சுவரின் நான்கு புறங்களிலும் நான்கு பெரிய நுழைவாயில்கள் இருக்கின்றன. தென்புறம் இருக்கும் பிரதான புராதன நுழைவாயிலுக்குப் பெயர் மெரிடியன் கேட். இதன் வழிதான் நான் உள்ளே வந்தது. மற்ற நுழைவாயில்களின் பெயர்கள் முறையே டிவைன் மைட் (Divine Might), ஈஸ்ட் குளோரியஸ் கேட் மற்றும் வெஸ்ட் குளோரியஸ் கேட். இதில் என்ன சிறப்பு என்றால், ஒவ்வொரு வாயிற்கதவும் நன்கு வேலைபாடுடன் அமைந்திருப்பது மட்டுமல்லாமல் ஒவ்வொன்றும் 9 வரிசையில் ஆன தங்க ஆணிகளால் வடிவமைக்கப்பட்டது.
Looking back to the Meridian Gate from the north
Golden River
நான் பார்த்த முதல் அத்தானி மண்டபத்தின் பெயர் 'திஹால் ஆஃப் சுப்ரீம் ஹார்மனி' (The Hall of Supreme Harmony) என்பது. இதற்குச் செல்லும் வழியில் சிறுசிறு பாலங்கள் இருந்தன. அதன் கீழே ஒரு சிறிய ஓடை போன்று ஓடிக் கொண்டிருந்தது. அதன் பெயர் 'தங்க நீர் ஆறு'  (Golden Water River).
இந்த முழு நகரமும் அவுட்டர் கோர்ட் மற்றும் இன்னர் கோர்ட் என்று பிரிக்கப்பட்டிருக்கிறது. எல்லா நிகழ்வும் அவுட்டர் கோர்ட்டில் நடக்கும். இன்னர் கோர்ட் என்பது பேரரசர் மற்றும் அவர் குடும்பம் வாழுகின்ற இடம். அவர் குடும்பம் தான் ரொம்பப் பெரிசே.

இந்த ஹால் ஆஃப் சுப்ரீம் ஹார்மனியில்தான் பதவியேற்பு, திருமணம் போன்ற  முக்கிய நிகழ்ச்சிகள் நடக்கும். அடிப்பகுதி வெள்ளைப் பளிங்காலும் மற்றவை மரத்தாலும் அமைந்த மூன்று அடுக்குமாளிகை இது. 98 அடி உயரம் கொண்ட இதுதான் விலக்கப்பட்ட நகரில் உள்ள எல்லா கட்டடங்களையும் விட பெரியது.
அதன் பின்புறம் இறங்கினால் வரிசையாக இதே போன்ற பலவிதமான கட்டடங்கள் வந்தன. ஒவ்வொன்றுக்கும் ஒரு பெயர், ஒவ்வொன்றுக்கும் வேறுவேறு பயன்பாடுகள். வாருங்கள் ஒவ்வொன்றாய்ப் பார்ப்போம்.

- தொடரும்.