Thursday, September 13, 2018

டி.எம்.எஸ்ஸுக்கும்; இளையராஜாவுக்கும் என்ன தகராறு ?


Image result for நல்லதொரு குடும்பம்
எழுபதுகளில் இளையராஜா பாடல் எண்: 39
சிந்து நதிக்கரை ஓரம்.
இதற்கு முந்திய பகுதியைப்படிக்க  இங்கே சொடுக்கவும்.
http://paradesiatnewyork.blogspot.com/2018/03/blog-post.html

இளையராஜா இசையமைத்து 1979-ல் வெளிவந்த “நல்லதொரு குடும்பம்” என்ற திரைப்படத்தில் அமைந்த இனிமையான பாடல் இது.முதலில் பாடலைக்கேட்போமா ?




பாடலின் சூழல்:
திரைப்படங்களில் காதல், சோகம், அன்பு, வீரம், வெற்றி, தோல்வி என்ற பல சூழ்நிலைகளுக்கேற்ப பல பாடல்கள் இயற்றப்பட்டு இசையமைக்கப்பட்டிருக்கின்றன. இதில் காதலுக்காக இசையமைக்கப்பட்ட பாடல்கள் தான் அதிகம் என நினைக்கிறேன். ஒரு பாடல் அல்லது இசையின் மூலம் காதல் உணர்வுகளை சொல்வது வசனங்களின் மூலம் சொல்வதை விட சுலபம். ஏனென்றால் காதல் மட்டுமல்ல காமத்தையும் பாடல் மூலம் சொல்வது எளிதென்று நினைக்கிறேன். அப்படி காதலை வெளிப்படுத்தும் இன்னொரு பாடல்தான் இது.
இசையமைப்பு:
அருமையாக அமைந்த இந்த மெல்லிசைப் பாடலில்  அதற்கேற்ப இசையமைத்ததோடு இசைக்கருவிகளையும் இதமாக பதமாக பயன்படுத்தியிருக்கிறார் இளையராஜா. பாடலுக்கு முன் மகிழ்ச்சியான நெகிழ்ச்சியான ஒரு மனநிலையைக் காண்பிக்கும் விதத்தில் வீணை, வயலின்கள், புல்லாங்குழல் மற்றும் கீபோர்டு இசைக்க "சிந்து நதிக்கரை ஓரம்" என்று பெண்குரலில் பாடல் ஆரம்பிக்கிறது. இனிய குரலுக்கு இசை கூட்ட தபேலா சேர்ந்து கொள்கிறது. அதற்குப் பதில் சொல்ல ஆண்குரல் ஒலிக்ககிறது. தேவனும் தேவியும் பாடிமுடிக்க முதல் BGM ஆரம்பிக்கிறது. ஏற்கனவே முன்னிசையில்  (Prelude) பயன்படுத்தப்பட்ட வீணையை சும்மா இருக்க விடுவானேன் என்று இன்டெர்லுடிலேயும்  பயன்படுத்தியிருக்கிறார். வயலின்கள், வீணை, புல்லாங்குழல் மற்றும் பேஸ் கோரஸ் ஒலித்து முடிக்க "மஞ்சள் மலர் பஞ்சனைகள்" என்று பெண் குரலில் சரணம் ஆரம்பிக்கிறது. 2ஆவது BGM எங்கெங்கோ ஊர்வலம் போய் சம்பந்தமில்லாதது போல் ஒலித்து மீண்டும் வந்து பாடலில் இணைய 2-ஆவது சரணம் "தெள்ளுதமிழ் சிலம்புகளை" என்று ஆண் குரலில் வருகிறது. 2-வது சரணத்தில் தபேலாவின் நடை மாறி உருட்டி உருட்டி ஒலிக்கிறது.
          பின் இரு குரலிலும் சிந்து நதி தவழ்ந்து சலசலத்து பாடல் நிறைவு பெறுகிறது.
பாடலின் வரிகள்:   
சிந்து நதிக்கரை ஓரம் அந்தி நேரம்
எந்தன் தேவன் பாடினான்
தமிழ் கீதம் பாடினான்
எனை பூவை போல சூடினான்

சிந்து நதிக்கரை ஓரம் அந்தி நேரம்
எந்தன் தேவி ஆடினாள்
தமிழ் கீதம் பாடினாள்
எனை பூவை போல சூடினாள்

மஞ்சள் மலர் பஞ்சனைகள்
மன்மதனின் மந்திரங்கள்
கொஞ்சும் குயில் மெல்லிசைகள்
கோவை எந்தன் சீர் வரிசை
சொல்லி கொடுத்தேன் அதை அதை
அள்ளி கொடுத்தாய் அதை அதை
காதல் கண்ணம்மா

தெள்ளு தமிழ் சிலம்புகளை
அள்ளி அவள் அணிந்துக்கொண்டாள்
கள்ளிருக்கும் கூந்தலுக்கு
முல்லை மலர் நான் கொடுத்தேன்
வானவெளியில் நிதம் நிதம்
சோலைவெளியில் சுகம் சுகம்
காதல் மன்னவா..
        பாடலை எழுதியவர் கவிஞர் கண்ணதாசன் அவர்கள். பாடல் எழுதியவுடன் சிந்துநதியில் ஷுட்டிங் எடுத்தார்களோ. இல்லை ஏற்கனவே அங்கு படப்பிடிப்பை திட்டமிட்டதால் சிந்துநதிக்கரை என்று எழுதினாரோ தெரியவில்லை. அல்லது பாரதி போலவே கண்ணதாசனுக்கும் சிந்துநதிமேல்  ஒரு ஈர்ப்பு இருந்திருக்கலாம். திராவிட நாகரிகம் பிறந்த இடமல்லவா. பல்லவியில் "பூவைப்போல  சூடினான்" என்ற வரி நன்றாக இருந்தது. பாவை பூவைச்சூடுவது இயல்பு. அந்தப் பாவையையே ஒருவன் பூவைப்போல் சூடிக் கொள்வது என்பது கண்ணதாசனின் அழகிய கற்பனை. முதல் சரணத்தில் அதிக ரகசியங்களை மேலோட்டமாக சாதாரண வரிகளில் சொல்லிச் செல்கிறார் .
அதுபோலவே இரண்டாம் சரணத்தில் குளித்து முடித்து ஈரத்துடன் இருக்கும் கூந்தல் மயக்கம் தருவதாக நினைத்து “கள்ளிருக்கும் கூந்தலுக்கு முல்லை மலர் நான்  கொடுத்தேன்" என்பது அவருக்கே உரிய போதையுள்ள கற்பனை. பாடல் முழுவதும் கண்ணதாசனின் வரிகள்  இசைக்கு இசைவாக உட்காருகின்றன.
பாடலின் குரல்:
Image result for Ilayaraja with TMS

பாடலைப் பாடியவர்கள் டி.எம் செளந்திரராஜன் P.சுசிலா ஆகிய மறக்கமுடியாத ஜோடிக்குரல்கள். மிகவும் உச்சஸ்தாயி பாடுகிற டி.எம். எஸ்க்கு இந்தப்பாடலில் கீழ் ஸ்தாயி கொடுத்திருக்கிறார் இளையராஜா. இருவருக்கும் அதுவும் நன்றாகவே பொருந்தி யிருக்கிறது. இளையராஜாவுக்கும் டி.எம்.எஸ்ஸுக்கு  தகராறு வந்ததால்தான் அதிக பாடல்கள் அவருக்குக் கொடுக்கவில்லை என்று சொல்கிறார்கள். பாடல் வெற்றி பெறுவதற்கு என் குரல்தான் அவரின் இசையை விட காரணம் என்று சொன்னதாகக் கேள்வி. அதற்கு ஆதாரம் இல்லை. ஆனால் தன் முதற்படத்திலேயே டி.எம்.எஸ்ஸுக்கு பாடல் கொடுத்தவர் இளையராஜா. ஆனால் டி.எம்.எஸ் சிவாஜி, இளையராஜா, காம்பினேஷனில் வெளிவந்த பாடல்கள் அனைத்தும் நினைவில் என்றும் நிற்பவை.
Image result for Ilayaraja with TMS

சில பாடல்களைக் கீழே கொடுக்கிறேன்.
1.   அன்னக்கிளி உன்னைத்தேடுதே - அன்னக்கிளி
2.   நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு - தியாகம்
3.   அந்தப்புரத்தில் ஒரு மகாராணி - தீபம்
4.   நேரமிது நேரமிது - ரிஷி மூலம்.
5.   ஐம்பதிலும் ஆசை வரும் - ரிஷிமூலம்
6.   பேசாதே, வாயுள்ள ஊமை - தீபம்
7.   தேன் மல்லிப்பூவே - தியாகம்
8.   உலகம் அது இருட்டு
9.   ராஜா யுவராஜா - தீபம்.
10.                பட்டதெல்லாம் போதுமா? நல்ல தோர் குடும்பம்.
        எனக்குத் தெரிந்து சிவாஜியின் படங்கள் குறைந்ததாலும் எம்ஜியார் நடிப்பதை நிறுத்தியதாலும்தான் டி.எம்.எஸ்ஸுக்கு வாய்ப்புகள்  குறைந்தன. அதோடு வயதும் ஆனதால் குரலில் ஒருவித தழுதழுப்பும் வந்தது என்பதால்தான் மலேசிய வாசுதேவன் சிவாஜிக்குப் பாட ஆரம்பித்தார் என நினைக்கிறேன்.
 யாரிடம்தான் இளையராஜா சண்டை போடவில்லை. ஆனால் நமக்கு தேவை அதுவல்ல, இன்று கேட்டாலும் என்று கேட்டாலும்  ரசிக்க முடிகிற இந்த மாதிரிப் பாடல்களை கேட்டு மகிழ்வது மட்டும்தான் ரசிகர்களான நமக்குத் தேவை.
-தொடரும்.

10 comments:

  1. Replies
    1. நன்றி ஸ்ரீராம் உங்களுக்கும் பிடித்த பாடல்தானா?

      Delete
  2. உண்மைகளை அழகாக பிரித்து மேய்ந்து விட்டீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. பிரித்துவிட்டேன் மேய்ந்துவிட்டேனா என்று தெரியவில்லை கில்லர்ஜீ

      Delete
  3. இளையராஜா கொடுத்து வைக்கவில்லை...!

    ReplyDelete
    Replies
    1. நான் வாழ வைப்பேன் எனும் படத்தில் டி எம் எஸ் குரலில்தான் "என்னோடு பாடுங்கள் நல்வாழ்த்துப் பாடல்கள்", என்ற பாடல் பதிவு செய்யப்பட்டது ஆனால் அந்தப்படத்தின் தயாரிப்பாளர்களால் அந்த பாடலை எஸ் பி பி குரலில் மறுபதிவு செய்து படத்திலும் ஒலிதாடாவிலும் ஒலிக்கச்செய்ததுதான் டி எம் எஸ் ஸின் மனம் வருந்தவும் அந்த வலி இளையராஜாவின் மேல் பழி சொல்லவும் காரணமாக அமைந்தது...
      ஆனாலும் பல ஆண்டுகள் கழித்து மீண்டும் ராஜாவால் டிஎம்எஸ் இளமைக்காலம் இங்கே என்ற பாடலை உன்னை ஒன்று கேட்பேன் என்ற மெட்டில் பாடினார்.( என் அமெரிக்கன் கல்லூரி ஆர்கெஸ்ட்டிரா நண்பர் ரவிக்குமார் பகிர்ந்த செய்தி இது )

      Delete
  4. நல்ல அலசல். என்பது தொன்னூறுகளில் இளையராஜா இசை உலகை ஆண்டார். சிறிய அளவில் பாடிக்கொண்டிருந்த புதுமுகப் பாடகர்கள் உதவியுடன் சிகரம் தொட்ட ராக தேவன் அவர்.

    ReplyDelete
    Replies
    1. மிகச்சரி முத்துச்சாமி.

      Delete
  5. "யாரிடம்தான் இளையராஜா சண்டை போடவில்லை"

    யார்தான் இளையராஜாவிடம் சண்டை போடவில்லை?
    அத்தனையும் மீறி இமாலய சாதனைகளைப் படைத்தாரே!

    ReplyDelete
    Replies

    1. அதில் எந்த சந்தேகமுமில்லை பெப்பின் .

      Delete