வேர்களைத்தேடி பகுதி –24
இதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும்.
http://paradesiatnewyork.blogspot.com/2018/09/blog-post.html
காய்ந்து
கொண்டிருக்கும் வெயிலில் ஜில்லென ஐஸ்
சாப்பிட்டால், அதுவும் இலவசமாக யாருக்கு ஆசை பிறக்காது. ஆசையின் உந்துதலில் சரளைக் கற்களில் சத்தம்
எழுப்பி தீயாய்ச் சுட்ட மொட்டைப்பாறைகளை தொட்டும் தொடாமல் மேலேறிச் சென்றேன்.
அந்தப் பெரும் இரட்டைப் பாறையின் கீழே சற்றே நிழல் விழுந்த புதரில் கையை
கிட்டத்தட்ட அருகில் கொண்டு போய்விட்டேன். அப்போது தான் படமெடுத்து நின்ற அந்த
நல்ல பாம்பைப் பார்த்தேன். பெரியது என்றும் சொல்லமுடியாது. சிறியதும் இல்லை.
நடுத்தர வடிவில் பளபளவென்று படம் எடுத்தவாறு ஆடாமல் இருந்தது. பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன் ஆனால் பாம்பு என்றால் தொடையும் நடுங்கும் என்று அன்றுதான் தெரிந்துகொண்டேன். புதையலைக் காக்கும்
நாக தேவதை போல் அங்கே இருந்த பாம்பைப் பார்த்து திகைத்துவிட்டேன். விட்டிருந்தால்
பாம்பின் படம் என் கையில் பட்டு, பாம்பின் பல் என் மெய்யில் பட்டு, விஷம் உடலில் பட்டு, என் உடல் தரையில் பட்டு, என் உயிர் மேகத்தில்
பட்டிருக்கும்.
ஆடாது
அசையாது இருந்த பாம்பின் முன்னால் நானும் ஆடாது அசையாது சற்றே நடுங்கியவாறே நின்றேன். என் பேஸ்மென்ட்
எவ்வளவு வீக்கென்று அன்றுதான் முழுவதுமாகத் தெரிந்தது. என்ன செய்வது என்று
திகைத்து நின்றேன். காசை எடுக்க வழியில்லை. திரும்பினால் கொத்திவிடுமோ என்று பயம்.
அப்படியே சில நிமிடங்கள் கழிந்தது.
தீடீரென்று
ஒரு பெரும் நிழல் என் மேல் படர மேலே பார்த்தால் ஒரு மிகப்பெரிய கழுகு. சற்றே நான்
தலையைச் சாய்க்க. மின்னல் வேகத்தில் அது கீழிறங்கி பாம்பைத் தன் கைகளால் பற்றிக்
கொண்டு பறந்து மறைந்தது.
கோழிக்குஞ்சுகளை,
ஏன் கோழிகளையே தூக்கிச் செல்லும் பருந்துகளை நான் சிலமுறை
பார்த்திருக்கிறேன். ஆனால் இந்தக் காட்சி, எம்மாடி இப்போது
நினைத்தாலும் பகீரென்று இருக்கிறது. அன்றுதான் குலோசப்பில் பருந்தின் இறக்கைகள்
எவ்வளவு அகலம் என்று தெரிந்தது. கிட்டத்தட்ட என்னை முழுவதும் மறைக்கும் படியான
நிழல் என்மேல் விழுந்தது பாம்பும் அதனைக் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. சட்டென
கீழிறங்கி அந்தப் பாம்பை லாவகமாக தன் கால்களில் பற்றிக் கொண்டு மேலே வேகம்
எடுத்தது. பாம்பு வளைந்தும் நெளிந்தும் உதறியும் ம்ஹீம் ஒன்றுமே செய்ய
முடியவில்லை. பருந்தும் பறந்து மறைந்தது. எனக்கு அப்படியே ஆடிப்போனது. காப்பாற்றின
பருந்துக்கு நன்றி சொன்னாலும், பாம்பு இல்லா விட்டால்
என்னையே தூக்கிச் சென்றிருக்கும் அளவுக்கு மிகப்பெரியது. தேடிப்பார்த்தால் அங்கு
எந்த நாகமாணிக்கமும் தென்படவில்லை. ஒரு பெரு மூச்சு விட்டுவிட்டு புதரை நோண்டி
காசை எடுத்துவிட்டு (வெறும் 4 நாலனா என்று சொல்லக்கூடிய 25
பைசா) மீண்டும் காரை ஸ்டார்ட் செய்து கீழிறங்கினேன். கார் தலைகீழாக வேகமாகப்
புறப்பட்டது. கீழிறங்கி 2 ஐஸ் ஃப்ரூட் வாங்கிச்
சாப்பிட்டபின் தான் என்ஜின் சற்று குளிர்ந்தது. அதற்கப்புறம் எக்காரணத்தாலும் நான்
தனியாக கரட்டுக்குப் போவதை முற்றிலுமாக கைவிட்டுவிட்டேன். கீழே வந்து நான் சொன்னதை
யாரும் நம்பவேயில்லை. நீங்களாவது நம்புங்க.
என் வீட்டிலிருந்து உயர்நிலைப்பள்ளிக்கு
போவதற்கு,
தேவதானப்பட்டி மெயின்ரோடு, போலீஸ் நிலையம்,
பூங்கா ஆகியவற்றைக் கடக்கும் வழியில் தான் சந்தைப்பேட்டை
இருக்கிறது. அதற்குள் பெரிய புளியந்தோப்பு உண்டு. அதில்தான் புதன் கிழமை தோறும்
வாரச் சந்தை நடக்கும். விவசாயிகள் தங்கள் வயல்களில் விளைந்த காய்கறி, கனிகளை அங்கு கொண்டு வந்துவிற்பார்கள். மொத்த விலை மற்றும் சில்லைரைக்கும்
கிடைக்கும். கத்தரி, வெண்டை, முருங்கை,
உருளை, சேனை, கேரட்,
பீட்ருட், தக்காளி போன்ற பலவகைக் காய்கறிகள் இங்கு கிடைக்கும்,
வடுக பட்டியிலிருந்து நாடார் பலசரக்குக் கடையும், கருவாடு, தேங்காய்க் கடைகளும் இருக்கும். ஆடு மாடுகள் கூட விற்பனையாகும்.
இது தவிர பலகாரங்கள் மற்றும் விளையாட்டுப் பொருட்களும் கிடைக்கும். புதன் கிழமை
மதிய இடைவேளையில் வீட்டுக்கு வந்து சாப்பிட்டுவிட்டு பள்ளிக்குப் போகும் போது
சந்தைக்குப்போகும் அம்மாவுடன் நானும் இணைந்து செல்லுவேன்.
எனக்குத்தேவை பத்துப் பைசா. அவர்கள் சில்லறை மாற்றிக் கையில் கொடுத்தவுடன்
பள்ளிக்கு அங்கிருந்து குறுக்கு வழியில் ஓடி விடுவேன். என்ன, கீழே பார்த்துப் போக
வேண்டும். அங்கே ஓரமாக வாய்க்கால்
ஓடுவதால் கீழே கோரமாக இருக்கும். பன்றிகளும் ஆங்காங்கு மேயும் . சில சமயங்களில் ஆத்திர அவசரத்திற்கு அங்கே போய் உட்கார்ந்தால் பன்றிகளும் ஆத்திர அவசரத்தில்
பின்னால் வந்து முட்டும்.
சீரணி |
சின்ன
வயதாக நான் இருக்கும் போது சந்தைக்குப் போகும் என் ஆயா தவறாது வாங்கி வருவது
சீரணியும், சர்க்கரைச்சேவும் , இனிப்பும்
காரமும் ஒன்றிணைந்து சுவையாக இருக்கும். சீரணி போன்ற ஒன்றை பலநாட்கள் கழித்து
பங்களாதேஷ் கடையில் பார்த்தேன். வாங்கிச் சாப்பிட தைரியமில்லை. ஒரு நாள் வாங்கிச்
சாப்பிட்டுப் பார்க்க வேண்டும். சொல்லிவிட்டால் மண் குதிரை, மண்ணால்
செய்த சிறு விளையாட்டுச் சாமான்கள் அடுப்பு, சட்டி, பானை ஆகியவை வாங்கி வருவார்கள்.
இதில் தண்ணீர் ஊற்றி அரிசி போட்டு சோறு கூட செய்திருக்கிறேன். ஆனால்
உயர்நிலைப் பள்ளி வந்த போது அந்த
விளையாட்டுக்கள் மாறிப்போனது.
புதன்கிழமை
சந்தையில் தவறாமல் வாங்குவது மரவள்ளி, ஆழி
வள்ளி, குச்சிக்கிழங்கு என்று பல பெயர்களால் அழைக்கப்படும்
கப்பக்கிழங்கு வீட்டில் வேறு யாரும் அதனைச் சாப்பிட மாட்டார்கள். நானும் அம்மாவும்
மட்டும்தான். மாலை வந்து நானே அதனை செம்மண் போக கழுவி, துண்டு
துண்டாக நறுக்கி தோலையும் எடுத்து வைப்பேன். அதில் ஒரு துண்டை எடுத்து பச்சையாகச்
சாப்பிடுவது எனக்கு மிகவும் பிடிக்கும். வெள்ளைப்பால் ஒழுக அது மிக ருசியாக
இருக்கும். வேக வைத்தாலும் நன்கு விளைந்த காயாக இருந்தால் வெகு சீக்கிரத்தில்
வெந்து விரிந்து மகிழ்ந்து விடும். அப்படியே சுடச்சுட சாப்பிட்டால் மிக சுவையாக
இருக்கும்.
மரவள்ளி |
அந்த
வாரச் சந்தை இன்னும் கூடுகிறதா என்று தெரியவில்லை. பக்கத்தில் உள்ள எல்லா
ஊர்களுக்கும் அதுவே சந்தை. சந்தை நடக்கும் போது சில சமயங்களில் ரங்க ராட்டினம் வரும்.
எப்போதாவது குடை ராட்டினம் வரும். ரங்க ராட்டினம் சிறியதாக இருந்தாலும்
அந்தப்பெட்டி மேலே போகும்போது மிகவும் பயமாக இருக்கும். ஒரு முறை வெங்கடேசுடன்
நான் ஏறி அவஸ்தைப் பட்டதை நினைத்தால் இன்றைக்கும் நெஞ்சைப் புரட்டுகிறது. அந்தக் கதையை அடுத்த வாரம் சொல்லுகிறேன்.
- தொடரும்.
பாம்பு வந்ததை நம்ப முடிந்த அளவு கழுகு வரவை நம்ப முடியவில்லை!! ஆச்சர்யம் என்று சொல்ல வருகிறேன்!
ReplyDeleteஅன்று நடந்ததை இன்று நினைத்தாலும் என்னாலும்தான் நம்பமுடியவில்லை ஸ்ரீராம்
Deleteபயங்கரமான அனுபவம்...!
ReplyDeleteஉண்மைதான் திண்டுக்கல் தனபாலன்.
Deleteபாம்பென்றால் படையும் நடுங்கும்தான்,ஆனால்.நராமல் நின்றது ஏனோ?
ReplyDeleteஎன்ன செய்வது என்று திகைத்து நின்றேன். காசை எடுக்க வழியில்லை. திரும்பினால் கொத்திவிடுமோ என்று பயம். அப்படியே சில நிமிடங்கள் கழிந்தது.
Delete"நீயா" படம் பாத்த மாதிரி இருக்கே சார்?
ReplyDeleteஇது அதை விட திகில் தருவது ஏனென்றால், அது நிழல் இது நிஜம்.
Deleteவிட்டிருந்தால் பாம்பின் படம் என் கையில் பட்டு, பாம்பின் பல் என் மெய்யில் பட்டு, விஷம் உடலில் பட்டு, என் உடல் தரையில் பட்டு, என் உயிர் மேகத்தில் பட்டிருக்கும். படடு படடுனு கவிதயாவே செல்லிட்டிங்க
ReplyDeleteஅது உங்கள் கண்களில் பட்டு பின் கருத்தில் பட்டதால் அல்லவா இங்கே எழுத்தில் பட்டிருக்கிறது, நன்றி அன்பு .
Deleteபாம்பைக் கண்டு பயந்து நடுங்கிய அனுபவத்தை மிகச் சிறப்பாக எழுதிப் பகிர்ந்துள்ளீர்கள்.
ReplyDelete