Thursday, December 29, 2016

தமிழ்நாட்டில் கோழிச்சண்டையின் வயது ?


கல்வெட்டுகள் கூறும் கதைகள்



நியூயார்க் தமிழ்ச்சங்கம் தீபாவளித்திருநாளில் ஒரு சிறப்பு நிகழ்வாக கல்வெட்டுகள் பற்றிய ஒரு சொற்பொழிவை ஏற்பாடு செய்திருந்திருந்தது. கலை நிகழ்ச்சிகள், இசை, நாடகம் ஆகியற்றுக்கு வரும் கூட்டம் இது போன்ற நிகழ்ச்சிகளுக்கு வராது என்று நினைத்த தலைவர் விஜயகுமார், ஒரு சிறிய அரங்கத்தில் இதனை ஒழுங்கு செய்திருந்தார். ஐம்பது பேர் மட்டுமே அமர முடியும் அந்த இடத்தில் ஒரு நாற்பது பேர் வந்திருந்தனர். அவர்களில் நானும் ஒருவன். அன்றைய தினம் தீபாவளி தினமாகவும் இருந்ததால் அவ்வளவு பேர் வந்ததே பெரிதுதான். 

தீபாவளி இனிப்புகள், சமோசா, காஃபி ஆகியவை இருந்தன. மதிய நேரத்தில் சாப்பாட்டுக்கு மேல் இதனையும் சாப்பிட்டுவிட்டு லேசான கிறக்கத்தில் உட்கார, கல்வெட்டுகள் சொல்வெட்டுகளில் வெளிப்பட்டு நிமிர்ந்து உட்கார வைத்தது.

தமிழ்நாடு தொல்லியல் துறையில் (அப்படி ஒரு துறை இருக்கிறதா என்ன?) முப்பது வருடங்களுக்கு மேல் பணியாற்றி ஓய்வு பெற்ற முனைவர் சு.ராஜகோபால் அவர்கள் தான் அந்த சொற்பொழிவாற்ற வந்த சிறப்பு விருந்தினர். நியூயார்க் தமிழ்ப் பள்ளியின் நிறுவனர், நண்பர் முனைவர் பாலா அவர்கள் அவரை அழைத்து வந்திருந்தார்.
Image result for DR.S.Rajagopal
DR.Rajagopal
தமிழ்நாடு தொல்லியல்துறையில் மாநில அளவில் மூன்று பேர்தான் வேலை செய்கிறார்களாம். இப்படி இருந்தால் நம் வரலாற்று அறிவும் பண்பாடும், தொல்பொருள் இடங்களும்  எப்படி பாதுகாக்கப்படும் என்று யோசித்துப் பார்த்தால் அதிர்ச்சியாய் இருந்தது. அதோடு இப்போது இருக்கும் அரசு அதற்கென எந்த முயற்சியும் எடுக்காததால் பல வரலாற்றுச் சின்னங்கள் அழிந்து கொண்டிருக்கின்றன.

முனைவர் ராஜகோபால் போன்றவர்கள் இதனை ஒரு வேலையாக  நினைத்துச் செய்யாமல், உண்மையான ஆர்வத்துடன் தொண்டாற்றி ஓய்வு பெற்றாலும் இன்னும் செல்லுமிடங்களிலெல்லாம் மக்களின் ஆர்வத்தை தூண்டி விடுகிறார். 25 நூல்களையும் எழுதியிருக்கிறார்.

இதில் இன்னொரு ஆச்சரியம் என்னவென்றால் சின்ன வயதில் இவருக்கு காது கோளாறு ஏற்பட்டு காது கேட்பதில்லை. ஆனால் பேச்சு ஓரளவுக்கு புரிந்து கொள்ளும் படியாகவே இருந்தது. பவர் பாய்ன்ட் மூலம் அவர் கொடுத்த தகவல்கள் மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது.

.நினைவுப்பரிசு 


இறுதியில் அவரிடம் கேள்விகளை நாங்கள் சிறுதாளில் எழுதிக் கேட்க அவர் அதற்கு பதிலளித்தார். அவர் சென்னையில் வாழ்கிறார், அவருடைய ஈமெயில் rajagopal57@gmail.com . அவர் தந்த தகவல்களை நானும் உங்களுடன் பகிர்கிறேன்.

1)    சிந்து வெளி அகழ்வாராய்ச்சி தான் இந்தியாவில் நடந்த முதல் ஆராய்ச்சி.
2)    எழுத்துக்கள் என்பதை ஓவியம் (sign), குறியீடு (symbol), எழுத்து (Script) என்று மூன்றாகப் பிரிக்கலாம்.
3)    பழங்கால ஓவியம் (sign) என்பது 2000 வருடங்கள் முதல் 5000 வருடங்கள் வரை பழமையானது, பொதுவாக குகைகளில் உள்ள பாறைகளில் இவை காணப்படுகின்றன (Rock Paintings). எழுத்துக்கும் குறியீடுகளுக்கும் முற்பட்ட வடிவம் தான் ஓவியம்.
4)    கொல்லிப் பாவை பற்றிய பாடல் குறுந்தொகை 89: 4-6ல் இடம்பெறுகிறது.
5)    தர்மபுரியில் உள்ள மல்லப் பாடியில் குதிரை வீரன் ஓவியம் கண்டுபிடிக்கப் பட்டது.
6)    செத்தவரை அடக்கம் செய்யப்பட்ட இடங்களில் இருக்கும் ஓவியங்கள் திருவண்ணாமலை, கீழ்வாலை, விழுப்புரத்தில் உள்ள செகநூற்பட்டி,  புதுக் கோட்டையில் உள்ள திருமயம், ஆகிய இடங்களில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.
7)    அடுத்து வருபவை குறியீடுகள். ஓவியத்துக்கு பிற்பட்ட ஆனால் எழுத்துக்கு முற்பட்ட வடிவம் இது. பொதுவாக ஈமச்சின்னங்களைக் குறிக்கத்தான் குறியீடுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
8)    சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள  கற்காலக் கருவிகள், சிந்து வெளியில் கண்டுபிடிக்கப்பட்ட அதே குறியீடுகள் ஆகியவை மயிலாடுதுறையில் உள்ள செம்பியன் என்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டது ஆச்சரியமளிக்கிறது. இதிலிருந்து அங்கிருந்து இங்கு தமிழர் இடம் பெயர்ந்திருக்கிறார்கள் என்பது உறுதியாகிறது.
9)    கொடுமணல் என்ற இடத்தில் உள்ள குறியீடுகள் 2000 ஆண்டு பழமை உடையவை. இவை சிந்துவெளிக்கும் முற்பட்ட காலத்தை உடையவை என்பதும் ஆச்சரியம்.  
10) அடுத்து வந்த எழுத்து வடிவத்தின் முதல் வெளிப்பாடு கல்வெட்டுகள்தான். தமிழக எழுத்துகள் தாமினி, பிராமி என்று வகைப் படுத்தப்பட்டுள்ளன.
11) தமிழி என்பதுதான் தாமினி என்று மருவியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
12) பிராமி கல்வெட்டுகள் சமணர் குகைகளில் ஏராளமாக காணப்படுகின்றன. மாமண்டூர், சித்தன்ன வாசல் குகைகளில் இவைகள் உள்ளன. யானை மலையில் ஈமச்சின்னங்களோடு கல்வெட்டுகளும் இருக்கின்றன.
13) சில கல்வெட்டுகளின் காலம் அரசாண்ட மன்னர்களின் காலத்தோடு பொருந்திப் போகின்றன. பாண்டியன் நெடுஞ்செழியன் 2300 ஆண்டு முன், அதியமான் 2100 ஆண்டுகள், பெருங்கடுங்கோ, இளங்கடுங்கோ 2000 ஆண்டுக்கு முன்.  கீழடி என்னுமிடத்தில் 2000 ஆண்டு பழமையான தமிழ் எழுத்துக்களோடு எகிப்து, தாய்லாந்து எழுத்துக்களும் உள்ளன என்பது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
14) பிராமிக்குப்பின் வந்த வட்டெழுத்து 800 ஆண்டுகள் பழமையானது. கிரந்த எழுத்துக்கள் என்பவை நாகரி, கன்னடம், தெலுங்கு, பாரசீகம், அரபி, ஐரோப்பிய லத்தீன் எழுத்துக்கள் ஆகியவற்றை உள்ளடக்கியது.
15) ஈரோட்டில் உள்ள அரச்சலூரில் 1700 ஆண்டுகளுக்கு முற்பட்ட  இசைக் கல்வெட்டுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
16) தமிழ்நாட்டில் கோழிச்சண்டையின் வயது 1500 வருடங்கள் என்று கல்வெட்டின் மூலம் தெரிகிறது. வீண் பொழுதுபோக்கில் நம் மறத்தமிழர் 1500 ஆண்டுகளாகவே ஈடுபட்டு வந்திருக்கின்றனர் .கோழித்தலைகள் தவிர இச்சண்டையில்  மனிதத்தலைகள் எத்தனை வீழ்ந்தனவோ ?.
17) 19ஆம் நூற்றாண்டில் வெள்ளையரான மெக்கின்சி என்பவர்தான் முதன் முதலில் சுவடிகளை சேகரித்தார். அவை சென்னை மற்றும் மைசூர் அருங்காட்சியகங்களில் உள்ளன.
18) ராஜராஜ சோழன் காலத்தில்தான் அதிகமாக கோவில்களில்  கற்றளிகள் அமைக்கப்பட்டன மற்றும் வீரமரணம் அடைந்தவர்களுக்கு நடுக்கற்கள் உருவாக்கப்பட்டன.
19) மதுரையில் உள்ள 24 பேரில் ஒருவரான சமண தீர்த்தங்கரரின் இடத்தில் வட்டெழுத்துக்கள் காணப்படுகின்றன.
20) தஞ்சை தரங்கம்பாடியில் ரகுநாத நாயக்கர் காலத்தில் வந்த கிறிஸ்தவ லுத்தரன் பாதிரிகள் தான் முதல் அச்சகத்தை உருவாக்கியுள்ளனர்.
 
தமிழ்ச்சங்க நிர்வாகிகளுடன் அடியேன் 

சரியான பண ஒதுக்கீடு இல்லாமல் மூடப்பட்ட அகழ்வாராய்ச்சிகள் ஏராளம் என்று வருத்தத்துடன் சொன்னார். ராஜகோபால் இதில் அரசுக்கோ அரசியல்வாதிகளுக்கோ  எந்த அக்கறையும் இல்லை என்பதற்கு சமீபத்தில் மூடப்பட்ட கீழடி ஆய்வு ஒரு மோசமான உதாரணம்.

சரியான விழிப்புணர்வு இல்லாத பொதுமக்களும் வரலாற்றுச் சின்னங்களான கல்வெட்டுகளில் தங்கள் பெயர்களையும் கிறுக்கி கெடுத்து விடுகின்றனர்.


வரலாற்றை போற்றிப் பாதுகாக்கும் நிலை இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் எப்போதுதான் உருவாகுமோ?
Image result for புத்தாண்டு வாழ்த்துக்கள் 2017



நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய ஆங்கிலப்புத்தாண்டு வாழ்த்துக்கள் .
தொடர்ந்து ஆதரவு தரும் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி .
என் பதிவுகளை 56 நாடுகளில் வசிக்கும் தமிழர் படிக்கிறார்கள் என்னும்போது உள்ளபடியே உவகை கொள்கிறேன் .

அடுத்த ஆண்டு சந்திக்கலாம் .

6 comments:

  1. சோழ நாட்டில் பௌத்தம் என்ற தலைப்பிலான எனது முனைவர் பட்ட ஆய்வின்போது பல நண்பர்களைப்பற்றியும், துறைசார்ந்தவர்களைப் பற்றியும் நன்கு அறிய முடிந்தது. அதனை இன்னும் பாடமாகக் கொண்டுள்ளேன். பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி முனைவரே

      Delete
  2. முனைவர் ராஜகோபால் அவர்களுக்கு வாழ்த்துகள் பல...

    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி திண்டுக்கல்லார் அவர்களே

      Delete
  3. பழமையைத் தெரிந்து கொள்ள ஒரு வாய்ப்பு.

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் மனம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி வெங்கட் நாகராஜ் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்...

      Delete