Thursday, December 22, 2016

கருணாநிதியின் கடைசிக் கடமைகள் !!!!!!!!!!!!!

Related image


தந்தை பெரியாரிடம் பிறந்து, அறிஞர் அண்ணாவிடம் வளர்ந்து கலைஞர் கருணாநிதி மூலம் தொடர்ந்தது திராவிட பாரம்பர்யம். மக்கள் எழுச்சிக்கு வித்திட்டு, அவர்களின் பேராதரவுடன் அமைந்த மத சார்பற்ற உன்னத நிலைதான் தமிழ்நாட்டை ஒரு அமைதிப் பூங்காவாக இன்று வரை காத்து வருகிறது என்பதில் சந்தேகமில்லை.

அதன்பின் சில மதக்கட்சிகள் ஆங்காங்கே எழுந்தாலும் அவை மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பைப் பெறவில்லை. சுதந்திரம் பெற்றுத் தந்த காங்கிரஸ் பேரியக்கத்தையே இந்த திராவிட சக்தி வேரோடு சாய்த்தது. பாரதிய ஜனதாக்கட்சி போன்ற மதவாத கட்சிகள் தமிழகத்தில் காலூன்ற முடியாத காரணமும் இன்னும் மக்கள் மனத்தில் அந்த சக்தி படிந்திருப்பதால்தான். ஏனென்றால் இந்துக்கள், முஸ்லீம்கள்,   கிறித்துவர்கள் என்று அனைவரும் இன்றுவரை ஆதரிப்பதால் தான்.

என்பதுகளிலும் தொண்ணூறுகளிலும் வீரியத்துடன் எழுந்த பா.ம.க போன்ற சாதிக் கட்சிகளும் மக்களை பிளவுபடுத்தி அதில் ஆதாயம் காண விளைந்தாலும் அதுவும் மக்களின் ஒற்றுமையை அசைக்கவில்லை.

அண்ணா காலத்திலும் கலைஞர் காலத்திலும் ஈவிகே சம்பத், கண்ணதாசன் ஆகியோரால் உருவெடுத்த சிறு சிறு சலப்புகள் அதனை அசைக்க முடியவில்லை.
Image result for Karunanidhi with Annadurai
Karunanidhi with Annadurai

அண்ணாவுக்குப்பின், மதியழகன், அன்பழகன், நாஞ்சில் மனோகரன்  ஆகியோரும் கருணாநிதியின் தலைமையை நிதர்சனம் அறிந்து ஏற்றுக் கொண்டு, வழிவிட்டனர். அப்போது கருணாநிதியை எம்ஜியார் பலமாக ஆதரித்ததும் ஒரு காரணம்.

திமுக இயக்கம் கருணாநிதி எம்ஜியாருக்கு இடையே எழுந்த தனிப்பட்ட கருத்து வேறுபாடுகளால் இரண்டாகப் பிரிந்தது. அண்ணா ஆரம்பித்த திமுகவை தங்கள் உயிரென மதித்தவர்களான பாரம்பர்ய திமுகக்காரர்கள் திமுகவில் தங்க, எம்ஜியார் தனது மாபெரும் ரசிகர் பட்டாளத்துடன் பிரிந்து அதிமுக வை ஆரம்பித்தார். முகராசி, பணராசி, ஏழைப் பங்காளன், சினிமா கவர்ச்சி ஆகியவை கைகொடுக்க கிராமப்புற தாய்மார்களின் ஒட்டு மொத்த ஆதரவும் அதிமுக பக்கம் சாய்ந்து திமுகவை வீழ்த்தும் அளவுக்கு ஒரு மாபெரும் சக்தியாக உருவெடுத்தது.
.
கருணாநிதியும் எம்ஜியாரும் இருவேறு அரசியல் திசைகளில் பிரிந்து நின்றாலும், பெரியார் அண்ணா ஆகியோரின் கொள்கைகளைத் தொடர்ந்து பின்பற்றி வந்தனர்.

Image result for Karunanidhi with Annadurai

எம்ஜியாருக்குப்பின் தவிர்க்க முடியாத சக்தியாக ஜெயலலிதா உருவெடுத்த போது திராவிடக் கொள்கைகள் காற்றில் பறந்தன. கொள்கைகள் இல்லாத தனிமனித துதியும் ஆராதனையும் அதிகமாகி  ஜனநாயகத்தையும் குழிதோண்டி பறித்தன. ஆனாலும் மிகப்பெரிய ஆளுமையாக, கட்டுக் கோப்புடன் கட்சியை இதுநாள் வரை கட்டிக்காத்த ஜெயலலிதாவின் மன உறுதி பாராட்டப்பட வேண்டிய ஒன்று.
Image result for MGR with Jayalalitha

இப்போது ஜெயலலிதாவும் மறைந்துவிட , எதிர்பார்த்த வண்ணமாகவே சசிகலா அடுத்த தலைவியாக உருவெடுக்கிறார். எம்ஜியார் மற்றும் ஜெயலலிதா  ஆகியோரை  தொண்டர்களும் மக்களும் அறிந்த அளவுக்கு சசிகலாவை , அவரின் குணநலன்கள், திறமை ஆகியவற்றை யாரும் முழுமையாக அறிய மாட்டார்கள். அறிந்த அளவுக்கு அவர்மேல் எதிர்மறையான காரியங்கள்தான் அதிகம் உள்ளன. தனிப்பட்ட மக்கள் செல்வாக்கு இல்லாத அதிமுகவின் அடுத்த கட்ட தலைகள் வேறு வழியின்றி சசிகலாவின் பின்னால் அணிவகுத்துள்ளார்கள். எந்தக் கொள்கைப் பிடிப்பும், இலட்சியங்களும் இல்லாத ஒரு சந்தர்ப்பவாத சுயநலக் குழுவாக இது உருவெடுத்துள்ளது.  இது தமிழகத்தின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல.

Related image

இதற்கிடையில் தனக்குக் கிடைத்த மாபெரும் மக்கள் ஆதரவை தக்க வைக்க முடியாமல், ஊழல், குடும்பச் சிக்கல்களுக்குள் அமிழ்ந்து போன திமுக இயக்கம், எம்ஜியார், ஜெயலலிதா ஆகிய இருவரையும் சமாளிக்க முடியாமல் பலவீனப்பட்டுப் போனது. ஆனாலும் பாரம்பர்ய திமுகக்காரர்கள் என்ன நடந்தாலும் உறுதியாக கலைஞர் பக்கம் நிற்க, திமுகவின் அடுத்த தலைமுறையின் தலைவராக மு.க.ஸ்டாலின் உருவெடுத்துள்ளார். கருணாநிதியின் மகன் என்ற ஒரே தகுதியில் கட்சியில் நுழைந்தாலும், கருணாநிதியைப் போல் இலக்கிய அறிவோ, பேச்சுத்திறனோ ஆளுமைத்திறனோ இல்லையென்றாலும் தன் உழைப்பினால் இந்த இடத்தை இவ்வளவு நாள் தக்க வைத்துக் கொண்டிருக்கிறார். கருணாநிதிக்குப்பின் திமுகவை கட்டிக்காக்க இவரால் மட்டுமே முடியும் என்று கட்சிக்காரர்கள் மட்டுமல்ல பொதுமக்களும் இவரை ஏற்றுக் கொண்டுவிட்டனர். இன்றைய சூழ்நிலையில் திமுக அடுத்த தேர்தலில் வெற்றி பெற்றால்  முதலைமச்சராக பதவியேற்க மக்களின் ஏகோபித்த ஆதரவு  கருணாநிதியை விட மு.க.ஸ்டாலினுக்கே அதிகம்.
இந்தச் சூழ்நிலையில் கருணாநிதி என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.

1.     தன் காலம் முடிந்துவிட்டது என்பதை அவர் மனமார ஏற்றுக் கொள்ள வேண்டும்.
2.    தான் தலைவராக இருக்கும் போதே, அடுத்த தலைவர் பொதுக்குழுவில் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். இதனால் பல குழப்பங்கள் தவிர்க்கப்படும்.
3.    மு.க.ஸ்டாலினைத் தவிர திமுகவுக்கு வேறு வழியில்லை என்பதை நன்கு உணர வேண்டும்.
4.    தனக்குப்பின் நடக்கும் குடும்பச் சண்டைகள் திமுகவை பலவீனப்படுத்தும் என்பதால் இப்பொழுதே அதனை தீர்த்துவிட வேண்டும்.
5.    முக.அழகிரிக்கு தற்சமயம் கட்சிப் பதவி கொடுத்தால் அது குழப்பத்தைத்தான் அதிகரிக்கும். அரசியல் பக்குவம், திறமை, தகுதி 
6.    மற்றும் அனுபவம் எதுவுமே இல்லாத முக அழகிரியால் திமுகவுக்கு நன்மையைவிட தீமையே அதிகம் நடக்கும். அதற்குப்பதிலாக அவரைச் சமாதானப்படுத்த அவருடைய மகனுக்கு கட்சியில் பொறுப்பு அளிக்கலாம்.
7.    கனிமொழி மற்றும் ராசாத்தி அம்மாளிடம், மு..ஸ்டாலின் தான் தலைவர் என்பதை அடித்துச் சொல்லி, கனிமொழியை ஸ்டாலினுடன்  ஒத்துப்போகச் செய்ய வேண்டும். கனிமொழி வழக்கம் போல் டெல்லியில் செயல்பட ஸ்டாலினிடம் உறுதியைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.
8.    இந்தச் சூழ்நிலையில் ஒரு தந்தையாக இல்லாமல் கட்சிதலைவராக கருணாநிதி முடிவெடுக்க வேண்டும் என்றே கட்சி தொண்டர்கள் விரும்புவார்கள்.
9.    தான் தலைவராக தொடர்ந்து இருந்து கொண்டாலும் ஸ்டாலினுக்கு முழுப்பொறுப்பு கொடுத்து அவரை வழி நடத்தலாம்.
10.  தந்தை மகனுக்குள் சண்டை போன்ற பத்திரிக்கைச் செய்திகளுக்கு சீக்கிரம் முற்றுப்புள்ளி வைக்க இது உதவும்.
11.   வாரிசுகளையோ அடுத்த கட்ட தலைவர்களையோ அறிவிக்காமல் எம்ஜியார் இருந்தபோதும், ஜெயலலிதா இறந்த போதும் எழுந்துள்ள சிக்கல்களைப் பார்த்தாவது கருணாநிதி விழித்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் அதைக்காட்டிலும் பெரிய பிரச்சனைகள் இங்கு ஏற்பட்டு கட்சி மேலும் இரண்டாக மூன்றாக உடைந்தால் அண்ணாவின் திமுக கண் முன்னாலேயே அழிந்துவிடும் அபாயம் இருக்கிறது.

இதில் எதுவும் சீக்கிரம் நடக்கவில்லையென்றால் , திராவிட இயக்கத்திற்கு அண்ணா, எம்ஜியார் சமாதி  அருகிலேயே இடம் பார்த்து விடவேண்டியதுதான் .

Image result for christmas tamil

4 comments:

  1. செய்வாரா...? செய்ய விடுவார்களா...?

    ReplyDelete
    Replies
    1. இன்னும் இரண்டு நாளில் தெரிந்துவிடும் திண்டுக்கல்லாரே , ஆமாம் நீங்கள் சசிகலாவை பார்த்தாகிவிட்டதா ?

      Delete
  2. குடும்பம் இருந்தாலும் குழப்பம். குடும்பம் இல்லாவிட்டாலும் குழப்பம். கட்சியையும் ஆட்சியையும் காப்பது மிகவும் தொல்லை பிடித்த வேலைதான்.
    --
    Jayakumar

    ReplyDelete
    Replies
    1. ஜெயக்குமார் , மனைவி இருந்தால் பரவாயில்லை .மனைவிகள் இருப்பதால்தான் தொல்லை .

      Delete