(நியூயார்க் தமிழ்ச்சங்கத்தின் தீபாவளி மலரில் வெளி வந்த அடியேனின் கட்டுரை )
Veeramamunivar |
1968 –ம் ஆண்டு ஜனவரி
முதல் வாரத்தில், உலகத் தமிழ் மாநாடு சிறப்பாக நடந்தேறும் சமயம். முதலமைச்சர்
அறிஞர் அண்ணாதுரை அவர்கள் தமிழ் மொழிக்காக தொண்டாற்றிய பெருமகனார்களின் சிலைகளை அழகிய
மெரீனா கடற்கரையில் நிறுவ முடிவு செய்தார். ஐயன் திருவள்ளுவர், ஔவையார், கம்பர்.
பாரதியார், பாரதிதாசன் ஆகிய பெருந்தமிழ் அறிஞர்களோடு “வீரமாமுனிவர்” என்பவர்
சிலையும் நிறுவப்பட்டது. இவை வரலாற்று ஆவணங்களாக இன்றும் திகழ்ந்து வருகின்றன.
Add caption |
வீரமாமுனிவர் இத்தாலியில் பிறந்தவர் என்று கேள்விப்பட்டதும், ஒரு வெள்ளைக்கார
ஐரோப்பியர் அப்படியென்ன தமிழுக்கு பெரிதாக தொண்டாற்றி விட்டார்? என்று நினைத்து அவரைப்பற்றி அறிய முனைந்தபோது
உள்ளபடியே ஆச்சர்யப்படுத்தும் தகவல்கள் ஏராளமாகக் கிடைத்தன. அவற்றுள் சிலவற்றை
இங்கு தொகுத்துத் தருகிறேன்.
முதலில் வெள்ளைக்காரருக்கு எப்படி “வீரமாமுனிவர்” என்ற பெயர் வந்தது என்ற
சுவாரஸ்ய தகவலைப் பார்ப்போம்.
பதினெட்டாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், கிறித்தவக் கொள்கைகளைப் பரப்புவதற்காக
கோவா (Goa) வழியாக மதுரை வந்தார் “கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி”.
இத்தாலிய நாட்டு கத்தோலிக்கப் பாதிரியரான இவர், மதுரை வந்து சேர்ந்தது கி பி 1711-ல். தேமதுரத் தமிழோசை காதில் விழுந்தவுடனே, அதனால்
பெரிதும் ஈர்க்கப்பட்டு, பல ஊர்களுக்குச் சென்று தமிழ் கற்க ஆரம்பித்தார். தமிழை
முழுவதும் கற்றது சுப்பிரதீபக் கவிராயர் என்பவரிடம்தான். இலக்கணம், இலக்கியம்,
அகராதி என்று தமிழை ஆழமாகக் கற்றுத் தேர்ந்தார். தமிழில் இலக்கியச் சொற்பொழிவு
நடத்தும் அளவுக்கு தமிழைக் கற்றுக்கொண்டார். தம் பெயர் தமிழில் இருக்க வேண்டுமென்று
நினைத்து தம் இயற்பெயரை சிறிதே
மொழிபெயர்த்து, அதனை “தைரிய நாத சாமி” என்று அழைத்தார். பின்னர் அதுவும் வடமொழி என்று அறிந்து “வீரமாமுனிவர்”
என்று சுத்தமான தமிழில் மாற்றிக்கொண்டார். இதிலிருந்தே தமிழ் மீது அவருக்கிருந்த
ஈர்ப்பை உணர்ந்துகொள்ளலாம். மதுரையில் இருந்த தமிழ்ச் சங்க அறிஞர்கள் ‘தேம்பாவணி’
யைப் பாராட்டி இந்தப் பட்டம் கொடுத்தனர் என்றும் சிலர் சொல்கிறார்கள்.
அது தவிர இன்னும் பல பெயர்களால் அவர் அழைக்கப்பட்டார். இவருக்கு தெருட்குரு
(தெருள் குரு) என்ற பட்டப்
பெயர் இருந்தது. தெருள் என்றால் சீரிய அறிவு என்று பொருள். சுவடிகளைத் தேடி
அலைந்ததால், “சுவடி தேடிய சாமி” என்றும், ஆற்காடு நவாப் சந்தா சாகிப் வழங்கிய ‘இஸ்மத் சந்நியாசி’ (தூய
முனிவர்) என்ற பட்டம், பூக்கள் மேல் கொண்ட ஈடுபாட்டால் “மலர்களின் தந்தை” என்ற பெயர் மற்றும் ‘வீர ஆரிய வேதியன்’, ‘திருமதுரைச் செந்தமிழ் தேசிகர்’ போன்ற பெயர்களாலும் அறியப்பட்டார்.
இவர் தமிழில் செய்த புரட்சிகளைச் சொல்லிவிட்டு இறுதியாக அவர் எழுதிய
புத்தகங்களுடன் முடிக்கிறேன்.
Chanda Sahib |
அவர் காலத்தில் உயிரெழுத்துக்களான ‘அ, எ,’ என்ற எழுத்துக்களின் நெடிலை எழுத, அதனுடன் ‘ர’ என்ற எழுத்தைப் பயன்படுத்தினராம். எனவே நெடிலில், அர, எர, என்று
எழுதியுள்ளனர். அவற்றில் மாற்றம் செய்து அ என்பதின் நெடிலை ஆ என்று எழுதலாம்
என்றும், ‘எ’ என்பதின் நெடிலை
எ வின் மீது சுழி அமைத்து, பிறகு ஏ என்று கொண்டுவந்தவர் இவரே. அதுபோல ஒ வின்
நெடிலை ஓ என்று அமைத்தவரும் அவரே.
அதுபோலவே, உயிர்மெய் எழுத்துக்களில் நெடிலைக் குறிக்க கொம்புக்கு மேலே சுழி
அமைத்தவரும் இவரே. உதாரணமாக தேன்-ஐக் குறிக்கவும், தென் பகுதியைக் குறிக்கவும் ‘தென்’
என்றே இருந்தது. அதனைத் தேன் என்று மேலே சுழியமைத்து வேறுபடுத்தியதும் இவரே.
இப்போது யோசித்துப்பார்த்தால், எவ்வளவு குழப்பமான ஒரு எழுத்து முறையிலிருந்து எழுத்துக்களைச் சீரமைத்து வெள்ளைக்காரர் ஒருவர் வித்தியாசம்
காட்டியிருக்கிறார் என்று நினைக்கும்போது ஆச்சர்யமாய் இருக்கிறது.
அதோடு வெறும் செய்யுள் முறை மட்டுமே தமிழில் வழங்கி வந்ததை மாற்றி
முதன்முதலில் நிறைய உரைநடைகளை அறிமுகப்படுத்தியதும் இவரே.
நம் நாட்டுக்கு வந்தது முதல், உடை, உணவு என்று எல்லா நடைமுறைகளிலும் நம்முடைய
தமிழ்ப் பாரம்பரியத்தையே பின்பற்றி வாழ்ந்தார். தான் துறவறம் கொண்ட முனிவர்
என்பதைத் தெரிவிக்கும் விதத்தில் காவி உடையை மட்டுமே அணிந்தாராம். இவர் சைவ உணவை
மட்டுமே அதுவும் ஒருவேளை மட்டுமே உண்டார் என்றும் சொல்கிறார்கள்.
இவர் எழுதிய 23 நூல்களில், “தேம்பாவணி” தலையாயது. தேம்பாவணி
என்னும் காப்பியம் இயேசு கிறிஸ்துவின் வரலாற்றைச் சொல்லும் ஒரு இலக்கிய நூல், இது மூன்று
காண்டங்களில், முப்பத்தாறு படலங்களை அடக்கி, மொத்தம் 3615 விருத்தப்
பாக்களை 90 சந்த வகைகளுடன் பாடப்பெற்றது.
தமிழர் அல்லாத ஒருவர் இயற்றிய ஒரே தமிழ்க் காப்பியம் “தேம்பாவணி” மட்டுமே ஆகும். இந்தக்
காவியத்தில் ‘ஜோசப்’ என்ற பெயரை ‘வளன்’ என்று
மாற்றியதோடு, அனைத்து வரலாற்று நாயகர்களுக்கும் தமிழ்ப் பெயரே சூட்டியுள்ளார்.
அதனைத்தவிர தொன்னூல் விளக்கம், வேத விளக்கம், வேதியர் ஒழுக்கம், ஞானக்
கண்ணாடி, செந்தமிழ் இலக்கணம், வாமன் கதை, திருக்காவல் ஊர்க் கலம்பகம், கித்தேரி
அம்மன் அம்மானை, பரமார்த்த குருவின் கதை என்று பல நூல்களை எழுதியுள்ளார்.
இதில் ‘பரமார்த்த குருவின் கதை’ என்பது, “ஜீன் டி பான்டைன்” (Jean de Fantaine) என்ற பிரெஞ்சு
எழுத்தாளர் எழுதிய கதையின் தமிழாக்கம் ஆகும் என்றாலும் தமிழில் வந்த முதல்
நகைச்சுவை எழுது இதுவே ஆகும்.
அதோடு தமிழில், பேச்சுத் தமிழும், எழுத்துத் தமிழும் முற்றிலும் வேறுபட்டு
இருப்பதால், பேச்சுத் தமிழை விவரித்து, “கொடுந்தமிழ் இலக்கணம்” ஒன்றையும்
எழுதியுள்ளார்.
1000 சொற்கள் கொண்ட தமிழ்-இலத்தீன்
அகராதியும், 4000 தமிழ்ச் சொற்கள் கொண்ட தமிழ்-போர்த்துக்கீசிய அகராதியையும் அமைத்து முதன் முதலில்
தமிழகராதி அமைத்தவர் என்ற பெருமையும் பெற்றிருக்கிறார்.
இவைகள் தவிர, திருக்குறள், தேவாரம், திருப்புகழ், நன்னூல், ஆத்திசூடி, ஆகிய பல
தமிழ் நூல்களை ஐரோப்பிய மொழிகளில் மொழிபெயர்த்திருக்கிறார். இவற்றுள்
திருக்குறளில் அறத்துப்பாலையும் பொருட்பாலையும் மட்டுமே மொழிபெயர்த்து தாம்
சம்சாரம் துறந்த நல்ல முனிவர் என்பதையும் நிரூபித்திருக்கிறார் என்பது கூடுதல்
செய்தி. முனிவர் அவர்கள், 1747-ஆம் ஆண்டு பெப்ரவரியில் தமது அறுபத்தேழாம் வயதில் கேரளக்கரையில் காலமானார். ஆனால் தமிழ்
உள்ளவரை, தமிழுக்குத் தகைசால் தொண்டு புரிந்த வீரமாமுனிவரும்
வாழ்வார் என்பதில் சந்தேகமில்லை.
செம்மொழியாம் நம் தமிழ் மொழி, தொன்மைக் காலத்திலிருந்து இந்தக் காலம்வரை
பிறநாட்டவரை என்றும் கவரும் கன்னித் தமிழ்தான் என்பது நமக்கெல்லாம் பெருமைதானே.
கார்த்திரள்
மறையாக் கடலிலுண் மூழ்காக்
கடையிலா தொளிர்
பரஞ் சுடரே
நீர்த்திரள்
சுருட்டி மாறலை யின்றி
நிலைபெறுஞ் செல்வ
நற் கடலே
போர்த்திறள்
பொருதக் கதுவிடா வரனே
பூவனந் தாங்கிய
பொறையே
சூர்த்திறள்
பயக்கு நோய்த்திறள் துடைத்துத்
துகடுடைத் துயிர்
தரு மமுதே!
- தேம்பாவணி
தமிழ் பாட நூல் அளவிற்கு ெ தாகுத்து அளி்த்துள்ளீர். நன்று.
ReplyDeleteதமிழ்ச் சங்கத்திற்கு எழுதியதால் மசாலா எதுவும் இல்லாமல் பாடம் போல் அமைந்துவிட்டது போலும் .
Deleteஆய்வுக்கட்டுரையைப் படித்ததுபோல இருந்தது. வாழ்த்துகள்.
ReplyDeleteஆய்வுக்கட்டுரையா ? அய்யகோ அப்ப படிக்க சுவாரஷ்யமாக இல்லை என்று கூறுங்கள்
Deleteமாமனிதர்.... நன்றி...
ReplyDeleteஉண்ம மாமனிதர் தான்.
Deleteவீரமாமுனிவரின் மற்ற தமிழ்ச் சேவைகளெல்லாம் அறிவேன். ஆனால் தமிழ் எழுத்து முறைகளில் இத்தனை சீர்திருத்தங்களை அவர் செய்திருக்கிறார் என்பது தெரியாது. அரிய தகவல்கள்! மிக்க நன்றி!
ReplyDeleteமிக்க நன்றி ஞானா.
Deleteநெடிதுயர்ந்த கட்டுரை. வாழ்த்துக்கள்.
ReplyDeleteநன்றி நிமித்திகன் , ஆனால் நான் சுருக்கமாய் எழுதியுள்ளதாக நினைத்தேன்
Deleteமிக மிகத் தெளிவான கட்டுரை. பாடப்புத்தகம் போல் இருக்கிறது! வாழ்த்துகள்!
ReplyDeleteபாடங்களை நாம் படிப்பதில்லையே தில்லையாரே ,ஒரு வேளை இப்போதெல்லாம் மாறிப்போச்சோ
Deleteஅருமை இதுவரை அறியாத தகவல்
ReplyDeleteநன்றி
நன்றி நாச்சியப்பன்
Deleteபல நல்ல புதிய தகவல்கள். பகிர்வுக்கு நன்றி.
ReplyDeleteஅன்று ஆங்கிலேயன் தமிழ்ப்பெயர் சூட்டிக் கொண்டு தமிழை சுத்தம் செய்தான். இன்று ..?
என்ன பாஸ்கர் என் பெயரை சொல்லிக்காட்டுவது போல் இருக்கே ?
Delete