ஃபெட்னா தமிழர் திருவிழா 2016 பகுதி 12
TM Krishna |
முதல்
நாள் இரவின் இறுதி நிகழ்ச்சியாக TM கிருஷ்ணா
அவர்களின் கர்நாடக இசைக்கச்சேரி நடந்தது. அரங்கு நிறையவில்லை என்றாலும்
என்னைப்போன்ற பல இசை ரசிகர்கள் அங்கே மிகுந்த எதிர்பார்ப்புடன் கூடியிருந்தோம்.
எங்கள் எதிர்பார்ப்பை ஏமாற்றாமல் அருமையான இசைக்கச்சேரியை நடத்தினார். செம்மங்குடி
சீனிவாசங்கய்யரின் சீடர் என்றால் சும்மாவா.
அதுமட்டுமல்ல
TM
கிருஷ்ணா ஒரு வித்தியாசமான புரட்சிவாதி. முற்றிலும் வேறான
சிந்தனை கொண்டவர். உலக முழுதும் 2000 கச்சேரிகள்
பண்ணியிருந்தாலும் தலை தோளில் இருக்கும் வெகு சிலரில் இவரும் ஒருவர். அவர் பாடிய
பாடல்களில் "மாயா மணிவண்ணா",” சுட்டும்
விழிச்சுடர்தான்", ஆகியவை என்னை மிகவும் கவர்ந்தன.
விழா
முடிந்து ஓரிரு நாட்களில் அவருக்கு மகசேசே விருதும் கிடைத்தது .(நான்தான் அந்த விருதை
வாங்கிக்கொடுத்தேன் என்று சிலர் நினைப்பது
உண்மையில்லை ஹி ஹி )
வந்திருந்த
சிறப்பு அழைப்பாளர்களுள் பேராசிரியர் மு.ராமசாமியும் ஒருவர். மனோன்மணியம்
சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக இருக்கும் இவர் எனக்கு மிகவும்
நெருங்கிய கனவைத் தொலைத்தவர்களுள் ஒருவர். என்ன ஒன்றும் புரியவில்லையா?
நான் அமெரிக்கன் கல்லூரியில் படிக்கும்போது சில நண்பர்களோடு
இணைந்து ஒரு கவிதைத் தொகுப்பை வெளியிட்டேன். என்னைத்தவிர, அதில் பேராசிரியர் பிரபாகர், இயக்குனர்
முத்துராமலிங்கன், கவிஞர் மகுடி தவிர தீர்க்க வாசகன்
என்பவர்கள் எழுதியிருந்தனர். தீர்க்கவாசகன் என்ற புனைபெயரில் எழுதியவர்தான்
பேராசிரியர் மு.ராமசாமி. எனக்கும் வேறு ஒரு புனைபெயர் இருந்தது அது 'பாணன்' என்பது. சில விறலியர் மீது பற்றுக்
கொண்டதால் அப்போது பாணன் என்று என்னை அழைத்துக் கொண்டேன். விரலிகளின் குறளி
வித்தையில் பாணன் வீணன் ஆகிவிடக் கூடாதென்று அந்தப் பெயரை விட்டுத்தள்ளிவிட்டு
வெளிநாடு வந்ததால் 'பரதேசி' ஆயிப்போனேன்.
அந்தக் கவிதைத் தொகுப்பின் பெயர்"கனவைத் தொலைத்தவர்கள்" என்பது. இப்போது
புரிகிறதா நான் ஏன் அப்படிச் சொன்னேன் என்பது? அதில்
கவிதைகள் புனைந்த எல்லோரும் தங்கள் தொலைத்த கனவுகளை மீட்டெடுத்து விட்டனர்
என்னைத்தவிர என்று நினைக்கிறேன்.
With Ramasamy |
பல
ஆண்டுகளுக்குப் பிறகு நேரில் பார்க்கிறேன், சில வருடங்களுக்கு முன்னால் முகநூலில் சந்தித்தோம். முகநூலில் தொடர்ந்து
எழுதிவரும் ராமசாமி ஒரு இரண்டு வருடங்கள் வார்சா பல்கலைக்கழகத்தில் தமிழ்
பயிற்றுவித்தார். ஐரோப்பிய மாணவர்கள் தமிழ் கற்றுக் கொள்ள எவ்வளவு ஆர்வமாக
இருக்கிறார்கள் என்பதை தன் சொற்பொழிவில் விளக்கியது ஆச்சரியமாக இருந்தது. ராமசாமி
அவர்கள் கலந்து கொண்ட தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழா கடைசி நாள் நடந்தது. சில
தவிர்க்க முடியாத காரணத்தால் அதில் என்னால் கலந்து கொள்ள முடியவில்லை. மன்னித்துக்
கொள்ளுங்கள் ராமசாமி. பாஸ்டனில் உங்கள் பையன் இருப்பதால் நீங்கள் அடிக்கடி
வருவீர்கள் என்பதால் நாம் மீண்டும் நியூயார்க்கில் சந்திக்கலாம். ராமசாமி பல
புத்தகங்கள் எழுதி வெளியிட்டு இருக்கிறார் .அவரைப்பற்றி மேலும் அறிய இங்கே சுட்டவும்
. http://ramasamywritings.blogspot.com/
Sangangalin sangamam |
இரண்டாவது
நாள் மாலையில் "சங்கங்களின் சங்கமம்" என்ற நிகழ்ச்சி நடந்தது.
இப்படியொரு கொண்டாட்டத்தை இதுவரையில் நான் அமெரிக்காவில் பார்த்ததில்லை.
அரங்கத்தின் வெளியே வந்திருந்த அனைத்துத் தமிழ்ச் சங்கங்களும் தங்கள் தங்கள்
பேனர்களை பிடித்துக் கொண்டு ஒவ்வொரு குழுவாக ஊர்வலமாக வந்தனர். அரங்கின் முன்னால்
இருந்த மேடையில் ஏறி சுற்றி வந்து இறங்கி கீழே உள்ளே சதுக்கத்தில் பிரிவுகளாக
நின்றனர்.
முகப்பின்
முன் இருந்த DJ ஒவ்வொரு சங்கம் வரும்போதும் கட்டியம் கூறி அவர்களுக்கு ஏற்ற அல்லது
சார்ந்த பாடல்களை ஒலி பரப்பினார். தாரை தப்பட்டைகள் ஒலிக்க உற்சாகமாக ஆட்டபாட்டத்துடன் அரங்கேறியது சங்கங்களின் சங்கமம்
நிகழ்ச்சி. நான் சார்ந்த நியூயார்க் தமிழ்ச் சங்கமும் பெருமையுடன் வந்த போது,
அதன் கருத்துப்பாடலான "நிலைபெறும் தமிழ் அங்கமே, எங்கள் நியூயார்க்கின் தமிழ்ச் சங்கமே" என்ற பாடல் இசைக்கப்பட்டது. இது
அந்தக் காலத்திலேயே கண்ணதாசன் எழுதி சீர்காழி கோவிந்தராஜன் பாடிய பாடல்.
அந்தப்பாட்டுக்கும் மீறி பறைகளின் சத்தம் ஒலிக்க நியூயார்க் தமிழ்ச் சங்கத் தலைவர்
விஜயகுமார் உட்பட பலரும் முற்றத்தில் தன்னை மறந்த நிலையில் ஆட்டம் போட்டனர்.
ஒவ்வொரு குழு வரும் போதும், 2016 ஃபெட்னா விழாவை நடத்திய
நியூஜெர்சி தமிழ்ச்சங்கத்தின் தலைவி உஷா
மற்றும் கவிதா ராமசாமி வரவேற்றனர். சில பல சமயங்களில் கவிதா ராமசாமியும் சேர்ந்து
ஆடி மகிழ்ந்தார்.
போலீஸ்
பாதுகாவலுடன் (ஒரே ஒரு போலீஸ் என்றாலும்) நடைபெற்ற இந்த நிகழ்ச்சி மாலை நேரத்தை
மகிழ்ச்சியாக்கியதோடு அந்த ஏரியா முழுவதையும் வண்ண மயமாக்கியது.
அது
முடிந்தபின் இரவு உணவு முடிந்து எல்லோரும் உள்ளே போய் முண்டியடித்து
உட்கார்ந்தனர். அங்கு ஃபெட்னா விழாவுக்கு உதவிய, உழைத்த பல பேருக்கு மரியாதை
செய்யப்பட்டது. இதற்காகவா நம் மக்கள் அடித்துப் பிடித்து வந்தனர் என்று ஆச்சரியப்பட்டபோது அதற்கில்லை அதன்பின்
நடக்கப்போகும் சூப்பர் சிங்கர் இசை நிகழ்ச்சிக்காகத்தான் என்பது பின்னர்
விளங்கியது.
இவர்கள்
எல்லாரும் இங்கேதான் இருந்தார்களா என்று
நினைக்குமளவுக்கு அரங்கு கீழே, மேலே என்று முதல்முறையாக
முற்றிலும் நிறைந்திருந்தது.
Vijay Prakash |
பிரபல
பின்னனிப் பாடகர் விஜய்பிரகாஷ், ஜெசிக்கா,
ஹரிப்பிரியா பழைய சீசனைச் சார்ந்த நியூஜெர்சியில் வாழும் சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஜெசிக்கா
வந்து "அமுதே தமிழே அழகிய மொழியே" என்று உருகிப் பாடிய தமிழிசைப்
பாடலோடு கச்சேரி களைகட்டியது. ஹரிபிரியாவும்
இணைந்து பாடினார். இருவர் குரலும் நன்கு பண் பட்டிருந்தது. அடுத்து விஜய் பிரகாஷ்
வந்து" என் இதயம்" என்ற பாடலைப் பாடி எல்லோருடைய இதயங்களையும் கவர்ந்து
கொண்டார். விஜய் பிரகாஷ் அவர் பாடிய "ஓம் சிவோகம்",
"இன்னும் கொஞ்ச
நேரம்", எந்திரன் படத்தின் "காதல்
அணுக்கள்" போன்ற பல பாடல்கள் தவிர "என் இனிய பொன் நிலாவே போன்ற சில பழைய
பாடல்களையும் பாடினார். "பாட்டுப்
பாடவா", பாடலை அரங்கில் உட்கார்ந்திருந்த ஆடியன்ஸை இருபிரிவாக பிரித்து பாட
வைத்தது வந்திருந்த அனைவரையும் உற்சாகப் படுத்தியது. ஜெசிக்கா பாடிய "பால் போலவே",
"கவிதைகேளுங்கள்" ஆகியவை சிறப்பாக இருந்தன. குறிப்பாக
இசைக்குழுவும் சவுண்ட் சிஷ்டமும் மிகவும் தரத்துடன் இருந்ததால் ஃபெட்னாவின்
முத்தாய்ப்பான பொழுதுபோக்காக இந்நிகழ்ச்சி அமைந்தது.
மொத்தத்தில்
விழா அமைப்பு, அரங்கு, தங்குமிடங்கள், தரமான நிகழ்ச்சிகள், சாப்பாடு என மொத்தத்தில்
மிகப்பிரம்மாண்டமான ஃபெட்னாவின், 29வது திருவிழாவை நாஞ்சில் பீட்டர் அவர்களும்,
நியூஜெர்சி தமிழ்ச் சங்கமும் இணைந்து வெற்றிகரமாக
நடத்தியிருக்கிறார்கள். அனைவருக்கும் எனது நன்றிகளும், பாராட்டுகளும்.
அடுத்து வருடம் ஃபெட்னாவின்
30வது தமிழர் திருவிழா நடக்கும் மினசோட்டாவில் சந்திக்கலாம் . நன்றி வணக்கம்.
Add caption |
தமிழர் விழா
பதிவுகள் நிறைவடைந்தன.
No comments:
Post a Comment