Wednesday, April 6, 2016

ரஜினிகாந்தின் துள்ளல் பாடல் !!!!!!!!!!!


எழுபதுகளில் இளையராஜா பாடல் எண் 30 
நதியோரம் நாணல் ஒன்று.

ரஜினிகாந்த் நடித்த, “அன்னை ஓர் ஆலயம்”, என்ற படத்தில் வரும், ,இளையராஜா இசையமைத்து வெளி வந்த சூப்பர் ஹிட் பாடல் இது. பாடலைக் கேளுங்கள்.

பாடலின் சூழல்:
இயற்கைச் சூழ்நிலையில் காதலனும் காதலியும் ஆடிப்பாடி மகிழும் நேரம் பாடும் பாடலிது.
இசையமைப்பு:
Ilayaraja Rajini

ரஜினிகாந்துக்கு ஆரம்ப கட்டங்களில் சிறப்பாக அமைந்த துள்ளல் பாடல் இது. இளையராஜாவின் மெட்டமைப்பும் இசைக்கருவிகளைக் கையாளும் விதமும் அருமை. வேகமான ஆடற்பாடல் என்றாலும் இதிலுள்ள மெலடி மிகவும் இனிமையானது. எந்த முன் இசையும் இல்லாமல், முன் அறிவிப்போ, பீடிகையோ இல்லாமல் பெண்குரலில் "நதியோரம்" என பாடல் ஆரம்பிக்க, அதன் பின்னர் தபேலா மற்றும் மற்ற கருவிகள் சேர்ந்து கொள்கின்றன. வீணைக்குழுமம், புல்லாங்குழல் மற்றும் கிடார் ஏற்ற இடங்களில் பயன்படுத்தப்பட்டு பாடலை முழுமையாக்குகின்றன.
பாடல் வரிகள்:
நதியோரம் நாணல் ஒன்று நாணம் கொண்டு
நாட்டியம் ஆடுது மெல்ல - நான்
அந்த ஆனந்தம் என் சொல்ல

நதியோரம் நீயும் ஒரு நாணல் என்று
நூலிடை என்னிடம் சொல்ல - நான்
அந்த ஆனந்தம் என் சொல்ல
( நதியோரம் )
வெண்ணிற மேகம் வான்தொட்டிலை விட்டு
ஓடுவதென்ன மலையை மூடுவதென்ன
முகில்தானோ துகில்தானோ
சந்தனக் காடிருக்கு தேன் சிந்திட கூடிருக்கு
தேன் வேண்டுமா நான் வேண்டுமா
நீ எனைக் கைகளில் அள்ள - நான்
அந்த ஆனந்தம் என் சொல்ல
( நதியோரம் )

தேயிலைத் தோட்டம் நீ தேவதையாட்டம்
துள்ளுவதென்ன நெஞ்சை அள்ளுவதென்ன
பனி தூங்கும் பசும்புல்லே
மின்னுது உன்னாட்டம்
நல்ல முத்திரைப் பொன்னாட்டம்
கார்காலத்தில் ஊர்கோலத்தில்
காதலன் காதலி செல்ல - நான்
அந்த ஆனந்தம் என் சொல்ல
( நதியோரம் )
Add caption
பாடல் வரிகளை எழுதியவர் கவியரசர் கண்ணதாசன் அவர்கள். இயற்கை சூழல் வேண்டும் என்று இயக்குநர் சொன்னதாலோ என்னவோ, முழுவதுமாக காதலன் காதலி வர்ணணையை விட, இயற்கை வர்ணணையே அதிகமாகவே இருக்கிறது. பெண்ணை நாணல் என்று வர்ணிப்பதை நான் எங்கும் கேள்விப் பட்டதில்லை. பல்லவியில்
"நதியோரம் நாணல் ஒன்று நாணம் கொண்டு நாட்டியம் ஆடுது மெல்ல" - என்று காதலி தன்னை "நாணம் கொண்ட நாணல்" என்று சொல்ல, அதற்கு காதலன், "ஆம் ஆம் நீ நாணல் தான், ஏனென்றால் உன் நூலிடை என்னிடம் அப்படித்தான் சொல்கிறது", என்று ஒத்துக்கொள்கிறான். அதே போல் கண்ணதாசனின் ஒவ்வொரு வரிகளிலும் கவித்துவம் சொட்டுகிறது. முதல் சரணம், “வான் தொட்டிலை விட்டு வெளிவந்த வெண்மேகம், மலையை மூட, முகில் தானோ துகில்தானோ? என்று கேட்கிறார். இதில் வெளிப்படையான அர்த்தம் தவிர வேறு அர்த்தம் ஒலிக்கிறதா என்ற ஆராய்ச்சிக்கு நான் போக விரும்பவில்லை. அடுத்த வரிகளில், “சந்தனக் காட்டில் தேன் கூடு இருக்கிறது, ஆனால் தேன் வேண்டுமா? இல்லை நான் வேண்டுமா?”, என்று காதலி கேட்பது ரசமான காரியம்.
இரண்டாவது பல்லவியில், “பனி தூங்கும் பசும்புல் உன்னைப் போல நல்ல முத்திரைப் பொன்னாட்டம் மின்னுகிறது”, என்று சொல்லி இயற்கையோடு இணைத்து காதலியை வர்ணிக்கிறார். கண்ணதாசனிடம் காதல் எப்போதும் நிரம்பி வழிந்தது என்பதை இந்தப் பாடல் மீண்டும் ஊர்ஜிதப் படுத்துகிறது.
குரல்கள்:

பாடலைப் பாடியவர்கள் SPB மற்றும் சுசிலா. இளையாராஜா SPB  நட்பு  என்பது  எப்போதும் இணைபிரியா நட்பு. வெறும் நட்புக்காக மட்டுமல்ல, அவரின் திறமைக்காகவும், குரல் வளத்திற்காகவும் குரல் பொருத்தத்திற்காகவும் இளையராஜா அதிக பாடல்களை SPB-க்குக் கொடுத்தார். அவ்வப்போது சுசிலாவும் பாடியுள்ளார்கள். கூர்ந்து கவனித்தீர்கள் என்றால், சுசிலாவின் பழைய பாடல்களில் ஒலிக்கும் குரலல்ல இது. இளையராஜாவிடம் சுசிலா பாடிய எல்லாப் பாடல்களையும் கேட்டால் இது புரியும். ராஜாவின் பாடல்களில் சுசிலாவின் குரல் அவரின் பழைய பாடல்களை விட மிக இளமையாக ஒலிக்கிறது. இது இளையராஜாவின் முயற்சியா, சுசிலாவின் திறமையா இல்லை மாறுபட்ட ஸ்ருதியா  என்று தெரியவில்லை.
கேவி மகாதேவன், சங்கர் கணேஷ் என்று பயன்படுத்திய தேவர் இந்தப்படத்தில் இளையராஜாவைப் போட்டது, அந்தக் கால கட்டத்தில் இளையராஜா தவிர்க்கமுடியாத சக்தியாக எழுந்ததைக் காண்பிக்கிறது.

மீண்டும் அடுத்த பாடலில் சந்திக்கலாம். 

10 comments:

  1. நண்பர் ஆல்ஃபி,

    எம் எஸ் வி போன்றவர்களுக்கு பாடியபோது சுசீலாவின் குரலில் இருந்த இனிமை இராவிடம் பாடியபோது இல்லை என்றே தோன்றுகிறது. நீங்கள் சொல்வதுபோல வேறுவிதமாக இருந்தது.

    இன்னொரு செய்தி. தேவர் படங்களுக்கு கேவி மகாதேவன் தான் ஆஸ்தான இசையமைப்பாளர். கே வி விட்டு ஒரு முறை தேவர் எம் எஸ் வி இடம் வந்தபோது அவரது தாயார் எம் எஸ் வியை கடுமையாகச் சாடி இன்னொருவர் வாய்ப்பை பறிக்காதே என்று உபதேசம் செய்து (கன்னத்தில் அறைந்ததாகக் கூட படித்திருக்கிறேன்) குருவின் இடத்தில் இருக்கும் கே வியை எதிர்த்தா நீ போட்டி போடுவது என்று சொல்லி அந்த வாய்ப்பை நிராகரித்ததாக ஒரு தகவல் உண்டு. அதனால்தான் தேவர் எம் எஸ் வி இடம் பணிபுரிந்து வந்த சங்கர் கணேஷ் இரட்டையர்களை அறிமுகம் செய்தார்.

    பின்னாட்களில் அவர்களையும் விட்டுவிட்டு இரா பக்கம் வந்தார்கள் தேவர் குழுவினர். பின்னர் பப்பி லஹரி என்று சென்றார்கள். தேவர் படங்களுக்கு எம் எஸ் வி இசை அமைத்ததேயில்லை. ஒரு தகவலாகத்தான் இதை சொல்கிறேன். தவறாக எண்ணவேண்டாம்.

    ReplyDelete
    Replies
    1. நண்பர் காரிகன், தவறைச்சுட்டிக்காடியதற்கு மிகவும் நன்றி.திருத்திவிட்டேன் .

      Delete
  2. அருமையான பிடித்த பாடல்.

    ReplyDelete
  3. எனக்கும் மிகவும் பிடித்த பாடல், ஆடலின் இனிமைக்கு திருஷ்டிப் பரிகாரம் காட்சி அமைப்பு! பாடகர்களின் குரல் வயதாக ஆகா ஒவ்வொரு விதமாக மாறிக் கொண்டுதான் வரும். அதனால் இருக்கலாம். பி சுசீலாம்மா இதே பாடலை இப்போது பாடினால் கேட்க முடியாது!

    :)))

    ReplyDelete
    Replies
    1. Annai oor alayam and anbukku naan adimai were hits mainly because of IR music, I would say. Ranga songs were not good because Dever films went back to sangar ganesh? The movie did not do well either whenyou compare that with earlier hits. Later Rajini did another movie with dever films which was dharmathin thalaivan. Again the songs were hit because of IR. It was the time IR's ego was on peak and he kind of "forced" people to put "isai ngani" in titles! Well

      Delete
    2. நன்றி ஸ்ரீராம் &வருண்
      Ilayaraja was the reason for so many hit movies at that time.But "Isai Gnani" is bit too much.

      Delete
  4. Lyrics by Vaali and not Kannadasan.
    Please do not post wrong information

    ReplyDelete
    Replies
    1. Dear Rajesh,
      Pls send me the link where you found that it is written by Vaali and then I will change it.

      Delete
  5. நண்பர் காரிகன் திருமதி சுசீலா அவர்கள் MSV, KV மகாதேவன் ஆகியோர் இசையில் பாடிய பாடல் ஆழ்ந்து கேட்டதில்லை போலும்.
    நண்பர் இன்னும் நிறைய பழைய சுசீலா அம்மாவின் பாடலை கூர்ந்து கவனித்து பின்னர் அந்த இருந்த இனிமியும் இந்த பாடலிலும் இருந்ததா என்பதை கணிக்கட்டும்.

    இந்த கருத்து இசைஞானியின் மதிப்பை எவ்விதத்திலும் குறைப்பதாகாது.

    தமிழ் திரையுலக ஜாம்பவான்களில் அவரும் ஒருவர்

    ReplyDelete