Monday, April 25, 2016

பேரரசரின் நுழைவாயிலில் மாட்டிக்கொண்ட பரதேசி !!!!!!!

சீனாவில் பரதேசி -8

மிகப்பெரிய மைதானத்தை தாண்டினால் ஐந்து பெரிய வாயில்கள் இருந்தன. மாபெரும் சுவர்களைக் கொண்டு மிக உயரமாக இருந்தன. கண்மூடித்திறப்பதற்குள் சம்மர்’, அதாங்க அந்த வழிகாட்டிப் பெண்ணின் பெயர், எந்த வழியில் நுழைந்தாள் என்று கண்டுபிடிக்க வில்லையாரைப் பார்த்தாலும் ஒரே மாதிரி இருந்தார்கள். இவ்வளவு பெரிய கூட்டத்தில் அவளை எப்படிக் கண்டுபிடிப்பது ?. 400 யுவான் அவ்வளவுதான் ஸ்வாஹா என்று நினைத்துக் கொண்டே, நடுவில் இருந்த  வாயில் மூலமாக நுழைந்தேன். எங்கிருந்தோ வந்த சீன ராணுவ வீரன் ஒருவன் வந்து என்னைத்  தடுத்தான். அவன் கையில் இருந்த ஸ்டென் கன் எண்ணெய் போட்டுத்துடைத்ததால் பளபள வென்று மின்னியது.” அவன் எதோ கோபமாகச் சொன்னான். ஏதுடா வம்பாப்போச்சு? ஒரு மண்ணும் புரியவில்லை .நல்லவேளை என்னுடைய நுழைவுச்சீட்டு என் கையில் இருந்தது. எடுத்துக் காண்பித்து,” உள்ளே போக வேண்டும்”, என்றேன்.
அதற்குள் சம்மர் ஓடி வந்து அவனிடம் ஏதோ சொல்லி விட்டு என் கையைப் பிடித்து இழுத்து வெளியே வந்து வலது ஓரம் இருந்த மற்றொரு வாயிலின் மூலம் அழைத்துக் கொண்டு உள்ளே வந்தாள்.  
"எங்கே போனாய் என்னைவிட்டுவிட்டு”,
”நீ பின்னால் வருகிறாய் என்று நினைத்துத்தான் உள்ளே போனேன்”
“என்னாச்சு, ன் என்னை உள்ளே விடமாட்டேன்கிறார்கள் ?.
 "யாராவது இந்த வாயிலில் நுழைகிறார்களா   ?.
 அப்போதுதான் கவனித்தேன். வரும் டூரிஸ்ட் எல்லோரும் நடுவாயிலை விட்டுவிட்டு வலது அல்லது இடது புறம் மட்டும்தான் அனுமதிக்கப்பட்டார்கள். அங்கெல்லாம் கூட்டம் அதிகமாய் இருந்ததால் நான் நடுவில் நுழைந்தேன்.  
அவள் பின்னர் சொன்னாள், “இந்த நடுவில் உள்ள வாயிலின் பெயர் "Emperor Gate" சக்ரவர்த்தி அரண்மனையை விட்டு வெளியே செல்லும்போதும், உள்ளே வரும்போதும் இந்த வழியில் தான் போவார். அவர் கூட வரும் சில உயர் அதிகாரிகளுக்கு மட்டும் அதுவும் அவரோடு வரும்போது மட்டுமே அந்த வாயிலைப் பயன்படுத்த முடியும். தப்பித்தவறி வேறு யாராவது அந்த வாயிலில் நுழைந்தால் கழுவிலேற்றி விடுவார்கள்", என்றாள்.நான் என் கழுத்தைத் தடவிக் கொண்டே, “அந்தக் காலம் தான் முடிந்துவிட்டதே”, என்றேன். “இல்லை இப்போது சீன அதிபர் அமைச்சர்கள் மற்றும் உயர் ராணுவ தளபதிகள் மட்டுமே அதில் நுழையமுடியும்",என்றாள்.  
அதே போல் எந்த எந்த வாயிலில் யார் யார் நுழையமுடியும் என்று தனிச் சட்டங்கள் இருந்ததையும் கூறினாள்.
உள்ளே நுழைந்ததும் இன்னொரு பெரிய மைதானம் வந்தது. அதன் முடிவில் ஒரு பிரம்மாண்டமான கட்டடம் இருந்தது. எனக்கு Last Emperor சீன் ஞாபகத்திற்கு வந்தது. அவளிடம் கேட்டவுடன், சிரித்துக் கொண்டே "நீ சொல்வது சரிதான். இதுதான் தர்பார் மண்டபம். சக்ரவர்த்தி தன்னுடைய படைவீரர்களின் அணிவகுப்பை இங்கிருந்துதான் பார்வையிடுவார். வெளிநாட்டுத் தூதுவர்களை இங்குதான் சந்திப்பார். மேலும் பொது விழாக்கள் இங்குதான் நடைபெறும்", என்று சொன்னாள். குறைந்தபட்சம் 1 லட்சம் படைவீரர்கள் அணிவகுப்புச் செய்யும் அளவுக்கு அந்த மைதானம் பெரியது. அந்த பிரம்மாண்டமான அத்தாணி மண்டபத்திற்கு ஏறிச் செல்ல படிக்கட்டுகள் இருந்தன.
Paradesi with Male Lion or Two male Lions

அதன் இருபுறமும் இரு சிங்கங்கள் இருந்தன. அதில் எது ஆண், எது பெண் ? என்று சொல்லி கண்டு பிடிக்கச் சொன்னாள். உற்று உற்றுப் பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. அவளிடமே கேட்டேன். அவள் விளக்கிச் சொன்னாள் எனக்கு வலதுபுறம் இருப்பது ஆண் என்றும் இடதுபுறம் இருப்பது பெண் சிங்கம் என்று சொன்னாள். “எப்படிக்கண்டுபிடிப்பது”, என்றேன். “ஒரு  உருண்டையான பந்தின் மேல் கால் வைத்து இருப்பது ஆண் என்றும் , ஒரு குட்டியின் மேல் கை வைத்திருப்பது பெண் சிங்கம்”, என்றும் சொன்னாள்.
Female Lion

 அந்தப்பந்து உலகத்தைக்  குறிக்கும் என்றும் ஆண் சிங்கம் சக்தியையும் அதிகாரத்தையும் குறிக்கும் என்றாள்.அவள் சொன்னபின்தான் விளங்கியது.  அதோடு சீன புராணங்களில் சிங்கத்திற்கு முக்கிய இடம் உண்டு என்றும் , இவை எங்களின் காவல் தெய்வங்கள் என்றும் சொன்னாள் .

அந்தக்கட்டடத்தின் இருபுறமும் மிகப் பிரம்மாண்டமான தாமிர அண்டாக்கள்   இருந்தன? ஆனால் காலியாக இருந்தன. "இது எதற்கு என்று யூகிக்க முடிகிறதா?" என்று கேட்டாள். "நான் படைவீரர்களுக்கு கஞ்சி ஊத்துவதற்கு இருக்கும்,"  என்றேன். அவள் என்னை புதிராகப் பார்த்துவிட்டு, “இல்லை பெரும்பாலான கட்டிடங்கள் மரத்தால் கட்டுப்பட்டு இருப்பதால், இலகுவாய் தீப்பற்றிக் கொள்ளும். அப்படி திடீரென்று வரும் தீயை அணைப்பதற்காக இந்த அண்டாக்களின் தண்ணீர் நிரப்பி வைத்திருப்பார்கள். இங்குள்ள எல்லாக் கட்டடங்களிலும் இருபுறமும் அதனைக் காணலாம்", என்று சொன்னாள். கட்டடத்தின் முகப்பின் மேலே வெல்வெட்டில் சீன மொழியில் கட்டடத்தின் பெயர் எழுதப்பட்டிருந்தது. படிகளின் மேலே ஏறிச் செல்லும்போது கட்டடத்தின் இருபுறமும் விதானத்தின் ஓரத்தில் புறா, குரங்கு, ஓணான் என்று பல உருவங்கள் செதுக்கப்பட்டிருந்தன, அவள் சொன்னாள், ஒவ்வொரு கட்டடத்திலும் வாழும் மனிதர்களின் அந்தஸ்த்துக்கு ஏற்றவாறு நிறைய வடிவங்கள் இருக்கும். ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு அர்த்தம் உண்டு. உதாரணமாக குரங்கு உருவத்திற்கு நீண்ட வாழ் நாள் என்று அர்த்தம் என்றாள்.

மண்டபத்தின் உள்ளே பார்த்தால் மிகப்பெரிய உயரமான சிம்மாசனம் இருந்தது. பல படிகளில் ஏறித்தான் அதில் உட்கார முடியும். தகதகவென்று ஜொலித்தது. தர்பார் மண்டபத்தில் பேரரசர் மட்டுமே அமர முடியும். மற்ற எல்லோரும் நின்று கொண்டுதான் இருக்க முடியும். சிம்மாசனத்தின் இருபுறமும் மரவேலைப் பாடுடன் நறுமணம்  எழுப்ப புகைபோடும் சாதனங்கள் இருந்தன.
லாஸ்ட் எம்ப்பரர் படத்தில் அந்தச் சிறுபையன் படிகளில் விரைவாக ஏறி மேலே உட்காரும் காட்சி என் கண்முன் வந்தது.
அந்த அறை முழுவதும் சுவர்களிலும், கூரைகளிலும், தூண்களிலும் வண்ணமிகு கலவைகளில் வேலைப்பாடு செய்யப்பட்டிருந்தன. சிம்மாசனத்தைப் பார்த்து வியந்து படம் எடுத்து விட்டுத் திரும்பினால் சம்மரைக் கானோம், ஐயையோ மறுபடியுமா?

தொடரும்

6 comments:

  1. சம்மரின் புகைப்படம் போட்டிருக்கக் கூடாதோ? நாங்களும் அவருக்கு நன்றி சொல்லி இருப்போமே... உங்களுக்கு உதவியதற்கு!

    ReplyDelete
    Replies
    1. இருக்கிறது தேடிப்பார்க்கிறேன் ,நன்றி ஸ்ரீராம் .

      Delete
  2. //சம்மரைக் கானோம்//

    //கானோம்//

    காணோமா?
    அதுதான் 'சம்மர்' கொளுத்தி எடுக்குதே!

    தொடரட்டும்...

    ReplyDelete
    Replies
    1. அது உங்களுக்கு எனக்கு இல்லை , இன்னும் இங்கு குளிர்தான் பாய் .

      Delete