Monday, April 18, 2016

நியூயார்க்கில் சிக்கில் குருசரன் !!!!!!!!!!!!


மதுரையில் படித்து வளர்ந்த எனக்கு சித்திரைத் திருவிழா நாட்கள் அந்த ஆண்டின் மிகவும் முக்கியமான காலகட்டம். கல்லூரியில் விடுமுறை விட்டாலும், மெஸ்ஸை மூடிவிட்டாலும், சிறப்பு அனுமதி பெற்று தங்கியிருந்து சித்திரைத்திருவிழாவை கண்டுகளித்துப் பின் ஊர் திரும்புவது என் வழக்கம். மீனாட்சி திருக்கல்யாணம், என் அமெரிக்கன் கல்லூரி வாசலைக் கடந்து செல்லும் கள்ளழகர் அழகர் எதிர்சேவை கள்ளழகர் ஆற்றில் இறங்கும் விழா என்று மதுரையே தாங்காத அளவுக்கு கூட்டம் கூடும் பெருவிழா அது.
அதனால் அந்தச்சித்திரைத்திருவிழா சமயத்தில் தொலைதுரத்தில் இருப்பதால் நொந்து கொண்டு இருக்கையில் ஒரே ஆறுதல் நம் நியூயார்க் தமிழ்ச்சங்கம் நடத்தும் சித்திரை விழா.
Add caption
இந்த வருடம் சிக்கில் குருசரனின் இன்னிசைக் கச்சேரி, ஏப்ரல் 9 சனிக்கிழமை 2016-ல்  நடைபெற்றது. போனதடவை இவர் வந்த சமயம் அதே தேதியில் எனக்கு ஏதோ சிக்கல் என்பதால் சிக்கிலை தவறவிட்டுவிட்டேன். அதனால் இந்த வருடம் மிஸ் பண்ணக்கூடாது என்றெண்ணிச்  சென்றேன்.
பரதேசி ஆஜர் கொடுக்க, ஆற்காடு தியாகராஜன், குமார், ஆல்பர்ட் செல்லத்துரை, தலைவர் விஜயகுமார், துணைத்தலைவர் குமரப்பன் மற்றும் பொருளாளர் நண்பர் ரங்கநாதன் ஆகியோர் வரவேற்றனர்.
4 மணியளவில் நான் உள்ளே போய் உட்கார உடனே விழா ஆரம்பித்தது. தலைவர் விஜயகுமார் கட்டியம் கூறி முடிக்க பிள்ளைகள் வந்து தமிழ்த்தாய் மற்றும் அமெரிக்கத்தாய் வாழ்த்துக்களை சுதிபிசகாமல் பாடி முடிக்க. நண்பர் ரங்கநாதன் வரவேற்புரை  ஆற்றினார் .
சற்றும் தாமதமில்லாமல் விஜய்குமார், சிக்கிலைக் கூப்பிட, அவர் பக்கவாத்தியக் காரர்கள் புடைசூழ உள்ளே நுழைந்தார். முன்னாள் தலைவர் காஞ்சனா பூலா அவர்கள் அறிமுகப்படுத்தி வைத்தார்கள்.
சிக்கில் குருசரண் உயரம் ஆறடி இருக்கும், சிரித்த முகம், பொலிவான இளமை, சிக்கில் சிஸ்டர்ஸ் பரம்பரை. ஆனால் இந்தப் பரம்பரையில் பாடும் வரம் பெற்றவர் இவர் ஒருவர்தான். இந்தியா டுடே வெளியிட்ட 35 வயதுக்குள் உள்ள 35 Game Changers என்ற லிஸ்ட்டில் இடம் பெற்றவர். பாடும் போதும் சிரிக்கும் போதும் கன்னத்தில் குழிவிழுவது அழகுக்கு அழகு சேர்க்கிறது.
வயலின் வாசித்தவர் ‘சஞ்சீவ் வெங்கட்ராமன்’, கன்னியாகுமரி மேடமின் சீடர். அநாயசமாக வாசித்தார். ஆமாம், கர்நாடக இசையில் மேற்கத்திய இசைக்கருவியான வயலின் இடம்பெற ஆரம்பித்தது எப்போது?


மிருதங்கம் வாசித்தது பத்ரி சதீஷ்குமார், effort less என்று சொல்வார்களே அந்த மாதிரி, தாளம் இம்மியளவும் பிசகாத வாசிப்பு.
மூவரும் கிளீவ்லேண்ட் தியாகராஜ ஆராதனை முடித்து தாயகம் செல்லும் வழியில் நியூயார்க் வந்திருந்தார்கள்.
சில நிமிடங்கள் எடுத்து, செளண்ட் மற்றும் சுருதியை சரி பண்ணிக் கொண்டு கச்சேரி ஆரம்பமானது. முதலில் மிருதங்கம் பேஸ் அதிகமாக இருந்து பின்னர் அதுவும் சரியாக சச்சேரி களை கட்டியது.
ஆரம்பப் பாடலாக ஒரு தெரியாத தெலுங்குக் கீர்த்தனையைப் பாட சிறிதே கலவரமானேன். ஏனென்றால் நடப்பதோ தமிழ்ப்புத்தாண்டு விழா, நடத்துபர்களோ நியூயார்க் தமிழ்ச் சங்கம், பாடுவது தெலுங்கா? என்று. ஆனால் அடுத்து  ஒவ்வொன்றாக தமிழ்ப் பாடல்கள் வரிசை கட்டி வந்தன.  
1.   அருணகிரிநாதர் எழுதிய திருப்புகழ் பாடலில் 3ஆம் திருப்புகழில் வரும் விநாயகர் துதிப்பாடல் ("ஐந்து கர ஆனைமுக பெருமானே" , ராகம் ஹம்சத்துவனி.
2.   பாபநாசம் சிவன் எழுதிய சரஸ்வதி தயநிதி, சரஸ்வதி ராகம்.
3.   முத்துச்சாமி தீட்சிதர் எழுதிய ராமர் பட்டாபிஷேகப் பாடல்.
4.   தண்டபாணி தேசிகர் எழுதிய, கோகில ராகத்தில் அமைந்த, "நல்வாழ்க்கையே நாளும் வேண்டும்", என்ற பாடல்.
5.   அருணசலக் கவிராயர் எழுதிய "யாரோ இவர் யாரோ" என்ற பைரவி ராகத்தில் அமைந்த பாடல். இது கவிராயரின் ராம நாடகத்தில் வரும் பாடல். மூலராகம் சவேரி. MS.சுப்புலட்சுமி DK.பட்டம்மாள் பாடிப் பிரபலமடைந்த பாடல் இது. இதனை சிலர் "ஆரோ இவர் ஆரோ" என்றும் பாடுகிறார்கள்.  
6.   அடுத்துவந்தது சித்தர் பாடிய கரகரப்பிரியா ராகத்தில் அமைந்த "வெட்டவெளிதனில்" .
7.   அடுத்து ரசிகர்களின் விருப்பத்துக் கிணங்க வந்தது "என்ன தவம் செய்தனை".
8.   என்ன பாரதியார் பாடலைக் காணோம் என நினைத்துக் கொண்டிருந்தபோது வந்தது "ஆடுவோமே, பள்ளு பாடுவோமே".
9.   அடுத்து காஞ்சிப் பெரியவர் மேல் ஒரு தில்லானா பாடி, சீதா கல்யாணம் வைபோகமே பாடிப்பின்னர் மங்களம் பாட கச்சேரி இனிதான நிறைவு பெற்றது.
 

கச்சேரியின் ஹைலைட்ஸ்
1.   இம்மிளவு கூட பிசிறில்லாத, அணுவளவும் சுதி பிசகாத அற்புத குரல் வளம்.
2.   ராக ஆலாபனை மற்றும் ராக சஞ்சாரங்கள் சூப்பர் ரகம்.
3.   உச்சஸ்தாயி, கீழ்ஸ்தாயி என்று எல்லா நிலைகளிலும் உருண்டு விளையாடும் குரல்.
4.   ஆச்சரியமான மூச்சுக்கட்டுப்பாடு (Breath control)
5.   இந்தக் கச்சேரி கேட்டபின் தொண்டைதான் அதியற்புத இசைக்கருவி என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டியதிருக்கிறது.
6.   மூன்று மணிநேரம் இந்த நெடிய உருவம் எப்படித்தான் ஒரே இடத்தில் சம்மணம் போட்டு உட்கார்கிறார்களோ. இதற்கு தனிப்பயிற்சி எடுக்க வேண்டும்  போலிருக்கிறது.
7.   மிருதங்க சுதி இலேசாகக் கலைந்ததால் அவர் பக்கத்தில் இருந்த ஃபோகஸ் லைட்டைக் கூட அணைக்கச் சொன்னார் பத்ரி. சஞ்சீவும் பத்ரியும் தனி ஆவர்த்தனம் செய்து அசத்தினார்கள். பத்ரியின் ஆவர்த்தனத்தில் இடிமின்னல் ஒலித்தது.
8.   இறுதியில் நடந்த ராஃபில் லாட்டரியில் பரிசாக ஒரு பெண்ணுக்கு ஒரு டவர் ஃபேன்  விழ, அதற்குப் பரிசு வாங்க அந்தப் பெண் மேடைக்குவந்த போது. "she is a great fan", என்று குருசரண் சொன்னது அவரின் பிரசன்ஸ் ஆஃப் மைன்ட் வெளிப்பட்டது.
குறையொன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா என்று சொன்னாலும் கண்டிப்பாய் குறை சொல்ல வேண்டுமென்றால் பத்ரிக்கு ஆரம்ப முதல் இறுதி வரை முகத்தில் ஈயாடவில்லை. உடம்பு சரியில்லையோ இல்லை ஜெட்லாக்கா என்று தெரியவில்லை. ஆனால் வாசிப்பில் எந்தக் குறையுமில்லை.
குமரப்பன் நன்றி சொல்லி முடிக்க, சென்னை தோசா வழங்கிய  அறுசுவை உணவோடு விழா இனிதாக முடிவடைந்தது. நல்ல ஒரு இன்னிசை மாலைப்பொழுதை வழங்கிய நியூயார்க் தமிழ்ச்சங்கத்திற்கு வாழ்த்துகளும் நன்றிகளும்.
- முற்றும்.

Thursday, April 14, 2016

விஜயகாந்த் முதலமைச்சர் ஆனால் !!!!!!!!!!!!!!!!!

Vijayakanth to be only oppn leader in TN Assembly bench

“என்னது விஜயகாந்த் முதலமைச்சர் ஆவாரா? என்னடா பரதேசி உளர்றே”.
“இல்லடா மகேந்திரா ஒரு பேச்சுக்கு, ஆனால் ?”
“டேய் உனக்கு என்ன பைத்தியம் பிடிச்சிருக்கா?”
“இல்லடா முதலமைச்சர் ஆகும் தகுதி விஜய்காந்துக்கு இல்லைன்னே நானும் நினைக்கிறேன். அப்படிப்பாத்தா இப்ப அரசியல்ல இருக்கிற யாருக்கும் அந்தத் தகுதியில்ல”.
“சரி நீ என்னதான் சொல்ல வர்ற?”
அதாவது தப்பித்தவறி அமாவாசையும் பெளர்ணமியும் ஒண்ணா வந்து விஜய்காந்த், முதலமைச்சர் ஆயிட்டார்னு ஒரு பேச்சுக்கு வச்சிக்க, என்ன நடக்கும்னு ஒரு கற்பனை”
“ சரி சொல்லித் தொலை”.
அதிகாலையில் விஜய்காந்த் விட்டுக்கு எதிரே:
          ஹேங்க் ஓவரில் இருந்த விஜய்காந்த்தை ஒருபுறம் பிரேமலதாவும், மறுபுறம் சுதிஷீம் கைத்தாங்கலாக அழைத்து வருகின்றனர்.
பத்திரிக்கை நிருபர்கள்: சார் முதலமைச்சர் ஆக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வாழ்த்துக்கள்.
விஜய்காந்த்: அடத்தூ, என்னடா சொல்றீங்க, எனக்கு ஒண்ணும் தெரியாதே, இன்னும் நான் பேப்பரை படிக்கலயே
சுதீஷ் தலையில் அடித்துக் கொள்ள பிரேமலதா, விஜய்காந்த் தலையில் அடிக்க, இருவரும் மீண்டும் அவரைத் தரதர வென்று உள்ளே இழுத்துச் செல்கிறார்கள்.
பதவியேற்கப் போகும் வழியில்:

பிரேமலதா: மறுபடியும் சொல்றேன், நீங்க முதலமைச்சரா பதவி ஏற்கப்போறீங்க, பத்திரிகையாளரை பாத்துப் பேசுங்க.
விஜய்காந்த்: முதலமைச்சராக ஆன உடன் முதல்ல இந்தப் பத்திரிகையாளரை எல்லாம்  முதல்ல தடை பண்றேன்.
பத்திரிகையாளர்: கேப்டன் சார் உங்க மந்திரி சபையில யாரை எல்லாம் சேர்க்கப்போறீங்க?
விஜய்காந்த்: நான் முதல் அமைச்சர், பிரேமலதா இரண்டாம் அமைச்சர், சுதீஸ் மூன்றாம் அமைச்சர்.
பத்திரிகையாளர்: அப்ப வைக்கோ ?.
விஜய்காந்த்: அவர் நாலாந்தர,( பிரேமலதா காதில் சொல்ல) மூத்த அமைச்சர்.
பத்திரிகையாளர்: அதுசரி திருமாவுக்கு என்ன பதவி?
விஜய்காந்த்: அவர் தோத்த அமைச்சர், அவர்தான் ஜெயிக்கலயே, டேய் நீ என்ன ஜெயா டிவில இருந்துவர்றியா, தூக்கிப்போட்டு மிதிச்சிடுவேன் ஆமா? நாக்கைத்துருத்துகிறார்.  (பிரேமலதா சாந்தப்படுத்துகிறார்)
பத்திரிகை: உங்க மந்திரி சபையில் முக்கியமாக எந்த இலாக்கா இருக்கும்.
 விஜய்காந்த்: (வெகுவாக யோசித்து) கதை இலாக்கா
ராஜ்பவனில்:
சுதீஷ்: கவர்னர் வரார் கும்பிடுங்க.
விஜய்காந்த்: எவனா இருந்தா எனக்கென்ன, நான் யாரையும் கும்பிட மாட்டேன். நீ தெரிஞ்சதை பார்ரா வெண்ணை.
பதவியேற்கும் மேடையில்: கண்கள் சிவக்க, தள்ளாடியபடி மேடையேறிய விஜய்காந்தைப் பார்த்து  கவர்னர் பயந்து ஒதுங்க, விஜய்காந்த் படிக்கிறார்.
"பிரேமலதாவாகிய நான், என்று ஆரம்பிக்க சுதீஷ் ஓடிப்போய் அது இல்லை என்று சொல்லி, விஜய்காந்த் பேர் போட்ட உறுதிமொழியை எடுத்துத்தர, "டேய் நீ யார்ரா எனக்குச் சொல்றது. எனக்கு எல்லாம் தெரியும்" என்று சொல்லிவிட்டு, மீண்டும் "பிரேமலதாவாகிய நான் என்று சொல்லி வாசித்து முடிக்க கூடியிருந்தவர் எல்லாம் கொல்லெனச்சிரிக்கின்றனர்.
சட்டசபையில் செய்யப்பட்ட மாற்றங்கள்:
Vijaykanth Jayalalitha assembly fight

1.   முதல் அமைச்சர் அறையில் மினிபார்.
2.   சட்டசபை வளாகத்தில் ஒயின்ஷாப் மற்றும் மதுரை முனியாண்டி விலாஸ்.
3.   சட்டசபை முதல் அமைச்சர் இருக்கையில் மூன்று பேர் உட்கார இடம் ஒருபுறம் பிரேமலதாவுக்கும், மறுபுறம் சுதீஷீக்கும்.
4.   நடுவில் விஜய்காந்துக்கு சீட்பெல்ட், மற்றும் எழுந்து யாரையும் அடித்துவிடக்கூடாதென்று முன்னெச்சரிக்கைக்காக காலிலும் சங்கிலி போட்டு இணைக்க வசதி.
5.   விஜய்காந்த் முன்னால் ஒரு டம்மி மைக்.
6.   தமிழ்நாட்டின் தலைநகர் மதுரைக்கு மாற்றம்.
7.   MLA -க்கள் அடிவாங்க தனி ரூம் வசதி.
8.   முதலமைச்சர் ரூமை ஒட்டி மேக்கப் ரூம் மற்றும் மேக்கப் மேனுக்கு அமைச்சருக்கு இணையான பதவி.
9.   தூதூ என்று அடிக்கடி துப்புவதால் பக்கத்தில் ஒரு எச்சில் துப்பும் பாத்திரம்.
10.               எல்லா சினிமா தியேட்டர்களும் அரசுடமையாக்கப் படுகின்றன.
11.               தேசிய நிறமாக கருப்பை அறிவிக்க உண்ணாவிரதப் போராட்டம்.
12.               தேசிய விளையாட்டாக பம்பரம் விடுதலுக்கு சட்டசபை மூலம் பரிந்துரை.
பிரேக்கிங் நியூஸ்:

1.   கவர்னர் உரையை தமிழில் படிக்கச் சொல்லி அடம்பிடித்த விஜய்காந்தின் அலும்பு தாங்க முடியாமல் கவர்னர் வெளிநடப்பு.
2.   பஞ்ச பாண்டவர்களுக்குள் சண்டை வந்து அர்ச்சுணனும் பீமனும் தருமரின் உதை தாங்காமல் ஓடிப்போனார்கள்.
முற்றும். 
New year 2014 greetings in tamil


Monday, April 11, 2016

கக்கக்கா கிக்கீ கீக்கி கெக்கேகே குக்குக்குக்குக்கூ கேக்கே !!!!!!!!


சீனாவில் பரதேசி -7

இதன் முதல் 6 பகுதிகளைப்படிக்க கீழே சுட்டவும்

        பகுதி  1 :  http://paradesiatnewyork.blogspot.com/2016/02/blog-post_22.html
       பகுதி  4: http://paradesiatnewyork.blogspot.com/2016/03/blog-post_14.html
       பகுதி  5: http://paradesiatnewyork.blogspot.com/2016/03/blog-post_21.html
       பகுதி  6: http://paradesiatnewyork.blogspot.com/2016/04/blog-post.html

அந்த மஞ்சள் முகப்பெண்ணை நான் இதுவரை பார்த்ததில்லை. எனக்கு ஜோஹன்னாவையும் அவள் அம்மாவையும் தவிர இங்கே சீனப்பெண்கள் யாரையும் தெரியாது. இவள் யாராக இருக்கும் என்று யோசித்துக் கொண்டே நின்றேன். "ஐ கீக்கி, நைஸ் மீட்," என்றாள். கீக்கியா எந்தக்கீக்கி? ."கக்கக்கா கிக்கீ கீக்கி கெக்கேகே குக்குக்கூ கெக்கே" என்ற பாடல் வேறு அசந்தர்ப்பமாக ஞாபகத்திற்கு வந்தது. ஒருவேளை அப்படி இருக்குமோ, ஃபீல் இன் என்று பெயர் பார்த்தும் இங்கு வந்தது தப்போ என்று பல  யோசனைகள் போய்க் கொண்டிருக்கும்போது, அவள் சொன்னாள், "ஐ நைடூட்டி" என்று. எனக்கு மேலும் தூக்கி வாரிப்போட்டது. “ஜோஹன்னா எங்கே?”, என்று கேட்டதற்கு அவள் டூட்டி முடிந்துவிட்டதாகவும் இவள்தான் ரிஷப்சன் நைட்டூட்டி என்று எனக்கு விளங்குவதற்கு சில நேரம் பிடித்தது. அப்போதுதான் எனக்கு நிம்மதி வந்தது. "ஹீட் சரியாக வேலை செய்கிறதா?", என்று கேட்டாள். அப்போதுதான் ஞாபகம் வந்தது. நேற்றிரவு ஹீட்டர் சரியாக வேலை செய்யவில்லை. ஜோஹன்னா சொல்லியிருந்தாள், சரி செய்து விடுவதாக. ஹீட்டர் செக் பண்ணதில் சரியாக வேலை செய்யவில்லை. அதனை மாற்ற வேண்டும் என்றும் வேறு ரூம் கொடுப்பதாகவும், அப்போதுதான் ஒருவர் காலி செய்ததாகவும் சொன்னாள்.
Feel INN  by night
கீக்கிக்கு நன்றி சொல்லி அனுப்பிவிட்டு ஒரு ஐந்து நிமிடத்தில் பேக் செய்து ரிஷப்சனுக்குச் சென்றேன். அவள் என்னை அழைத்துக் கொண்டு ஒரு சூட் கேஸை தரதரவென்று இழுத்துக் கொண்டு முன்னால் சென்றாள். அவள் பின்னால் நானும் செல்ல ஒரு சாவிக் கொத்தை எடுத்து ஒரு ரூமைத்திறந்து, கதவைப் பிடித்துக் கொண்டு உள்ளே போகச் சொன்னாள். உள்ளே போனால், அங்கே நம்ம மங்களூர் தேவதை மிதுளா மேக வண்ண இரவு உடையில் படுக்கையில் சாய்ந்திருந்தாள். நான் அவளைப் பார்த்து திடுக்கிட்டு மிரள, அவள் என்னைப் பார்த்து மிரள, முதலில் சமாளித்தது அவள்தான். "ஹாய் ஆல்ஃபி, வாட் ஹேப்பண்ட்?" என்றாள்.  ஒருவேளை அவள் ரூமில்தான் தங்க வேண்டுமோ என்று யோசித்து திகைத்து நிற்க.
கீக்கி உள்ளே வந்து அவளும் மிதுளாவைப் பார்த்து ஜெர்க் ஆகி, சாரி சாரி என்று ஒரு பத்துமுறை சொல்லியிருப்பாள். இந்த கீக்கி என்ற கிறுக்கி, சப்பை மூக்கி, ரூம் மாதிரி வந்து திறந்து கோக்கு மாக்கி ஆக்கிவிட்டாள். நானும் மிதுளாவிடம் சாரி சொல்லிவிட்டு வெளியே வந்தோம்.
அடுத்த ரூமைத்திறக்கப்போன கீக்கியை, “கொஞ்சம் இருடி”, என்று தடுத்துவிட்டு கதவைப் பலமாகத்தட்ட ஒன்னும் பதிலில்லை. ஆனால் அந்த பக்கத்தில் இருந்த ஸ்பானிய பெண் கதவைத்திறந்து, "வாட்ஸ் ர்ர்ராங்?" என்றாள். உள்ளே ஒருவரும் இல்லையென நன்றாகத் தெரிந்த பின்னர்தான் கீக்கியை திறக்க விட்டேன். திறந்துவிட்டு, ஒரு கீயை எனக்குக் கொடுத்துவிட்டு, இன்னொரு கீயை அவள் எடுத்துக் கொண்டு போய்விட்டாள் கீக்கி. புது ரூமின் அமைப்பு பழைய ரூம் மாதிரி இருந்தாலும், அந்த ரூம் நல்ல சூடாக இருந்தது.
சூட்டில் நிம்மதியாக கிறங்கி,உறங்கி,கனவில் ஜோஹன்னா, மிதுளா, ஸ்பானிய பெண், கீக்கி புடை சூழ “கக்கக்கா கிக்கிக்கீக்கி கெக்கக்கே குக்குக்குக்கூ கேக்கே”, என்று பாடினேன்.
 காலையில் எழுந்து இறங்கி நடந்தேன். ஒரு 5 நிமிடம் நடந்த பின் பெரிய கோட்டைச் சுவர் வந்தது. குறைந்தது 30 அடி உயரம் இருக்கும். எதிரே வந்த ஒருவரிடம் கையில் சீனமொழியில் எழுதியிருந்த விலக்கப்பட்ட நகரத்தின் முகவரியைக் காண்பிக்க, அவர் அந்தச் சுவரைக் காண்பித்து இதுதான் என்றார்.
Outside wall 
சுவரைச் சுற்றி நடக்க நடக்க போய்க் கொண்டேயிருந்தது. ஆனால் நுழைவாயில் வரவில்லை. சுமார் 20 நிமிடங்கள் வேகநடை நடந்ததும் அலங்கார நுழைவாயில் வந்தது. அதன் நடுவாந்திரத்தில் ‘மாவோ’ என்று அழைக்கப்படும் ‘மா சேதுங்’ படம் மாட்டப் பட்டிருந்தது. ஆங்காங்கே  மிடுக்கான சீன ராணுவத்தினர் நவீன ஸ்டென்கன் ஏந்தி விழிப்புடன் நின்றிருந்தனர். நான் ஒருவனைப் பார்த்து சிரித்ததற்கு, அவன் பதிலுக்குச் சிரிக்கவில்லை. “போட்டோ எடுக்கலாமா?”, என்று கேட்டதற்கு துப்பாக்கியால் இல்லை என்று ஆட்டினன். அதன் பிறகு நான் ஏன் அங்கே நிற்கிறேன். அந்த நுழைவாயிலில் இருந்த மெட்டல் டிடெக்டர் வழியாக உள்ளே நுழைந்தேன். உள்ளே தூரத்தில் இன்னொரு அலங்கார நுழைவாயில் தெரிந்தது. அதன் இருபுறமும் நுழைவுச்சீட்டு வாங்குமிடம் தெரிந்தது. அந்த மிகப்பெரிய மைதானத்தில் ஏகப்பட்ட டூரிஸ்ட்கள் இருந்தார்கள். நுழைவுச் சீட்டை வாங்கிவிட்டு வரும் வழியில் கைட் சர்வீஸ் என்று போட்டிருந்தது. ஆஹா என்று உள்ளே நுழைந்தேன். ஒரு மணி நேரத்திற்கு 200 யுவான் என்றும் ஆனால் சுற்றிப் பார்க்க பல மணிநேரம் ஆகும் என்று சொன்னார்கள். அதற்குள் அந்தப்பெண் கைட் வந்து, “முக்கிய இடங்களை 2 மணி நேரத்திற்குள் பார்க்கலாம்”, என்றாள். சம்மதித்து 400 யுவான் கொடுத்து ரசீது வாங்கிக் கொண்டதுதான் தாமதம், விறு விறுவென உள்ளே நடந்தாள். நான் ஓட்டமும் நடையுமாக பின் தொடர்ந்தேன். “நமக்கு நேரமில்லை சீக்கிரம் வா”, என்று சொல்லிவிட்டு வெகுவேகமாக நடந்தாள்.

அவளை ஓடிப்பிடிப்பதற்குள் விலக்கப்பட்ட நகரத்தின் சில குறிப்புகளை சொல்லி விடுகிறேன்.
1.   Forbidden City என்றழைக்கப்படும் விலக்கப்பட்ட நகரம் சீனப்பேரரசின் மையமாகவும் பேரரசர் தங்கும் அரன்மனையாகவும் பல நூறு ஆண்டுகள் இருந்தது.
2.   மிங் வம்சம் தொடங்கி (Ming) ஷிங் (Qing) வம்சம் வரை கி.பி. 1420 முதல் 1912 வரை இது பேரரசர்களின் (Emperor) இருப்பிடமாக இருந்தது.
3.   கி.பி.1406-ல் ஆரம்பிக்கப்பட்ட இந்நகரம் 1420ல் கட்டி முடிக்கப்பட்டது.
4.   இதில் மொத்தம் 980 கட்டிடங்கள் உள்ளன. மொத்த பரப்பளவு 180 ஏக்கர்.அம்மாடி அம்மாடி அம்மாடி, இதைக் கேட்டவுடனே முட்டி லேசாக வலிக்க ஆரம்பித்துவிட்டது.
5.   1925ல் இது அரண்மணை மியூசியமாக மாற்றப்பட்டு பொதுமக்கள் பார்வைக்கு திறந்துவிடப்பட்டது.
6.   இங்கு குறைந்தபட்சம் ஒரு ஆண்டுக்கு 14 மில்லியன் (ஒரு மில்லியன் என்பது 10 லட்சம்) சுற்றுலாப்பயணிகள் வருகின்றனராம்.
7.   இந்த அரண்மனை மியூசியம்தான் உலகத்தின் அதிக நபர்கள் பார்த்த இடமாகும்.
8.   1987ல் யுனெஸ்கோ நிறுவனம் இதனை World Heritage Site ஆக அங்கீகரித்தது . வாருங்கள் நண்பர்களே, உள்ளே போவோம்.

தொடரும்.  

Wednesday, April 6, 2016

ரஜினிகாந்தின் துள்ளல் பாடல் !!!!!!!!!!!


எழுபதுகளில் இளையராஜா பாடல் எண் 30 
நதியோரம் நாணல் ஒன்று.

ரஜினிகாந்த் நடித்த, “அன்னை ஓர் ஆலயம்”, என்ற படத்தில் வரும், ,இளையராஜா இசையமைத்து வெளி வந்த சூப்பர் ஹிட் பாடல் இது. பாடலைக் கேளுங்கள்.

பாடலின் சூழல்:
இயற்கைச் சூழ்நிலையில் காதலனும் காதலியும் ஆடிப்பாடி மகிழும் நேரம் பாடும் பாடலிது.
இசையமைப்பு:
Ilayaraja Rajini

ரஜினிகாந்துக்கு ஆரம்ப கட்டங்களில் சிறப்பாக அமைந்த துள்ளல் பாடல் இது. இளையராஜாவின் மெட்டமைப்பும் இசைக்கருவிகளைக் கையாளும் விதமும் அருமை. வேகமான ஆடற்பாடல் என்றாலும் இதிலுள்ள மெலடி மிகவும் இனிமையானது. எந்த முன் இசையும் இல்லாமல், முன் அறிவிப்போ, பீடிகையோ இல்லாமல் பெண்குரலில் "நதியோரம்" என பாடல் ஆரம்பிக்க, அதன் பின்னர் தபேலா மற்றும் மற்ற கருவிகள் சேர்ந்து கொள்கின்றன. வீணைக்குழுமம், புல்லாங்குழல் மற்றும் கிடார் ஏற்ற இடங்களில் பயன்படுத்தப்பட்டு பாடலை முழுமையாக்குகின்றன.
பாடல் வரிகள்:
நதியோரம் நாணல் ஒன்று நாணம் கொண்டு
நாட்டியம் ஆடுது மெல்ல - நான்
அந்த ஆனந்தம் என் சொல்ல

நதியோரம் நீயும் ஒரு நாணல் என்று
நூலிடை என்னிடம் சொல்ல - நான்
அந்த ஆனந்தம் என் சொல்ல
( நதியோரம் )
வெண்ணிற மேகம் வான்தொட்டிலை விட்டு
ஓடுவதென்ன மலையை மூடுவதென்ன
முகில்தானோ துகில்தானோ
சந்தனக் காடிருக்கு தேன் சிந்திட கூடிருக்கு
தேன் வேண்டுமா நான் வேண்டுமா
நீ எனைக் கைகளில் அள்ள - நான்
அந்த ஆனந்தம் என் சொல்ல
( நதியோரம் )

தேயிலைத் தோட்டம் நீ தேவதையாட்டம்
துள்ளுவதென்ன நெஞ்சை அள்ளுவதென்ன
பனி தூங்கும் பசும்புல்லே
மின்னுது உன்னாட்டம்
நல்ல முத்திரைப் பொன்னாட்டம்
கார்காலத்தில் ஊர்கோலத்தில்
காதலன் காதலி செல்ல - நான்
அந்த ஆனந்தம் என் சொல்ல
( நதியோரம் )
Add caption
பாடல் வரிகளை எழுதியவர் கவியரசர் கண்ணதாசன் அவர்கள். இயற்கை சூழல் வேண்டும் என்று இயக்குநர் சொன்னதாலோ என்னவோ, முழுவதுமாக காதலன் காதலி வர்ணணையை விட, இயற்கை வர்ணணையே அதிகமாகவே இருக்கிறது. பெண்ணை நாணல் என்று வர்ணிப்பதை நான் எங்கும் கேள்விப் பட்டதில்லை. பல்லவியில்
"நதியோரம் நாணல் ஒன்று நாணம் கொண்டு நாட்டியம் ஆடுது மெல்ல" - என்று காதலி தன்னை "நாணம் கொண்ட நாணல்" என்று சொல்ல, அதற்கு காதலன், "ஆம் ஆம் நீ நாணல் தான், ஏனென்றால் உன் நூலிடை என்னிடம் அப்படித்தான் சொல்கிறது", என்று ஒத்துக்கொள்கிறான். அதே போல் கண்ணதாசனின் ஒவ்வொரு வரிகளிலும் கவித்துவம் சொட்டுகிறது. முதல் சரணம், “வான் தொட்டிலை விட்டு வெளிவந்த வெண்மேகம், மலையை மூட, முகில் தானோ துகில்தானோ? என்று கேட்கிறார். இதில் வெளிப்படையான அர்த்தம் தவிர வேறு அர்த்தம் ஒலிக்கிறதா என்ற ஆராய்ச்சிக்கு நான் போக விரும்பவில்லை. அடுத்த வரிகளில், “சந்தனக் காட்டில் தேன் கூடு இருக்கிறது, ஆனால் தேன் வேண்டுமா? இல்லை நான் வேண்டுமா?”, என்று காதலி கேட்பது ரசமான காரியம்.
இரண்டாவது பல்லவியில், “பனி தூங்கும் பசும்புல் உன்னைப் போல நல்ல முத்திரைப் பொன்னாட்டம் மின்னுகிறது”, என்று சொல்லி இயற்கையோடு இணைத்து காதலியை வர்ணிக்கிறார். கண்ணதாசனிடம் காதல் எப்போதும் நிரம்பி வழிந்தது என்பதை இந்தப் பாடல் மீண்டும் ஊர்ஜிதப் படுத்துகிறது.
குரல்கள்:

பாடலைப் பாடியவர்கள் SPB மற்றும் சுசிலா. இளையாராஜா SPB  நட்பு  என்பது  எப்போதும் இணைபிரியா நட்பு. வெறும் நட்புக்காக மட்டுமல்ல, அவரின் திறமைக்காகவும், குரல் வளத்திற்காகவும் குரல் பொருத்தத்திற்காகவும் இளையராஜா அதிக பாடல்களை SPB-க்குக் கொடுத்தார். அவ்வப்போது சுசிலாவும் பாடியுள்ளார்கள். கூர்ந்து கவனித்தீர்கள் என்றால், சுசிலாவின் பழைய பாடல்களில் ஒலிக்கும் குரலல்ல இது. இளையராஜாவிடம் சுசிலா பாடிய எல்லாப் பாடல்களையும் கேட்டால் இது புரியும். ராஜாவின் பாடல்களில் சுசிலாவின் குரல் அவரின் பழைய பாடல்களை விட மிக இளமையாக ஒலிக்கிறது. இது இளையராஜாவின் முயற்சியா, சுசிலாவின் திறமையா இல்லை மாறுபட்ட ஸ்ருதியா  என்று தெரியவில்லை.
கேவி மகாதேவன், சங்கர் கணேஷ் என்று பயன்படுத்திய தேவர் இந்தப்படத்தில் இளையராஜாவைப் போட்டது, அந்தக் கால கட்டத்தில் இளையராஜா தவிர்க்கமுடியாத சக்தியாக எழுந்ததைக் காண்பிக்கிறது.

மீண்டும் அடுத்த பாடலில் சந்திக்கலாம்.