Monday, March 4, 2019

இந்த அம்மனுக்கு கோவிலும் இல்லை நிரந்தர சிலையும் இல்லை!!!!



வேர்களைத்தேடி பகுதி 36
இதற்கு முந்திய பகுதியைப்படிக்க  இங்கே சொடுக்கவும். 
https://paradesiatnewyork.blogspot.com/2019/02/35-httpparadesiatnewyork.html
Courtesy : Google
            
      தேவதானப்பட்டியில் காமாட்சியம்மன் திருவிழாவிற்கு அடுத்தபடியாக வெகு விமரிசையாக நடப்பது முத்தாளம்மன் திருவிழா. காமாட்சியம்மன் கோவிலில் அம்மன் சிலை கிடையாது, வெறும் கதவுக்குத்தான் பூஜை என்று சொல்லியிருந்தேன். அதாவது காமாட்சியம்மனுக்கு கோவில் இருக்கிறது சிலையில்லை. ஆனால் முத்தளாம்மனுக்கு கோவிலும் இல்லை, நிரந்தர சிலையும் இல்லை.
          ஒவ்வொரு திருவிழாச் சமயமும் புல்லக்கா பட்டியில் உள்ள மண்பானை செய்யும் குலத்தவர் அம்மனின் சிலையை களிமண்ணில் செய்து வண்ணம் பூசி வனப்பாக்கி தேவதானப்பட்டியில் எங்கள் தெருவிலிருந்த நாட்டாமை வீட்டுக்குக் கொண்டு வருவார்கள். அதற்கு ஒரு மண்டலம் முன்னாலேயே பந்தக்கால் நட்டு, காப்புக்கட்டி விரதமிருப்பார்கள். ஏனென்றால் அம்மனுக்கு தோஷமோ கோபமோ ஏற்பட்டால் ஊருக்கு நல்லதல்ல என்பது அவர்களின் நம்பிக்கை.
Courtesy : Google
          நாட்டாமை வீட்டுக்கு வரும் சிலைக்கு கண்கள் மட்டும் இருக்காது. வீட்டுக்கு முன்னால் மக்கள் திரள் கூடியிருக்க பம்பை, உடுக்கை, தவில் நாதஸ்வரம் போன்றவை இடி முழக்கத்தை எழுப்ப, நாட்டாமை வீட்டிலுள்ள சாமி ரூமில் முத்தாளம்மனின் கண்கள் திறக்கப்படும். அதாவது வரையப்படும். அதுவரை மெல்லிய துணியால் மூடியிருந்த சிலையைத் திறந்து கண்கள் வரைவதை நான் ஜன்னல் வழியே எட்டிப்பார்த்திருக்கிறேன். கண்களை குயவர்கள் லாவகமாக வரைய அப்படியே சிலை உயிர் பெறும் போது அங்குள்ள பலபேருக்கு அருள் வந்துவிடும். வெளியிலிருக்கும் பலருக்கும் அருள் வரும். பார்ப்பதற்கு பயமாகவும் அதே சமயத்தில் வேடிக்கையாகவும் இருக்கும்.
          அதன்பின் முத்தத்தாளம்மனுக்கு பட்டுடுத்தி பொன் நகைகள் சூடி நாயக்கர் பரம்பரையில் வந்த நாட்டாமை குலத்தவர் வந்து கும்பிடும் வகையில் ஒரு நாள் அங்கு இருக்கும். கிராம அலுவலர் (VAO) வந்தவுடன் இந்தப்பதவிக்கு அதிகாரம் இல்லாமல் போனது. ஆனால் பெரிய நாட்டாமை இருக்கும் வரை அவருக்கு மதிப்பும் மரியாதையும் இருந்தது. எங்கள் தெருவிலேயே அவர்கள் வீடுதான் பெரிது.
          எங்கள் தெரு நாட்டாண்மைக்காரர் தெரு என்று முதலிலும் சின்னப்ப நாடார் தெரு என்று பின்னரும் அழைக்கப்பட்டது. ஊரிலேயே எங்கள் தெரு மிகவும் வித்தியாசமானது. ஏனென்றால் செட்டியார்கள், நாடார்கள், தேவர்கள், நாயுடுக்கள் முஸ்லீம்கள், பட்டானியர், பறையர், பிள்ளைமார்கள், அகமுடையர் என்று ஊரில் ஒவ்வொரு வருக்கும் ஒரு பகுதி இருந்தது. இவர்கள் பெரும்பாலும் குழுவாக வாழ்ந்தாலும் ஒருவருக்கொருவர் ஒற்றுமையுடனும் அன்புடனும் வாழ்ந்து வந்தனர்,  இரு குழுவினர் தவிர.  அதனைப்பற்றி அப்புறம் சொல்கிறேன். ஆனால் எங்கள் தெருவில், கிறித்தவர் (நாங்கள்தான் பாஸ்) முஸ்லீம், நாயக்கர், நாடார், முக்குலத்தவர், செட்டியார் என அனைத்து சமுதாயத்தவரும் ஒன்றிணைந்து வாழ்ந்தனர்.
தேவராட்டம்-Google
          நாட்டாமை என்றால் சினிமாவில் வருவது போல் கொண்டை முடிந்து, முறுக்கு மீசை வைத்த ஒருவர் உங்களுக்கு ஞாபகம் வந்தால் அது என் தவறல்ல உங்கள் தவறுமல்ல. அப்படியே நாம் பார்த்துப் பழக்கப்பட்டு விட்டோம். எங்கள் நாட்டாமை அப்படியல்ல, படித்தவர், நல்லகிராப் வெட்டி, மீசை மழித்து இருப்பார். வெள்ளை வேஷ்டி வெள்ளைக்கதரணிந்து  எப்போதும் சிரித்த முகத்துடன் சாந்தமாக இருப்பார். அவருக்கு மூன்று பிள்ளைகள். மூத்தவர் ராஜா அண்ணன். அடுத்து சாந்தி அக்கா மூன்றாவது வெங்கிடு எனப்படும் வெங்கடேசன் தம்பி. அவர்களெல்லாம் எங்கு எப்படி இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. சாந்தி அக்கா மிகவும் அழகாக ஒரு இளவரசி போல இருப்பார்கள். எங்கள் ஊரில் அப்போது வயதுக்கு வந்த பெண்கள், பள்ளி தவிர வேறெங்கும் போகும் வழக்கமில்லை என்பதால் நூலகத்தில் புத்தகங்கள் எடுத்துவர என்னைத்தான் அனுப்புவார்கள். நான் நூலகமும் நடத்தியதால் அவர்கள் வீட்டுக்கு அடிக்கடி செல்வேன். எல்லோரும் என்னுடன் அன்புடன் பழகுவார்கள். இதில் வெங்கிடு மிகவும் உற்சாகமுள்ள தம்பி. என்னைப் பார்த்துவிட்டால் மகிழ்ச்சியடைவான். மகிழ்ச்சியடைந்தால்  கிட்டவந்து இரு விரல்களால் கிள்ளி வைத்துவிடுவான். அது  செல்லக்கிள்ளு என்றாலும் சிலசமயம் வலிக்கும். மகிழ்ச்சியை வெளிப்படுத்த அவனுக்கு இப்படி ஒரு பழக்கம். சில சமயங்களில் நானும் அவனும் ஒன்றாக நூலகம் சென்று சாந்தியக்காவிற்காக புத்தகங்கள் எடுத்து வருவோம். 

முளைப்பாரி-Google
          முத்தாளம்மன் அதன்பிறகு நாட்டாமை வீட்டிலிருந்து மேளதாளத்துடன் கிளம்பி பிள்ளைமார் மண்டகப்படிக்காக காந்தி மைதானத்தில் இருக்கும் பிள்ளையார் கோவிலில் எழுந்தருளியிருக்கும். பிள்ளைமார் சமூகத்தை சேர்ந்த மக்கள் அம்மனுக்கு பால்குடம் எடுத்து, முளைப்பாரி சுமந்து ஒரு நாள் விழாவாகக் கொண்டாடுவார்கள். பிற சமூகத்தினரில் சிலரும் அங்கு வந்து வழிபடுவார்கள். பிறகு முத்தாளம்மன் அங்கிருந்து கிளம்பி நாடார் பேட்டைக்குச் சென்று அங்குள்ள காளியம்மன் கோவிலில் இருந்துவிட்டு அங்கிருந்து நகர்ந்து வடக்குத்தெருவில் உள்ள தேவர் சமூகத்திற்கு நகர்ந்து அருள் பாலிக்கச் செல்லும். அங்கு ஒரு நாள் பகல் மற்றும் இரவு முழுவதும் இருந்து, அடுத்தநாள் அங்கிருந்து கிளம்பும். அங்கிருந்து காமாட்சியம்மன், மஞ்சளாறு அணை பிரிவு வழியாக மெயின்ரோட்டுக்கு வரும். அப்போது தேவர் குல இளஞ்சிங்கங்கள் அம்மனுக்கு முன் தேவராட்டம் ஆடி வருவார்கள். உருமி இசைக் கேற்ப அசைந்தாடுவது மிக அருமையாக இருக்கும். அதோடு காளி அரக்கன் வேடம் போட்டு ஆடுவார்கள். காளிவேடம் போடுபவர் கறுப்புக் கண்ணாடி அணிந்திருப்பார். ஏனென்று தெரியவில்லை. அதோடு ரத்தச்சிவப்பான ஒரு தோல் நாக்கை வாயில் கடித்திருப்பார். காளியின் ரத்தம் தோய்ந்த நாக்குப்போல் அது தொங்கும். அட்டையில் செய்த பல கைகள் முதுகில் இணைக்கப்பட்டிருக்கும். கையில் ஒரு சூலாயுதம் இருக்கும். தலையில் சவுரி முடி இணைக்கப்பட்டு தோளில் புரளும். சரிகையால் ஆன சட்டை பாவாடை அணிந்து, காலில் சலங்கையணிந்திருப்பார். அவரின் இடுப்புப் பகுதியில் கயிறு இணைக்கப்பட்டு அதனை பின்னால் ஒருவர் பிடித்துக் கொண்டு கட்டுப்படுத்திக் கொண்டிருப்பார். இல்லையென்றால் சூலாயுதத்தால் அரக்கனைக் குத்திவிடுவார் போலத் தெரியும். அவர் முன்னால் அரக்கன் வேடமிட்ட ஒருவர் மீசை முறுக்கி, கூந்தல் பரப்பி சரிகைச் சட்டையும், சரிகை டிரவுசரும் அணிந்து காலில் சலங்கையும், கையில் ஒரு பட்டாக் கத்தியும் வைத்துக் கொண்டு காளிக்குப் போக்குக்காட்டிக் கொண்டிருப்பார். ஆனால் அவருக்கு எந்தக்கட்டுப்பாடும் இருக்காது. என்னடா இது கடவுளுக்கு வந்த சோதனை? காளியைக் கட்டுப்படுத்த பின்னால் ஒருவர், அரக்கனைக் கட்டுப்படுத்த ஒருவருமில்லையே என்று நினைத்திருக்கிறேன். காளியின் ஆவேசம் பெரிதாக இருக்கும். அரக்கனை இதோ சூலம் குத்தப்போகிறது போல மிக அருகில் நெருங்கியவுடன் பின்னால் இருப்பவர் ஒரு இழு இழுத்து காளியைக் கட்டுப்படுத்துவார்.
          மதுரையிலுருந்து சட்டிப்போலிஸ் என்று நாங்கள் அழைக்கும் ரிசர்வ் படையினர் ஏராளமாக வனத்திருப்பார்கள். பெருங்கலவரம் ஒன்றை எதிர்பார்த்தார்கள். அதனைப்பற்றி அடுத்த பகுதியில் சொல்கிறேன்.
தொடரும்

8 comments:

  1. சிறப்பான விவரங்கள்.

    ReplyDelete
  2. சமத்துவம் என்பது இது தான்... சிறப்பு...

    ReplyDelete
    Replies
    1. நன்றி திண்டுக்கல் தனபாலன்

      Delete
    2. நன்றி திண்டுக்கல் தனபாலன்

      Delete
  3. கிராமத்துத் திருவிழாவைக் கண்முன்னே நிறுத்தியுள்ளீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி முத்துச்சாமி

      Delete
    2. நன்றி முத்துச்சாமி.

      Delete