வேர்களைத்தேடி பகுதி –37
இதற்கு முந்திய பகுதியைப்படிக்க இங்கே சொடுக்கவும்.
http://paradesiatnewyork.blogspot.com/2019/03/blog-post.html#comment-form
Courtesy Google |
அன்றைய நாள் காற்றில் ஏதோ ஒரு பதட்டம் தென்பட்டது.
சிலர் மூலைக்கு மூலை நின்று ஏதோ குசுகுசுவென்று பேசத் தொடங்கினார்கள். எனக்கு ஒன்றும்
புரியவில்லை. என்னுடைய அம்மா "பேசமா வீட்டில இருடா" என்று சொன்னதையும் மீறி
வெளியே போனேன். ஆண்டிற்கு ஒருமுறை வரும் முத்தாளம்மன் ஊர்வலத்தைப் பார்க்காமல் இருக்க
முடியுமா?
Courtesy Google_Dinakaran |
ஒவ்வொரு தடவை முத்தாளம்மன் திருவிழா வரும் போதும்
மதுரையிலிருந்து ரிசர்வ் போலிஸ் படை தேவதானப்பட்டிக்கு
வரும். அவர்கள் வந்தால் எங்களுக்குக் கொண்டாட்டம்தான். ஏனென்றால் அவர்கள் வந்து தங்குவது
எங்கள் பள்ளியான இந்து நடுநிலைப்பள்ளியில் தான். அவர்கள் வந்து தங்கினால் பள்ளி நடக்காதென்பதால்
தான் எங்களுக்குக் கொண்டாட்டம். அவர்களை ஏன் சட்டிப் போலீஸ் என்று சொல்வோமென்றால் அவர்கள்
தலையில் இரும்புத் தொப்பி யொன்றை அணிந்திருப்பார்கள். அதனை கழற்றி தலைகீழாகப் பிடித்தால்
சட்டி போலவே தெரியுமென்பதால்தான் இவர்களை சட்டிப் போலிஸ் என்று சொல்வோம். இவர்கள் இளைஞர்களாக
மிடுக்குடன் இருப்பார்கள். யூனிபார்மில் கம்பீரமாய் இருக்கும் இவர்களைப் பார்த்தால்
எங்களுக்கு பயம். எங்களுக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் பயம்தான். தெருவில் இறங்கி ஒரு
கையில் பிரம்பால் செய்யப்பட்ட தடுப்பையும் மறுகையில் லத்தியையும் பிடித்து இறங்கினால் எந்தப் பெரிய கூட்டத்தையும்
விரைவில் கலைத்துவிடுவார்கள் அல்லது பயத்தால் தானாகக் கலைந்துவிடும்.
திருவிழாவில் எந்த அசம்பாவிதமும் நடைபெறாமல்
தடுப்பது அவர்களுடைய பொறுப்பு. இவர்கள் ஆண்டுதோறும் வர ஆரம்பித்தது, குறிப்பாக முத்தாளம்மன்
திருவிழாவிற்கு மட்டும் வந்ததற்கு ஒரு காரணம் உண்டு அதனைப்பற்றிச் சொல்கிறேன்.
என்னைப்போல
வீதியின் இருபுறமும் மக்கள் பக்திப்பரவசத்துடன் அல்லது பயபக்தியுடன் நின்று கொண்டிருந்தனர்.
ஆரம்பத்தில் தேவதானப்பட்டி காவல் நிலையத்திலிருந்து பாவமாய் இரண்டு போலீஸ்காரர்கள்
நடந்து வந்தனர். அவர்கள் பின்னால் பல முக்குலத்து
இளைஞர்கள் சிலம்பமாடிய படி வந்தனர். அவர்கள் பின்னால் இரண்டுபேர் உருமி மேளம் வாசிக்க,
கையில் துண்டைப் பிடித்தபடி உருமால் கட்டிய தேவர்குல நடுத்தர வயதுள்ளவர் தேவராட்டம்
ஆடியபடி வந்து கொண்டிருந்தனர். அவர்கள் பின்னால் நையாண்டி மேளம் நாதஸ்வரத்துடன் வாத்தியக்குழுவினர்
பட்டையைக் கிளப்ப, கரகாட்டம், மயிலாட்டம், பொய்க்கால் குதிரை ஆடி வர, அதன்பின்னால்
புலிவேஷக்காரர் நடனம் ஆடி வந்தனர். அவருக்குப்பின்னால் நான் ஏற்கனவே சொன்ன காளி அரக்கன்
வேடமிட்டவர் ஆடியபடி வந்தனர். அவர்களின் பின்னால் தவில் நாதஸ்வரக்கலைஞர்கள் மங்கல இசை
முழங்க, அவர்கள் பின்னால் ஊர் பெரிய தலைவர்கள் நடந்து வர முத்தாளம்மன் அலங்கார பூஷிதையாக,
கம்பீரமுடன் எடுத்து வரப்பட்டார். அவர்களுக்கு பின்னால் முளைப்பாரி எடுப்பவர்கள், தீச்சட்டி
சுமப்பவர்கள் என்று ஒரு பெருங்கூட்டம் வந்தது.
அதன் பின்னாலும் சிலம்பமாடுபவர்கள் இருந்தார்கள். நானும் கூட்டத்தோடு கூட்டமாக பின்
தொடர்ந்தேன். வழக்கத்திற்கு மாறாக இன்று அதிகமானபேர் சிலம்பமாடியதோடு ஆடாது இருந்த
பலரும் கையில் கம்புகளைப் பிடித்து வந்தனர். அதன் பின்னால் கடைசியில் ஒரு மாட்டு வண்டியும்
வந்து கொண்டிருந்தது.
நாயக்கர், பிள்ளைமார், செட்டியார், நாடார்
ஆகியோர் மண்டகப்படி முடிந்து தேவர் குல மக்கள் அதிகமாக வசிக்கும் வடக்குத் தெருவிலும்
முடிந்து, மஞ்சளாறு காமாட்சியம்மன் கோவில் சாலை வழியாக மெயின் ரோடு திரும்ப அங்கே தெற்குத்
தெருவிலுள்ள தாழ்த்தப்பட்ட பறையர் இன மக்கள் கும்பிடுவதற்காக அங்கேயே சாலையில் சில
நிமிடங்கள் தாமதிப்பார்கள். அவர்கள் கும்பிட்டு முடித்து திரும்பவும் மெயின் ரோடு வழியாக
வந்து மூலைச் செட்டியார் கடையோரம் காந்தி மைதான ரோட்டில் திரும்பி நாட்டாண்மை வீட்டுக்கு
அம்மன் வந்து சேரும். அதன்பின் பிறிதொரு நாளில் அம்மன் சிலையை எடுத்துக் கொண்டு போய்
ஆற்றில் கரைத்துவிடுவார்கள். இதுதான் வழக்கமாக நடக்கும் திருவிழா. எத்தனை ஆண்டுகள்
இப்படி நடக்கிறதென்றும் தெரியவில்லை. ஆனால் நான் பல வருடங்களாகப் பார்த்திருக்கிறேன்.
மண்சிலையென்றாலும் ஒரே மாதிரி அச்சில் வார்த்தமாதிரி இருக்கும். வரைந்த கண்களில் தோன்றும்
ஒளி இன்னும் மனதில் தெரிகிறது. அந்தக் குயவர்கள் அவ்வளவு திறமைமிக்கவர்கள்.
அந்த ஆண்டும் அம்மன் சிலை மெயின் ரோட்டில்
திரும்பி வழக்கம்போல் தெற்குத்தெருவில் நுழையாமல் அங்கு போடப்பட்டிருந்த தற்காலிக கொட்டகையில்
இறக்கி வைக்கப்பட்டது. அங்குதான் தெற்குத் தெரு பள்ளத்தில் இருக்கும் பறையர் குல மக்கள்
வந்து வழிபடுவார்கள்.
ஆனால் தெற்குத் தெருவில் இருந்து ஒரு இளைஞர்
படை முன்னுக்கு வந்து நாட்டாண்மையிடம் அம்மன் தங்கள் தெருவுக்குள் வர வேண்டும் அங்கு
ஒரு நாள் இருக்க வேண்டும் என்று கேட்டார்கள். வழக்கத்திற்கு மாறாக இருந்தாலும் அவர்கள்
கோரிக்கையில் இருந்த நியாயத்தைப் புரிந்து கொண்ட நாட்டாண்மைக்காரர், முத்தாளம்மன் அனைவருக்கும்
பொதுதான். ஆனால் அங்கு இரவு தாமதிக்க முடியாது. வேண்டுமென்றால் உள்ளே நுழைந்து உள்ளே
இருக்கும் மண்டபத்தில் சில நிமிடங்கள் இருந்து செல்லலாம் எனத்தன் முடிவைச் சொன்னார்.
அதனைப் பலரும் ஒத்துக்கொள்ள சிலர் இரவு இருக்க வேண்டும் எனப்பிடிவாதம் பிடிக்க, அங்கிருந்த
வடக்குத்தெரு தேவரின இளைஞருக்கும் பறையரின இளைஞர்களுக்கும் வாக்குவாதம் முற்றி ஒருவரை
ஒருவர் திட்ட, சமாதானம் செய்ய முயன்ற நாட்டாண்மை மற்றும் பெரியவர்களின் பேச்சு எடுபடாமல்
போக, தகராறு முற்றி கைகலப்பில் முடிந்தது.
ஏற்கனவே இதனை எதிர்ப்பார்த்தது போல கையில்
சிலம்பமுடன் வந்திருந்த இளைஞர்கள், பறையரின இளைஞர்களை செமத்தியாக அடிக்கத் தொடங்கினர்.
அதற்குள் தெற்குத் தெரு உள்ளேயிருந்து ஏராளமானவர் கையில் கம்புடன் வர பெரிய போர் மூண்டது.
திடீரென்று மாட்டுவண்டியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வீச்சரிவாள்கள் கைகளுக்குத்தாவ
அங்கே ஒரே ரத்தக்களரி. அங்கிருந்த மொத்தம் ஐந்து போலீசாரும் ஒன்னும் செய்யமுடியாமல்
ஒதுங்கினர்.
அதற்குமேல் தாக்குப்பிடிக்க முடியாத என்
இதயம் தகிடுதத்த நடையில் துடிக்க ஆரம்பிக்க, இரத்தம் முகம் முழுவதும், ஏன் தலைமுழுவதும்
பாய, கண்கள் எரிய, பின்னங்கால்கள் பிடரியில் பட ஒரே ஓட்டமாய் வீடு நோக்கி ஓடினேன்.
தொடரும்
ஐயயோ, என்ன சார் கடைசியல தொடரும் போட்டீங்க !? :)
ReplyDeleteவரும் அடுத்த வாரம் வரும் பாஸ்கர் .
Deleteகளநிலவரம் கலவரம்!
ReplyDeleteஇப்போது நினைத்தாலும் நெஞ்சம் நடுங்குகிறது ஸ்ரீராம் .
Deleteயம்மாடி...!
ReplyDeleteஆமாம் தனபாலன்
Deleteதேனி மாவட்டம் சாதி கலவரம் அடிக்கடி நிகழுமிடம்தான். தேவதானப்பட்டியில் நிகழ்ந்த திருவிழாவில் வெடித்த சாதிக் கலவரம் பற்றிய சம்பவங்களைக் கவலையுடன் படித்தேன். இந்த நிலை எப்போது மாறும்?
ReplyDelete