Thursday, February 28, 2019

மறைக்கப்பட்ட இந்தியா !!!!



 படித்ததில் பிடித்தது

 மறைக்கப்பட்ட இந்தியா,எஸ் ராமகிருஷ்ணன் விகடன் பிரசுரம்.

          எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் ஒரு தேர்ந்த எழுத்தாளர், நல்ல பேச்சாளர். அவருடைய எழுத்து, படிக்கும் வாசகர்களுக்கு வெறும் பொழுதுபோக்குத்தரும் எழுத்தல்ல. மாறாக அறிவுக்களஞ்சியங்களை அள்ளித்தருபவை. அதற்காக அவர் செய்யும் உழைப்பு அபாரம். நூறு நூல்களைப் படிக்கும் அளவுக்கான விஷயங்கள் அவருடைய ஒரு புத்தகத்தில் இருக்கும். ஏனென்றால் அத்தனை புத்தகங்களையும் அவர் படித்து அதன் சாராம்சத்தை நமக்குத்  தருவார். அப்படி எழுதப்பட்ட ஒரு புத்தகம்தான், "மறைக்கப்பட்ட இந்தியா". நமது நாட்டைப்பற்றியும் அதன் வரலாற்றில் மறைந்துபோன , மறைக்கப்பட்ட விஷயங்களை மட்டுமே ஆராய்ச்சி செய்தால் கூட நமக்கு இந்த ஒரு ஜென்மம் போதாது.

எஸ் ராமகிருஷ்ணன்
          இந்தப் புத்தகம் கட்டுரைகளாக விகடனில் வந்தபோது, எப்படியும் முழுப் புத்தகமாய் வரும்போது படித்துக் கொள்ளலாம் என்று விட்டுவிட்டதை மறக்காமல் விகடன் அலுவலகம் சென்று  வாங்கிய பல புத்தகங்களில் இதுவும் ஒன்று.
          இந்தப்புத்தகத்தை நீங்கள் வாங்கிப்படிக்க வேண்டும் என்ற விதத்தில் இதில் படித்த சில விஷயங்களை இப்பகுதியில் கோடிட்டுக் காட்ட விழைகிறேன்.
1.   நீண்ட மீசையுடன் பார்த்த யுவான் சுவாங்கின் மீசையில்லாத படத்தைப் பார்த்தேன். சீனாவில் இருந்து வந்த அவர் நாலாந்தா பல்கலைக் கழகத்தில் போதித்து குப்தர் காலத்தில் 100 கிராமங்களை பரிசாகப் பெற்றிருக்கிறார்.
2.   ரபீந்திரநாத் தாகூர் 1911ல் எழுதிய நமது தேசிய கீதம் அவர் எழுதிய முழுப் பாடலில் ஒரு பத்தி மட்டும்தான். அதோடு பங்களாதேஷின் தேசீய கீதத்தையும் அவர்தான் எழுதியிருக்கிறார். (அமர் ஷோனார் பாங்க்ளா). 1919ல் மார்கரட் கசின் (யாரோட கசின்னு கேட்காதீங்க பாஸ்) போட்ட மெட்டுதான் இன்னும் பாடப்படும் மெட்டு நேதாஜியின் INA-வில் பாடப்பட்டது. இதற்கு தன் பேன்டு (Band) மூலம் இசையமைத்து தங்கப்பதக்கம் பெற்றார் கேப்டன் ராம்சிங்.
3.   ஆனால் 1947ல் சுதந்திரம் வாங்கிய இரவில் பாடப்பட்டது, மகாகவி இக்பால் எழுதிய, "சாரே ஜஹான் கி அச்சா" என்ற பாடல் மற்றும் பக்கிம் சட்டர்ஜி இயற்றிய "வந்தே மாதரம்" பாடல்தான்.
4.   தேசியக் கொடி பிறந்த கதையினையும் அதற்கு முன்னால் பயன்படுத்தப்பட்ட பல்வேறு கொடிகளைப் பற்றியும் சுவைபட விளக்குகிறார்.
5.   டெல்லியின் கிராண்ட் டிரங்க் ரோடு முதன்முதலில் சந்திரகுப்த மெளரியர் காலத்தில் உருவாக்கப்பட்டு இன்றுவரை பயன்பாட்டில் இருக்கிறது. இந்த விவரங்கள் கிரேக்க தூதுவர் ‘மெகஸ்தனிஸ்’ எழுதிய ‘இண்டிகா’ என்ற நூலில் காணப்படுகிறது. அதே போல தமிழகத்தில் நீண்ட நெடிய ராஜபாதை அமைத்தவர் ராணி மங்கம்மாவாம். அதன் வழியில் பயணிகள் தங்கிச் செல்ல பல சத்திரங்களையும் அமைத்திருக்கிறார்.
6.   அழிந்துபோன டாக்கா மஸ்லின் பற்றி பல தகவல்களைச் சொல்லுகிறார். முழு ஆடையும் மோதிரத்திற்குள் நுழையும் அளவுக்கு மென்மையாக இருக்குமாம். அதுமட்டுமல்ல பத்து முழம் சேலை ஒரு தீப்பெட்டிக்குள் அடங்கி விடுமாம். நம்முடைய துணிகள்  ஆயிரம் ஆண்டுகள் முன்னமே வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. அதுபோலவே ஆரணி மஸ்லின் என்று ஆந்திராவின் மசூலிப்பட்டணத்தில் உருவாக்கப்பட்டதாம். மசூலிப் பட்டினத்தில் உருவானதால் தான் அதன் பெயர் மஸ்லின் என்று ஆனதாம். பிரிட்டிஷ் ஆட்சியில் இதற்கெல்லாம் முடிவு கட்டப்பட்டது.
7.   ராஜாராம் மோகன்ராய் தோற்றுவித்த பிரம்ம சமாஜத்தின் முக்கிய கொள்கைகளாக, மூடநம்பிக்கை ஒழிப்பு, ஒன்றே குலம், பெண்கல்வி, விதவை மறுமணம், பால்ய விவாகம் ஒழித்தல், சம வேலைவாய்ப்பு, சம ஊதியம் மற்றும் தேசிய உணர்வை ஊட்டுதல் என பல முற்போக்கு சிந்தனைகள் இருந்திருக்கின்றன. அது இன்னும் வளர்ந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். இன்னும் நியூயார்க்கில் கூட பிரம்ம சமாஜம் இருக்கிறது. அவர்களின் கொள்கைகள் இன்னும் அப்படியே இருக்கின்றனவா என்று தெரியவில்லை.
8.   1942ல் வெள்ளையனே வெளியேறு மற்றும் த்துழையாமை இயக்கத்தை காந்தி துவங்கியபோது, காந்தி, கஸ்தூரிபாய், நேரு ஆகியோர் கைது செய்யப்பட்டனர். தமிழ்நாட்டில் காமராஜர், கக்கன், ம.பொ.சி ஆகியோர் கைது செய்யப்பட்டு உணவில் சிறுநீரைக் கலந்து கொடுத்தனர் என்பதை வாசிக்கும் போது உள்ளம் கொதித்தது.
9.   ஜொராஷ்ட்டிரிய மதத்தை ஃபாலோ செய்யும் பார்சிகள்  எப்படி ஈரானிலிருந்து இந்தியா வந்து செட்டில் ஆனார்கள் என்பதை பல தகவல்களோடு விளக்குகிறார். பார்சிகளில் முக்கிய பிரமுகர்களைப் பற்றித் தெரிந்து ஆச்சரியப்பட்டேன். தாதாபாய் நெளரோஜி, ஹோமிபாபா, ஜூபின் மேத்தா, பில்ட் மார்ஷல் சாம் மானெக்சா,  டாட்டா மற்றும் கோத்ரெஜ்  ஆகியோர் அவர்களுள் சிலர். இப்பொழுது தெரிகிறது பார்சிகள் எப்படி முன்னேறியுள்ளனர் என்று.
10.                நேதாஜி வீரர்களில் 25 பேருக்கு ஜப்பானில் பயிற்சி அளிக்கப்பட்டது புதுச்செய்தி. நேதாஜியின் மறைவு இன்றுவரை புதிராகவே இருக்கிறது.
11.                தாகூர் தன் சொந்த செலவில் ஆரம்பித்த  சாந்திநிகேதன் இப்போது விஸ்வபாரதி பல்கலைக்கழகமாக விரிவடைந்திருக்கிறது. அமர்த்திபா சென், சத்யஜித்ரே, இந்திராகாந்தி ஆகியோர் அதில் படித்து வெளியே வந்த பிரபலங்களில் சிலர்.
12.                இண்டிகோ என்று சொல்லப்படும் நீலவண்ணம் உருவாக்க அந்தக்காலத்தில் பதினாறு லட்சம் ஏக்கரில் அவுரித்தோட்டம் அமைத்து வெள்ளையர்கள் கொள்ளை லாபம் சம்பாதித்தனர். அதில் வேலை செய்த விவசாயிகளை கொத்தடிமைகள் போல நடத்தினர். அதுமட்டுமல்லாமல் ஆறுலட்சம் ஏக்கரில் அபினிச்செடிகள் பயிரிட்டு உலக முழுதும் ஏற்றுமதி செய்தார்கள். குறிப்பாக அதனால் சைனாவில் நடந்த ஓப்பியம் போர் உங்களுக்கு நினைவிருக்கும் இதனை எதிர்த்துப் போராடி பெற்ற வெற்றியே காந்திக்குக் கிடைத்த முதல் வெற்றி.
13.                யுவான் சுவாங், பாஹியான் போல பல ரஷ்ய யாத்திரிகர்களும் இந்தியாவுக்கு வந்தது புதுச் செய்தி.
14.                பிரிட்டிஷ் காலத்தில் மணமகன்களைத் தேடி, கப்பல் நிறைய பெண்கள் வந்து இந்தியாவில் இறங்கினார்களாம்.பிரிட்டிஷ் அரசே அவர்களுக்கு வருடத்திற்கு 30 பவுண்டு கொடுத்ததாம், பெரும்பாலானோர் தங்கள் ஜோடிகளைத் தேர்ந்தெடுத்துவிட, மற்றவர் இங்கிலாந்துக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.
15.                கற்கால கல் ஆயுதங்கள் சென்னை அருகில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. அவர்களின் வயது 5 லட்சம் ஆண்டுகள். கல்தோன்றா மண் தோன்றாக் காலத்தில் பிறந்தது தமிழினம் என்பது சரிதான்.
       ஆச்சரியப்படுமளவுக்கு நமக்குத் தெரியாத பல விஷயங்களை அலசி ஆராய்ந்து சுருக்கமாக இந்நூலில் வடித்துள்ளார்.தவிர நாம் படிக்க வேண்டிய பல புத்தகங்களை நமக்கு பரிந்துரையும் செய்திருக்கிறார். அதுதான் சொன்னேனே. அதையெல்லாம் படிக்க ஒரு ஆயுள் போதவே போதாது. ஆனால்குறைந்த பட்சம் இந்தப் புத்தகத்தையாவது  படிக்கலாம்.
முற்றும்

6 comments:

  1. சில தகவல்களே ஆச்சரியப்பட வைக்கிறது...! நல்லதொரு நூலை அறிமுகத்திற்கு நன்றி...

    ReplyDelete
  2. "தெரியாத இந்தியா" என தலைப்பிடாமல் "மறைக்கப்பட்ட இந்தியா" என தலைப்பிட என்ன காரணம். ??

    ReplyDelete
    Replies
    1. தெரியாத இந்தியா என்றால் தெரிந்து கொள்ளாதது நம் மேல் உள்ள தவறு. மறைக்கப்பட்ட இந்தியா என்றால் , நமக்கு தெரியாமல் போனது நம் தவறு அல்ல .

      Delete
  3. கண்டிப்பாக வாங்கிப் படிக்கப்பட வேண்டிய புத்தகம் என்பதில் சந்தேகம் இல்லை. நன்றி.

    ReplyDelete
  4. எஸ்ராவின் நூல் பற்றித் தனியாக சொல்ல வேண்டுமா? குறிப்பிட்ட இந்த நூலை வாங்கிப்படிக்க வேண்டிய பட்டியலில் சேர்த்துக் கொண்டேன். நன்றி.

    ReplyDelete