Thursday, February 7, 2019

தீவிரவாதப்படையில் சேர்க்கப்பட்ட ஐந்து வயது பெண் !!!!!!!!!


பார்த்ததில் பிடித்தது   
 ஃபர்ஸ்ட் தே கில்டு மை ஃபாதர்
            First they killed my Father

          
நெட் பிலிக்சில்  கிடைத்த  இன்னொரு அற்புதப்படம் இது. அமெரிக்காவுக்கும் வியட்நாமுக்கும் முடிவில்லாத உக்கிரப் போர் நடந்து கொண்டிருந்தது. கொரில்லாப்போரை எந்த ராணுவம் வெல்ல முடியும்? இருபுறமும் கடுமையான சேதம். அதே சமயத்தில் பக்கத்து நாடான கம்போடியாவில் ஒரு கம்யூனிய தீவிரவாத இயக்கமான கெமர் ரூஜ்-ன் (Khmer Rouge) போல் பாட்டின் (Pol pot)  படைகள் நாட்டை ஆக்கிரமிக்க துடித்துக் கொண்டிருந்தனர். கம்போடியாவின் ஜனநாயக அரசுக்குச்சாதகமாக அமெரிக்க ராணுவம் உதவிவந்தது.
Pol Pot
          இதற்கிடையில் வியட்நாமின் போரை நிறுத்த அமெரிக்காவில் பல போராட்டங்கள் நடத்த இந்த முடிவில்லாத போரை அப்போது அதிபராக இருந்த லிண்டன் ஜான்சன்  நிறுத்தி ராணுவத்தை தாய் நாட்டுக்கு வரவழைத்தார். அதே சமயத்தில் கம்போடியாவில் இருந்த அமெரிக்கப்படையும் வாபஸ் பெற்றதோடு தன்னுடைய கான்சுலேட்டையும் காலி செய்தது.
Loung ung
          அதன்பின் அரசுப் படைகள், கெமர் ரூஜின் தாக்குதலுக்கு தாக்குப்  பிடிக்க முடியாது ஒளிந்து ஓடினர். இது நடந்தது 1975ல். இந்தப் போராட்டத்தில் சிக்கிக் கொண்ட ஐந்துவயது இளம் பெண் தான் பட்ட கஷ்டங்களை பின்னாளில் 2000ல் ஒரு புத்தகமாக எழுதி வெளியிட்டார்.  அவர் பெயர் லுங் உங் (Loung ung) அப்புத்தகத்தின் பெயர்தான் "First they killed my Father?" அந்தக் கதைதான் 2017ல் திரைப்படமாக எடுக்கப்பட்டது.

          தீவிரவாதிகளின் ராணுவம் ஃபுனோம் பென் (Phnom Penh) என்ற கம்போடியாவின் தலை நகரில் நுழைவதிலிருந்து படம் துவங்குகிறது. அந்த ஐந்து வயதுச் சிறுமி கம்போடிய அரசின் ராணுவ உயர் அதிகாரியான ஒருவரின் ஐந்து குழந்தைகளின் கடைசிக் குழந்தை. ராணுவ கேப்டன் என்பதால் தீவிரவாத ராணுவம் நிச்சயம் சுட்டுக் கொன்றுவிடும் என்பதால் தன் அடையாளங்களையும் பாஸ்போர்ட்டையும் நீக்கிவிடுகிறான்.
          தீவிரவாத ராணுவம், யாரும் நகருள் வாழக்கூடாது எல்லோருக்கும் பொதுவான விவசாயத்தில் ஈடுபட்டு பலனை பகிர்ந்து உண்ண வேண்டும் என்ற நினைப்பில் நகர் வாழ் மக்கள் அனைவரையும் வெளியேற்றுகிறார்கள். தங்கள் சொத்து  சுகமிழந்த மக்கள் அப்படியே நடந்தே வெளியேறுகிறார்கள். போகிற வழியிலேயே பசியினாலும் தொத்து வியாதியாலும் பலர் இறந்துவிடுகின்றனர். ஒரு முகாமில் அடைக்கப்படும் அவர்கள், பகலில் கடுமையான வேலை செய்தாலும் சரியான உணவு இல்லாமல் கஷ்டப்படுகிறார்கள். ஏனென்றால் விளைச்சல் முழுவதும் தீவிரவாதிகளின் படைகளுக்கே சென்று விடுகின்றன.
          முகாமில் எப்படியோ தந்தையைப் பற்றி அறிந்து கொண்ட தீவிரவாதிகள் அவரைக் கொன்றுவிடுகின்றனர். மற்ற பிள்ளைகளைக் காப்பாற்ற அவளின் தாய் முடிவெடுத்து அவர்களை வெவ்வேறு திசைகளில் அனுப்பிவிடுகிறாள். அதில் 5 வயதுப் பெண்ணாகிய அவளும் 9 வயது பெண்ணான அவள் அக்காவையும் படையில் சேர்த்து கடுமையான பயிற்சியில் ஈடுபடுத்துகிறார்கள்.
          இறுதியில் மீண்டும் வியட்நாம் ராணுவம் உள்ளே நுழைந்து தீவிரவாத இயக்கத்துடன் போர் புரிகிறது. அதற்குள் கெமர் ரூஜ் இயக்கத்தின் தவறான கொள்கைகளால் 20  லட்சம் பேர் மடிந்து போயினர். இதில் யார் யார் தப்பித்தார்கள்? இந்தக் குழந்தை எப்படித்தப்பித்தது? தன்னுடைய சகோதர சகோதரர்களை கண்டுபிடித்ததா என்பதை சின்னத்திரையில் காண்க.

          இதனை இயக்கியது ஏஞ்சலினா ஜோலி என்ற ஏஞ்சல் என்பது படம் முடிந்து வந்த டைட்டிலைப் பார்த்துத்தான் தெரிந்து கொண்டேன். இது நெட்பிலிக்சின் ஒரிஜினல் படம். கம்போடிய மொழியில் தயாரிக்கப்பட்ட இந்தப்படத்தில் ஏஞ்சலினா கம்போடிய நடிகர்களை மட்டுமே நடிக்க வைத்திருக்கிறார். அதோடு இந்தச் சமயத்தில் சிக்கி உயிர் பிழைத்த பலரையும் அவர்களுடைய குழந்தைகளையும் இப்படத்தில் பயன்படுத்தியிருக்கிறார். கம்போடியாவில் ரிலீஸ் செய்யப்பட இந்தப்படம் மிகவும்  தத்ரூபமாக எடுக்கப்பட்டிருக்கிறது. சில சமயங்களில் திரைப்படமா அல்லது டாக்குமென்டரியா என்று சந்தேகம் வருமளவிற்கு படம் இருக்கிறது.

          குறிப்பாக அந்த ஐந்து வயதுக் குழந்தையாக நடித்த பெண் தன் உணர்ச்சிகளை இயல்பாகப் காட்டி லைக்ஸ்களை அள்ளிக் குவிக்கிறார். அந்தக் குழந்தைக்காகவும் ஏஞ்சலினாவுக்காகவும் இப்படத்தை அவசியம் பார்க்க வேண்டும்
-முற்றும்.
முக்கிய அறிவிப்பு: 

அலுவலகப்  பணி நிமித்தமாக மெக்ஸிகோவில் உள்ள குவடாலாஹாராவுக்கு  செல்வதால் வரும் வாரத்தில் (பெப்ருவரி 9 முதல் 16 வரை )  பதிவுகள் எதுவும் வராது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் .உங்களின்  தொடர்ந்த ஆதரவுக்கு என் மனமார்ந்த நன்றிகள்

4 comments:

  1. இனிய பயணம் சார். அடுத்த பதிவு குவடாலாஹாரா பற்றி எதிர்பார்கிறோம். :)

    ReplyDelete
  2. எனக்கு நெட்ப்ளிக்ஸ் கிடையாது. அமேசான் ப்ரைம் மட்டுமே! போல்பாட் கொடூரமான உலக சர்வாதிகாரிகளில் ஒருவன் என்பதாகப் படித்த நினைவு.

    ReplyDelete
  3. சிறந்த படம் பற்றிய சிறந்த அறிமுகம்

    ReplyDelete